Chapter 11
தூரத்து இடிமுழக்கம்
எதைச்சொல்லி முழங்குகிறது..?
நான் காதலில் வெல்வேனா..?
இல்லை.. தோற்பேனா..?
“ஸ்ஸ்ஸ்..”
குக்கர் மூன்றாம் முறையாக சப்தம் எழுப்ப குக்கரை இறக்கி வைத்தாள் பரிமளம்..
“அம்மா நேரமாச்சு..”
டைனிங் ஹாலில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் ப்ரீதி..
“இதுக படுத்தற பாட்டிலே கையில காலில சுடுபாலைத் தான் கொட்டிக்கப்போறேன்.. இழுத்துப் போர்த்திக்கிட்டு கட்டிலில் காலை நீட்டிப் படுத்திட்டேன்னா தெரியும். இந்த பரிமளம் இல்லாத வீடு எப்படி-யிருக்கும்ன்னு..”
எல்லா இந்திய குடும்பப் தலைவிகளைப் போலவே குமுறினாள் பரிமளம்..
“அம்மா..”
மீண்டும் தொண்டையிலிருந்த சைரனை அலற விட்ட ப்ரீதி கடுகடுவென்ற முகத்துடன் அங்கே வந்து பிரம்மநாயகத்தை கண்டதும் அலறலை அம்போவென்று விட்டுவிட்டாள்..
“எதுக்குக் கத்தற..?”
“டிபன்ப்பா..”
“அதை நீயே போய் கிச்சனில் எடுத்துக்க வேண்டியது தானே.. அவளுக்கென்ன ஏழு கையா இருக்கு..? இந்த வீட்டில இருந்து மூணு பேரு வெளியே கிளம்பியாகணும்.. எல்லாத்துக்கும் சமைச்சு போடத்தான் அவளால முடியும் ஊட்டிவிடச் சொன்னா அவளால முடியுமா..?”
பிரம்மநாயகம் போட்ட சத்தத்தில் அவர் முன்னால் அமர்ந்து டிபன் சாப்பிடுவதை விட சமையலறையில் போய் நின்று அவர் கண்ணுக்கு மறைவாய் டிபன் சாப்பிடுவதே உசிதம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் ப்ரீதி..
ஒரு முழ நீளத்துக்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த மகளைப் பார்த்த பரிமளம்…
“என்னடி..?” என்று விசாரித்தாள்..
“டிபனைத் தட்டில போட்டு கையில் கொடுங்க.. இப்படி நின்னுக்கிட்டே கொட்டிக்கறேன்..”
“இது வேறயா..? போடி போய் டைனிங் ஹால்ல உட்காரு.. அங்கே கொண்டு வந்து தர்றேன்..”
“எங்கே போறது..? அங்கேதான் உங்க காதல் கணவன் உட்கார்ந்திருக்கிறாரே..”
“காதல் கணவனா..? யாரைச் சொல்ற.. உங்க அப்பாவையா..? அவர் காதலிச்சிட்டாலும்..”
பரிமளத்திற்கு சிரிப்பு வந்துவிட்டது.. முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்த ப்ரீதி சிரிக்கவில்லை.
“சும்மா ஷோ காண்பிக்காதீங்கம்மா.. நான் என்னவோ உங்களை வேலை வாங்கறேனாம்.. நீங்க பாவமாம்.. இந்தக் குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாத் தேய்ந்து போயிட்டிங்களாம்.. அதனால் நீங்க செஞ்சு வைக்கிறதை நானாப் போட்டு சாப்பிட்டுக்கணுமாம்.. உங்களுக்கென்ன ஏழு கையா இருக்குன்னு அப்பா கேட்கிறாரும்மா..”
“அவரு அப்படியா சொன்னாரு..?” பரிமளம் பரவசப் பட்டு போனாள்..
கணவருடன் காலங்கடந்த டூயட் பாடலை பாடிவிடும் உத்தேசம் அவள் முகத்தில் வந்திருப்பதைக் கண்ட ப்ரீதி.. “இது வேலைக்கு ஆகாது” என்ற முடிவுடன் டிபனைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள்..
“அம்மா..” என்ற அழைப்புடன் சமையலறைக்குள் வந்த பிரதாப் கண்கள் செறுக நின்று கொண்டிருந்த தாயைப் பார்த்ததும் கவலைக்கு ஆளானான்…
“என்ன ப்ரீதி.. அம்மா இப்படி மந்திரித்துவிட்ட கோழியைப் போல ஒரு மார்க்கமா முழிச்சுக்கிட்டு இருக்காங்க..”
“மந்திருச்சுத்தான் விட்டிருக்காங்க..”
“என்ன உளருகிற..?”
“இது உளறலில்லை.. உண்மை..”
“யாரு மந்திரிச்சு விட்டதாம்..?”
“வேற யாரு.. எல்லாம் நம்ம அப்பாதான்..”
“இந்தா பாரு.. நானே இயர்எண்ட் கணக்கை முடிக்கிற டென்சனில் இருக்கேன்.. காலங்கார்த்தால கடுப்பைக் கிளப்பினேன்னுவைய்யி.. நான் மனுசனாவே இருக்க மாட்டேன்..”
“உன்னை நான் மனுசனாவே நினைச்சதில்லையே அண்ணா..”
“ஏய்ய்..”
“நீ தெய்வம்டா..”
தங்கையின் பேச்சில் பிரதாப்பின் முகத்தல் புன்னகை வந்தது.. அவள் தலையில் சின்னதாக ஒரு குட்டை வைத்தான்..
“வாய்தான் உன்னை வாழவைக்குது..”
“ஏண்டா.. நீ வாழவைக்க மாட்டாயா..? அவனவன் தங்கைக்கொரு கீதம் பாடறானுங்க.. நீ அட்லீஸ்ட் ஒரு கொட்டங்குச்சியையாவது தட்ட வேணாமா..?”
“நிறுத்து.. முதல்ல அம்மாவுக்கு என்னாச்சுன்னு சொல்லு..”
“கேள்வியை மாத்திக் கேட்கணும்டா.. அம்மாவுக்கு என்னாச்சுன்னு கேட்கக்கூடாது.. அம்மா என்ன பண்ணிக் கிட்டு இருக்காங்கன்னு கேட்கணும்..”
“என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க..?”
“நம்ம அப்பா இருக்காரில்ல..?”
“அதான் டைனிங் டேபிள்ல உர்ருன்னு முறைச்சிக் கிட்டு உட்கார்ந்திருக்கிறாரே..”
“அவர் உர்ருன்னு முறைக்கிறதெல்லாம் சும்மா உல்லுலாங்காட்டிக்குன்னு தோணுதுன்ணா.. மனுசர் செம விவரமான ஆளா இருக்கார்..”
“அப்படியே மண்டையிலே ஒன்னைப் போட்டிருவேன்.. அவரு நம்ம அப்பா.. அந்த நினைப்பு உன் மனசில இருக்கட்டும்.. அவரையா கிண்டல் பண்ற..?”
“சும்மா மிரட்டாதே.. இப்ப நம்ம அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு கேட்டியே.. அதுக்குப் பதிலைச் சொல்றேன் கேளு..”
“சொல்லு.. சொல்லு..”
“நம்ம அப்பா கூட கனவில டூயட் பாடிக்கிட்டு இருக்காங்கண்ணா..”
“என்னது..?!!!…”
ஆச்சரியத்துடன் தங்கையைப் பார்த்துவிட்டு டைனிங் டேபிளில் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருந்த தந்தையையும் அவன் பார்த்தான்…
“இவர் கூடவா டூயர் பாடிக்கிட்டு இருக்காங்க..?”
அவனது கேள்வியில் பொதிந்திருக்கும் ஆபத்தத்தை அவன் உணர்வானா என்ற யோசனையுடன் தலையில் அடித்துக் கொண்டாள் அவன்தங்கை..
“இவர்தான அவங்க ஹீரோ.. நம்ம அம்மா.. அப்பா கூட கனவில டூயட் பாடினா.. இப்படிக்கூட நீ கேட்டு வைப்பியா..?”
“ஆமாமில்ல.. இருந்தாலும் அப்ப அம்மா கொஞ்சம் யோசித்திருக்கலாம்..”
“எப்ப..? எதுக்கு..?”
“இவர் பெண் பார்க்க வந்தப்ப.. கல்யாணத்துக்கு சம்மதம் கொடுக்கிறதுக்கு..”
“அதுசரி.. இப்பப் போய் இந்த ஒபினியனை சொல்ற பாரு.. நீ அறிவாளி அண்ணன்தான்.. இந்த ஒபினியனை உனக்கு மகன் பிறந்தபின்னால சொல்லாம.. இப்பச் சொல்லி வைச்சிருக்கயே.. அதுக்காக உனக்குப் பாராட்டு விழா நடத்தனும்தான்..”
அவர்கள் பேசிக் கொண்டிருக்க.. அந்தப்பக்கமா வந்த பிரம்மநாயகம் மகளைப் பார்த்து..
“யாருக்கு பாராட்டுவிழா எடுக்கனும்..?” என்று முறைத்தார்..
“இல்லப்பா.. அண்ணன் ரொம்பவும் புத்திசாலித் தனமா ஒரு ஒபினியனைச் சொல்லுச்சு.. அதுக்கு பாராட்டு விழா நடத்தனும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்..”
ப்ரீதி.. அங்கிருந்து நழுவி விட்டாள்..
பின்னாடியே போன பிரதாப்பைப் பார்த்தவள் மெதுவான குரலில்..
“அஞ்சனாவை பொண்ணு பாக்க வரப் போறாங்க.. இந்த விவரமாவது தெரியுமா.. இல்ல.. தெரியாதா..?” என்று கேட்டாள்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.