Chapter 02

0Shares

நதியோரம் நடந்தபோது

நீர்மீது பார்வை போகும்

இதழோரம் பாடல் தோன்றும்..

இமையோரம் கனவு தோன்றும்

…நதியோரம் நான் நடந்த போது…

ஸ்கூட்டியைத் திருப்பி அந்தத் தெருவிற்குள் நுழைந்தாள் வித்யா.. வசதியுள்ளவர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது வீடுகளின் பிரம்மாண்டத்தைப் பார்த்தாலே தெரிந்தது.. நான்காவதாக இருந்த அந்த வீட்டின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்தி வண்டியின் ஹாரனை அடித்தாள்.. சதாசிவம் வந்து அந்தப் பெரிய வாயில் கதவுகளைத் திறந்து விட்டார்.. ‘பூரணம்’ என்று நியான் எழுத்துக்கள் மின்னிய வீட்டினுள் வண்டி நுழைந்தது.. ஸ்கூட்டியை போர்ட்டிகோவில் நிறுத்திப் பூட்டிவிட்டு படியேறிச் சென்றாள் வித்யா.. கதவுகளைத் திறந்த கண்ணம்மாவிடம்..

“தேங்க் யூ ஆன்ட்டி..” என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்று நைட்டிக்கு மாறினாள்.. அறைக்கதவு தட்டப்பட திறந்தாள்.. கண்ணம்மா காபியுடன் நின்றாள்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்று மீண்டும் மனதார நன்றி கூறினாள்..

“ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் தேங்க்ஸ் சொல்லுவ..?”

“இந்தக் குளிரில் விரைச்சுப் போய் வந்திருக்கேன் ஆன்ட்டி… சூடான காபிக்கு எவ்வளவு ஏங்கிப் போயிருக்கேன் தெரியுமா..?”

கண்ணம்மாவின் மனம் கனிந்தது.. இந்த இளம் வயதில் இப்படி ஓர் ஓட்டமா..? இந்த இளம் குருத்தின் பாதையில் எவ்வளவு தடைக்கல்கள்.. பெருமூச்சுடன் அவள் கொடுத்த காலிக் கோப்பையை வாங்கிக்கொண்டு திரும்பியவள்..

“கொஞ்ச நேரம் படுத்து எந்திரிம்மா..” என்று கூறினாள்..

“சரி ஆன்ட்டி..” என்று சொல்லும்போதே விழிகள் செறுக வித்யா கட்டிலில் சுருண்டு படுத்து விட்டாள்..

சத்தமின்றி கதவைச் சாத்திவிட்டுக் கண்ணம்மா சென்றாள்.. தலைமாட்டிலிருந்த அலாரம் அடிக்க எழுந்து மணிபார்த்தாள் வித்யா.. ‘எட்டு’ என்றது கடிகாரம்.. அவசரமாய் எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள் அடுத்த கால்மணி நேரத்தில் குளித்து உடைமாற்றி காலேஜூக்கு போக ரெடியாகி வெளியே வந்தாள்..

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா, “வா.. வா.. இன்றைக்கு நெய் தோசை.. சூப்பரா இருக்கு.. சூடா சாப்பிடு.. கிளம்பலாம்..” என்றாள் வித்யாவைப் பார்த்து..

“முதலில் வாயிலிருக்கும் தோசையை விழுங்கி விட்டுப்பேசு.. தந்தி அடித்தது போல் பேசுகிறாய்..” என்று சிரித்த வித்யா அவள் அருகே அமர்ந்து தன் முன்னால் தட்டை வைத்துக் கொண்டாள்..

“கண்ணம்மா சித்தியின் கைப்பக்குவம் அப்படி.. வாயில் தோசையை வைத்தால் விழுங்கக் கூடத் தோன்றாத ருசி..” என்று கூறினாள் பூர்ணிமா..

“ம்ம்.. பசிக்கு சாப்பாடு கிடைத்தால் போதும் பூர்ணி.. ருசியை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..”

“எப்பப் பார்த்தாலும் படிப்பு நினைவாகவே இருந்தால் அப்படித்தான். கொஞ்சம் சுற்றிலும் பார்.. ருசி தெரியும்..”

“சரி அதைவிடு.. இன்னைக்கு டெஸ்ட் இருக்கில்ல படிச்சியா..”

“படிச்சேன் படிச்சேன்.. எப்படியும் நைட் கண் விழிச்சு படிக்கிற என்னை விட படிக்காமல் வேலை பார்த்து விட்டு வந்த நீதான் அதிக மார்க் எடுக்கப் போகிற.. சரி இன்றைக்கு டூட்டி இல்லையில்ல..?”

“இல்லை.. நாளை நைட்தான்..”

இரவுப் பணி பார்ப்பதில் அப்படி ஒரு சௌகர்யம் இருந்தது.. முதல்நாள் நைட்டுயுட்டி பார்த்தால் மறுநாள் முழுவதும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.. ஒருநாள் விட்டு ஓர்நாள் தான் இரவுப் பணி என்பதால் வித்யாவின் படிப்பு துளிக்கூட பாதிக்கப்படவில்லை..

“போதும் ஆன்ட்டி..” என்று வித்யா எழுந்து கொள்ள பூர்ணிமா அவள் தோள்களை அழுத்தி அமர வைத்தாள்..

“ஒழுங்காச் சாப்பிடுடி.. கொறிக்கிறா.. சித்தி இன்னும் இரண்டு தோசை போடுங்க..”

இருவரும் கை கழுவிவிட்டு மதிய உணவு டப்பாக்களை எடுத்து தோள் பையில் புத்தகங்களுடன் வைத்துக் கொண்டனர்.. கண்ணம்மாவிடம் சொல்லிக் கொண்டு படியிறங்கும்போது சின்னய்யன் எதிரே வந்தார்..

“என்ன தாத்தா எங்கே போயிருந்தீர்கள்..?”

“மளிகை சாமானும் காய்கறியும் வாங்கத்தான்.. ரெண்டு பேரும் காலேசுக்கு கிளம்பிட்டீங்களா..”

“கிளம்பிட்டோம்..” என்றபடி பூர்ணிமா காரில் ஏறிக் கொள்ள சதாசிவம் காரைக் கிளப்பினார்..

“கதவை மூடிக்கங்க தாத்தா..” என்றவாறு வித்யா தன் ஸ்கூட்டியில் ஏறிச் சென்றாள்..

காரும்.. ஸ்கூட்டியும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேற கேட்டை மூடிவிட்டு வீட்டினுள் வந்த சின்னய்யன்..

“இந்தா கண்ணம்மா.. இந்தப் பைகளில் இருக்கும் சாமான்களைப் பிரிச்சு எடுத்துவை… இந்த வித்யா பொண்ணைப் பார்த்தியா.. இந்த வீட்டில் இருந்தாலும் பூர்ணிமா பாப்பாவின் காரில் எப்போதுமே ஏறுவதில்லை..” என்றார்..

சாப்பாட்டு மேஜையில் பைகளை வாங்கி வைத்த கண்ணம்மா..

“அது வித்யா போட்ட கண்டிசனாம்ல்ல.. இங்க தங்கிச் சாப்பிட ஹாஸ்டல் மாதிரி மாதா மாதம் பணம் வாங்கிக்கிட்டால்தான் வருவேன்னு அடிச்சுச் சொல்லிருச்சாம்ல்ல.. அதே போல் என் வண்டியில் தான் நான் வேலைக்கும்.. காலேஜூக்கும் போவேன்னும் கட்டன் ரைட்டா ஆர்டர் போட்டிருச்சாம்.. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பொண்ணு.. இது நம்ம பூர்ணிமாவுக்கு பிரண்டா கிடைச்சது பூர்ணிமா வோட நல்ல நேரம்..” என்றாள்..

ஃபேனைச் சுழல விட்டு அதன் கீழ் அமர்ந்து துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்ட சின்னய்யன்.

“அதைச் சொல்லு.. ஒரு தப்பான பேச்சு உண்டா.. தப்பான பழக்கம் உண்டா.. எதையும் பட்டுப்பட்டுன்னு நேருக்கு நேரா பேசுகிற பொண்ணு அந்த வித்யாப் பொண்ணு.. மத்த பட்டணத்து பொண்ணுங்க மாதிரி தான்தோன்றித்தனமா அலையற பொண்ணில்லை..” என்றவாறு தண்ணீர் ஜக்கை எடுத்து மடக் மடக்கென்று குடித்தார்..

பிரிட்ஜைத் திறந்து காய்கறி வைக்கும் டிரேயை எடுத்த கண்ணம்மா.. “பூர்ணிமாவுக்கு நம்ம ஊரிலேயே அவங்க சொந்தக்காரங்களில் பெருந்தன்மை இல்லாதவங் களைப் பிடிக்காது.. ரொம்ப வித்தியாசமான பொண்ணு.. ராஜவம்சம்.. பரம்பரைப் பணக்காரங்க.. ஆனால் எவ்வளவு தன்மையாப் பழகுது.. குணம் குணத்தோடதான் சேரும்.. நம்ம பாப்பாவுக்கு வித்யாவைப் பிடிச்சுப்போனதில் ஆச்சரிய மில்லைல்ல..” என்றவாறு காய்கறிகளை அடுக்க ஆரம்பித்தாள்..

காரை ஓட்டிக் கொண்டிருந்த சதாசிவமும் அதே வார்த்தைகளைத்தான் பூர்ணிமாவிடம் சொன்னார்.. பூர்ணிமா சிரித்தாள்…

“இப்பவாவது அவள் ஸ்கூட்டி வாங்கியிருக்கிறாள் பெரியப்பா.. எனக்குக் கொஞ்சம் கவலையில்லாமல் இருக்கிறது.. ஆனால் நம் வீட்டிற்கு வந்து நம்முடன் இருக்க ஆரம்பித்த புதிதில் சைக்கிள்தானே வைத்திருந்தாள்..? காரை எடுத்துக்கொள்ளச் சொல்லி எவ்வளவு கெஞ்வேன்.. ஊஹூம்.. அவளை அசைக்க முடியவில்லையே.. ஆச்சு இப்ப ஃபைனல் இயர் வந்துவிட்டோம்.. அவளும் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. சம்பளப் பணத்தில் மீதம் பிடித்து போன வருடம் ஸ்கூட்டி வாங்கின பின்தான் நான் நிம்மதியாக இருக்கிறேன்..”

பூர்ணிமா அன்றைய நாளை நினைத்துக் கொண்டாள்.. வித்யா கவலையுடன் இருந்தபோது பூர்ணிமா அந்தக் கோரிக்கையை அவள் முன் வைத்தாள்..

“வித்யா.. நான் தனியாகத்தான் இருக்கிறேன்.. கூட என் தூரத்து உறவான சித்தி.. பெரியப்பா.. தாத்தா இவங்கல்லாம் இருக்காங்க.. நீ என் கூட வந்து தாராளமா இருக்கலாம்.. நீ கூட வந்து இருன்னு சொல்வதில் என்னுடைய சுயநலமும் இருக்கு.. நீயோ கிளாஸ் பர்ஸ்ட்.. நீ என்கூட இருந்தால் பாடத்தில் சந்தேகம் கேட்டுக்குவேன்..”

வித்யா தோழியின் சாமர்த்தியமான பேச்சைக் கேட்டுப் புன்னகைத்தாள்.. திரும்பித் தன் தோழியின் முகத்தை ஊன்றிப் பார்த்தாள்.. அந்தக் கண்களில் தேங்கி நின்ற காருண்யம் உண்மையை உணர்த்த..

“பூர்ணி.. நீ எனக்குத் தோழியாக மட்டும் இரு.. உதவ நினைக்காதே.. எனக்கு யாசகம் பிடிக்காது..” என்றாள் கடுமையாக..

“போடி பைத்தியம்.. நட்புக்கிடையில் யாசகம் எங்கிருந்து வரும்..?”

“நட்பு உடையாமலிருக்க வேண்டுமானால் நமக்குள் கொடுக்கல்.. வாங்கல் இருக்கக் கூடாது.. கடன் அன்பை முறிக்கும்..”

“என்னிடம் இருக்கிறது கொடுக்கிறேன்..”

“என்னிடம் இல்லாததால் நீ கொடுப்பதை ஏற்றுக் கொள்வேன் என்று நினைத்தாயா.. நெவர்.. எனக்கு உதவி பெறுவது பிடிக்காது..”

“சரிசரி.. நான் சொன்னது தப்புத்தான்.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.. ம்ம்.. வேறு என்ன செய்தால் நீ என்னுடன் தங்க வருவாய்..” என்று யோசித்த பூர்ணிமா தலையில் கை வைத்து யோசிக்கலானாள்.. திடீரென்று “ஐடியா..” என்று துள்ளிக் குதித்தாள்..

“மெதுவாக் குதிடி.. அடிபட்டுவிடப் போகுது..”

“வித்யா.. இப்போ நீ ஹாஸ்டலில் இருக்கிறாயே அது போல் என் வீட்டில் இருக்கலாம்..”

“அது எப்படி..? இது ஹாஸ்டல்.. என் சாப்பாட்டிற்கும்… ரூம் வாடகைக்கும்.. நான் பணம் கொடுத்து விடுவேன்..”

“அதையே எனக்கும் கொடு..”

“உன்னிடம் பணம் கொடுத்து விடுவதா..? உன்னிடம் இல்லாத பணமா..?”

“அது எதற்கு உனக்கு..? உனக்குத் தனியாக ஒரு ரூம் கொடுத்து விடுகிறேன்.. உன் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன்.. ரூம் வாடகையும் சாப்பாட்டுச் சொலவையும் நீ கொடுத்துவிடு..”

வித்யா தன் தோழியையே இமைக்காமல் பார்த்தாள்.. அவள் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனமான ஆவல் அவளைக் கவர்ந்தது..

“என்மேல் ஏண்டி இவ்வளவு பாசம் வைக்கிறாய்..?”

“ஏன்னா நீ ஒருத்திதான் அதற்கு தகுதியானவள் வித்யா.. என்னை எனக்காக நேசிக்கிறது நீ மட்டும்தான்.. மற்றவர்கள் என்னிடமிருக்கும் பணத்திற்காக என்னுடன் பழகுகிறார்கள்.. நீ ஒருத்திதாண்டி என் பின்புலம் பற்றி யோசிக்காமல் என்னடன் பழகுகிறவள்.. நீ என்னுடன் வந்து இருக்க வேண்டும் வித்யா..”

வித்யா இறங்கி வந்தாள்.. ஆனால் தன்னுடைய நிபந்தனைகளை அழுத்தம் திருத்தமாக கூறினாள்..

“பூரணி.. நீ விளையாட்டுக்குச் சொன்னாயோ இல்லை சீரியஸாகச் சொன்னாயோ நான் அதைப்பற்றிக் கவலை படவில்லை.. உன் வீட்டில் எனக்கு ஒரு ரூம் கொடு அதைத்தவிர மற்ற இடங்களில் நான் உரிமை கொண்டாட மாட்டேன்.. ரூம் வாடகையாகவும்.. என் சாப்பாட்டிற்கும் சேர்த்து மாதா மாதம் ஒன்றாம் தேதி ‘டான்’ன்னு பணம் கொடுத்து விடுவேன். அதை வாங்க நீ கொஞ்சம் தயங்கினாலும் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடுவேன்..”

தோழியின் வாயைப் பொத்தினாள் பூர்ணிமா..

“நீ வெளியேறுவது போல நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன் வித்யா.. நீ பணம் கொடு.. நான் வாங்கிக் கொள்கிறேன்..”

“தேங்க்ஸ் பூர்ணி.. அப்புறம் ஒன்று.. நான் காலேஜிற்கும்.. வேலைக்கும் என் சைக்கிளில்தான் போய் வருவேன்.. உன் காரில் ஏறிக் கொள்ளச் சொல்லி நீ என்னைக் கட்டாயப்படுத்தக் கூடாது..”

“ஏண்டி இப்படிப் பண்ணுகிறாய்.. பெட்ரோலுக்கு வேண்டுமானால் பணம் கொடுத்துவிடு.. அதற்காக நைட்டூட்டிக்கு இருட்டில் தனியாக எப்படிடி சைக்கிளில் போய் வருவாய்..?”

“நான் தனி என்று யார் உனக்குச் சொன்னது..? எனக்கு கடவுள் துணை வருவார்.. பெட்ரோலுக்கு கொடுக்கும் அளவுக்கு என் சம்பளம் கட்டாது.. நான் உனக்குக் கொடுத்தது போக காலேஜ் பீஸ்.. புக்ஸ்.. நோட்ஸ் அப்புறம் டிரஸ் எல்லாமே அதில்தான் பார்க்க வேண்டும்..”

“கடனா வைச்சுக்க.. கணக்கு எழுதி வைச்சுக்க.. பின்னால் கொடு..”

“இப்போதுதானே என் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது.. என்னை வற்புறுத்தக் கூடாதுன்னு சொன்னேன்.. அதற்குள் மறந்துவிட்டாயே..”

பூர்ணிமா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. எனினும் வித்யா பணம் சேர்த்து ஸ்கூட்டி வாங்கும் வரை அவளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பாள்.. வேலைக்குச் செல்லும் வித்யா வீடு திரும்பும் வரை பூர்ணிமா தவித்து விடுவாள்.. ஒரு வழியாக ஸ்கூட்டி வந்த பின்தான் பூர்ணிமா நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

கல்லூரியில் காரிலிருந்தும் ஸ்கூட்டியிலிருந்தும் இறங்கிய தோழிகள் ஒன்று சேர்ந்து கொண்டனர்..

“ஹாய் பூர்ணிமா.. ஹாய் வித்யா..” என்ற குரல்களுக்கு பதில் குரல் கொடுத்தபடி அருகருகே அமர்ந்து கொண்டனர்.. சற்று நேரத்தில் வகுப்பு ஆரம்பிக்கப் பாடத்தில் ஆழ்ந்தனர்..

மதிய உணவு இடைவேளையில் மரத்தின் அடியிலிருந்த சிமிண்டு பெஞ்சில் அமர்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தனர்… பூர்ணிமா ஏதோ சிந்தனையுடன் இருந்தாள்.. வித்யா கேட்பது காதில் விழாதவாளய் அவள் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க வித்யா அவள் தொடையில் ‘நறுக்’கென்று ஒரு கிள்ளு கிள்ளினாள்..

“ஐயோ.. வலிக்குது.. ஏண்டி பிசாசே இந்த வேலை பண்ணுகிறே..?” என்று பூர்ணிமா முறைக்க..

“பின்னே என்ன.. பத்துத் தடவையாவது உன்னைக் கூப்பிட்டிருப்பேன் காதில் விழாமல் அப்படி என்ன யோசனை உனக்கு..?” என்று கடிந்து கொண்டாள் வித்யா.

“நேற்றுக் காலையில் ஊரிலிருந்து லெட்டர் வந்திருக்கிறது.. சித்தி வாங்கி வைத்திருந்து நேற்று சாயந்திரம் கொடுத்தார்கள்.. நீ நைட் டூட்டிக்குக் கிளம்ப வேண்டியிருந்தால் அப்போது உன்னிடம் பேச முடியவில்லை..”

“யார் லெட்டர் போட்டிருக்கிறார்கள்..?”

“ம்ம்.. பிரகாஷ்..” என்று பிரகாசம் இழந்த முகத்தோடு கூறினாள் பூர்ணிமா.. தோழியின் வருத்தம் புரிந்தது வித்யாவிற்கு.. சற்றுநேரம் இருவரும் மௌனமாக உண்டார்கள்.. அர்த்தத்துடன் கூடிய மௌனம்..

“பூர்ணி.. உன்னையே நீ வருத்திக்கிறேன்னுதான் நான் சொல்வேன்..”

“வித்யா.. என்னைப் புரிஞ்சுக்கிட்ட நீ கூடவா இப்படிச் சொல்கிறே..?”

“உன்னைப் புரிந்து கொண்டதால்தான் சொல்கிறேன்.. பிரகாஷின் மீது உனக்கு எவ்வளவு காதல் என்று எனக்குப் புரியாதா..? இல்லை தெரியாதா..? ஏன் பிடிவாதம்.. பிடிக்கிறாய்..”

“பிடிவாதம் பிடிக்காமல் சரின்னு சொல்லி அவர் மணமாலையை வாங்கிக்கணுமா..? என்னால் முடியாது வித்யா..”

“பிரகாஷ் என்ன தவறு செய்தார் பூர்ணி.. அவருக்கு ஏன் தண்டனை கொடுக்கிறாய்..?”

“என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியை காதலித்தாரே அதுதான் அவர் செய்த குற்றம்.. அந்தக் குற்றத்திற்காகத் தான் அவரை ஒதுக்கித் தண்டனை கொடுக்கிறேன்..”

“தண்டனை கொடுக்கும் நீதானே அதிக வேதனை அடைகிறாய்..?”

“இருக்கட்டும்.. வித்யா.. எனக்கு எல்லாமே என் பெரிய அண்ணன்தான்.. அவருக்கு இல்லாத மணவாழ்வு எனக்கு வேண்டாம்..”

பேச்சை கண்ணீர் தடை செய்ய பாதியில் நிறுத்தினாள் பூர்ணிமா.. வித்யாவின் தொண்டையில் சாதம் உள்ளே இறங்காமல் அப்படியே நின்றது..

‘பெரிய அண்ணன்..! பூர்ணிமாதேவியின் பெரிய அண்ணன்.. வித்யா இதுவரை கண்களால் நேரில் கண்டறியாத பெரிய அண்ணன்.. நரேந்திரன்..!’

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link