Chapter 20
“ப்ளீஸ் ஆபிசர்.. சசியும் என்கூட சென்னைக்கு வரட்டுமே..”
வத்சலா கெஞ்சினாள்.. கிளம்பும் வரை அந்தப் பேச்சையே எடுக்காமல் வளைய வந்து கொண்டிருந்தவள் காரில் ஏறப் போகும் போது அவளையும் மறந்து..
“சசி..! என்னடி மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க..? ஏறு..” என்று சொல்லி விட்டாள்..
“வத்சலா..!”
சசிரேகா கண்கலங்கிய போதுதான் அவளுக்கு திருமணமாகிவிட்டது… அவள் வத்சலாவுடன் சென்னைக்குத் திரும்பப் போவதில்லை.. வத்சலா மட்டும் தான் தனியாகப் போகப் போகிறாள் என்ற உண்மையே வத்சலாவுக்கு உறைத்தது..
“சசி..!”
வத்சலா சசிரேகாவைக் கட்டிக் கொண்டாள்.. தோழிகள் இருவரும் கண்ணீர் விட்டதில் கவிதா நெகிழ்ந்து போனாள்..
“எப்படி வாயடிக்கிற பொண்ணு.. இப்படி அழுதுகிட்டு நிற்குதே.. ஒன்னாப் பழகின சிநேகிதி.. ஒட்டுப்புல் போல ஒட்டிக்கிட்டே அலைஞ்சிட்டு, இப்ப விட்டுப் பிரிஞ்சு போகனும்ங்கிறப்ப மனசு தாங்குமா..?”
முந்தானை சேலையில் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டபடி சொன்னாள்.. கருணாகரன் எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் உணர்வுகள் துடைக்கப்பட்ட கரும்பாறை முகத்துடன் வத்சலாவைப் பார்த்து..
“நட்பைக் கொண்டாடினது போதும்ங்க.. நீங்க அழுகிறதுமில்லாம வீட்டில இருக்கிறவங்களையும் அழுக வைக்கறிங்களே.. எப்படி..? சென்னைக்கு இன்னைக்குப் போறிங்களா.. இல்லே.. நாளைக்குப் போறிங்களா..?” என்று கேட்டான்..
“அதுசரி..” மூக்கை உறிஞ்சியபடி கைக்குட்டையைத் தேடி எடுத்த வத்சலா.. அதில் முகம் துடைத்தபடி..
“முந்தாநாள் நைட் டிரெயினுக்கு கிளம்பினவளை நேத்துக் காலையிலே காரில அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி நிறுத்தி வைச்சீங்க.. ஓகேன்னு நேத்துக் கிளம்பினா.. இவ குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைக்கப் போறேன்.. கூடவாடின்னு சொல்லி நிறுத்தி வைச்சிட்டா.. இன்னைக்கும் கிளம்பலைன்னா அவ்வளவு தான்.. என் வேலை ஆட்டம் கண்டிரும்..” என்று சொன்னாள்..
‘வேலை..!’ சசிரேகா பெருமூச்சு விட்டாள்..
கருணாகரனின் கூரிய பார்வையில் உதட்டைக் கடித்துக் கொண்டவளுக்கு வத்சலாவுடன் கிளம்ப முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது.. கருணாகரனின் நுண்ணிய பார்வை அவளை அளந்து கொண்டிருப்பதை அவளுடைய உள்ளுணர்வு உணர்த்தியதில் அந்த ஏக்கத்தை வெளிக்காட்டி விடாமல் தன்னைக் கட்டுப்படுத்தியபடி அவள் நின்றிருந்தாள்..
“சசி.. நீயும் வாயேண்டி..”
வத்சலா வற்புறுத்த ஆரம்பித்து விட்டாள்.. கவிதாவுக்கு அவள் மனம் புரிந்ததினால் இதமாக எடுத்துச் சொல்லி அவளைக் கிளப்பி விட முயன்றாள்.. வத்சலா பிடிவாதமாக அடம் பிடித்து கருணாகரனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்..
“ஆபிசர், ஆபிசர், எப்படியும் சசி அவளோட டிரஸ்ஸஸை எடுத்துக்க சென்னை வரனும்தானே.. அதை இப்பவே வரச் சொல்லுங்க ஆபிசர்.. அவளும் நானுமா கிளம்பி வந்தோம்.. இப்ப அவ இல்லாம நான் மட்டும் கிளம்பிப் போகனும்னா என் மனசுக்கு பாரமா இருக்கு ஆபிசர்..”
“வத்சலா..” சசிரேகா அழுதுவிட.. கவிதா யோசித்தாள்..
“கருணா..”
தாழ்ந்த குரலில் அவள் தம்பியை அழைத்து ஏதோ சொன்னாள்.. அவன் தலையை ஆட்டி மறுத்துப் பேசினான்.. அவள் சமாதானம் செய்வதைப் போல பேசியதில் உதட்டைக் கடித்துக் கொண்டு அவன் யோசித்தான்..
“பாவம்டா.. சின்னப் பொண்ணு..”
கவிதாவின் பேச்சுக்குப் பலன் இருந்தது.. மாடிக்குப் போனவன் கையில் பெட்டியுடன் திரும்பி வந்தபோது எங்கேயோ வெளியில் போகப் போகிறான் என்றுதான் சசிரேகா நினைத்தாள்.. காரின் டிக்கியில் அவன் பெட்டியை வைத்து விட்டு டிரைவரை விலகச் சொல்லி விட்டு காரில் ஏறிய போது..
‘இவன் எதுக்கு டிரைவர் சீட்டில் உட்காருகிறான்..? ஒருவேளை வத்சலாவை சென்னையில் விட்டுவிட்டு
வர இவனே போகிறானோ..’ என்றுதான் அவள் யோசித்தாள்..
அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
‘இந்த வத்சலா சும்மாவே இவனைக் கண்டா ஜொள்ளு விடுவா.. சென்னை வரைக்கும் இவகூட தனியா ஜர்ன் பண்ணினா பார்வையிலேயே விழுங்கி விட மாட்டாளா..?’
டென்சன் தாங்காமல் சசிரேகா நகம் கடிக்க ஆரம்பிக்க..
“காருக்குள் ஏறு..” என்று அதட்டினான் கருணாகரன்..
“நானா..?” விழி விரித்தாள் சசிரேகா..
“நீயேதான்.. உன் பிரண்டு சொல்றதிலயும் ஒர் அர்த்தமிருக்கு.. சென்னைக்குப் போயி.. உன் வேலையை ரிசைன் பண்ணிட்டு லேடிஸ் ஹாஸ்டல் ரூமை வெகேட் பண்ணிட்டு உன் பெட்டியை எடுத்துக்கிட்டு வந்துரலாம்.. வா..”
கருணாகரன் சொன்ன மறுநொடியில் காருக்குள் ஏறி விட்டாள் சசிரேகா.. வத்சலாவுடன் அவளும் சென்னைக்குப் போகப் போகிறாள் என்ற குதூகலத்தில் கவிதாவிடம் சொல்லிக் கொள்ளக் கூட அவள் மறந்து விட்டதில் கருணாகரனின் புருவங்கள் சுருங்கின..
“அக்காகிட்ட சொல்லிக்கனும்ங்கிற வளமை கூட உனக்குத் தெரியாதா..?” கடினமான குரலில் கேட்டான்..
“ஸாரி அண்ணி..” பதறிப் போனவளாக காரை விட்டு இறங்கி விட்டாள் சசிரேகா..
“அடடா.. இதுக்குப் போயி இம்புட்டுப் பதட்டமா..? கருணா.. தாயில்லாப் பொண்ண இப்படியாடா அதட்டுவ..?”
கவிதா தம்பியை அதட்டினாள்.. ‘தாயில்லாப் பெண்’ என்ற அந்த வார்த்தையில் கருணாகரனின் முகத்தில் வந்த இளக்கத்தில்..
‘இவனுக்கு இரக்கப்படக் கூடத் தெரியுமா..?’ என்று அதிசயப் பட்டுப் போனாள் சசிரேகா..
“போயிட்டு வரேன் அண்ணி..”
“தங்கமா போயிட்டு வாம்மா..”
சசிரேகாவின் கன்னம் தொட்டு செல்லம் கொஞ்சி வழி அனுப்பி வைத்தாள் கவிதா.. காரில் ஏறப் போகும் போது திரும்பிப் பார்த்த சசிரேகா..
“தேங்கஸ் அண்ணி..” என்று கண்கள் பனிக்கச் சொன்னாள்..
“உன் பிரண்டு உன் கூடவே கிளம்பி வர்றா.. இனிமே கண்ணைக் கசக்காம கிளம்பிப் போவதான..?” கவிதா விளையாட்டாக வத்சலாவின் காதைப் பிடித்துத் திருகினாள்..
“வலிக்குதுங்க..”
பொய்யாக அலறிய வத்சலா.. அந்த வீட்டிலிருந்த அனைவருக்கும் டாட்டா சொல்லி விட்டு காரில் ஏறி உட்கார்ந்தாள்..
கார் கிளம்பிப் பறந்தது.. பின் சீட்டில் வாகாக சாய்ந்து கொண்ட வத்சலா..
“தேங்க்ஸ் ஆபிசர்..” என்றாள்..
“எதுக்கு..” திரும்பாமல் கேட்டான் கருணாகரன்..
“என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து என் பிரண்டைக் கூப்பிட்டுக்கிட்டு வர்றதுக்கு..”
“உங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவளோடு நான் கிளம்பி வரல.. என் அக்கா வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்துத்தான் கிளம்பி வந்தேன்..”
கருணாகரன் பட்டென்று பதில் சொன்னதில் வத்சலா முகம் வாடிப் போவாளோ என்று பயந்தாள் சசிரேகா.. அப்படியேதும் நடக்கவில்லை.. கருணாகரன் சொன்னதை ஒரு ஜோக்காக எடுத்துக் கொண்டு..
“ஹா..ஹா.. அப்படியா ஆபிசர்..?” என்று சிரித்து மகிழ்ந்தாள் வத்சலா..
‘இவ இருக்காளே..’ சசிரேகா தலையை ஆட்டி வத்சலாவின் சுபாவத்தை ரசித்தபடி நிம்மதியானாள்..
‘இருந்தாலும் இவன் இப்படி முகத்தில அடிக்கிறதைப் போல பேசியிருக்க வேணாம்..’
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.. கரும் பாறையில் செதுக்கியதைப் போன்ற தோற்றம்.. புருவச் சுளிப்பு.. அந்தப் புருவச் சுளிப்பை விரல்களால்
நீவி விட வேண்டும் போன்ற துடிப்பை அடக்கிக் கொண்டாள்..
முதல்நாளின் மழையிரவில் அவன் அழுத்தம் திருத்தமாக சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து துயரத்தைத் தந்தன..
“பயத்தில நடுங்கிச் செத்தாலும் சாவ.. ஆனா பால்கனிக் கதவைத் திறந்து ரூமுக்குள்ள வரமாட்ட.. அப்படித்தான..? ஏண்டி..? உள்ளே இருக்கிறவன் உன் புருசன்தானே.. உன்னைத் தொட்டவனும் உன் புருசன்தானே.. புருசன்கிட்டயிருந்து தப்பிக்க நினைக்கிற பெண்டாட்டி இந்த உலகத்திலேயே நீ ஒருத்திதாண்டி.. ஏன்..? உன் புருசனா அந்த பிரவின் இல்லைன்னுதானே பால்கனிக்கு ஓடின..?”
சசிரேகாவின் காதுகளில் அமிலத்தை ஊற்றினான் கருணாகரன்.. அவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.. வெளியே கேட்ட இடிச்சப்தம் இப்போது அவளை அச்சுறுத்தவில்லை..
“இந்த அளவுக்கு நீ போன பின்னால இனி நானா உன்னைத் தொட மாட்டேன்.. உன் மேல எனக்கிருந்த மோகத்தீ அணைஞ்சு போயிருச்சு.. உன் மனசு எவனோ ஒரு பிரவீனை நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப.. உன்கூட வாழ நினைக்கிறதே பாவம்.. என்ன பண்ணித் தொலைக்கிறது.. உன் கழுத்தில தாலியைக் கட்டித் தொலைச்சிட்டேன்.. புருசன் பெண்டாட்டி வேசத்தைக் கட்டித்தான் ஆகனும்.. மத்தவங்க முன்னாடி காட்டற சொந்தத்த இந்தத் தனிரூமில காட்ட மாட்டேன்.. உன் பக்கம் கூடத் திரும்ப மாட்டேன்.. உன் கற்பைக் காப்பாத்திக்க பால்கனிக்கு ஓடாம படுத்துத் தூங்கு..”
சொன்னவனும் தூங்கவில்லை.. கேட்டுக் கொண்டவளும் தூங்கவில்லை.. இரவு முழுவதும் தூங்காமல் ஒருவருக்கொருவர் முதுகு காட்டியபடி பொழுதை ஓட்டினார்கள்.. விடிந்தவுடன் முதல் ஆளாக கருணாகரன் வெளியே போய்விட்டான்.. அவன் இல்லாத தனிமையில் அழுது தீர்த்தாள் சசிரேகா..
இப்போது கற்சிலை போல அசைவில்லாமல் அவன் காரோட்டிக் கொண்டிருக்கிறானே.. இரண்டு தினங்களுக்கு முன்னால் அவளை கொட்டும் மழையில் நின்றுவிட்ட ரயிலில் இருந்து அன்னவாசலுக்கு கூப்பிட்டுக் கொண்டு வந்தானே.. அப்போது இப்படியா இருந்தான்..?
நொடிக்கொருமுறை அவளைப் பார்த்த கள்ளப் பார்வைகளின் நினைவில் அவனைப் பார்த்தாள் சசிரேகா.. சுளித்த புருவங்களுடன் அவன் ரோட்டைப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.. அவனைப் பார்வையிட அவனுக்குத் தோதாக இருந்த முன்பக்க கண்ணாடியில் முகம் பார்த்தாள்.. அவன் முகம் தெரிந்தது.. ஆனால்.. அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை..
“என்னடி.. பதில் சொல்ல மாட்டேங்கிற..?”
வத்சலா தோளைத் தட்டியதில் திருதிருத்த சசிரேகா..
“என்னடி கேட்ட..?” என்று கேட்டாள்..
“சரியாப் போச்சு போ.. இவ்வளவு நேரமும் நான் பேசியதை நீ கவனிக்கவே இல்லையா..? எனக்கு நானே பேசிக்கிட்டு இருந்தேனா..? என்னைப் பைத்தியம் போல புலம்ப வைச்சிட்டியில்ல.. உன்னை..”
“நான் ‘ஊம்’ கொட்டறேனான்னு கவனிச்சுட்டு நீ பேசியிருக்கனும்.. கவனிக்காதது உன் தப்பு..”
“அந்தர் பல்டி அடிச்சிருவியே.. யாரு நீ..?”
“அதையும் நீயே சொல்லிரு..”
“கருணாகரனோட பெண்டாட்டியாச்சே.. கெட்டிக் காரியத்தான இருப்ப.. நான்தான் கேணை போல.. பினாத்திக்கிட்டு இருக்கேன்..”
“தெரிஞ்சாச் சரி..”
வத்சலாவுடனான உரையாடல் சசிரேகாவை துயரத்திலிருந்து மீட்டது.. தோழியுடன் அரட்டை யடித்தபடி பயணம் செய்ததில் கருணாகரனின் பாரா முகத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடிந்தது..
வழியில் அவன் மதிய உணவுக்காக காரை நிறுத்தினான்.. மாலையில் காபி டிபன் சாப்பிட காரை நிறுத்தினான்.. எதிலும் குறைவைக்கவில்லை.. செய்கின்ற அத்தனை செயல்களையும் சசிரேகாவின் முகத்தைப் பார்க்காமல் செய்து முடித்தான்.. இரவு நெருங்கும் போது சென்னையில் கார் நுழைந்தது.. லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் கார் நின்ற போது சசிரேகா இறங்கப் போனாள்..
“நாம நாளைக்கு வந்து ரூமை வெகேட் பண்ணிக்கலாமே..” கருணாகரன் அவள் முகம் பார்க்காமல் சொன்னான்..
“வத்சலாவுடன் ரூம் வரைக்கும் போய் விட்டுவிட்டு வந்து விடுகிறேனே..”
சசிரேகா தயக்கத்துடன் இறைஞ்சுவதைப் போல கேட்டாள்.. அவன் போசாமல் இருந்ததில்..
“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிடி சசி..” என்று அவளை இழுத்துக் கொண்டு இறங்கினாள் வத்சலா..
‘இவன் பெர்மிசன் கொடுக்கலையே..’ அடித்துக் கொண்டது சசிரேகாவின் மனம்..
“பை.. ஆபிசர்..”
வத்சலா கருணாகரனுக்கு கையாட்டிவிட்டு சசியின் கையோடு கை கோர்த்தபடி நடந்தாள்.. வரவேற்பறையைக் கடந்து திரும்பியபோது சசிரேகா திரும்பிப் பார்த்தாள்.. காரிலிருந்து இறங்கி அதில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவனின் சிவந்த கண்கள் அவளை அச்சுருத்தின..
‘திரும்பி விடலாமா..?’
அவள் நினைத்ததை செயல்படுத்துவதற்குள் ஹாஸ்டலில் இருந்த தோழிகள் சூழ்ந்து கொண்டார்கள்..
“மணமகளே.. மருமகளே வா..வா..” என்று ஆரம்பித்து அவர்கள் பண்ணிய கலாட்டாவில் சசிரேகாவால் உடனடியாக திரும்ப முடியவில்லை..
ஒருவழியாக வத்சலாவிடமும், தோழிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு அவள் காருக்கு ஓடி வந்த போது..
“நான் உன் டிரைவரில்லை..” என்று அவன் வெடித்தான்..
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.