Chapter 18

0Shares

கருணாகரனின் விரல்கள் சசிரேகாவின் கழுத்தில் ஆழப் புதைய ஆரம்பித்தன.. சசிரேகாவின் மூச்சுத் திணறினாலும் அவள் பிடிவாதமாக அப்படியே நின்றாள்..

“ச்சை..”

கருணாகரன் கரை கடந்த ரௌத்ரத்துடன் அவளைப் பிடித்துத் தள்ளினான்.. கட்டிலில் விழுந்தாள் சசி..

“அப்படி என்கிட்ட இல்லாத எந்தப் பேரழகுடி அவன்கிட்ட இருக்குது..?”

அவன் கேட்டுக் கொண்டிருந்தபோதே அறைக் கதவு தட்டப்பட்டது.. அவளை முறைத்தபடி கதவைத் திறந்தான்.. கதவுக்கு வெளியே நின்றிருந்த வத்சலா கட்டிலில் சுருண்டு கிடந்த சசிரேகாவைக் கண்டதும்..

“பூஜை வேளைக் கரடியாய் வந்துட்டேனா ஆபிசர்..?” என்றபடி திரும்பிப் போகப் போனாள்..

“இருடி..” அவசரமாக கட்டிலை விட்டுக் குதித்து வத்சலாவின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் சசிரேகா..

‘தப்பிக்கப் பார்க்கிறா..’ கருணாகரன் அவளை உறுத்துப் பார்த்தான்..

அவள் அவன் பக்கம் திரும்வேயில்லை.. வத்சலாவிடம் தாழ்ந்த குரலில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள்..

“உன் ஹஸ்பெண்ட்கிட்டக் கேட்டியாடி..” என்று வத்சலா கேட்க.. 

“எதைக் கேட்கச் சொல்கிறிங்க..?” என்று புருவங்களை உயர்த்தினான் கருணாகரன்..

“அது வந்து ஆபிசர்.. உங்க வொய்ப் ஆபிசில் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டா.. எங்க லேடிஸ் ஹாஸ்டலிலும் அதே கதைதான்..”

“அதுக்கு..?”

“நாளைக்கு நான் கிளம்பறப்ப என்கூட இவளும் வரேன்னு சொல்றா ஆபிசர்.. இவ சொல்றதிலயும் நியாயம் இருக்கில்ல..”

“என்ன நியாயத்தைக் கண்டுட்டிங்க..?”

“வேலைக்கு லீவ் கொடுக்கனும்.. இவளோட அங்குசாமி பெரியப்பா அழைப்பு விடுத்ததும் ஜஸ்ட் ஒன் வீக் லீவைப் போட்டுட்டு ஒரு பெட்டியில நாலைஞ்சு 

செட் டிரெஸ்களை அள்ளிப் போட்டுக்கிட்டு கிளம்பி வந்துட்டா.. புராப்பரா எதையும் செய்யலை..”

“அதுக்கு அவசியமில்லை..”

“உங்களுக்குத் தெரியாது ஆபிசர்..”

“எனக்குத் தெரிந்த வரைக்கும் போதும்ங்க.. இவ இனிமே வேலைக்குத் திரும்பப் போறதில்லை.. ரெஸிக்னேசன் லெட்டரை போஸ்டில் அனுப்பிக்கட்டும்.. அப்புறம் லேடிஸ் ஹாஸ்டலில இவளுக்கு மேரேஜ் ஆகிருச்சுங்கிற விவரத்தை நீங்களே சொல்லிருங்க.. பணம் தேவைப்பட்டா உங்க அக்கவுண்டில கிரெடிட் பண்றேன்..”

“அதெல்லாம் தேவைப்படாது ஆபிசர்.. இவளோட அட்வான்ஸ் பணமிருக்கே.. அவங்கதான் மீதிப் பணத்தை இவளுக்கு செட்டில் பண்ணனும்..”

“வேறென்ன..?”

“இவளோட டிரெஸ்ஸஸ், திங்க்ஸ்ன்னு இருக்குதே.. அதையெல்லாம் இவ எடுத்துக்கிட்டு வர வேணாமா..? எனக்குக்கூட இவ நாளைக்கு சென்னைக்கு வந்துட்டு வர்றதுதான் பெட்டர்ன்னு தோணுது..”

“எனக்குத் தோணலை.. இவளோட டிரஸ்களை பெட்டியில் அடுக்கி உங்க பொறுப்பில் வைச்சிருங்க.. திங்ஸை நீங்க யூஸ் பண்ணிக்கங்க.. நான் பிஸினெஸ் விசயமா சென்னைக்கு வர்றப்ப உங்ககிட்ட இருக்கிற பெட்டியை வாங்கிட்டு வந்து கொடுக்கறேன்.. மத்தபடி இவளுக்குத் தேவையான டிரஸ்ஸை நான் வாங்கி குமிச்சு வைச்சிருக்கேன்.. அதை உடுத்திக்கிட்டாப் போதும்..”

“ஆனாலும் ஆபிசர்.. நீங்க இவளை இப்படி அடை காக்கக் கூடாது.. ரெண்டு நாளைக்கு சென்னைப்பக்கம் அனுப்பி வைச்சா குறைஞ்சா போயிருவீங்க..?”

“குறைஞ்சுதான் போயிருவேன்..”

கருணாகரன் முறைத்த முறைப்பில் அவன் வத்சலாவை ஏதாவது சொல்லி விடப் போகிறான் என்று பயந்து போனாள் சசிரேகா..

“வாடி.. கீழே போகலாம்..” என்று வத்சலாவை கைபிடியாய் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே விரைந்து விட்டாள்..

வத்சலா எதையும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை.. மாறாக கருணாகரன் சசிரேகாவைச் சுற்றிச்சுற்றி வருகிறான் என்று தோழியை கேலி செய்து சிரித்தாள்.. கள்ளமில்லா அவளின் சிரிப்பில் சசிரேகாவின் மனம் வலித்தது.. வத்சலா இப்படியே நினைத்துக் கொண்டிருக்கட்டும் என்று அவள் வேண்டிக் கொண்டாள்..

‘இவளுக்கு உண்மை தெரியக் கூடாது.. அதை இவ தாங்கிக்கவே மாட்டா..’

“வத்சலா.. சாப்பிட வாம்மா..”

இரவு உணவுக்கு அழைக்க வந்த கவிதா வத்சலாவின் அறையில் சசிரேகாவும் இருப்பதைப் பார்த்து விட்டு..

“நீ இங்கே என்னம்மா பண்ற..?” என்றாள்..

“இல்லைண்ணி.. சும்மா பேசிக்கிட்டு இருந்தேன்..” சசிரேகா தடுமாறினாள்..

“என்னங்க இது ஓவரா இருக்கு..?” வத்சலாவுக்கு கடுப்பாகி விட்டது..

“நேத்துக் காலையில இருந்துதான் இவ உங்க வீட்டு மருமகள்.. அதுக்கு முன்னாடியிருந்தே என்னோட பிரண்டு.. என்னவோ இவ எனக்கு யாரோ மாதிரி அண்ட விடாம விரட்டறிங்க..”

“அதுக்கில்லைம்மா.. கல்யாணம் ஆன பின்னால ஒரு பொண்ணு புருசன் பக்கத்திலதான் இருக்கனும்.. சிநேகிதி கூடவே இருந்தா ஊர், உலகம் வித்தியாசமா பேசும்..”

நாசுக்காய் கவிதா சொல்ல வந்ததை சொல்லி விட்டாள்.. அதற்காக கருணாகரனைத் தேடிப் போக வேண்டுமா என்று சசிரேகாவின் மனம் முரண்டியது.. அவளுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்காமல் கருணாகரன் கீழே இறங்கி வந்து விட்டான்..

“இதோ ஆபிசர் வந்தாச்சு.. இனியாவது சசி என் பக்கத்தில இருக்கலாமில்ல..? என்ன ஆபிசர் சார்.. நீங்களே இதுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க..” வத்சலா கருணாகரனை கூப்பிட அவன் அருகே வந்தான்..

அவனுடைய கூர்மையான பார்வை சசிரேகாவைத் துளைப்பதைப் போல பார்த்ததில் அவள் நடுங்கிப் போனாள்..

“என்ன நியாயத்தைச் சொல்லனும்..?”

“என்னோட பிரண்ட் என் பக்கத்திலதான் இருக்கனும்னு நான் சொல்றேன்.. இல்லே.. அவளோட ஹஸ்பெண்ட் பக்கத்திலதான் இருக்கனும்னு உங்க 

அக்கா சொல்கிறாங்க.. இது சரியா ஆபிசர்..?”

“சரிதான்..”

அவன் நிதானமாக சொன்னான்.. இதைத்தான் சொல்வான் என்பதை அனுமானித்து வைத்திருந்த சசிரேகா..

“வாடி சாப்பிடப் போகலாம்..” என்று தோழியை இழுத்துக் கொண்டு போய் விட்டாள்..

இரவு உணவின் போது சசிரேகா தலையை நிமிரவில்லை.. அவளைத் துளைத்தெடுக்கும் கருணாகரனின் பார்வையைச் சந்திக்க அவளுக்கு பயமாக இருந்தது.. சாப்பிட்டு முடிந்ததும் வத்சலாவுடன் தோட்டத்துப் பக்கமாக நழுவி விட்டாள்.. அந்தக் கதை, இந்தக் கதை, ஆபிஸ் கதை என்று அவள் தேடித்தேடி கதை பேசியதில் வத்சலாவும் ஈர்க்கப்பட்டு கதை பேசுவதில் ஆழ்ந்து விட்டாள்..

“அப்படித்தான் அன்னைக்கு ஒருநாள் இந்த ஜார்ஜ் பிரவின்கிட்ட வசமா மாட்டிக்கிட்டான்..”

கதை பேசும் உற்சாகத்தில் வத்சலா எதையோ சொல்ல ஆரம்பிக்க சசிக்கு ‘திக்’ கென்று இருந்தது..

‘இப்பப் போயி அந்த பிரவின் பேரை எதுக்கு இவ இழுக்கிறா..’

“உஷ்ஷ்..”

அவள் அடக்கிக் கொண்டிருந்த போதே..

“அப்புறம் என்னாச்சு..?” என்று கேட்டபடி அங்கே வந்து நின்றான் கருணாகரன்..

“எவ்வளவோ ஆச்சு ஆபிசர்.. பிரவின் மாட்டு மாட்டுன்னு ஜார்ஜை மாட்டிட்டான்ல்ல..” உற்சாகமாக சொன்னாள் வத்சலா..

“கிழிஞ்சது போ..” வாய்விட்டு முணுமுணுத்தபடி தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள் சசிரேகா..

“ஓ..! அந்த பிரவின் பெரிய சூரன்தான்..” கருணாகரன் ஏகத்துக்கும் பாராட்டியபோது சசிரேகாவின் அடிவயிறு ஜில்லிட்டது..

‘இவன் எதையோ சொல்லப் போறான்..’

அவள் பயந்ததைப் போலதான் நடந்தது.. கருணாகரனின் தீர்க்கமான பார்வை சசிரேகாவின் வெளுத்த முகத்தையே வட்டமிட்டது.. 

“ஆக.. இத்தனை நேரமும் சிநேகிதக ரெண்டு பேரும் அந்த பிரவீனோட சூரத்தனத்தைப் பற்றித்தான் பேசிக்கிட்டு இருந்தீங்களா..?”

‘நினைச்சேன்..’ சசிரேகா துயரப் பெருமூச்சு விட்டாள்..

இல்லையென்று சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்பதில் அவள் மனம் கனத்தது..

அவனே ஏமாற்றுக்காரன்.. அவளுடைய அம்மா அப்பா வாழ்ந்த வீட்டை அங்குசாமிக்கு தாரை வார்த்துக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன்.. அப்படிப்பட்டவன் அவளைப் பற்றி எதையோ நினைத்துப் பேசிவிட்டுப் போகட்டுமே என்று எளிதாக விட்டுவிட அவளால் முடியவில்லையே.. அது ஏன்..?

“வத்சலா.. குளிருகிற மாதிரி இருக்கு.. வீட்டுக்குள் போகலாமா..?” சசி ஒரு எட்டு வைத்தாள்..

“இவ்வளவு நேரமும் வராத குளிர் இப்ப வந்திருச்சா..?” கருணாகரனின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது..

“அடடா.. இதுக்குக் கூடக் குற்றம் சொல்வீங்களா..? அப்ப அவளுக்குக் குளிரலை.. இப்பக் குளிருது.. அதுக்கு இப்ப என்னங்கறிங்க..?” வத்சலா சசிரேகாவின் சார்பாக வாதிட்டாள்..

“ஒன்னும் சொல்லலை.. உங்களைப் பக்கத்தில வைச்சுக்கிட்டு உங்க பிரண்டை ஒரு வார்த்தை சொல்லிர முடியுமா..?”

அவன் இலகுவாக பேசிச் சிரித்ததும் வத்சலா கோபத்தை மறந்து அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள்.

‘பாவம்.. வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைக்கிற கல்மிசமில்லாத மனசு..’ சசிரேகா தோழியை நினைத்து நெகிழ்ந்தாள்..

ஒருவழியாக அரட்டைக் கச்சேரியை முடித்துக் கொண்ட வத்சலா.. “ஹாவ்..” என்று விரல் கொடுக்கி கொட்டாவி விட்டு விட்டு..

“சசி.. வாடி தூங்கப் போகலாம்..” என்றாள்..

‘ஆஹா..’ தப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்து விட்டதே என்று சசிரேகாவும் உற்சாகமாக தலையை ஆட்டியபடி வத்சலாவுடன் கிளம்பிவிட்டாள்..

கருணாகரனை கடக்கப் போன போது அவனது இரும்புக்கை சசிரேகாவின் மணிக்கட்டை அழுந்தப் பிடித்து நிறுத்தியது..

‘சரியான இரும்புக்கை மாயாவி..!’ வலியில் துடித்துப் போனாள் சசிரேகா..

“கெடுத்தீங்களே காரியத்தை.. இவளை உங்க கூட தூங்க வான்னு கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டா என் கதி என்னாகிறது..?”

வரிசைப்பற்கள் தெரிய அவன் சிரித்ததில் சசிரேகாவே மயங்கி விட்டாள்.. வத்சலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்..

“இப்படிச் சிரிச்சு மயக்கினீங்கன்னா என் பிரண்டு என்ன ஆவான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா ஆபிசர்.. குட் நைட் சசி.. பார்த்துப் பத்திரமா இருந்துக்க.. உன் ஹஸ்பெண்ட் ரொம்பப் பொல்லாதவரா இருக்கார்..” என்று சிரித்தபடி போய் விட்டாள்..

‘இவன் பொல்லாதவன்தான்..’

வத்சலாவின் பின்னால் போக முடியாமல் அவள் சென்ற திசையைப் பார்த்தபடி ஏக்கத்துடன் நின்று விட்டாள் சசிரேகா..

அவளது மணிக்கட்டு வலித்தது.. இரும்புப் பிடியை விடுவிக்காமல் அவளை அருகே இழுத்த கருணாகரன்..

“உன் பிரண்டு என்னைப் பொல்லாதவன்னு சொல்லிட்டுப் போறாளே.. நான் பொல்லாதவன்னா நல்லவன் யாருடி..? அந்த பிரவினா..?” என்று கேட்டான்..

“இதை என்கிட்ட ஏன் கேக்கறிங்க..? சொன்னவ அவ.. அவகிட்டயே கேட்டிருக்க வேண்டியதுதானே..?” கையை விடுவிக்க முயன்றபடி சொன்னாள் சசிரேகா..

“சொன்னது அவதான்.. கேட்டுக்கிட்டவ நீதானே..? அதனால கேள்வியையும் உன்கிட்டத்தான் கேட்கனும்..” தனது உடும்புப் பிடியைத் தளர்த்தாமல் பேசினான் கருணாகரன்..

‘இது வேலைக்கு ஆகாது…’

சசிரேகா மௌனித்து விட்டாள்.. பேசினால் பேச்சுத்தான் வளரும்.. மௌனமாக இருந்து விட்டால் அவனால் என்ன செய்ய முடியும்..? தனக்குத்தானே வாய் வலிக்கப் பேசிக் கொள்ளட்டும என்ற வன்மத்துடன் உதட்டைக் கடித்தபடி வைராக்கியமாக வாயை மூடிக் கொண்டாள் சசிரேகா..

“ஏய்ய்..”

கருணாகரன் அவளை அதட்டிக் கொண்டிருந்த போது..

“கருணா..” என்ற கவிதாவின் குரல் கேட்டது..

“அக்கா வருது.. ஒழுங்கா முகத்தை வைச்சுக்க..”

சசிரேகாவை எச்சரித்து விட்டு இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு..

“என்னக்கா..?” என்றான் கருணகரன்..

“தூங்கப் போங்கப்பா.. நேரமாச்சில்ல..” கவிதா அறிவுறுத்தினாள்..

கருணாகரன் மாடிக்குப் போக.. சசிரேகா மௌனமாக அவனைத் தொடர்ந்தாள்.. அவன் கதவைத் தாழிட்டு விட்டு வந்த போது கட்டிலின் ஒரு ஓரமாக சுருண்டு படுத்து உறங்கிப் போயிருந்தாள்..

‘நாளைக்கு இருக்குடி உனக்கு..’

அவன் கருவி விட்டு கண்களை மூடித் தூங்க முயன்றான்.. திடிரென்று அவன்மீது மலர்க்கரம் ஒன்று வந்து விழுந்தது.. திரும்பிப் பார்த்தான்.. தூக்கக் கலக்கத்தில் புரண்டு படுத்திருந்த சசிரேகா அவன்மீது கையைப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள்..

0Shares

Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link