Chapter 13
அறையில் கருணாகரன் இல்லை.. சசிரேகாவின் சுவாசம் சீரானது.. ஜன்னலோரமாக நின்று திரையை விலக்கி வானத்தைப் பார்த்தாள்.. நட்சத்திரங்களுடன் கண் சிமிட்டிய வானம் முதல்நாள் இரவு நானா மழையைப் பொழிந்தேன் என்று கேட்டது..
கட்டிலைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்த மலர்ச்சரங்களின் நறுமணம் அறையை நிரப்பியிருந்தது.. சசிரேகாவின் மனம் மயங்கியது.. மோகத்தீயின் நாக்குக்கள் அவளைச் சுற்றி வளைத்தன.. முதல்நாள் இரவில் அவள் உணர்ந்த அவனது பிரத்யேக நறுமணத்தை நுகர அவள் மனம் விழைந்தது..
‘நான் சொன்னா அவன் கேட்டுக்க மாட்டானா..? அங்குசாமி பெரியப்பாவுக்கு சொத்து வேணும்னா அன்னவாசல் பங்கை மட்டும் எடுத்துக்கட்டும்.. ஏற்காடு வீடு நான் பிறந்து வளர்ந்த ஞாபகங்களை சுமந்து நிற்கிற வீடு…! என் அம்மா, அப்பா வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியா நிற்கிற வீடு..! அதைக் கொடுக்க வேண்டாம்ன்னு எடுத்துச் சொன்னா மாட்டேன்னா சொல்லிறப் போறான்..?’
அவள் மனம் வாதாடியது.. அவனுடன் சமரசமாகப் போகத் தேவைப்படும் அனைத்து விவாதங்களையும் முன் வைத்தது.. முதல்நாள் இரவில் அவன் மூட்டி விட்ட மோகத்தீயை அணைத்து.. அவளைக் காக்க அவன் எப்போது வருவான் என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள் சசிரேகா.. கட்டிலின் அருகேயிருந்த டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள்..
“தீ.. தீ.. தித்திக்கும் தீ..
தீண்டத் தீண்ட சிவக்கும்..
தேன்.. தேன்.. கொதிக்கும் தேன்..
தேகம் எங்கும் மினுக்கும்..”
செல் போனில் பதிந்து வைத்திருந்த பாடல் ஒலித்தது.. அப்படியே தரையில் சரிந்து உட்கார்ந்து அந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்தாள் சசிரேகா.. தகித்த அவளது தேகம் கருணாகரனின் அணைப்புக்காக காத்திருந்தது..
“ஒருவிரல் தொட்டு வைத்ததே..
உயிர்வரை சுட்டு வைத்ததே..”
அவன் விரல் தீண்டிய அனுபவத்தை மனதில் நினைத்து அந்த நினைவில் சுகித்தாள் சசிரேகா.. முதல்நாள் இரவில் அவளது பெண்மையைத் தொட்டு எழுப்பி அவளை மோகத்தீயென்னும் மீளா நெருப்புக்குள் தள்ளி விட்டவன் அவளை மீட்க வந்து விடுவான் என்று எதிர்பார்த்தாள்.. அவளைக் கொன்று தின்னும் மோகத்தை வெல்ல அவன்தான் ஆவன செய்ய வேண்டும் என்று உடல் தகிக்க மோகித்திருந்தாள்..
“கண்ணுக்குள் தீயிருந்தும்..
உன்னை எரித்துக் கொண்டு
ராகம் என்ன..?
கற்பூர தேகம்தான்
காதல் வெப்பம் பட்டுக்
கரைவதென்ன..?”
அவள் மனதைக் கூறுவதைப் போல ஒலித்துக் கொண்டிருந்த பாட்டில் அவள் கரைந்து போனாள்.. அவன் தொட்டுவிட்டால் பாகாய் உருகி விடுவாள் என்பதில் அவள் மனதில் தோல்வியை உணர்ந்தாலும் அவனை வெல்ல வேண்டுமென்று அவளுக்குத் தோன்ற வேயில்லை.. அது எதனால் என்றும் புரியவில்லை..
இத்தனை பிரியத்தை கண்களில் தேக்கி அவனிடம் உரைக்காமல் ஏன் மறைத்து வைத்தாள் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் சசிரேகா..
அவன் பார்க்கும் போதெல்லாம் முறைத்து.. முகம் திருப்பி… என்று அன்று முழுவதும் அவனை புறக்கணித்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு எத்தனை இனிமையான தருணங்களை நழுவ விட்டு விட்டோ மென்ற துக்கம் மனதுக்குள் பொங்கியது..
அவனை நோக்கி அவள் காலடி எடுத்து வைக்க முடியாமல் அவளை தடை செய்தது எது..?
முதல்நாள் இரவில் அவன்மீது மோகம் கொண்ட போது விடிந்தால் அவளுக்குத் திருமணம் என்ற கட்டுப்பாடு அவளைத் தடுத்து நிறுத்தியது..
அவள் கழுத்தில் தாலியைக் கட்டி.. அவளுக்காக காத்திருந்த மணாளன்தான் அவள் மனதில் மோகத்தீயை பற்ற வைத்தான் என்பதை அவன் உணர்த்தியபோது தடைகளற்ற.. மனத்தளைகளற்ற உற்சாகத்தை அவள் பெற்றாள்..
கட்டுப்படுத்தி வைத்திருந்த காட்டாற்று வெள்ளமான காதலுடன் அவன் காலடியில் சரிந்து விட அவள் துடித்த போது அங்குசாமி பெரியப்பா அவள்
காதலை கோடாரி கொண்டு வெட்டிச் சாய்த்து வீழ்த்தி விட்டார்..
அவளுடைய உயிர் மூச்சான ஏற்காட்டு வீட்டை அங்குசாமி பெரியப்பாவிற்கு அவன் தாரை வார்த்துக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை அறிந்த போது அவளுக்குள் பொங்கிய மோகத்தின் வேகம் தணிந்து விட்டது.. அவள் மனதில் பெருகிய பிரியம் மலைத்துப் போய் தேங்கி நின்று விட்டது..
தடைகளற்ற காதலுடன் அவனால் உண்டாக்கப்பட்ட மோகத்தீயை அவனைக் கொண்டு அணைக்கச் செய்ய வேண்டும் என்று கிளர்ந்தவளுக்கு தடை வந்து விழுந்தது..
“பின்னோக்கி உன் கால்கள்..
நடப்பதென்ன..?
பிரியத்தை மறைப்பதென்ன..?
என்னாரும் ஏதாகும்
என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன..?”
சசிரேகா கண்மூடி சுவரில் தலை சாய்த்துக் கொண்டாள்.. இது தாயின் மடியென்று அவளுக்குத் தோன்றியது.. தலை சாய்த்துக் கொள்ளக் கொடுக்கப்படும் அனைத்து தோள்களும் சுவர்களும் தாயின் மடிகள்தான்..
‘அவன் எப்போது வருவான்..?’
ஏக்கத்துடன் வாசல் பார்த்தாள்.. அவனது கம்பீர அழகை அள்ளிப் பருகுவதைப் போலப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போல அவளுக்கு இருந்தது..
‘அவனிடம் வாக்குவாதம் பண்ணக்கூடாது.. எதை கேட்பதாக இருந்தாலும் இனி வரும் நாள்களில் கேட்டுக் கொள்ளலாம்..’ இன்றைக்கு கேட்கக் கூடாது..
அடுத்தடுத்த தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டே இருந்தது அவள் மனம்.. பரபரப்பு உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.. காத்திருக்கும் ஒவ்வொரு வினாடிகளையும் யுகம் போல உணர ஆரம்பித்தாள்..
“அழகே..! அழகே..!
இதயத்தில் இன்று
கலந்து போவோம்..
நீ யார் நான் யார்
இனம் மொழி இடம்
மறந்து போவோம்..”
அவன் தொட்ட இடங்களில் ஸ்பரிச உணர்வுகளை நினைத்தபடி பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் சசிரேகா.. அவனுடன் அவள் கழிக்கப் போகும் அந்த
முதல் இரவின் அனுபவங்களின் மீதான அவளின் அனுமானங்களில் அவள் மனதில் மூண்டிருந்த மேகாத்தீ பற்றி எரிய ஆரம்பித்தது..
“புவியீர்ப்பு மையத்தைக்
கடந்து போவோம்..
புதுலோகம் பறந்து போவோம்..
முத்தத்தின் சத்தத்தில்
உடைந்து போவோம்..
முக்திநிலை அடைந்து போவோம்..”
பாடலில் மூழ்கி பரவச நிலையில் ஆழ்ந்திருந்தவளை கனத்த காலடி சப்தம் தட்டி எழுப்பியது..
அது அவனது காலடி சப்தம்தான் என்பதை அறிந்திருந்தவள் அவசரமாக செல்போனை அனைத்து டீப்பாயின் மீது வைத்தாள்..
ஒதுங்கி ஜன்னலில் சாய்ந்து நின்றாள்..
அறைக்குள் வந்த கருணாகரனின் பார்வை அவளைத் துளைத்தது.. சுளித்த புருவங்களுடன் அறைக் கதவை மூடித் தாழிட்டான்.. அவளைப் பார்த்தபடி கட்டிலில் உட்கார்ந்தான்.. அவளருகில் வருவான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த சசிரேகாவின் முகம் மாறியது.. கட்டிலில் உட்கார்ந்தவன் சுவரை ஏன் பார்க்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை..
‘அங்கே என்ன இருக்கு..?’
அவளும் சுவரைப் பார்த்து வைத்தாள்.. ஒரு மண்ணும் இல்லை.. என்ன முதலிரவு இது என்று சலித்துக் கொண்டாள்..
“ஜன்னல் வழி குதிச்சு ஓட முடியாது..”
திடிரென்று மௌனம் கலைத்தவன் பேசிய வார்த்தைகளில் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது..
‘இவன் என்ன சொல்கிறான்..?’
புரியாமல் விழித்தாலும் அவன் பேசிய வார்த்தைகளுக்குப் பதில் பேசாமல் இருக்க அவளால் முடியவில்லை..
“எனக்கு ஓடிப் பழக்கமில்லை..”
வெடுக்கென்ற வந்த பதிலில் அவன் சுவரைப் பார்ப்பதை விட்டு விட்டு அவளைப் பார்த்தான்.. தீர்க்கமான அவனது பார்வையின் பிண்ணனிக்குப் பொருள் புரியாமல் திகைத்தாள் சசிரேகா..
‘இந்தப் பார்வையை நானில்ல பார்க்கனும்.. இவன் பார்த்து வைக்கிறானே..’
குற்றமற்றவன் குற்றவாளியைப் பார்ப்பதைப் போன்ற அவன் பார்வையில் அவளுக்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..
“இதுவரை ஓட வேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம்.. இனிமே தோணலாமில்ல..?” நிதானமாக அவன் கேட்டதற்கு..
“பார்த்துப் பேசுங்க.. கழுத்தில தாலியைக் கட்டிட்டோம்ங்கிறதுக்காக எதை வேண்டும்ன்னாலும்
பேசி விடலாம்ன்னு நினைச்சீராதீங்க..” என்று சீறினாள் சசிரேகா..
“அப்படித்தான் நானும் நினைச்சேன்.. கழுத்தில் தாலி விழலைங்கிறதுக்காக என்கிட்ட இருந்து நீ தள்ளிப் போகப் பார்த்தேன்னு நினைச்சேன்.. என்னைப் பிடிச்சிருந்தும் விடிஞ்சா வேற ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டப் போகிறோம்ங்கிற கட்டுப் பாட்டோட நீ விலகிப் போகிறன்னு நினைச்சேன்.. அது எனக்குப் பிடிச்சிருந்தது.. கலங்காதேடி.. உன் கழுத்தில் நான்தான் தாலியைக் கட்டப்போறேன்னு சொல்ல என் மனது துடிச்சது.. ஆனாலும் உன்கூட விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டேன்.. காலையில உன் கழுத்தில தாலியைக் கட்டினப்ப இந்த ராத்திரியை எப்படியெல்லாம் கொண்டாடனும்னு
நான் கனவு கண்டேன் தெரியுமா..? அந்த ஆசைகள வேரோடு பிடுங்கி எறிய வைச்சிட்டியேடி.. பாவி..” அவன் குமுறினான்..
“பாவியா..? நானா..?” அவள் வெகுண்டாள்..
“ஆமாம்.. நீ பாவிதான்.. யாருடி அந்த பிரவீன்..?”
“என்னது..?”
அவனது கோபத்தின் காரணம் பிடிபட்டு விட்டதில் நிலைகுலைந்து போனாள் சசிரேகா.. அவளுடைய பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவளிடமிருந்து பறித்து அங்குசாமிக்கு தாரை வார்த்துக் கொடுக்க நினைத்த அவனுடைய அநியாயத்தைக் கூட அவளால் மன்னிக்க முடிந்தது.. ஆனால் பிரவீனை மனதில் நினைத்துக் கொண்டு கருணாகரனின் மீது அவள் மோகம் கொண்டாள் என்று அவன் வைத்த குற்றச்சாட்டை அவளால் மன்னிக்கவே முடியவில்லை..
‘என்னை என்னவென்று நினைத்து விட்டான்..?’
“என்ன..? உன் மனசில இருக்கிறது எனக்கு எப்படித் தெரிஞ்சன்னு முழிக்கிறயா..? அதான் உன்னோட உயிருக்குயிரான பிரண்ட் வத்சலா பிட்டுப் பிட்டு வைச்சிட்டாளே..”
“என்ன சொன்னா..?”
“அந்த பிரவீன் அழகனாம்.. பணக்காரனாம்.. உன்னோட காதலனாம்.. என்ன..? என்னை விட அவன் அழகனா..? பணக்காரனா..?”
“அசிங்கமாப் பேசாதீங்க.. அவன் ஒன்னும் என்னோட காதலனில்ல..”
“இப்ப இப்படிச் சொல்றவ.. நேத்து நைட்டு உன் காதுபட அந்த பிரவீன்தான் உன்னோட காதலன்னு வத்சலா சொன்னப்ப மறுத்து ஒற்றைச் சொல்லை சொல்லலையே.. ஆமாம்ன்னு ஒப்புக்கிறதைப் போல கேட்டுக்கிட்டுத்தான இருந்த.. இப்ப நடிக்கிறயா..?”
“நடிக்கிறேனா..? நானா..?”
“நீதாண்டி.. அவன் உன்மேல உயிராய் இருக்கானாமே.. கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட்டானாமே.. ஏண்டி போகலை..?”
கருணாகரனின் எகத்தாளத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சசிரேகா பட்டென்று..
“போயிருக்கனும்..” என்று சொல்லி விட்டாள்..
“ஓ…” அவன் கண்கள் சிவந்தன..
“போகாம விட்டது என் தப்புத்தான்..”
“தப்பைத் திருத்திக்க நினைச்சிட்டா என்ன செய்யறதுன்னுதான் ஜன்னல் வழியா குதிச்சு ஓடிப் போக முடியாதுன்னு சொன்னேன்..” அவன் விளக்கம் சொன்னான்..
‘இவன் மீதா மோகம் கொண்டேன்..?’ அவனை வெறித்துப் பார்த்தாள் சசிரேகா..
அவளை கொன்று தின்ற அவன் மீதான மோகத்தைத் கொன்று விட வேண்டும் போல அவளுக்குள் வெறி கிளர்ந்தது..
“அவனை மனசில நினைச்சுக்கிட்டு எனக்குக் கழுத்தை நீட்டியிருக்கிறவதானேடி நீ..? நீ ‘தியாகி’ பட்டம் வாங்க நான்தான் உனக்குக் கிடைச்சேனா..?”
“இல்லே சார்.. நீங்க வள்ளல் பட்டம் வாங்க நான் உங்களுக்குக் கிடைச்சேன்..”
இடக்காக பதில் சொன்னாள் சசிரேகா.. அவனது புருவங்கள் உயர்ந்து அவளை வசீகரிக்க முயன்றன.. போடா.. என்று முகத்தை வைத்துக் கொண்டாள் அவள்..
“வள்ளல் பட்டமா..?”
“வள்ளல் பட்டமேதான்.. எவனோ ஒருத்தன் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்.. அந்தத் கதையாயில்ல இந்தக் கதை இருக்கு.. என் கழுத்தில தாலியைக் கட்ட என்னோட சொத்தையும் ஏற்காட்டு வீட்டையும் அங்குசாமி பெரியப்பாவுக்கு எழுதிக் கொடுக்க வைக்கிறேன்னு வாக்குக் கொடுத்திருக்கிறவர்தானே நீங்க..?”
அவள் கேட்ட கேள்வியில் அவன் முகம் இறுகியது..
“இது உனக்கு எப்படித் தெரியும்..?” என்று விசாரித்தான்..
“தில்லுதான் சார் உங்களுக்கு.. செய்கிறதையும் செய்துட்டு அது எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேள்வி கேட்கறிங்க பாருங்க.. உங்களுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லை சார்..”
“அங்குசாமி சொல்லியிருக்க மாட்டார்..”
“சரியாத்தான் கணக்குப் போடறிங்க.. அவர் சொல்ல மாட்டார்தான்.. ஆனாப் பாருங்க.. அவர் சொல்லித்தான் எனக்கு உங்களோட ‘டீலா.. நோ டீலா..?’ங்கிற மேட்டரே தெரிஞ்சது..”
“சசி..”
“என்னை அப்படிக் கூப்பிடாதீங்க.. அதுக்கான அருகதை உங்களுக்கு இல்லை..”
ஒற்றை விரலை உயர்த்தி கண்ணீரும் ஆவேசமுமாக அவனை எச்சரித்தாள் சசிரேகா.. அந்த ஆவேசத்தில் அவன் யோசனையானான்.. அவளையே பார்த்தான்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.