Chapter 03
உன் கண்ணில் மின்னும்..
மின்னலை விடவா..
அந்த வானில் மின்னும்
மினனல் உயர்வு..?
அழகாக.. அன்றுதான் பூத்த பூவைப் போலிருந்தாள் அவள்.. அவளின் அந்தவசீகரத்தில் அவன் நிலை குலைந்தான்.. மின்னலாக வந்தவளின் ஆகர்ஷிப்பில் அவன் அலைமோதினான்..
“யாரும்மா அது..?”
“யாரை கேட்கிறடா..?”
“அதான்.. பர்ஸ்ட் ப்ளோருக்கு குடி வந்திருக்காங்களே, அவங்களைத்தான் கேட்கிறேன்..”
“அதையேண்டா கேட்கிற..?”
இப்படிச் சொன்ன பரிமளத்தின் முகத்தில் கோபத்தின் சாயல் இல்லாததில் குழம்பிப் போனான் பிரதாப்..
‘அதைக் கேட்கிறது தப்புன்னு அம்மா கண்டிக்கிறாங்களா..?’
மடியில் கணமில்லாவிட்டால் வழியில் பயமில்லை.. அவன் மனதில்தான் கனமிருக்கிறதே.. அப்புறம் எப்படி..? தாயின் கேள்வியில் அவன் குழம்பிப் போகாமல் இருப்பான்..
“நீயாய் வாயைக் கொடுத்து மாட்டிக்காதே அண்ணா.. அம்மா… நீ கேட்டதுக்காக… ஏண்டா கேட்கிறன்னு சொல்லலை..” அவனுடைய தங்கை ப்ரீதி கிசுகிசுத்தாள்..
“பின்னே..?”
“கதையே வேற.. அவங்க அப்பாவும் பெண்ணும் தானாம்..”
“அம்மா எங்கே போனங்களாம்..?”
“சாமிகிட்ட போயிட்டாங்களாம்..”
“அடப்பாவமே..”
“இப்பச் சொல்றில்ல.. இதைத்தான் அந்த லட்சணத்தில அம்மாவும் சொல்லி வைச்சாங்க..”
“அடக்கடவுளே..”
“இதுக்கெல்லாம ஏண்டா.. கடவுளைக் கூப்பிட்டு வைக்கிற..?”
“நீ முதல்ல தட்டுல போட்டிருக்கிறதை முழுங்கு..”
“கறக்க வேண்டிய விசயத்தையெல்லாம் கறந்திட்டல்ல… இப்ப அப்படிதாண்டா சொல்லுவே.. ஆமாம்.. நீ எதுக்காக இத்தனை அக்கறையாய் அந்த பேமிலியைப் பத்தி விசாரிக்கிற..?”
ப்ரீதி சந்தேகத்துடன் பார்த்தபோது..
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே..” என்று சமாளித்து விட்டான் பிரதாப்..
அவள் நம்பாத பார்வையுடன் சாப்பாட்டைக் கவனிக்க ஆரம்பிக்க.. அவளுக்கு பரிமாறியபடி பரிமளம் தொடர்ந்தாள்…
“அந்தப் பொண்ணு தாயில்லாப் பொண்ணாம்.. இங்கேதான் என்ஜினியரிங் காலேஜில படிக்குதாம்.. அவளோட அப்பா வெட்னரி டாக்டரா இருக்காராம்..”
“ஓஹோ…”
“நல்ல பொண்ணுடா.. என்னம்மா படிக்கிறன்னு ஒரு வார்த்தைதான் கேட்டேன்.. அப்படியே ஒட்டிக்கிச்சு..”
அவள் ஒட்டிக் கொண்டது.. பரிமளம் அவளுடைய தாய் என்பதினால்தான் என்பதை அறியாத பரிமளத்தின் முகம் கனிந்திருந்தது..
“ம்ஹும்.. இந்த அம்மாக்கள் எல்லோருமே அடி முட்டாள்கள்தானா..?”
“ஏய்ய்..”
“இந்த அதட்டற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே.. நானும் அந்தப் பொண்ணு வந்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. அவ உன்னையே ஒரு மார்க்கமா பார்க்கிறா.. நீ அவளைப் பார்க்காததைப் போல பார்க்கிற.. என்னதாண்டா நடக்குது..?”
அது என்னென்னவோ நடந்து வைத்தது.. அஞ்சனாவைக் கண்டாலே அவனுக்கு ஜெர்க் ஆகி வைத்ததென்றால் அவனைக் கண்டால் அஞ்சனாவுக்கு தொண்டை உலர்ந்து போனது..
அவனை அவள் விழிகள் தேடுவதை அறிந்தும் அறியாதவனைப் போல அவளைக் கடந்து செல்பவன்.. அவள் பார்க்காதபோது திரும்பி அவளைப் பார்த்து வைப்பான்..
‘இதையெல்லாம் ப்ரீதியிடம் சொல்ல முடியுமா..?’
“நீ முதலில் தட்டை கழுவு..”
“அதுக்குத்தான் அம்மா இருக்காங்களே..”
“அப்பக் கையையாவது கழுவு… அதுக்கும் அம்மாதான் வரணுமா..?”
“அண்ணனாய் லட்சணமாய் இரு” அதட்டலைப் போட்டுவிட்டு ஒதுங்கி கொள்வாள் ப்ரீதி..
அதற்கு மேல் ப்ரீதியிடம் வாய் கொடுக்கமாட்டான்.. அவனுக்கு என்றுமே ப்ரீதியின் அதீதப் புத்திசாலித்தனத்தின் மீது ஓர் விதமான பயம் உண்டு..
யாராலும் கண்டுபிடிக்க முடியாததை.. இவ கண்டுபிடிச்சு வைச்சிருக்கிறாளே.. கில்லாடிதான்..
தங்கையின் புத்திசாலித்தனத்தில் பெருமைபட்டுக் கொண்டாலும்.. அந்த புத்திசாலித்தனம்.. அவனைச் சுற்றி வியூகம் அமைப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை..
‘எதுக்கும் இவ பார்க்கிறாளான்னு பார்த்துட்டுதான் அவளைப் பார்த்து வைக்கணும்.. இவளுக்கு எக்ஸ்ரே கண்..’
அன்றும் அதே கதைதான் தொடர்ந்தது.. மழையில் நனைந்து கொண்டிருந்த அஞ்சனாவின் ஏக்கப் பார்வையை சந்திக்க முடியாதபடி.. அஞ்சனாவின் அருகிலேயே ப்ரீதியும் நனைந்துக் கொண்டிருந்தாள்..
அவன் அஞ்சனாவைப் பார்த்தால்.. அதை கட்டாயம் ப்ரீதியும் பார்த்து விடுவாள்.. அதற்குப் பின்னால் அவளின் கேள்விகணைகளிலிருந்து தப்பிப்பது என்பது நடக்காத ஒன்று..
அதைத் தவிர்க்கத்தான் அஞ்சனாவைப் பார்ப்பதையும் தவிர்த்தான் பிரதாப்.. அதையறியாத அவள்.. அவளையே அவன் தவிர்ப்பதாக நினைத்து துயரம் கொண்டாள்..
“மழையே..! மழையே..
இளமை முழுதும்
நனையும் வரையில் வா…!
தேவ மயக்கம்…!”
ப்ரீதிகைகளை விரித்துக் குழந்தைபோல நனைந்து கொண்டே பாடினாள்..
அந்த மழை நேரம் எல்லோரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் சிரிக்க வைத்தது அந்த அதீத உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.. அஞ்சனாவைத் தவிர…
அவளது பார்வை பிரதாப்பின் பிரத்யேகப் பார்வைக் காக ஏங்கித் தவித்து.. அவன் மீது படிந்து விலகிக் கொண்டிருந்தது..
“கூந்தல் மலரில்..
தேனைக் குடிக்க..
காத்துக் கிடந்தேன்…
கால்கள் கடுக்க..
இதயம் துடிக்க…”
ப்ரீதி தொடர்ந்து பாட.. முகத்தில் வழிந்த மழைநீரை வழித்தபடி.. ஸ்ரீதேவி அவளை மெச்சிக் கொண்டாள்..
“இந்தப் பாட்டையெல்லாம் நினைவில் வைச்சுப் பாடறியே.. கெட்டிக்காரிதான்…”
“இது மழைப் பாட்டுக்கா..”
“என்ன பாட்டோ.. ஒரு காலத்தில் இதைப்போலப் பாட்டுக்கள்தானே கொடி கட்டி பறந்துச்சு..?”
“இப்போ தாம்.. தூம்ன்னு காதைப் பிளக்கிற பாட்டுக்களா வந்த காற்றோடு போகுது..”
“இவ பெரிய அத்தை பாட்டி.. சொல்ல வந்துடா..”
“நம்ம அபார்ட்மெண்ட்ல அத்தைகள் வேணும்ன்னா இருக்காங்க.. பாட்டிக்குத்தான் பஞ்சமா இருக்கு..”
“அந்தக் குறை உனக்கெதுக்கு..? அதுதான் எங்கம்மா லலிதாம்மான்னு அம்மாக்கள்ளாம் வந்து போறாங்களே..”
ஸ்ரீதேவியிடம் பேசும் பேச்சு பேச்சாக இருக்க, ப்ரீதியின் பார்வை அஞ்சனாவையே அளந்து கொண்டிருந்தது..
அதைக் கண்டுகொண்ட பிரதாப்.. மறந்தும்கூட அஞ்சனாவின் பக்கம் திரும்பவில்லை.. அதைக் கவனித்த ப்ரீதியின் இதழ்களில் ஏளனப் புன்னகை படிந்தது..
“என்னடி.. நீயா சிரிச்சுக்கற..?” லலிதா கேட்டாள்..
“இதென்னக்கா… அநியாயமாய் இருக்கு. சுற்றி இத்தனை பேர் இருக்கீங்க.. இதில நான் மட்டும் தனியாய் சிரிக்கறேன்னு பெயர் கட்டறிங்களே… இது நல்லவா இருக்கு..?”
“நல்லா இல்லைதான்.. உன் குணம் தெரிந்தும் உன்கிட்ட நான் கேள்வி கேட்டிருக்கக்கூடாதுதான்..
யாரு நீ..?”
“ப்ரீதி..”
அவள் கண்சிமிட்டி சிரிக்க அஞ்சனா சிரிக்கவில்லை.
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.