Chapter 23
“மாங்கல்யம் தந்துனானே..”
அய்யரின் மந்திரத்துடன் கெட்டி மேளம் உரத்துக் ஒலிக்கத் தாலியை எடுத்து வந்தனாவின் கழுத்தில் கட்டினான் விவேகானந்தன்.. பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.. அருகருகே மணமக்களாய் அமர்ந்திருக்கும் போது தாலியை எடுத்துக் கட்டுபவனின் முகத்தைப் பார்க்காமல் கண்களை இறுக மூடிக் கொள்ள முடியுமா என்ன..? அவளது விழிகளைச் சந்தித்தவனின் முகத்தில் ஏளனமும் இல்லை.. பெருமிதமும் இல்லை.. உணர்வுகளைத் துடைத்து வைத்த முகம்.. இவன் இப்படிக்கூட இருப்பானா என்று அவளுக்குள் வியப்பு வந்தது.. எந்த நேரமும் விசமம் வழியும் முகத்துடன் இருக்கும் ரௌடியல்லவா அவன்..!
அவளிடம் மட்டும்தான் அப்படி இருந்தான்.. மற்றவர்களிடம் சிரித்த முகமாக பேசினான்.. வருண்தான் மாப்பிள்ளைத் தோழன்.. கல்யாணப் பொண்ணுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல அவளை ஒட்டாமல் பார்த்தபடி விவேகானந்தனுக்கு விழுந்து விழுந்து உபசரணைகளை செய்து கொண்டிருந்தான்.
‘இவன் எனக்குக் கூடப் பிறந்த தம்பியாம்…’
பல்லைக் கடித்தபடி முகத்தைக் கவிழ்ந்து கொண்டாள்.. கல்யாணப் பெண்ணாக இருப்பதில் இது ஒரு வசதி.. முகத்தின் உணர்வுகளை மற்றவர்கள் படித்து விடாதபடி தலையைக் குனிந்து தப்பித்துக் கொள்ளலாம்.. வெட்கம் என்று நினைத்துக் கொள்வார்கள்.
மண்டபத்திலிருந்து வீடுகளுக்குக் கிளம்பினார்கள்.. இரு தரப்பு வீடுகளும் எதிரெதிர் வீடுகளாக அமைந்து விட்டதில் கிரகப்பிரவேசம் அலைச்சலின்றி சீச்கிரமாக முடிந்து விட்டது.. குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர நேரமும் கிடைத்தது.. நெருங்கிய உறவினர்கள் தாங்களும் வருவோம் என்று காரில் தொற்றிக் கொண்டதில் விவேகானந்தனின் மடியில் உட்காருவதைப் போல வந்தனா நெருங்கியடித்து உட்கார வேண்டியதாகி விட்டது..
‘ஏற்கனெவே இவன் மீது ஆசைன்னு பட்டம் கட்டினான்.. ‘ அவள் வேண்டுமென்றே அவனை உரசிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் என்று அவன் அடுத்த பட்டத்தை பறக்க விட்டு விடுவானே என்று பதறிக் கொண்டிருந்தாள் வந்தனா.. இந்தப் போராட்டத்தை அறியாத டிரைவர் காரை ஒடித்து வளைத்துத் திருப்ப.. வந்தனா ஒரு குழுங்கு குழுங்கி விவேகானந்தனின் மடியில் விழுந்தாள்..
‘கடவுளே…!…’
முகத்தில் ரத்தம் பாய.. அவள் விலகி உட்காருவதற்குள்.. அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த உறவுக்காரப் பெண்மணி வசதியாக இருக்கையைப் பிடித்துக் கொண்டாள்.. வந்தனா உட்கார இடமில்லை.. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் போனவள் காரின் குலுக்களில் முன்சீட்டில் மோதி விழாமலிருக்க விவேகானந்தன் அணைவாகப் பிடித்துக் கொண்டான்.. ‘ஆ’வென்று வாய் பிளக்காத குறைதான்.. நம்ப முடியாமல் பார்த்தாள்.. அவனது ரோமம் படாந்த வலிமையான கைகள் அவளை இறுக்கி அணைத்துக் மடியில் இருத்திக் கொண்டிருந்தது உண்மைதான்..
விருப்பென்றும் சொல்ல முடியாத.. வெறுப்பென்றும் சொல்ல முடியாத நூதனப் போராட்டம் அவளுக்குள் ஆரம்பமானது.. பட்டு வேட்டி, சட்டையில் அவன் ஆளை மயக்கும் கம்பீரமான அழகுடன் அவளைக் கிறங்கடித்தான்.. பரந்த அவனது மார்பு.. தலைசாய்ந்து உறங்க வா என்று அவளை அழைத்தது.. காரின் ஆட்டத்தில் அவளையறியாமல் அவள் தலை சாய்த்தாள்.. அவளது உச்சந்தலையில் அவனது முகம் பதிந்தது யதேச்சையானதுதானா..? அவளது பூவாசத்தையும் மீறிய நறுமணம் அவன்மீது கமழ்ந்தது.. வந்தனா அவனுடனான பிணக்கை மறந்தாள்.. அவன் அவளை மதித்ததேயில்லை என்ற கடந்த கால நிகழ்வுகளை மறந்தாள்.. கண்மூடி நிகழ்கால மயக்கத்தைத் துய்க்க ஆரம்பித்தாள்.
“கோவில் வந்திருச்சு…”
உறவுக்காரர்கள் கூவ.. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.. இவ்வளவுதானா நான் என்ற வெறுப்பும் வந்தது..
“கோவில் வந்தாச்சு.. இனி விட்டு நகரலாம்…”
என்னவோ அவன்தான் அவளைத் தொட்டுத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டதைப் போல சிடுசிடுத்தாள்.
“யாரையும் நான் தூக்கி வைத்துக்கலை.. மடியில் விழுந்தவங்க முட்டிக்காம இருக்க அணைவாத் தாங்கியிருப்பேன்..” அவன் சட்டென சொல்லி விட்டான்.. அவளுக்கு தலைகுனிவு ஏற்பட்டு விட்டதைப் போல இருந்தது.
‘யாரையும்ன்னு யாரோ தெருவில் போகிறவளைச் சொல்கிறதைப் போலச் சொல்கிறானே.. நான் யாரோதானா…?’
அவன் தொட்டுக் கட்டிய தாலி அவளது மார்பில் புரண்டு மன வேதனையைத் தந்தது.. கோவிலுக்குள் தம்பதி சமேதராகப் போக வேண்டும் என்பதினால் அவன் நின்று திரும்பிப் பார்த்தான்.
‘இப்போ மட்டும் நான் வேணுமா..?’ மனதுக்குள் குமைந்தபடி பதுமை போலப் பக்கத்தில் போய் நின்றாள்.
‘நலனே நானா….?
யாரோதானா…?’
அவளது மனது கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.. குலதெய்வத்தை வணங்கி விட்டுக் கோவில் பிரகாரத்தில் அமர்ந்தார்கள்.
சுற்றிலும் வயல்கள் இருந்ததினால் ஈரப்பசையுடன் கூடிய காற்று வந்து மேனியைத் தழுவியது இதமாக இருந்தது.
“இனி வீட்டுக்குக் கிளம்பலாமா…?” மீனாட்சியின் கேள்விக்கு எதிர் கேள்வியை எவர் கேட்பார்…?
அனைவரும் கார்களுக்குள் அடைந்து கொள்ள.. மறுபடியும் விவேகானந்தனின் மடியில் சரிந்து விழுந்தாள் வந்தனா.. விலகி அமர இடமில்லை.. விவேகானந்தனின் கைகள் அவளை வளைத்துக் கொண்டன.. அவளது தலையில் சூடியிருந்த பூவில் அவன் முகம் பதித்ததை மிகத் தெளிவாக உணர்ந்தாள் வந்தனா.. சில உணர்வுகள் பிரத்யேகமானவை.. அதி நுட்பம் வாய்ந்தவை.. பெண்ணை முகர யத்தனிக்கும் ஆணின் ஸ்பரிசத்தை பெண் உணராமல் போய் விடுவாளா…?
“தட்டுத் தடுமாறி நெஞ்சம் – கை
தொட்டு விளையாடக் கெஞ்சும்..
சிட்டு மலர்மேனி துள்ளும்…”
காரிலிருந்த எப்.எம் பாடியது.. எங்கோ ஓர் மாய நதியில் இறங்குவதைப் போல மயங்கிப் போனாள் வந்தனா.. அவனது மூச்சுக் காற்று பின்னங்கழுத்தைச் சூடாக்கியது.. அவனது மீசை ரோமங்கள் அவளது செவிமடல்களில் உரசி இன்பமான வேதனையை உற்பத்தி செய்தது.. அவள், அவளாக இல்லை…
“ஏதோ.. ஓர் நதியில்
நான் இறங்குவதைப் போலே..
ஏதோ.. ஓர் இன்பம்
நீ அருகில் இருந்தாலே…”
புரிபடாத உணர்வுகளை இதை விட நுட்பமாக யார் சொல்லக் கூடும்..? அந்தக் காலப் பாடல்கள் அலாதியானவை.. சூட்சுமம் நிறைந்த ஆண்-பெண் உறவின் அந்தரங்கத்தின் புனிதம் கெடாமல் இன்பத்தை உணர வைப்பவை.. மெல்லிசையில் மனதை வெல்லக் கூடியவை.. வந்தனாவின் மனம் தோற்றுப் போக விரும்பியது.. அவன் மீது காதலோ.. காமமோ.. அறுதியிட்டுச் சொல்ல முடியாத உணர்வுகளின் சொந்தம் வந்து ஆக்ரமித்தது..
“மயங்குகிறாள் ஒரு மாது – தன்
மனதுக்கும் செயலுக்கும் தொடர்புமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது….”
அவள் மயங்கினாள்.. அவன் துவங்கினான்.. மடியில் விழுந்திருந்தவளை அணைத்துப் பிடித்திருந்த கைகள் அவளது வழவழப்பான இடையினில் அழுத்தமாகப் பதிந்ததன.. காரின் குலுக்கலில் அவள் மோதி விடாமல் தாங்கிக் பிடிப்பவனைப் போலத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்… அவனது மார்பில் அவள் முகம் புதைத்திருக்க.. அவளது தோள் வளைவில் அவன் முகம் புதைப்பதைப் போல இதழ் பதித்திருந்தான்..
வந்தனாவுக்கு அனைத்தும் மறந்து விட்டது.. அவன் அவளது கணவன் என்ற நினைவு மட்டுமே இருந்தது.. எப்.எம்மில் ஒலித்த மெல்லிசை அவளை எங்கோ அழைத்துச் சென்றது.. மெல்லிசையில் மனம் நனைந்தவளுக்குள் காதல் உணர்வுகள் துளிர்ந்தன..
வீடு வந்து விட்டது.. இப்போது சிடுசிடுப்பில்லாமல் வெகு நிதானமாக.. இறங்க மனமில்லாமல் இறங்கினாள் வந்தனா.. அவனும் மலரை இறக்கி விடுவது போல ‘பொன்னே, பூவே’ என்று பத்திரமாக இறக்கி விட்டான்..
“பாருடா.. நம்ம விவேக்கு இப்பவே பொண்டாட்டியைத் தூக்கி மடியில வைச்சுக்கிட்டான்.. இறக்கி விட மனசில்ல..”
யாரோ சொல்ல.. யாரோ சிரித்தார்கள்.. வந்தனாவுக்கு வெட்கம் வந்து விட்டது.. குங்குமமாக முகம் சிவக்க.. விவேகானந்தனின் முதுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.. விவேகானந்தன் மென்னகையுடன் அவளது கையைப் பற்றிக் கொண்டபோது அவளுக்கு வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.
அவளது கை பற்றிக் கொண்டவனின் கையை அவளும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.. அவனுக்கும் அவளுக்குமான ரகசியத் தொடுகையில் அவன் அவளை உரிமையுடன் பார்த்து விட்டு.. அவனது விரல்களைப் பற்றியிருந்தவளின் விரல்களை ரகசியமாக அழுத்தினான்.. வந்தனா நிலைகுலைந்தாள்.. அவளது கரம் பற்றியிருப்பவன் அவளுடைய விரோதி என்ற விவரமே அவளுக்கு மறந்து விட்டது.. அன்றுதான் புதிதாக அவனைப் பார்ப்பதைப் போலச் சொக்கிப் போனாள்..
“கங்கிராஜீலேசன்ஸ் விவேக் – காலையில் மண்டபத்துக்கு வர முடியலை..” ஹாலில் காத்திருந்த செந்தில்நாதன் வந்தனாவையே பார்த்தபடி பரிசுப் பொருளை நீட்ட.. வந்தனா சூடு பட்டதைப் போலத் துள்ளி விலகினாள்..
அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த விவேகானந்தனின் விழிகளில் கனல் கனன்றது.. பதிலுக்கு அவனை முறைத்த வந்தனாவுக்கு இதே செந்தில் நாதனிடம் விவேகானந்தன் வர்ணித்த ‘அட்டு பிகர்..’ ‘தகர டப்பா மூஞ்சி..’ ‘உனக்கு லப் பண்ண வேற மூஞ்சியே கிடைக்கலியா..?’ என்பன போன்ற வர்ணனைகள் அவளது நினைவலைகளில் இருந்து முட்டி மோதி எழுந்து நின்றன..
வந்தனா வேகமாக உள்ளே போக.. அவளைப் பார்வையாலே பின் தொடர்ந்த செந்தில்நாதனிடம்..
“இங்கே பாருடா..” என்று உறுமினான் விவேகானந்தன்..
முதலிரவில் விவேகானந்தன் அறைக்குள் நுழைந்தபோது தரையில் தலையணையைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்தாள் வந்தனா.. கோபத்துடன் கட்டிலைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்த மலர்ச்சரங்களைப் பிய்த்து எறிந்து விட்டுக் கால்மாடு, தலைமாடாக கட்டிலில் விழுந்தான் விவேகானந்தன்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.