Chapter 04
அடித்து ஊற்றிய மழை காரின் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகளிலும், ஜன்னல்களின் கண்ணாடிகளிலும் பட்டுத் தெளித்து சாரை, சாரையாக வழிந்து கொண்டிருந்தது.. காரின் பின்பக்கச் சீட்டில் சாய்ந்து கொண்ட சசிரேகாவின் மனதில் நல்ல வேளை, கார் வந்து விட்டது என்ற நிம்மதி வரவில்லை.. மாறாக இவன் ஏன் வந்தான் என்ற எரிச்சல் உண்டானது..
‘இது நான்தானா..?’
விக்கித்துப் போனாள் சசிரேகா… அவளது அடிமனதின் ஆசையை அவளது அந்த உணர்வு உணர்த்தியதில் காரின் முன் பக்கக் கண்ணாடியில் வழிந்து கொண்டிருந்த மழைநீர்த் தாரைகளை வெறித்துப் பார்த்தவளின் மனதில் இனித் தப்பிக்க முடியாது என்ற துக்கம் ஏற்பட்டது..
அவள் மனதில் தப்பித்து விட வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது என்பதில் சோர்ந்து போனாள் சசிரேகா..
கொட்டும் மழை வெள்ளத்தில் நின்று விட்ட ரயிலைக் காரணம் காட்டி அன்றைய இரவுப் பொழுதை அன்னவாசலுக்குப் போகாமல் கடந்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
அது முடியாமல் போய் விட்டது யாரால்..?
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முதுகை வன்மத்துடன் முறைத்துப் பார்த்தாள் சசிரேகா..
‘எல்லாம் இவனால்தான்..’ என்ற கோபம் பொங்கியது..
இவனை என்ன செய்தால் தகும் என்று பல்லைக் கடித்தபடி பார்வையை உயர்த்தியவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
அங்கே காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் கண்ணாடி வழியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளது பார்வையைச் சந்தித்ததும் புருவங்களை ‘என்ன..?’ என்று வினவும் பாவனையில் வேறு உயர்த்தி வைத்தான்..
‘போடா..’ பார்வையைத் தழைத்துக் கொண்ட வளுக்குள் சிலிர்ப்பு ஓடியது..
அவனது பார்வை அவளை ஏதோ செய்தது.. அவளை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் சங்கடம் கொண்டாள் சசிரேகா.. இயல்பாக உட்கார்ந்திருக்க முடியாத எரிச்சல் அவளுக்கு வந்தது.. அதே சமயத்தில் இனம் விளங்காத ஓர் இன்ப உணர்வும் எழுந்து தொலைத்தது..
‘நீயென்ன முட்டாளா..?’ தன்னைத்தானே கடிந்து கொண்டாள் சசிரேகா..
அவன் ஒன்றும் அவளை உல்லாசப் பயணத்திற்கு அழைத்துக் கொண்டு போகவில்லை.. அவளை முகம் தெரியாத எவனிடமோ திருமணம் செய்து கொள்
என்று ஒப்படைக்க அழைத்துக் கொண்டு போகிறான்.. மொத்தத்தில் அவன் சசிரேகாவின் பெரியப்பா அங்குசாமியின் கைத்தடி..! அவன் பார்வைக்கு சசிரேகா சிலிர்த்துப் போனால் அதைவிட கொடுமை வேறேதும் இல்லை..
மழையில் நனைந்திருந்த உடலும் உடையும் உலர்ந்து போயிருக்க இதமாக உணர்ந்தாள் சசிரேகா.. பக்கத்தில் உம்மென்று முகத்தை ஒரு முழ நீளத்திற்குத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள் வத்சலா.. அவளிடம் பேச முயன்ற சசிரேகாவை அவள் முறைத்துப் பார்த்ததில் அவளிடம் பேச வேண்டுமென்ற ஆசை அற்றுப் போனது சசிரேகாவிற்கு..
‘இவள் ஒருத்தி..’
அலுப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள் சசிரேகா.. அவள் என்ன இந்தத் திருமணத்தை விரும்பியா அன்னவாசலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள்..?
அந்தச் சூழலில் மூச்சு முட்டியவளுக்கு சூடாக ஒரு ‘டீ’ குடித்தால் தேவலையென்று தோன்றியது.. அவள் நினைத்து முடிப்பதற்குள் கார் நின்று விட்டது..
“ஹைப்பா..! கார் பிரேக்டவுன் ஆகிருச்சா..? அன்னவாசலுக்குப் போக முடியாதா..?” குதூகலத்துடன் கேட்டாள் வத்சலா..
காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவளை விசித்திரமாகப் பார்த்து வைத்தான்..
“இவன் ஏண்டி இப்படிப் பாக்கிறான்..?”
சசிரேகாவின் காதோரமாக முணுமுணுத்தாள் வத்சலா..
“என்னது..?”
சசிரேகா அவனைப் பார்த்தாள்.. அவன் பார்வை ஆக்டோபஸைப் போல அவளை இழுத்து வளைத்ததில் அரண்டு போனவளாக பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.. அவள் உடல் நடுங்கியது..
‘இது என்ன சோதனை..?’ தவித்துப் போனாள்..
அவன் வத்சலாவுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்து இமைக்கும் பொழுதிற்குள் இமையைச் சிமிட்டியதில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டு விட்டது.. உள்ளுக்குள் எழுந்த உணர்வுப் பேரலைகளின் பிரவாகத்தில் அவள் கண்களில் கண்ணீர் ததும்பி விட்டது.
“ஒருவேளை சைட் அடிக்கிறானோ..?”
வத்சலாவின் கேள்வி அவளைக் கலங்கடித்தது.. அவன் சசிரேகாவை சைட் அடித்துக் கொண்டிருப்பதை வத்சலா எப்படிக் கண்டுபிடித்தாள்..?
“இருக்காதுடி..” அவசரமாக மறுத்தாள்..
“உனக்கெப்படி அது தெரியும்..?”
“எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியும்..?”
அவனுடைய ஆழ்ந்த பார்வைகளை நினைத்துப் பார்த்தபடி சொன்னாள் சசிரேகா.. அந்தப் பார்வைகளின் ஆழம் அவளை உள்ளே இழுக்கும் வேகத்தை வத்சலாவால் உணர முடியுமா என்றிருந்தது அவளுக்கு..
“எனக்குத்தான் தெரியும்..” குண்டைத் தூக்கிப் போட்டாள் வத்சலா..
“உனக்குத் தெரியுமா..?” சசிரேகாவுக்குப் புரியவில்லை..
“ஆமாண்டி.. அனுபவிக்கிறவளுக்குத்தானே அது புரியும்..?”
“அப்படின்னா..?”
“அறிவு கெட்டவளே..!”
அழகான வார்த்தைகளால் சசிரேகாவை அழைத்த அந்த அறிவுள்ளவள் தோழியின் காதுப்பக்கமாக சரிந்து..
“இவன் அப்போப்பிடிச்சு என்னையே உத்து உத்துப் பாத்துக்கிட்டு வர்றாண்டி..” என்று கிசுகிசுத்தாள்..
‘இருக்குமோ..’ சசிரேகாவிற்கு கோபம் வந்தது..
அது எப்படி அவளையும் உற்று உற்றுப் பார்த்து விட்டு அவளுடைய தோழியையும் அவன் பார்த்து வைப்பான்..?
அவனை முறைத்தாள் சசிரேகா.. எதனால் இந்தக் கோபம் என்ற பாவனையில் அவன் புருவங்களைச் சுருக்கியதில் வசீகரிக்கப் பட்டவளுக்கு கோபம் மறந்து போனது.. அவன் இயல்பாக வத்சலாவைப் பார்த்து வைக்க..
“பார்.. பார்..” என்று சசியின் கையைக் கிள்ளினாள் வத்சலா..
“என்னத்தடி பார்க்கச் சொல்ற..?”
“இப்படித்தாண்டி இவன் என்னை உத்து உத்துப் பாக்கறான்..”
‘ஓ..! இந்தப் பார்வையைத்தான் இவ உத்து உத்துப் பாக்கிற பார்வைன்னு சொல்கிறாளா..?’ சிரிப்பு வந்தது சசிக்கு..
அந்த நிலைமையிலும் சிரிக்க வைக்கும் அந்த ஆபத்பாந்தவனை (?) நோக்கினாள்.. அவளை மட்டும் பிரத்யேகமாய் அவன் பார்த்து வைத்ததில் அவளுக்குள் குளிர் பிறந்தது..
“டீ சாப்பிடலாமா..? மழை நேரத்தில சூடா டீக்குடிச்சா தெம்பா இருக்கும்..”
அவன் என்னவோ சசிரேகாவைப் பார்த்தபடிதான் சொன்னான்.. ஆனால் வத்சலா அவளைத்தான் அவன் பார்ப்பதாக சாதித்து வைத்தாள்..
“இவனுக்கு இருக்கிற கொழுப்பைப் பார்த்தியாடி.. நான் டீ குடிக்கனும்னு இவனுக்கு என்னடி இவ்வளவு அக்கறை..?”
அந்த அக்கறை வத்சலாவுக்கானதல்ல என்று அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று திணறிப் போனாள் சசிரேகா..
அந்தப் பார்வையும் அக்கறையும் சசிரேகாவுக்கானது என்பதில் அவள் மனதில் இன்பம் கலந்த துன்பம் வந்தது..
சூடாக ‘டீ’ குடித்தால் தேவலையென்று அவள் மனதில் நினைத்ததை அவன் எப்படி அறிந்தான்..?
அதையும் அவன் அறிந்தவனைப் போல அவள் விழிகளுக்குள் அவன் ஆழ்ந்து பார்த்ததில் நடுங்கிப் போனாள் சசிரேகா..
‘இப்படிப் பார்த்துத் தொலைக்காதே..’
அவன் மனதை அவள் மனதில் வேண்டுகோள் எட்டவில்லை போல.. அவன் பார்வையைத் திருப்பாமல் அவளையே பார்த்தபடி கார்க் கதவைத் திறந்து விட்டான்
அந்த சின்னஞ்சிறு ஓட்டலின் தாழ்வாரப் பகுதியை ஒட்டி அவன் காரை நிறுத்தியிருந்ததால் சசிரேகாவும், வத்சலாவும் மழையில் நனையாமல் இறங்கிக் கொள்ள வசதியாக இருந்தது..
“சூப்பர் மேன்டி.. எல்லாத்தையும் யோசிச்சுச் செய்றான்..” சிலாகித்தாள் வத்சலா..
சசிரேகா அந்த சிலாகிப்பை விரும்பவில்லை.. அவள் மனதில் எழுந்த அதே சிலாகிப்பை அவளால் வாய் விட்டுச் சொல்லமுடியாமலிருக்கும் போது வத்சலா மட்டும் சொன்னால் அவளுக்கு எப்படியிருக்கும்..?
“இங்கே டாய்லெட் எந்தப் பக்கம் இருக்கு..?”
அவன் விசாரித்தான்.. அங்கே வேலை செய்து கொண்டிருந்த பையனின் சுட்டு விரல் சுட்டிக் காட்டிய பகுதிக்கு நடக்காமல் சசிரேகாவைப் பார்த்தான்.. பெண்களின் பாதுகாவலனாக இருப்பதற்கு இவனை விடச் சிறந்தவன் எவருமில்லையென்று நினைத்துக் கொண்டாள் சசிரேகா.. மனம் புரிந்து செயல் படுகின்றானே..
“நமக்குத்தான் ரோட்டோரம் இருக்கேன்னு நினைக்காம கூட வர்ற பெண்பிள்ளைகளைப் பத்தியும் நினைச்சுப் பாக்கிறான் பாரு.. அங்கே நிக்கிறாண்டி அவன்..” என்றாள் வத்சலா..
“இல்ல.. இங்கேதான்.. நமக்கு எதிரேதான் நிற்கிறான்..” எரிச்சலுடன் சொன்னாள் சசிரேகா..
இப்படியுமா ஒருத்தி எல்லாவற்றிலும் முந்திரிக் கொட்டையாக முந்தித் தொலைப்பாள்..? அவனைப் பற்றிப் பாராட்டாக சசிரேகா நினைத்து முடிப்பதற்குள் அதை வாய் விட்டுச் சொல்லும் வத்சலாவின் சுதந்திரத்தின் மீது அவளுக்குப் பொறாமையாக இருந்தது..
அந்தச் சுதந்திரம் ஏன் சசிரேகாவிற்கு இல்லாமல் போனது..?
பெருமூச்சுடன் மழையை வெறித்தவளின் உள்ளுணர்வு உறுத்தியதில் சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள்.. அவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை அவள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுப்பதைப் போல இருந்ததில் அவள் நடுங்கிப் போனாள்.. கொட்டும் மழையின் குளிர் அவளது உடலைத் தாக்காமல் மனதைத் தாக்கியது.. மோகத் தீயைபற்ற வைத்த அவனது பார்வை அவளைச் சுற்றி முள்வேலியிட்டு வேடிக்கை பார்த்தது.. சசிரேகா மனம் தொய்ந்தாள்..
“வாடி பாத்ரூம் போயிட்டு வந்திரலாம்..”
வத்சலா என்னவோ அவளுக்காகத்தான் அவன் பாத்ரூமைப் பற்றி விசாரித்தான் என்பதைப்போல அவனைச் சொந்தத்துடன் பார்த்தபடி சசிரேகாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.. அவர்கள் திரும்பி வந்தபோது அவன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்..
‘இவனிடம் இந்தப் பழக்கம் இருக்கா..?’ சசிரேகா முகத்தைச் சுளித்தாள்..
திரும்பிப் பார்ததவன் அவளது முகச் சுளிப்பைக் கவனித்து விட்டான்.. கையிலிருந்த சிகரெட்டைத் தரையில் போட்டு ‘ஷீ’ வால் அதை மிதித்துத் தேய்த்தான்..
“யூசுவலா நான் ஸ்மோக் பண்றதில்ல.. எப்போதாவது ஒருமுறை டென்சனா இருக்கறப்ப.. இதைப்போல குளிர் சமயங்களிலன்னு ஸ்மோக் பண்ணுவேன்..”
குற்றம் புரிந்து விட்டவனைப் போல அவன் விளக்கம் சொன்னதில் சசிரேகாவின் மோகம் அதிகரித்தது.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு கொட்டும் மழைநீரைத் துக்கத்துடன் பார்த்து வைத்தாள்.. அடிக்கும் மழைநீர் அவளைக் கரைத்து விட்டாலென்ன என்ற ஏக்கம் அவளைத் தாக்கியது.. அவளை ஈர்க்கும் அவனது ஒவ்வொரு செய்கையிலும் அவளது மனம் பதறியது.. எதற்காக அவளை அழைத்துப் போகிறான் என்பதை அவன் அறிவான்தானே.. அப்புறமும் ஏன் அவள் மனதை அசைத்துப் பார்க்கிறான்..?
‘கொன்று விடு என்னை..’
வெறுப்புடன் அவனை முறைத்தாள் சசிரேகா.. அதீத மோகத்தினால் பிறந்த வெறுப்பு அது என்பதை உணராத அவன் திடுக்கிட்டுப் போனான்..
“இனி ஸ்மோக் பண்ணமாட்டேன்..”
அவளது விழிகளுக்குள் ஊடுறுவித் துளைப்பதைப் போலப் பார்த்தபடி வாக்குக் கொடுத்தான்.. அவன் பார்வை அவளிடம் மன்னிப்பை யாசித்தது..
“பாக்கிறதைப் பாரேன்..”
சசிரேகாவின் காதோரமாக வத்சலா கிசுகிசுத்ததில் சசிரேகா திடுக்கிட்டுப் போனாள்.. அவன் சசிரேகாவைப் பார்ப்பதை வத்சலா பார்த்து விட்டாளா..?
“அதில்லைடி..” பதட்டத்துடன் விளக்கம் சொல்ல முயன்றவளை கையமர்த்தி தடுத்தாள் வத்சலா..
“நீ ஒன்னும் இவனுக்காக வக்காலத்து வாங்க வேணாம்.. நம்மள பிக்-அப் பண்ணிக்கறேன் பேர்வழின்னு இவன் டிரெயினுக்கு வந்தப்ப இருந்து இப்படித்தான் பண்ணித் தொலைக்கிறான்.. ஆல்ரெடி எனக்கு ஆள் இருக்குன்னு இவனுக்கு யார்டி சொல்றது..?”
‘கிழிஞ்சது போ..’ சசிரேகாவுக்கு அந்த இக்கட்டான நிலைமையிலும் சிரிப்பு வந்து தொலைத்தது..
‘இதைத்தான் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ன்னு வள்ளுவர் சொல்லி வைத்தாரா..?’
அந்த இடுக்கண் எது என்பதை நினைத்துப் பார்த்தவளுக்கு வந்த சிரிப்பு தொலைந்து போனது..
வத்சலாவுக்கு ஆள் இருப்பதைத்தான் அவன் அறிய மாட்டான்..
சசிரேகாவிற்காக காத்திருக்கும் ஆளைப் பற்றியுமா அவன் அறிய மாட்டான்..?
அவளுக்காக சூடான ‘டீ’ கப்பை ஏந்தி வந்தவனின் சொந்தமான பார்வை இல்லையென்று சொன்னதில் கொதித்துப் போனாள் சசிரேகா.. அவளது மனதை வருடிய அவனது பார்வை அவளுக்குள் கனன்று கொண்டிருந்த மோகத்தீயைக் கிளறி விட்டதில் அவள் சாம்பலாகி விடுவோமோ என்று பயந்து போனாள்..
‘இவன் என்ன எனக்குள் மோகத்தீயைப் பற்ற வைத்து அதில் குளிர் காய நினைக்கிறானா..?’
வெறுப்பு நிரம்பிய அவளது பார்வையில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. ‘என்ன’ என்று வினவும் பாவனையில் அவனது புருவங்கள் ஏறி இறங்கியதில் வசீகரிக்கப்பட்ட சசிரேகாவிற்கு இவையெல்லாம் விடியும் வரைதான் கிடைக்கும் என்று துன்பமாக இருந்தது..
“கொதிக்குது..” அவன் ‘டீ’க்கப்பை நீட்டினான்..
‘என் மனதை விடவா கொதிக்கப் போகுது..?’ சசிரேகா மௌனமாக ‘டீ’க் கப்பை வாங்கிக் கொண்டாள்..
அவன் விரல்மீது அவள் விரல் பட்டதில் தீப்பிடித்ததைப் போல இருந்தது அவளுக்கு.. லேசான ஸ்பரிசம்கூட அவளை இந்த அளவுக்கு படுத்தி வைக்குமா..?
“ரொம்பத்தான் அக்கறை..” நொடித்தபடி ‘டீ’க் கப்பை வாங்கிக் கொண்டாள் வத்சலா..
“என்னங்க செய்கிறது..? கூட வந்திருக்கீங்களே..” என்றான் அவன்..
சசிரேகாவுடன் அவள் வந்திருப்பதை அவன் சுட்டிக் காட்ட.. வத்சலாவோ வேறு விதமாக அர்த்தம் சொன்னாள்.
“இருந்தாலும் இவனுக்கு இத்தனை கொழுப்பு ஆகாதுடி.. நான் இவன்கூட வந்திருக்கேணாம்.. நினைப்புத்தாண்டி இவனுக்கு.”
‘இவள் கொஞ்சம் நேரம் வாயை மூடிக் கொண்டிருந்தால் தேவலை..’ அலுப்பாக இருந்தது சசிரேகாவிற்கு..
எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் வாழ்க்கை வாய்க்கப் பெற்ற பாக்கியசாலி இவள்.. என்று நினைத்துக் கொண்டாள் சசிரேகா.. வத்சலாவிற்கு சசிரேகாவின் மனப் போராட்டத்தைப் பற்றித் தெரியாது..
சின்னஞ்சிறு வயதில் அவளுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த பெற்றோர் எட்டு வயதில் சசிரேகாவை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்.. அதன் பின்னால் கேட்பாரில்லாத அனாதையாக அங்குசாமியின் வீட்டில் ‘இடிசோறு’ சாப்பிட்டு வளர்ந்தவள் அவள்.. அவளுக்கான படிப்புக்கூட எங்கே அவளுடைய தாய்மாமன் அதைக் காரணமாக சொல்லி கோர்ட்டை அணுகி அவளைக் கைப்பற்றிக் கொண்டு போய் விடுவானோ என்பதற்காக தடை விதிக்கப் படாமல் அவளுக்குக் கிடைத்ததுதான்.. அந்தச் சூழலில் அவள் என்னத்தைப் படித்துக் கிழிக்கப் போகிறாள் என்றுதான் பானுகீதா நினைத்தாள்.. அருமையான குடும்பச் சூழலைக் கொடுத்தும் அவள் பெற்ற மலர்கொடியும், மாலதியும் பிளஸ்-டூவைக் கூடத் தாண்டவில்லையே.. அப்படியிருக்கும் போது வீட்டில் ஏவும் வேலைகளைச் செய்யும் வேலைக்காரியாக இருக்கும் சிறுமி.. சமையலறை மூலையில் ஒண்டியபடி என்னத்தைப் படிக்க முடியும்..?
சசிரேகா படித்தாள்.. மலர்கொடியும், மாலதியும் தாண்டாத பிளஸ்-டூவைத் தாண்டினாள்.. கல்லூரியில் காலடி வைத்தாள்.. நெஞ்சுவலி வந்த பானுகீதா அதற்கு விடமாட்டேனென்று ருத்ரதாண்டவம் ஆட.. அங்குசாமி அன்னவாசலின் சொத்து என்ற அங்குசத்தைக் கொண்டு அந்த ருத்ரதாண்டவத்தை அடக்கி நிறுத்தினார்..
“விவரம் தெரிஞ்ச வயசுல இருக்கற பொண்ணுடி.. நீ பாட்டுக்கு படிப்பை நிறுத்தினேன்னு வைய்யி.. அந்தக் காட்டத்தை மனசில போட்டுக்கிட்டு இவ மேஜரானவுடன் தாய்மாமன் பின்னாலே போயிட்டான்னா என்னடி செய்யறது.. அவ அப்பன் கூடப்பிறந்த அண்ணன்.. ரத்த சம்பந்தம்.. அது இதுன்னு சொல்லி அவ மனசை கரைச்சு வைச்சிருக்கேன் பானு.. கெடுத்துப்புடாதே..”
“படிக்க வைச்சா மட்டும் இவதாய்மாமன் பின்னால போகாம இவ நின்னுடுவாளா..?”
“நன்றிக்கடன்னு சொல்லி நம்ம காலடியில விழுக வைச்சிர மாட்டேனா..?”
சொன்னதைச் செய்து விட்டார் அங்குசாமி என்ற நினைவில் மனம் கசந்தாள் சசிரேகா.. நிமிர்ந்தபோது அவள் முகத்தில் தெரியும் உணர்வுகளை அவதானித்தபடி அவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பது அவள் விழிகளில் பட்டது..
அவளது அந்தரங்க மனதில் அவன் எட்டிப் பார்ப்பதைப் போல உணர்ந்தவளுக்கு எரிச்சல் வந்தது..
‘எல்லாம் இவனால்தான்..’
அவளது அனைத்துக் துன்பங்களுக்கும் அவனைக் காரணமாக்கி முறைத்தாள் அவள்..
“நானென்ன செய்தேன்..?”
எங்கோ பார்த்தபடி சன்னக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவன் விசாரித்த விதத்தை அவளுக்குப் பிடித்துத் தொலைத்திருந்தது..
‘இந்தச் சொந்தம் நிலைக்காத சொந்தம்..’
அவளுக்குள் வலி உண்டானது.. இழப்பைக் குறித்த நிச்சயம் மிகுந்த வலி அது.. இந்த மோகத்திற்கு எதிர்கால மில்லை என்பதை உணர்ந்திருந்தால் வந்த வலி அது..
இதோ.. அவளுடைய முகம் பார்த்து அவளுக்கான தேவைகளை கண்டுணர்ந்து பார்த்துப் பார்த்துச் செய்கிறவன் அந்த இரவுப் பயணம் முடிந்து விடியல் வரும்போது அவளுக்கு யாரோ ஒருவனாக விலகிச் செல்லப் போகிறான்..
எத்தனையோ வருடங்களுக்குப் பின்னால் அவளுக்காக யோசித்து செயல்படவும் ஓர் உயிர் இருக்கிறது என்று அவளுக்கு உணர்த்தியவன் அவன்.. அவளுக்குள் மோகத்தீயை பற்ற வைத்தவன்.. தகிக்கின்ற அந்தத் தீயைப் பற்றி உணராமல் அவளை அவளுடைய பெரியப்பாவின் காலடியில் தள்ளப் போகிறான்..
‘இந்தப் பார்வையும்.. சொந்தமும் அதுவரைக்கும் தான்..’
சசிரேகா அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் காரில் ஏறி விட்டாள்.. வத்சலா அவனை மிதப்பாக பார்த்தபடி சசிரேகாவின் பக்கத்தில் உட்கார்ந்து.. அவன் வத்சலாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதாக புகார் சொன்னாள்..
‘இவ வேற.. நேரம் காலம் புரியாம காமெடி பண்ணிக்கிட்டு..’
கொட்டும் மழையில் வத்சலாவைத் தள்ளி விட்டால் என்ன என்ற கொலைவெறி மிகுந்தது சசிரேகாவிற்கு.. அது புரியாமல் தொணதொணத்துக் கொண்டிருந்த வத்சலா சசிரேகாவின் பார்வையைக் கண்டதும் அரண்டு போனவளாக..
“என்னடி..?” என்றாள்..
“பேசாம வாயை மூடிக்கிட்டு வரப் போறியா.. இல்லியா..?” சசிரேகா சீறினாள்..
மாட்டேன் என்று வத்சலா சொல்வாளா என்ன..? அந்த கும்மிருட்டு மழையில் சசிரேகா அவளைத் தள்ளி விடத் தயங்கவும் மாட்டாள் என்று வத்சலாவின் உள்ளுணர்வு அவளை எச்சரித்ததில் அவள் வாயை பசை போட்டு ஒட்டியதைப் போல இறுக்கமாக மூடிக் கொண்டாள்..
சசிரேகாவையே தீர்க்கமாக பார்த்தபடி டிரைவிங் சீட்டில் உட்கார்ந்தவன் கண்ணாடியை சரி செய்ததில்..
‘வியு பார்க்கிறான்..’ என்று பல்லைக் கடித்தாள் சசி..
அது அவளுக்குப் பிடித்தமானதாக ஆகித் தொலைத் திருந்ததில் அவளது மனம் ரணமானது..
இதுபோன்ற தருணத்தில்தானா அவள் மிக நுண்ணிய காதல் உணர்வுகளை நுகர வேண்டும்..?
இரக்கமற்ற விதியை எண்ணி நொந்து போனாள் சசிரேகா.. வாழ்க்கை குரூரமானது என்று அவளுக்குத் தோன்றியது.. காலம் கடந்த பரிசுகளால் யாருக்கு என்ன லாபம் ஏற்படப் போகிறது..?
கண்ணாடியில் தெரிந்த அவன் முகம் அந்த மழையிருட்டின் இடையே கடந்து போகும் வாகனங்களின் ஒளி வெள்ளத்தில் ஏற்படும் சிறு வெளிச்சத்தில் அவள் முகத்தைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மனம் வதங்கிப் போனாள் சசிரேகா..
அவன் அவள் உணர்வுகளுடன் விளையாடுகிறான் என்று தோன்றியது அவளுக்கு..
அவளைப்பற்றி அவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்ற சினம் அவளுக்குள் உண்டானது.. கண்களை இறுக மூட முயன்றாள் அவள்.. மூடிய கண்களுக்குள் வசீகரமாக புருவங்களை உயர்த்தியபடி அவன் வந்து நின்றான்.. சட்டென விழி திறந்து விட்டாள் சசிரேகா.. கடந்து போன காரின் வெளிச்ச வெள்ளத்தில் அவன் முகம் தெரிய திரும்பவும் விழிகளை மூடிக் கொண்டாள்..
“இந்தத் துன்பம் கொள்ள..
என்ன காரணம்..?”
காரின் சிடி பாடலில் கேட்டது.. போய் அவனிடமே கேள் என்று கோபத்துடன் நினைத்துக் கொண்டாள் சசிரேகா..
அவளுடைய துன்பம் என்னவென்பதை அறிந்தவன் தானே அவன்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.