Chapter 15

0Shares

உன்மேல விழுந்த

மழைத் துளிகளில்

என் மனமும் சேர்ந்து

விழுந்தது ஏன்..?

அஞ்சனாவுக்கு அம்மா இல்லையென்ற குறையை  அந்த வைசாலி அபார்ட்மென்டிலிருந்து மற்ற ஐந்து குடியிருப்புகளில் குடியிருந்த குடும்பங்களின் பெண்மணிகள் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள்..

அவர்களில் வயதில் பெரியவளான பரிமளம் அடுக்களையை ஆட்சி செய்ய.. மற்ற நான்கு 

பெண்களும் அந்த ராஜ்ய பரிபானத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்..

நெய் வாசனை ஹாலை நிரப்பி கோதண்டத்தின் மனதில் நன்றி ததும்பியது..

இவர்கள் யார்..? அவர் யார்..? தங்கள் வீட்டுப் பெண்ணை பெண் பார்க்க வருவதைப் போல இவர்கள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டு பம்பரமாக ஏன் சுழல்கிறார்கள்..?

“கேசரி பதம் பாரு உமா..”

“நீங்க செஞ்ச கேசரி மிதமாவா இருக்கப்போகுது ஆன்ட்டி..? அது தூள் கிளம்பும்ங்கிறது தெரிந்த சங்கதி தானே..”

“நிஷா பஜ்ஜியை போட ஆரம்பிக்கறியா..?”

“இதோ.. ஆரம்பிச்சாச்சு ஸ்ரீதேவி.. வாழைக்காயை சீவிட்டியா..?”

அவர்கள் மும்முரமாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருக்க அஞ்சனாவை அலங்கரிக்கும் பொறுப்பை லலிதா ஏற்றுக் கொண்டிருந்தாள்..

“நீதான் பியுட்டிஷியனாச்சே.. இவளை அலங்கரிக்கிறது உன்னோட பொறுப்பு.. நீ கிச்சன் பக்கம் வரவே வேணாம்..”

“இந்த வெங்காயத்தை மட்டும் தோல் சீவி வைக்கிறேனே..?”

“எதுக்கு..? அந்தக் கையோட அஞ்சனா கண்ணில நீ மையை வைக்க.. அவ வெங்காய எரிச்சலில் அழுது வைக்க.. வர மாப்பிள்ளை அவரைப் பிடிக்காமத்தான் பொண்ணு அழுகுதுன்னு கிளம்பிப் போய்ட்டே இருக்கிறதுக்கா..? அந்த கதையே வேணாம்.. நீ கிளம்பும்மா..”

ஏறக்குறைய லலிதாவை அவர்கள் விரட்டியே விட்டனர்.. லலிதாவும் கர்மமே கண்ணாக உடையவளாக அஞ்சனாவை அணுகினாள்..

“எதுக்கு இப்படி எண்ணை வழியற மூஞ்சியோட உட்கார்ந்திருக்கே..? சோப்பைப் போட்டு முகத்தை அலம்பிட்டு வா..”

“இருக்கட்டும்க்கா..”

இப்படிச் சொன்னவளை விசித்திரமாகப் பார்த்தாள் லலிதா…

இவளுக்கு என்ன ஆச்சு..? காலேஜூக்கு கிளம்பிப் போகும்போது செம ஸ்மார்ட்டா கிளம்பிப் போவா.. இப்ப பொண்ணு பார்க்க வருகிறாங்க.. இவ அழுது வடிஞ்சுக் கிட்டு நிற்கிறாளே…

“என்னத்தை இருக்கட்டும்ன்னு சொல்ற.. முதல்ல முகத்தை கழுவ ஓடு..”

லலிதா முடுக்கிய முடுக்கில் அரை மனதாக முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் அஞ்சனா…

“சோப் வாசனையே வரலையே..?”

“அது வாசம் வராத சோப்புக்கா..”

“அப்படியொரு சோப்பிருக்கா..? எங்கே காண்பி..”

“அக்கா.. ப்ளீஸ்.. விட்டு விடுங்களேன்..”

கெஞ்சினவளை யோசனையுடன் பார்த்தாள் லலிதா.. விட்டா இவ என்ன செய்வா..? ஓடிருவாளா..? அவள் மனதில் சந்தேகத்தின் பொறி விழுந்தது.. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அஞ்சனாவுக்கு ஒப்பனை செய்துவிட ஆரம்பித்தாள் லலிதா..

“உங்கப்பா உனக்காக நிறைய நகை சேர்த்திருக்கார் போல.. நீ கொடுத்து வைத்தவ அஞ்சனா..”

அந்த கொடுத்து வைத்தவளோ முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. வாசலில் பேச்சுக்குரல்கள் கேட்கவும், அறையை விட்டு எட்டிப் பார்த்தாள் லலிதா..

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டாங்க அஞ்சனா.. மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்..” என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தாள்..

அஞ்சனாவிடம் எந்தப் பரபரப்பும் ஏற்படவில்லை.. அதற்குள் சமையலறையிலிருந்து பரிமளம் அழைக்கவும்.. லலிதா சமையலறைப் பக்கம் போய்விட்டாள்.. செய்து வைத்திருந்த இனிப்பு கார வகைகளை சிறுசிறு தட்டுகளில் எடுத்து வைக்கும் பொறுப்பில் அஞ்சனாவை மறந்தே போனாள்.. பரிமளம் காபி கலந்து கொடுக்க மற்ற பெண்மணிகள் வந்தவர்களுக்கு இனிப்பு கார வகைகளை விநியோகித்து முடித்திருந்தனர்..

“காபியை பொண்ணு கையில கொடுத்து விடலாம். அதுதான் முறை..”

பரிமளத்தின் வார்த்தை ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது..

கோதண்டத்தின் அருகில் பெரியவராக லட்சணமாக பிரம்மநாயகம் வந்து அமர்ந்திருந்தார்.. அதில் சதிஷுக்கும் ராமனுக்கும் ஆச்சரியம்.. சபியுல்லாவிற்கு அப்படியேதும் மில்லை..

“அவர் குணம் தங்கம்தான்.. முகம்தான் கொஞ்சம் முரட்டுத்தனமா இருக்கும்” என்றான்..

அதை ஸ்ரீதர் பலமாக ஆட்சேபித்தான்..

“கொஞ்சம்தான் முசுட்டுத்தனமா..?”

“சரி விடுப்பா.. நிறையவே முசுட்டுத்தனம்.. போதுமா..?”

“போதும்.. போதும்…”

தனிமை அகன்றுவிட்ட நன்றியுணர்வுடன் கோதண்டம் வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி அவர்களிடம் பெருமையாக பேசிக் கொண்டிருக்க அவர்களும் தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையைத் தலையை ஆட்டிக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்… அதற்குள் அஞ்சனாவின் அறையிலிருந்து பதட்டமாக எட்டிப் பார்த்த ஸ்ரீதேவி விழியசைவில் மற்றப் பெண்களை அழைத்தாள்.. மற்ற நான்கு பேரும் அங்கே விரைந்தார்கள்..

“என்ன ஆச்சு..?”

மாப்பிள்ளையைப் பெற்ற தாய் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்..

என்ன ஆனது என்று சொல்லத் தெரியாத அப்பாவி கோதண்டம் அஞ்சனாவின் அறைக்குள் சென்றார்.. சென்றவர் கண்கள் விரிய அப்படியே நின்றுவிட்டார்..

அங்கே மயங்கிப் போய் சரிந்திருந்தாள் அஞ்சனா..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link