Chapter 10
வெள்ளி மின்னல் கீற்றாக
என் வாழ்வில் நீ வந்தாய்…
‘இவன் சிநேகிதன்’ அஞ்சனா அவனை ரசித்தாள்.. அவனால் சதிஷிடமும் சபியுல்லாவிடமும், ராமனிடமும், ஸ்ரீதரிடமும் தோழமையுடன் பேச முடிந்தது.. அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கூடபிறந்தவனைப் போல பேச முடிந்தது.. சபியுல்லாவின் வயதான அம்மாவிடம் பொறுமையுடன் பேச முடிந்தது.. சிறுவர்களிடமும் குழந்தைகளிடமும் அவர்களுக்கு இணையாக பேச முடிந்தது…
இவன் எல்லோருக்கும் பிரியமானவன்.. அவன் மீதான அவளின் பிரியம் அதிகரித்தது..
“நடந்தது என்னன்னு நான் சொல்றேண்ணா” ஆயிஷா விளக்கம் சொல்ல முன்வந்தாள்.
“ஆமா.. இவ பெரிய டி.வி. காம்பியர், நடந்தது என்னன்னு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போறா..” நசிம் கிண்டலடித்தான்…
“டி.வி யில்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து சொல்லணுமா..? வீட்டுக்குள் சொல்லக்கூடாதா..? நீ சொல்லு ஆயிஷா” பிரதாப் தூண்டினான்..
“அம்மா மட்டன் குருமாவை குக்கர்ல வைச்சிட்டு வாஷிங்மெஷின்ல துணிகளை போட்டுக்கிட்டு இருந்தாங்க..”
“ஓ.கே..”
“அத்தம்மா ஹால்ல இருந்த ஊஞ்சல்ல உட்கார்ந்துக் கிட்டு டி.வி பார்த்துக்கிட்டு இருந்தாங்க…”
“டபிள் ஓ.கே. மேலே சொல்லு…”
“கிச்சன்ல இருந்து டமால்ன்னு சத்தம் கேட்டுச்சு..”
“ஐயையோ.. அப்புறம்..?”
“அம்மா ஓடிவந்து கேஸ் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிட்டாங்க. இந்த அத்தம்மா தேமேன்னு ஊஞ்சலாடிக் கிட்டு இருந்திருக்கணுமா.. இல்லையா..?”
ஆயிஷாவின் இந்தக் கேள்விக்கு ஆமாம் என்ற பதிலைச் சொல்ல பிரதாப்பால் எப்படி முடியும்..?
அதனால்.. அவன் மௌனப் புன்னகையை உதிர்த்தான்…
“அத்தம்மா ஊஞ்சலில இருந்து குதிச்சு இறங்கி.. கிச்சனுக்குள்ள போனாங்க.. தரையில இருந்த எண்ணெயில கால் வழுக்கிவிட்டு விழுந்துட்டாங்க..”
“அடப்பாவமே.. டாக்டரிடம் காண்பிச்சிங்களா ஆன்ட்டி..?” நிஷாவிடம் கேட்டான்..
“தினமும் வீட்டுக்கு பிஸியோதெரவி டாக்டர் வந்து போர்கிறார்ப்பா..” பதில் சொன்னாள் நிஷா..
“நீங்களும் கொஞ்சம் பார்த்து நடக்கக்கூடாதா அத்தம்மா..?”
பரிதாபத்துடன் பிரதாப் கேட்க… ஆயிஷா வாய் பொத்திச் சிரித்தாள்…
“நீங்க வேறண்ணா.. அத்தம்மா பால்கனியில சேர் போட்டு உட்கார்ந்துக்கிட்டு எதிர்த்த வீட்டு தோட்டத்தில தெரிஞ்ச சப்போட்டா மரத்தைப் பார்த்தாங்களா..”
“பார்த்தா என்ன..?”
“அதில ஒண்ணுமில்லன்னா.. அங்கே தெரிஞ்ச சப்போட்டாவை இங்கேயிருந்து கிளியரா பார்த்தாங்கள்ல அதில தான் எல்லாம் இருக்கு..”
“என்ன இருக்கு..?”
“அத்தா கேட்டிரு.. ஏம்மா அங்கே தெரியற சப்போட் டாவை இவ்வளவு கிளியரா பாக்கறிங்களே.. வீட்டுக்குள்ள தரையில கிடக்கிறஎண்ணெயை மட்டும் ஏம்மா பார்க்காம விட்டிங்கன்னு கேட்டாரா.. அந்தம்மாவால பதிலே சொல்ல முடியல…”
ஆயிஷாவின் சிரிப்புடன் நசிமின் சிரிப்பும் இணைந்து கொள்ள அந்த வீட்டில் ஓர்விதமான உயிர்ப்பு இருப்பதை உணர்ந்தாள் அஞ்சனா..
அவள் வீட்டில் அது இல்லை.. அவளைக் கொண்டாட தாய் இல்லை.. கூட அரட்டையடிக்க உடன் பிறப்புகள் இல்லை. பாசமாய் பேச தாத்தா, பாட்டி இல்லை.
அவளும்.. கோதண்டமும் மட்டும் இருக்கும் வீட்டில் தனிமையுணர்வுதான் மிதந்தோடும்..
அஞ்சனாவை பாசமாகப் பார்த்துக்கொண்டார் கோதண்டம்.. அதில் அவர் எந்தக் குறையும் வைத்த தில்லை. ஆனால் அவரால் மட்டுமே அந்த வீட்டுக்குள் உயிர்ப்பைக் கொண்டு வர முடியவில்லை..
“உன் அப்பா பாவம் அஞ்சனா..”
உமா ஒரு நாள் பரிதாபப்பட்டபோது “ஏன்..?” என்று கேட்டாள் அஞ்சனா..
“நீதான் உலகம்ன்னு உன் அப்பா வாழ்கிறாரு.. உனக்கு கல்யாணமாகி நீ உன் ஹஸ்பெண்ட் வீட்டுக்கு போயிட்டின்னா உன் அப்பா தனியாத்தானே இருந்தாகணும்..”
அதைக் கேட்ட அஞ்சனாவின் கண்கள் கலங்கி விட்டன..
“நான் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன்க்கா.. அவர் பக்கத்திலேதான் இருப்பேன்..”
இதைச் சொன்ன அஞ்சனாவை ஆழமாகப் பார்த்த உமா எதையும் பேசவில்லை..
அவளுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அஞ்சனா..
அவளுக்குத் தெரியாமல் இருக்காது… ஒரு பார்வையிலேயே யாரையும் கணித்துவிடக்கூடிய சாமர்த்தியம் அவளிடம் உண்டு.. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருக்கும் தன்மை அவளிடம் இருந்தது..
உமா மகேஸ்வரிக்கு பரதநாட்டியம் ஆடத் தெரியும். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டாள்.. கண்ணாடி கிளாஸில் ஆழமான ஆயில் பெயிண்ட்ங்கில் ராகவேந்திராவின் படத்தை வரைந்து அவள் வீட்டு ஹாலில் மாட்டியிருக்கிறாள். அவள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் அதை ரசிப்பார்கள்.. அவள் வரைந்ததுதான் அது என்பதை சொல்லவேமாட்டாள்.. அவளுடைய குணாதிசயம் அப்படிப் பட்டது..
அவளுக்கும் சேர்த்து சதிஷ்தான் மனைவியின் திறமைகளைப் பற்றி எடுத்துச் சொல்வான்.. அதை அவன் விவரிக்கும் நேர்த்தியில் இரண்டு மகன்களைப் பெற்ற பின்பும் இன்னமும் அவன் மனதில் உமாவின் மீது பொங்கி கொண்டிருக்கும் காதலுணர்வு வெளிப்படும்..
அவர்கள் மேட் ஃபார் ஈச் அதர்…
அஞ்சனாவும் பிரதாப்பும் அப்படியொரு வாழ்க்கையை வாழும் நாள் வருமா என்று நிறைய முறை ஏங்கியிருக்கிறாள் அஞ்சனா..
உமா அழகானவள்.. மென்மையானவள்.. அவளை அடைந்த சதிஷ் கொடுத்த வைத்தவனா.. இல்லை அவனைப் போன்ற இணக்கமான குணவானான கணவன் கிடைத்ததினால் உமா கொடுத்து வைத்தவளா என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாதபடி இருவரும் அதே காதலுடன் குடும்பம் நடத்திக் கொண்டார்கள்..
“அஞ்சனா.. இங்கே சாப்பிடேன்..”
நிஷாவின் குரலில் நினைகளிலிருந்து மீண்ட அஞ்சனா புன்னகையுடன் அதை மறுத்தாள்..
“அப்பா வந்துடுவாங்க ஆன்ட்டி.. நான் வீட்டுக்கு போகணும்..”
அவளது குறிப்பை உணர்ந்த பிரதாப் எழுந்து கொண்டான்..
அவன் எழுந்து கொண்டதை ஜாடையாகக் கவனித்த அஞ்சனாவின் மனம் மலர்ந்தது.. அவளுடைய தாய் ஜானகி உயிரோடு இருந்த காலத்தில் அவளுக்கும் கோதண்டத்திற்கும் இடையே இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்ததைக் கவனித்திருக்கிறாள் அஞ்சனா..
யார் வீட்டுக்காவது போக வேண்டி வரும்போது பேசிகொண்டிருக்கும் ஜானகி கிளம்பப் போவதை குறிப்பால் கணவனுக்கு உணர்த்துவாள்.. அது ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்..
மழைக்காலங்களில்…
“கொடியில் துணியைக் காய வைச்சிட்டு வந்திட்டேன்.. மழைக்கு முன்னாலே வீட்டுக்குப் போனா துணிகளை நனைய விடாம எடுத்திரலாம்..” என்பாள்…
வெயில் நேரங்களில்…
“பால்காரர் வரும் நேரமாச்சு.. பக்கத்து வீட்டிலயும் பால் பாத்திரத்தை கொடுத்துட்டு வர மறந்துட்டேன்..” என்று சொல்வாள்..
அஞ்சனா கூட வராமல் இருந்தால்..
“அஞ்சனா ஸ்கூல் விட்டு வரும் நேரமாச்சு..” என்பாள்..
அஞ்சனா கூட இருந்தாலோ..
“அஞ்சனாவை டியூசனுக்கு அனுப்பி வைக்கணும்” என்பாள்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக அவள் பேசி வைப்பதை அஞ்சனா ரசிப்பாள்.. அதைவிட அவள் பெரிதாக வியந்தது.. ஜானகியின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் உதிர்த்த மறுகணமே கோதண்டம் எழுந்து நின்றுவிடுவார்..
அது ஒருவகையான புரிதலைக் கொண்ட செயல்பாடு. கணவன், மனைவி இருவருக்குமிடையே உள்ள அந்தரங்க பாஷை.. அதை அஞ்சனாவின் குறிப்பையுணர்ந்து எழுந்துக் கொண்ட பிரதாப் பிரதிபலிப்பதில் அவருக்குள் ரகசிய சந்தோசம் உற்பத்தியானது.. ஒரு மனைவியிடம் கணவன் உணர்த்தும் புரிதலை.. அவளிடம் அவன் உணர்த்தியதில் அவனோடு ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவிட்ட சந்தோசத்தையும், நிறைவையும் அவள் அனுபவித்தாள்..
படிகளில் இறங்கியவளின் பின்னாலேயே இறங்கியவன்.. வளைவில் அவளை முந்திக்கொண்டு இறங்குவதைப் போல வேகமெடுத்து, தற்செயலாக மோதுவதைப் போல அவள்மீது படிந்து., விலகி பிரிந்து சென்றான்..
அஞ்சனாவின் உடலில் மின்சாரம் பாய அவள் அப்படியே நின்றுவிட்டாள்.. கடைசிப் படியில் இறங்கியவன் திரும்பிப் பார்க்க அவள் கண்களில் மத்தாப்பூ ஒளிர்ந்தது…
“சிநேகிதனே..! சிநேகிதனே..!
ரகசிய சிநேகிதனே..!”
அவள் மனம் ரகசியமாய் பாடியது..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.