Chapter 14
மழைநீரில் செல்லும் கப்பல்..
கவிழாமல் எப்படிச் செல்லும்?
காகிதத்தில் கப்பல் விட்டு..
கவலை கொண்டால் என்ன நியாயம்..?
தண்ணீர் தொட்டியின் மீது சாய்ந்து அமர்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்துக் கொண்டாள் அஞ்சனா..
அவளது கண்ணீர் தனிமை கிடைத்துவிட்ட தைரியத்துடன் தங்கு தடையில்லாமல் வெளியேறி அவள் கன்னம் நனைந்து வழிந்து தரையில் சிந்திச் சிதறியது..
“காதலுக்கு ஜாதியில்லை..
மதமு மில்லையே..
கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு
பேத மில்லையே..”
அபார்ட்மெண்டிற்கு அருகே துணிகளுக்கு பெட்டி போட்டுக் கொண்டிருந்த அயர்ன் வண்டிக்காரரின் வண்டியிலிருந்து எப்.எம். ரேடியோ பாடியது..
அஞ்சனா அந்தப் பாட்டில் மனதைச் செலுத்தினாள்..
“வேதமெல்லாம் காதலையே..
மறுப்பதில்லையே..
அது வேதம் சொல்லும் முனிவரையும்
விடுவதில்லை…”
அஞ்சனாவின் இதழோரம் கசப்பான புன்முறுவலொன்று பூத்தது..
வேதம் சொன்ன முனிவருக்கே அந்தப் பாடென்றால் சாமானியப் பெண்ணான அவள் படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்..
“அதுக்கு சொல்லலை சார்..”
யாருடனோ பிரதாப் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும் அவளது மனம் பரபரத்தது. கண்ணீரைத் துடைக்க கூட மறந்தவளாக அவள் ஓடிச்சென்று மாடிப் படிகளில் எட்டிப் பார்த்தாள்.. அங்கே பிரதாப் இல்லை.. அவளது விழிகள் அவனைத்தேடி அங்குமிங்கும் துழாவித் தவித்தன…
“கட்டவிழ்த்த கண்ணிரண்டும்..
உங்களைத் தேடும்
பாதிக் கனவினிலே இமையிரண்டும்
கண்களை மூடும்..”
தேடிய விழிகளில் அவன் தட்டுப்படாததினால் அவள் சோர்ந்துபோய் பழைய இடத்திலேயே தஞ்சம் புகுந்தாள்.. நிலவொளி பட்டப்பகல் போல் வீசிக் கொண்டிருந்தது.. முழுநிலவின் அழகை ரசிக்க முடியாத துர்பாக்கியசாலியாக அவள் உதட்டைக் கடித்து விம்மினாள்..
“பட்டுநிலா வான்வெளியில்
காவியம் பாடும்
கண்ட பள்ளியறை பெண்மனது
போர்களமாகும்..”
போர்களமான நெஞ்சோடு போரிட முடியாத சூழ்நிலைக் கைதியாக சோர்ந்து அவள் தலைசாய்த்தாள்.. தாயின் மடியை அவள் மனம் தேடியது..
“பாலிருக்கும் பழமிருக்கும்..
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது”
அவள் சுருண்டு படுத்தபோது அவளது தலைமாட்டில் அழுத்தமான காலடி சப்தம் கேட்டது.. அவள் பதறி எழுந்து அமர்ந்தாள்.. நிலவொளியில் அவள் முன்னால் பிரதாப் நின்று கொண்டிருந்தான்..
அந்த நிலாவெளிச்சத்தையும் மீறி ஒளிர்ந்த அவள் கண்களை அவன் உற்றுப் பார்த்தபோது அவசரமாக அவள் எழுந்து நின்றாள்.. அவள் கன்னத்தில் ஓடிய கண்ணீர் ரேகையை அவன் கண்டுகொண்டான்.. அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள்..
“இந்த நேரத்தில தனியா இங்க வந்து என்ன செய்கிற..?” பிரதாப் மௌனம் கலைத்தான்.
என்னவோ காலம் காலமாக பேசிப் பழகியதைப் போல இயல்பான குரலுடன் அவளை ஒருமையில் அழைத்து அவன் பேசியதில் அவளுக்குள் எல்லையில்லாத ஆறுதல் உண்டானது..
“மனசுக்கு கஷ்டமாயிருந்துச்சு.. தனியா இருக்கணும்னு தோணுச்சு.. அதான் மாடிக்கு வந்தேன்..”
அவளுக்கும் அவனைப் போலவே இயல்பாக பேச வந்து விட்டது..
“என்ன கஷ்டம்..?”
அந்த மெல்லிய இருளிலும் அவனுடைய ஊடுருவும் பார்வையை அவளால் உணர முடிந்தது..
“அது இருக்கு நிறைய..”
“ஓ.. நாளைக்கு உன்னைப் பெண் பார்க்க வருகிறார்களாமே..” அவன் கேட்டு விட்டான்..
“ம்ம்ம்..” அவளால் பதில் சொல்ல முடியவில்லை..
“உன் சம்மதோடத்தான் வருகிறாங்களா..?” அவன் கூர்மையாக அவளைத் துளைப்தைப் போலப் பார்த்தான்..
“இல்லை..” அவளுக்கு கண் கலங்கிவிட்டது..
“ஓ..” அந்தக் குரலில் தெரிந்த திருப்தியில் அவளது நெஞ்சம் நிறைந்தது..
“நினைச்சேன்.. ஆனா நீ ஏன் மறுக்கலை..?”
“நான் மறுக்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா..?”
அவன் மீண்டும் ஒரு திருப்தியான “ஓ..” வைப் போட்டான்..
“உன்னை வேற ஒருத்தன் பெண் பார்க்கிறதில எனக்கு விருப்பமில்லை அஞ்சனா..”
அழுத்தமான அவனது வார்த்தைகளில் கண்கள் மின்ன அவனை நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சனா.. வானில் கருமேகம் சூழ்ந்து.. நிலவை மறைத்து.. லேசான சாரல் ஆரம்பித்து.. துளித்துளியாய் அவர்களின் தோள் தொட்டு நனைத்தது. அஞ்சனாவின் பின்னால் தெரிந்த ஆகாயத்தில் வெள்ளி நீரோடையாய் ஒரு பெரிய மின்னல் கீற்று தோன்றி மறைந்தது..
மின்னலுக்கும் அவளுக்குமுள்ள சம்பந்தத்தை அறிந்தவனுக்கு அதில் ஆச்சரியமேற்படவில்லை…
‘இவள் மின்னலாகவந்தவள்..’ என்று நினைத்துக் கொண்டான்..
அந்த மின்னல் வேறு, இவள் வேறு என்றில்லை. அவன் மின்னலைப் பற்றிய ஆராய்ச்சியில் இருக்க அவன் முகத்தை பார்த்து தெளிவாக அவள் சொன்னாள்..
“உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்.. என்னைப் பெண் பார்க்கன்னு யார் வந்தாலும் அவங்க முன்னாலே நான் போய் நிற்கமாட்டேன்..”
அவன் அவளிடம் காதல் சொல்லவில்லை.. அவளும் அவனிடம் பதிலுக்கு காதலை தெரிவிக்கவில்லை.. அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி எதையும் பேசிக்கொள்ள வில்லை. ஆனால் அவனுடையவளாக அவளும்.. அவளுடையவனாக அவனும் எப்படி மாறிப் போனார்கள் என்ற விந்தை அவளுக்குப் புரியவில்லை. என்னவோ.. ஏழேழு ஜென்மங்களாக இணைபிரியாத பந்தத்துடன் வாழ்ந்ததைப் போல அவர்கள் உணர்ந்தார்கள்..
“அஞ்சனா..”
அவள் கைப்பற்றியபோது அவள் உடலில் ஓடிய சிலிர்ப்பை உணர்ந்தான் பிரதாப்..
அவனது தொடுகையை தாங்கமாட்டாதவளாக அவள் நடுங்கிப் போனாள்.. அவளது தளிர்விரல்கள் அதையுணர்த்த..
“ஏய்ய்..” என்றபடி அவளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் பிரதாப்..
புயலில் நடுங்கிய பூங்கொடியாய் அவள் அவன்மேல் சரிந்தாள்.. பூமாலையைப் போல மேலே சரிந்தவளைத் தாங்கிப் பிடித்து அவள் கழுத்தில் இதழ் பதித்தான் பிரதாப்.
‘ஹோ’வென்ற சப்தத்துடன் பேரலையொன்று அவள் மேல் கவிழ்ந்ததை போல உணர்ந்தாள் அஞ்சனா…
அவளால் தாங்கமுடியாத உணர்வுகளின் பாரத்தில் அவள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன..
கழுத்திலிருந்த அவன் இதழ்கள் அவள் முகம் தேடிக் குனிய.. அவள் இதமான இன்ப அவஸ்தையின் பிடியினில் அகப்பட்டுத் திணறிப் போனாள்..
“ஐ லவ் யு அஞ்சனா..”
அவன் சொல்லிவிட்டான்.. அந்த சந்தோசம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள் அஞ்சனா..
“ஏய்ய்.. பைத்தியம்.. ஏண்டி அழறே..?” அவன் உரிமையுடன் அதட்டினான்..
“தெரியலை..”
“முட்டாள்.. தங்கையின் கல்யாணம் முன்னால் நிற்குது அஞ்சனா.. அதுக்காக பார்க்கிறேன்.. இல்லைன்னா.. இப்பவே உன்னைத் தூக்கிக்கொண்டு போய் தாலியைக் கட்டிருவேன்..”
“இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமில்ல..?”
“சொன்னால்தான் புரிஞ்சுக்குவியா..?”
அவன் கேள்வியில் பொதிந்திருந்த ஆயிரமாயிரம் அர்த்தங்களில் அவள் விழி விரிய அவனை நோக்கினாள்..
“வார்த்தைகளில் சொல்லித்தான் உன்னை என் மனம் தேடுறதை நீ புரிஞ்சுக்கணுமா..?”
“என் மனசும் உங்களைத்தான் தேடுச்சு..”
“எனக்குத்தான் அது தெரியுமே.. நீ சொல்லனுன்னு நான் எதிர்பார்க்கலையே..”
“பெண் மனசே வேற..”
“இருக்கட்டுமே என் மனசு உன்வசம்தான்.. இதை நீ புரிஞ்சுக்க..”
அவள் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவன் மார்பில் முகம் புதைத்தாள்.. அவன் இதழ்கள் அவள் உச்சி மீது பதிய.. அவன் கரங்கள் அவளை வளைத்துக் கொண்டன..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.