Chapter 02

0Shares

 “கூக்கூ..” என்ற ரயிலின் ஓசையுடன்..

“ஊய்ய்..” என்ற மழையின் ஊதல் காற்றின் ஓசையும் சேர்ந்து கொண்டது..

சடசடத்துப் பெய்த மழை ஓய்வதாக இல்லை.. உயரமான மேட்டுப்பகுதியில் அமைந்திருந்த தண்ட வாளத்தில் ரயில் ஓடிக்கொண்டிருக்க.. அதன் இருபுறமும் மேட்டைத் தொட்டு எழும்பி கரை புரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது மழைநீர்..

மழைக்காற்றின் ஈரப்பசையில் உடைகள் சில்லிட்டுப் போய் விட்டதில் கைகளை மடித்துக் கட்டிக் கொண்ட வத்சலா..

“வாடி உள்ளே போயிரலாம்..” என்றாள்..

ரயிலின் கதவருகே நின்று மழையைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த சசிரேகாவின் காதுகளில் வத்சலாவின் குரல் விழுகவில்லை..

“போதும்..”

வத்சலா அவள் தோளைத் தட்டினாள்.. உடல் தூக்கிப் போட திரும்பித் தோழியின் முகம் பார்த்த சசிரேகாவை இரக்கமாக பார்த்தாள்..

“உன் மனசெல்லாம் அன்னவாசலில் இருக்கு.. ரொம்பவும் மனசைப் போட்டு அலட்டிக்காதே சசி.. இது இறைவனா உனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற வாய்ப்புன்னு நினைச்சுக்க.. செய்ந்நன்றி கழிக்க நீ ஒன்னும் லேடி கர்ணன் இல்ல.. உன் பெரியப்பா ஒன்னும் உன்னை வாழ வைச்ச துரியோதனன் இல்லை.. உனக்கு அவர் செஞ்ச நல்லதுன்னு ஒன்னுகூட இல்லை.. தெரிஞ்சும் நீ பிடிவாதமா உன் வாழ்வை அழிச்சுக்கப் போய்க்கிட்டு இருக்க..”

சசிரேகா மழையை வெறித்தாள்.. அன்னவாசலில் அவளுக்காக எது காத்திருக்கிறது..? வாழ்வா..? இல்லை அழிவா..?

அது எதுவென்று தெரியாமல் அங்குசாமியின் வார்த்தையைக் காப்பாற்ற இவள் ஏன் ஓட வேண்டும்..?

“சொன்னாக் கேளுங்கடி.. இந்தத் தறுதலையை உங்கப்பா கையில பிடிக்கலைன்னா இவங்கம்மா 

கூடப் பிறந்த அண்ணன்காரன் கையில பிடிச்சுக்கிட்டுப் போயிருப்பானாம்.. என் தம்பி உயிரோட இருக்கிற வரைக்கும் எட்டிக்கூடப் பார்க்காத உன்கூட என் தம்பிமகளை அனுப்ப மாட்டேன்டான்னு உங்கப்பா சண்டை போட்டு இவளைக் கையில பிடிச்சுக்கிட்டு வந்திருக்காரு..”

பானுகீதா தன் மகள்களிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்ததை சசிரேகா ஓர்நாள் கேட்க நேரிட்டது.. அப்போது அவளுக்கு பத்து வயது.. விவரம் புரியாத வயதுதான் என்றாலும்.. பானுகீதாவின் வீட்டில் வேண்டாத விருந்தாளியாக சமையலறையில் முடங்க வைத்த வாழ்க்கை அவளுக்கு மனிதர்களின் மறுபக்கத்தை இனம் காட்டியிருந்தது..

ஏற்காட்டுக்கு வரும் போதெல்லாம் சசிரேகாவைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ளும் மலர்க்கொடியும், மாலதியும் அன்னவாசலில் அவளை வேலைக்காரியாக ‘ஏய்ய்.. அதைச்செய்..’ ‘ஏய்.. இதைச்செய்..’ என்று வேலை வாங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் கோலத்தைப் பார்த்தவள் அவள்..

இதுவும் விதிதான் என்று அவர்களின் ஏவல்களுக்குப் பணிந்து வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு உலக நிலவரம் புரிய ஆரம்பித்திருந்தது..

“அப்படி இந்தத் கழுதையைக் கையில் பிடிச்சுக்கிட்டு வரனும்கிற அவசியமென்னவாம்..?”

தாரிணியிடமிருக்கும் நகைகளில் எதையாவது வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொண்டு அதைத் திருப்பிக் கொடுக்க மறந்தவளைப் போல அபகரித்துக் கொண்டு விடும் மலர்கொடி கேட்டபோது சசிரேகா விசனப் பட்டாள்.

“அதைச் சொல்லுக்கா..”

அது வேண்டும்.. இது வேண்டும் என ஒன்றும் தெரியாத சின்ன மழலையினைப் போல நகைக் கடையில் கண்ணில் பட்டதையெல்லாம் கை நீட்டி ரங்கசாமியை வாங்கிக் கொடுக்க வைத்து விடும் மாலதி கேட்டபோது சசிரேகாவின் மனம் நைந்தது..

“புரியாம பேசாதீங்கடி.. இந்த நிலபுலன், தோப்பு துரவு அத்தனையும் பரம்பரையா வந்த சொத்து.. உங்க அப்பா சம்பாரிச்சு வாங்கின சொத்தில்ல..”

“அதுக்கு..?”

“இதில உங்க சித்தப்பனுக்கும் பங்கிருக்குடி மலர்கொடி..”

அப்போதுதான் பெரியப்பாவின் பாசத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டாள் சசிரேகா..

ஆக.. சொத்திற்காகத்தான் அவளைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அழைத்து வந்தாரா அவளுடைய பெரியப்பா..?

அந்தச் சொத்து இல்லாமல் இருந்திருந்தால்..?

“போய்த் தொலையட்டும்ன்னு அவளோட தாய்மாமன்கூட அவளைப் பற்றி விட்டு வந்திருப்பாரில்ல..”

பானுகீதாவின் குரல் கேட்டது.. ஏன் அப்படி நிகழாமல் போனது என்று துடித்துப் போனாள் சசிரேகா.. அவளது பிஞ்சுக் கையைப் பிடித்தபடி கடைசிவரை அங்குசாமியிடம் போராடிய தாரிணியின் அண்ணன் முகத்தை நினைத்துப் பார்த்தாள்.. புகை போல கலங்கிய வடிவுடன் முகம் தெளிவாகத் தெரியாமல் ஓர் உருவம் தெரிந்தது..

எங்கே..? அவளைத்தான் தாய் மாமனின் முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் அங்குசாமி இழுத்துக் கொண்டு வந்து விட்டாரே..

“அந்தத் தாரிணியோட அண்ணன்காரன் வக்கீலாம்.. தாரிணிமேல உயிராய் இருப்பானாம்.. அவன் நோண்டி நுழைஞ்சு கேட்க ஆரம்பிச்சா.. இத்தனை வருச விளைச்சல் பணத்திலயும் நாம பங்கு கொடுத்தாகனும்டி மாலதி.. அதனாலதான் உங்கப்பா கோர்ட்டுப் படியேறி இந்தக் கழுதையைப் பற்றிக்கிட்டு வந்து சேர்ந்தாரு..”

கொழுந்தனும், அவன் மனைவியும் உயிருடன் இருந்தபோது வருடத்தின் நான்கு மாதங்களை அவர்கள் வீட்டில் விருந்தாடுவதில் கழித்த பானுகீதாவும் அவள் மகள்களும் அவர்கள் இறந்து விட்ட செய்தியறிந்தவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்..

“வயசானவங்கன்னா பரவாயில்லை.. இவங்க விசக் காய்ச்சல்ன்னு போய்ச் சேர்ந்திருக்காங்க.. அந்த சசிரேகாவும் ஸ்கூல் டூர்ன்னு போனதினால தப்பிச்சான்னு சொல்றீங்க.. எங்களுக்கு வரத் தோதுப்படாது.. நீங்க மட்டும் போயி தலையைக் காட்டிட்டு வந்திருங்க..”

இப்படிப்பட்ட நன்றி மறவாத உள்ளங்களிடம் நன்றிக்கடன் பட்டதைக் கழிப்பதற்காகத்தான் சசிரேகா புயலும் மழையும் கூடிய அந்த ரயில் பயணத்தை மேற் கொண்டிருக்கிறாள்..

“ஏற்காடு வீடு என்னாச்சாம்மா..?”

“அதானே.. அதை எம்பேருக்கு எழுதி வைக்கச் சொல்லுங்கம்மா..”

“ஏண்டி.. என் பேருக்கு எழுதி வைச்சா ஆகாதா..?”

சொத்துக்கு உடமைக்காரி பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருக்க.. ஊரான் வீட்டுச் சொத்திற்காக உரிமையில்லாத பிறவிகள் அடித்துக் கொண்டார்கள்..

“அந்தக் கொடுமையை ஏண்டிக் கேட்கிற..?”

அந்த உரிமையில்லாத பிறவிகளைப் பெற்று வளர்த்திருக்கும் பானுகீதா ஆற்றாற்றுப் போனாள்..

“என்னம்மா ஆச்சு..?”

“ம்ஹீம்.. எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கனுமேடி.. அந்தத் தாரிணியோட அண்ணன்காரன் கோர்ட்டுக்குப் போயி ஸ்டே வாங்கிட்டானாம்.. இந்தக் கழுதை மேஜரான பின்னாலே இவ பெயருக்கு மாறுகிற வரைக்கும் அந்த வீடு கோர்ட்டோட பொறுப்பில இருக்கனுமுன்னு கோர்ட்டில தீர்ப்பாகிருச்சாம்.. அந்த வீட்டை வாடகைக்கு விட்டு வர்ற பணத்தை அவன் கோர்ட்டில கட்டிடறானாம்..”

“இப்படிக் கூடச் செய்ய முடியுமாம்மா..?”

“முடிஞ்சிருக்கே.. நல்ல வேளை.. அவன் அன்னவாசல் சொத்துப் பக்கம் வரலைன்னு உங்க அப்பா சந்தோசப்பட்டுக் கிட்டு இருக்கார்.. இவரால்தான் எல்லாமும்..”

“அப்பா என்னம்மா செஞ்சாரு..?”

“சும்மா இருக்காம ஏற்காட்டு வீட்டை விலை பேசியிருக்காரு.. அதுக்காகவே காத்திருந்த அந்த அண்ணன்காரன் கோர்ட்டுக்குப் போயிட்டான்.. இந்தக் கழுதையை வளர்க்கிறதுக்குன்னு உங்க அப்பா சொன்னா.. உங்க சித்தப்பனோட பங்கு நிலம் என்னாச்சுன்னு அதையும் கோர்ட்டில இழுத்து விட்டிருவான்னு இவர் வாயை மூடிக்கிட்டு வந்துட்டாரு..”

‘அப்படியா..?’

சசிரேகாவின் மனம் ஏதோ ஒரு விதத்தில் நிம்மதியடைந்தது.. எந்தையும், தாயும் மகிழ்ந்து குழாவி இருந்ததும் இந்நாடு என்பதைப் போல.. அவளுடைய தந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி வாழ்ந்தது அந்த வீட்டில்தான்.. அவள் பிறந்த தளிர்நடை போட்டு வளர்ந்ததும் அந்த வீட்டில்தான்.. அவளின் மழலைப் பிராயத்தின் மலரும் நினைவுகள் அந்த வீட்டில் கொட்டிக் கிடக்கின்றன.. அது பறி போகாமல் மீட்டு விட்ட சந்தோசம் அவளுக்குள் குமிழியிட்டது..

“இப்ப என்னடான்னா நம்மளாலே இந்தச் சொத்துக் களையும் விக்க முடியாது..”

“நல்ல கதையாய் இருக்கே.. இது நம்ம சொத்தும்மா..” ஊரான் வீட்டுச் சொத்துக்கு ஆளாய் பறந்த பானுகீதாவின் மகள்கள்.. அவர்கள் வீட்டுச் சொத்து என்றதும் சிலிர்த்துப் பாய்ந்தார்கள்..

“அடக்கி வாசிங்கடி.. அம்புட்டும் நம்ம சொத்தில்ல.. இதில அந்தக் கழுதைக்கும் பங்கிருக்கு..”

“கொடுத்துட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்போம்..”

“கொடுக்காம இருக்கனுமுன்னு இப்போதைக்குச் சொத்தை விக்காம இருக்கிறதுதான் ஒரேவழி..”

“எப்படிம்மா..”

“விக்கனும்னு நாம நினைச்சாக்கூட அந்த அண்ணன் காரன் கோர்ட்டுக்குப் போயித் தொலைஞ்சிருவான்.. அந்தக் கோராமையை நாம ஏன் இழுத்துக்கனும்..? அடக்க ஒடுக்கமா விளைச்சலை மட்டும் அனுபவிச்சுக்கிட்டு வந்தாப் போதும்டி..”

“அப்புறம் எப்படிம்மா மொத்தச் சொத்தையும் கைப் பத்தறது..?”

“அதுக்கு ஒரு வழியிருக்குடி மாலதி.. இந்தக் கழுதை மேஜரானவுடனே காதும் காதும் வைச்சதைப் போல இவ பங்கு சொத்தை எழுதி வாங்கிரனும்..”

“அதோட ஏற்காட்டு வீட்டையும் எழுதி வாங்கிரனும்மா.. எப்பேற்பட்ட பங்களா அது.. ஒவ்வொரு தடவையும் லீவுக்குப் போகிறப்ப இது நம்ம வீடா இல்லையேன்னு கருவிக்கிட்டே வருவேன்.. இவ்வளவு அழகான பங்களா இந்த சசிக் கழுதைக்குத்தான் சொந்தமான்னு மனசு கிடந்து காயும்.. என் வயித்தெரிச்சல் தான் இவள அந்தப் பங்களாவில வாழ விடாம விரட்டியடிச்சிருக்கு..”

இப்படியும் மனிதர்கள் இருக்கக் கூடும் என்று உணர்த்தியவள்தான் மாலதி.. விருந்தோம்பலிலும் ஓர் அளவிருக்க வேண்டும் என்று பெரியவர்கள் ஏன் சொல்லி வைத்தார்கள் என்று அன்று சசிரேகாவிற்கு விளங்கியது..

ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேண்டும்.. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதெல்லாம் இது போன்ற வயிற்றெரிச்சல்களுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தானோ..

“விட்டிருவேனாடி.. அந்த வீட்டோட மதிப்பில பாதி கூட இந்த அன்னவாசல் சொத்து வராதேடி.. அந்த வீட்டை விட்டுத் தரமாட்டேன்.. அது என்னோட சொத்து..”

என்னவோ.. பானுகீதாவின் அப்பனும் ஆத்தாளும் வாங்கி பானுகீதாவின் பெயருக்கு சாசனம் எழுதிக் கொடுத்த வீட்டைப் போல சூளுரைத்தாள் பானுகீதா..

சமையலறையின் சுவரோடு சுவராக ஒட்டி நின்ற பத்து வயதுச் சிறுமியினால் என்ன செய்ய முடியும்..? இப்பேற்பட்ட மனிதர்கள் வசிக்கும் வீட்டில் இருக்க முடியாது என்று வெளியேறி விட முடியுமா..? அங்குசாமிக்கே செக் வைக்கும் கில்லாடியான தாய்மாமனாலேயே அவளை அந்த வீட்டிலிருந்து மீட்க முடியவில்லையென்பதை நினைவுபடுத்திக் கொண்ட பத்து வயதுச் சிறுமியான சசிரேகாவிற்குத் தெரியாது, அவள் நினைத்திருந்தால் அது முடிந்திருக்கும் என்பது..

அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி தாய்மாமனிடம் அடைக்கலமாகியிருந்தால் அவளுடைய தாய்மாமன் கோர்ட்டை அணுகியிருப்பார்.. அங்குசாமியைப் போல அவருக்கும் ரத்த பந்தம் உள்ளதை சுட்டிக் காட்டி இருவரில் தாய் மாமன் வீட்டில் மட்டுமே சசிரேகாவிற்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பதை நிருபித்திருப்பார்.. அன்னவாசல் சொத்துக் களையும் கைப்பற்றியிருப்பார்..

சின்னஞ்சிறுமிக்கு அதைப் பற்றி என்ன தெரியும்..? அங்குசாமியின் நிழலைத் தவிர அவளுக்கு ஒன்றிக் கொள்ள வேறு இடமில்லை என்ற பயத்தில் அவள் வேண்டாத பொருளாக.. வேலைக்காரியாக அவளுக்கும் பங்கிருக்கும் அன்னவாசல் வீட்டில் சமையலறையில் முடங்கிக் காலத்தைக் கழித்தாள்..

அந்த வீட்டில் அவளை மனிதப் பிறவியாக எவரும் கருதாதபோதும் மூன்று வேளை உணவும்.. உடுத்திக் கொள்ள உடைகளும் கிடைத்தன.. மலர்க்கொடி, மாலதியின் உடைகளைப் போல விலையுயர்ந்த துணிவகைகள் கிடைக்கவில்லையென்றாலும்.. விலை குறைவான துணிவகைகள் கிடைக்கத்தான் செய்தன.. அதற்கும் காரணம் இருந்தது என்பதை ஓர் அந்தி வேளையில் கேட்டறிந்தாள் சசிரேகா..

மொட்டை மாடியில் விச்ராந்தியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அங்குசாமிக்கும், பானுகீதாவுக்குமான காபித் தம்ளர்களை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு போனாள் சசிரேகா.. பாதிப் படிகளிலேயே அந்தக் கணவன், மனைவியின் பேச்சுச் சப்தம் அவள் காதில் தெளிவாக விழுந்து விட்டது..

“ம்ஹீம்.. இருக்கிற செலவில இந்தக் கழுதைக்கும் சேர்த்து வடிச்சுக் கொட்ட வேண்டியதா இருக்கு.. மூணு வேளையும் சாப்பாட்டைப் போட நாம என்ன அன்னவாசல் ஜமீன் பரம்பரையா..?”

இப்படிக் கேட்டவளுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் ஏற்காட்டில் சசிரேகாவைப் பெற்றவர்கள் விருந்து ஆக்கிப் போட்டார்கள் என்பதை வசதியாக அவள் மறந்து விட்டாள்.. நினைவு வைத்திருந்த சசிரேகாவின் கண்கள் கலங்கின.. அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தாள்.. அப்படிப் போய்விட்டால் அங்குசாமிக்கும் பானுகீதாவிற்கும் அவள் கலந்து கொண்டு வந்திருந்த மாலைக் காபியை யார் அவர்களிடம் கொடுப்பது..?

மாலதியும் மலர்கொடியும் முடியாது என்று சொல்லி விடுவார்களே.. அவர்கள் தன்னைப் பேணுகின்ற ரகம்..! பானுகீதாவின் வயிற்றில் பிறந்தவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்..?

கடமை சசிரேகாவை மாடிக்கு அழைத்தது.. நாகரிகம் அவளைத் தடுத்து நிறுத்தியது.. அவள் திணறியபடி மேலேயும் போக முடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் அப்படியே நின்று விட்டாள்.. அவளைப் பெற்ற தகப்பனின் கூடப்பிறந்த பிறப்பான அங்குசாமியின் பதில் அவள் காதுகளில் விழுந்தது..

“முட்டாளாடி நீ..? எனக்கு மட்டும் அந்த சசிரேகாவுக்கு மூணுவேளையும் சாப்பாட்டைப் போட்டுத் துணிமணிகளை எடுத்துக் கொடுத்து படிக்க வைக்கணும்னு வேண்டுதலா..?”

“பின்னே..?”

“புரியாம பேசாத பானு.. இவளோட தாய்மாமன் வில்லங்கம் பிடிச்சவன்.. என் தங்கச்சி மகள இந்த ஆளு பட்டினி போட மாட்டார்ன்னு என்ன நிச்சயம்ன்னு கேட்டாண்டி.. விவகாரம் கோர்ட்டுக்கு போயிருச்சு.. நம்ம வக்கீலுதான் தன் பிள்ளைகளைப் போல தம்பி பிள்ளையையும் வளர்ப்பாருன்னு வாதாடினாரு..”

“பரவாயில்லையே.. காசு கண்ணிய நிறையக் குடுத்திருந்தீங்களோ..”

“அடிச்சேன்னா பாரு.. முகரை பெயர்ந்துரும்.. அந்த மனுசன் காசுக்காக வாதாடலை.. கை சுத்தமானவரு.. உண்மையிலேயே என்னை அப்படியாப்பட்ட மனுசன்னு நம்பிக்கிட்டு இருக்கிறவரு அவரு.. ஏற்காட்டில இருக்கிற வக்கீலு எனக்கு எப்படி வேண்டப்பட்டவரா இருக்க முடியும்ன்னு நினைக்கிற..?”

“என்ன.. காசு கண்ணிய குடுத்து கரெக்ட் பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சேன்.. இல்லேன்னா அன்னவாசல் உழவர்மகனுக்கு ஏற்காட்டு வக்கீல் எப்படி வேண்டப்பட்டவரா இருக்க முடியுமாம்..?”

“அவரும் என் தம்பி ரங்கசாமியும் கூடப் படிச்ச சிநேகிதங்க பானு.. காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட என் தம்பிய அவன் பெண்டாட்டி வீட்டில இருந்து யாரும் பார்க்க வந்து போகலை.. நாம மட்டும்தான போய் வந்தோம்..? அதனால நாம மட்டும்தான் சசிரேகா மேல பாசமா இருக்கோம்ன்னு நினைச்சிட்டாரு..”

“இது வேறயா..?”

“சசியோட தாய்மாமன் பேச்சை இவர் மறுத்துப் பேசி சசியை என் பொறுப்பில் வளர்க்கனும்னு அனுப்பி வைச்சிட்டாரு.. அப்பத்தான் அதைச் சொன்னாரு..”

“எதைச்சொன்னாராம்..?”

“சசிக்கு சாப்பாடு, துணிமணிக்கு குறைவில்லாம பார்த்துக்கங்க.. படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க.. இல்லேன்னா இதையே சாக்கா வைச்சு சசியோட தாய்மாமன் மல்லுக்கட்டுவான்னு சொன்னாரு..”

“ஓஹோ..”

பானுகீதாவின் ‘ஓஹோ..’வில் ஒலித்த யோசனையில் இனி அந்த வீட்டில் சசிரேகாவிற்குக் கிடைக்கும் பழைய சோறுக்கு பங்கம் வராது என்பதை புரிந்து கொண்டாள் சசிரேகா.. அவளுக்குக் கிடைக்கும் கவனிப்பிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சுயநலத்தை நினைத்தபடி மெதுவாகப் படியேறி மொட்டைமாடிக்குப் போய் காபித் தம்ளர்களை கொடுத்து விட்டு வந்து விட்டாள்..

அவள் மனம் துக்கம் கொண்டது.. அகதியாக ஓர் வீட்டில் வாழ நேர்வது கொடுமை.. அந்தக் கொடுமையை சின்னஞ்சிறு வயதில் அனுபவித்தாள் சசிரேகா.. அப்படி அவளை வளர்த்த நன்றிக்கடனை கழிப்பதற்காகத்தான் மழைகொட்டும் அந்த ரயில் பயணத்தை மேற் கொண்டிருக்கிறாள்..

“என்னடி.. பிளாஸ் பேக்கா..?” வத்சலா கேட்டாள்..

இல்லையென்று சொல்லாமல் மழையை வெறித்தாள் சசிரேகா.. 

“உன் பிளாஷ்பேக்கில என்ன மலரும் நினைவுகளா வந்து கொட்டப் போகுது..?”

“வத்சலா.. ப்ளீஸ்..”

“இப்பேற்பட்ட பெரியப்பாவோட வார்த்தையைக் காப்பாத்தத்தான் நீ இப்ப ஓடிக்கிட்டு இருக்க..”

“இல்ல வத்சலா.. நான் எங்க அப்பாம்மாவோட பொண்ணுங்கிறத நிரூபிக்க ஓடிக்கிட்டு இருக்கேன்.. என்னை எடுத்து வளர்த்த பெரியப்பா என்மேல நம்பிக்கை வைச்சு வாக்குக் கொடுத்திருக்கார்.. அதை நிறைவேத்த நான் போயாகனும்.. இல்லேன்னா என்னைப் பெத்தவங் களைத்தான் எல்லோரும் குறைவாய் பேசுவாங்க.. என்னால அதைத் தாங்கிக்க முடியாது..”

“எல்லாம் சரிதான்.. உன்னை உங்க பெரியப்பா எடுத்து வளர்த்தாருன்னு சொல்ற பாரு.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலைடி.. உன்னை அவர் வளர்த்தாரா..? கேட்கிறப்பவே ஹார்ட் அட்டாக் வருது..”

உதட்டைக் கடித்தபடி ஊமையானாள் சசிரேகா.. வத்சலா என்றில்லை.. சசிரேகாவைப் பற்றிய விவரம் அறிந்த எல்லோருமே ஒன்றுபட்ட மனத்தோடு இதே வார்த்தைகளைத்தான் சொல்லி வைத்தார்கள்.. அங்குசாமி வளர்த்த லட்சணம் அப்படி.. அவர் பெற்ற மகள்கள் உயர்த்தி விலையில் துணிகளை அணிந்திருப்பார்கள்.. சசிரேகாவோ.. மலிவான விலையில் எடுக்கப்பட்ட துணிகளை அணிந்திருப்பாள்.. அவர்களின் கழுத்து, காது, கைகளில் தங்க நகைகள் மின்னும்.. சசிரேகாவோ பொட்டுத் தங்கம்கூட இல்லாமல் துடைக்கப்பட்ட வெங்கலச்சிலை போல இருப்பாள்.. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த வித்தியாசங்களே அங்குசாமி சசிரேகாவை வளர்க்கும் லட்சணத்தை எடுத்துச் சொல்லி விடாதா..? வீட்டுக்குள் வரும் உறவினர்கள்தான் சசிரேகா வேலைக்காரி போல நடத்தப்படும் கொடுமையையும் சமையலறையில் தூங்கும் அவஸ்த்தையும் கண்ணெதிரே பார்த்து விடுவார்களே..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link