Chapter 08
கொட்டுகிற மழைத்துளி
குலம் பார்த்து.. மதம் பார்த்தா
உடல் நனைக்கிறது..?
அந்தி சாய்ந்து கொண்டிருந்த அந்த இருள் வேளையில் மகளை அழைத்தாள் நிஷா…
“கீழே போய் காம்பவுண்டு லைட்டை போட்டுட்டு வா ஆயிஷா… அப்பத்தான் நம்ம அபார்ட்மென்டுக்கு ‘பரக்கத்’வரும்”
ஆயிஷா கீழே போனாள்.. அஞ்சனா ‘பரக்கத்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டாள்…
“பொழுதுபோனா விளக்கு வைக்கணும்.. அப்பத்தான மகாலட்சுமி வீடு தேடி வரும்ன்னு நம்மள்ல சொல்லு வோமில்ல… அதுதான் ‘பரக்கத்’வரும்ன்னு நிஷா சொன்னது” பொறுமையாக விளக்கம் சொன்னாள் ஸ்ரீதேவி.
அஞ்சனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஜானகி இதே வார்த்தைகளைத்தான் அடிக்கடி சொல்லுவாள்.. அவளிடமிருந்த அத்தனை தன்மைகளையும் நிஷாவிடம் கண்டவளுக்கு மனம் பொங்கியது..
“இதைத்தான் தினமும் அல்லாகிட்ட துவா பண்ணிக் கேட்கிறேன்..” என்பாள் நிஷா..
‘துவா’ என்றால் ‘பிரார்த்தனை’ என்கிறது இஸ்லாம்.
இதையேதான் ஜானகியும் சொல்லுவாள்..
“பெருமாள்கிட்ட பிரார்த்தனை பண்ணியிருக்கேண்டி” என்பாள்..
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?
உச்சரிக்கும் வார்த்தைகளும், வழிபடும் மரபு முறைகளும் வேறுபட்டிருக்கின்றன.. அவ்வளவுதான். மற்றபடி தாத்பர்யம் ஒன்றுதானே..?
நாளைக்குப் பேசிக்கலாம். இருட்டிருச்சு… ஸ்ரீதேவி எழுந்து கொண்டாள். அந்த அபார்ட்மென்டின் முக்கிய விழாக்களுக்கு எல்லாம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவிதான். எதையும் திட்டமிட்டு செய்து முடிக்கும் தன்மை அவளிடமிருந்தது..
புது வருடத்துக்கான போட்டிகளிலிருந்து அதற்கான அமைப்புகள் வரை அனைத்தையும் வடிவமைப்பது அவள் தான்..
“ஸ்ரீதேவியே சொல்லியாச்சு.. அதற்கு மேல் அப்பீலே இல்லை” உற்சாகமாக கண்சிமிட்டினாள் லலிதா.. அவளுடைய உற்சாக அலைகள் அவள் எந்த இடத்திலிருந்தாலும் அவளைத் தனித்துக் காட்டிவிடும் வல்லமை படைத்தவை. எதைச் சொன்னாலும் லேசாக புருவம் உயர்த்தி இமை சிமிட்டுவாள்.. அவள் கண்களில் பொங்கும் சங்கீத மொழியில் மற்ற பெண்களிடமும் அந்த உற்சாக அலை பரவிவிடும்..
அவர்கள் கலைந்து படியிறங்கினார்கள்.. இரண்டாம் மாடியிலிருந்த நிஷாவின் அபார்ட்மென்ட்டைக் கடக்கப் போகையில் அஞ்சனாவின் கண்கள் ஒளிர்ந்தன..
உள்ளே சபியுல்லாவுடன் பேசியபடி மாடிப்பகளில் விழிகளைப் படியவிட்டு அமர்ந்திருந்தான் பிரதாப்..
“வீட்டுக்குப் போய் என்ன பண்ணப்போற அஞ்சனா..? அதான் உன் அப்பா வர லேட்டாகுமுன்னு சொன்னியே.. உள்ளே வந்து உட்கார்ந்திட்டுத்தான் போயேன்..”
நிஷா அழைத்ததும் கிடைத்தது வாய்ப்பென்று அவளுடன் ஒட்டியபடியே உள்ளே போய்விட்டாள் அஞ்சனா…
“ஈபியிலே நிலைமை இப்படிதானிருக்கப்பா..”
பிரதாப்புடன் பேசியபடி திரும்பிப் பார்த்த சபியுல்லா சிநேகிதமான சிரிப்பொன்றை அஞ்சனாவுக்காக உதிர்த்தான்.
“உட்காரும்மா..” என்று சொல்லிவிட்டு அவன் பிரதாப்பிடம் பேச்சை தொடர்ந்துவிட.. அஞ்சனா உட்கார்ந்தாள்…
“நீங்க ஹஜ்ஜுக்கு போய் வந்தப்பதான் இது நடந்தது அங்கிள்” என்றான் பிரதாப்..
“ஹஜ்ஜ்h..?” அஞ்சனா விழி விரித்தாள்..
“ம்ம்.. ஹஜ்தான்.. உனக்கு இது தெரியாதா..?” நிஷா டீயை அவளிடம் நீட்டினாள்..
“தெரியாது ஆன்ட்டி..”
“நீங்க காசி ராமேஸ்வரம்ன்னு போவீங்க இல்ல..?”
“ஆமாம்.. அதை தீர்த்த யாத்திரைன்னு சொல்லுவோம்..”
“இது ஹஜ்.. புனித யாத்திரை..”
“ஓ…”
அஞ்சனாவின் விழிகளில் அதைப்பற்றி அறியும் ஆர்வம் இருப்பது வெளிப்படையாகத் தெரியவும்.. நிஷா ஒரு புத்தகத்தை எடுத்து வந்து பக்கங்களைப் புரட்டி அவற்றிலிருந்த படங்களைக் காண்பித்தாள்…
“இதுதான் மெக்கா.. இங்கேயிருக்கிற ஹரத்தில கஃபதுல்லாவைச் சுத்தி வந்து தவாப் செய்யணும்..”
“ம்ம்ம்.. பட்.. ஹரம்னா என்ன ஆன்ட்டி..?”
“அங்கேயிருக்கிற பள்ளிவாசல்..”
“தவாப்ன்னா..?”
“நீங்க கோவில் பிரகாரத்தை சுத்தி வருவீங்கள்ல.. அதைப் போல நாங்க எங்க கோவிலை ஏழு தரம் சுற்றி வருகிறதுக்குப் பெயர்தான் தவாப்.. நாங்க அறுபது தடவை தவாப் செஞ்சோம்..”
“ஓ…”
“அங்கே வற்றாத நீருற்று இருக்கும்மா.. அது எப்படி வந்தது தெரியுமா..? இப்ராஹீம் தன்னோட மனைவியையும், மகனையும் அல்லாவின் கட்டளைப்படி பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்துட்டாராம். குழந்தைக்கு தாகம் எடுத்திருச்சாம். அவரோட மனைவி இந்த மலைக்கும் அந்த மலைக்குமா ஓடித் தவிச்சாங்களாம்.. அப்ப அந்தக் குழந்தையின் காலடி பட்டு அங்கே நீரூற்று பீறிட்டு வந்ததாம்.. அந்த ஊற்றுக்குப் பெயர்தான் ஜம் ஜம் கிணறு..! அங்கே பாலைவனச்சோலை இருக்கும்மா.. அங்கே தண்ணீ வற்றவே வற்றாது…”
இது கடவுளின் கிருபை அல்லவா..? பாலை வனத்தில் வற்றாத நீரூற்று ஒன்று இருக்கிறது என்றால் இது ஆண்டவன் நடத்திய அற்புதமில்லால் வேறு என்ன..?
அஞ்சனாவின் உடல் சிலிர்த்தது..
“மெக்காவில இருந்து மெதினாவுக்கு போனோம்.. நீ கூட ஹிஸ்ட்ரியில அதை ஹிஜிரத்துன்னு படிச்சிருப்பியே..”
“யெஸ்.. முகமதுநபிகள் மெக்காவிலிருந்து மெதினாவுக்கு இடம் மாறினதை ஹிஜிரத்துன்னு இஸ்லாத்தில் சொல்லுவாங்கன்னு படிச்சிருக்கேன்..”
“அதேதான்.. அங்கே பணமெல்லாம் ஒரு விசயமே இல்லை.. நான் கையோட கொண்டு போயிருந்த சாமான்களில் சமைச்சதை எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட வைச்சேன்..”
‘இவள் அன்னபூரணி..!’ என்று நினைத்துக் கொண்டாள் அஞ்சனா…
நிஷாவின் மனது அப்படிப்பட்டது.. அவள் முன்னால் பசியோடு யார் வாடி நின்றாலும் அவள் பொறுக்க மாட்டாள்.. அது வீட்டுவேலை செய்கிற பணியாளாக இருந்தாலும் சரி.. குப்பை அள்ள வருகிற யாரோ ஒரு ஆளாக இருந்தாலும் சரி.. பசிக்கிறது என்று கேட்டால்.. அவளிடம் உணவு நிச்சயமாக கிடைக்கும்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.