Chapter 05
நதியோரம் நடந்தபோது
நெஞ்சோரம் பூ மலரும்
நீர் போலே மனம் துள்ளும்
நிறம் மாறா குணம் கொள்ளும்
…நதியோரம் நான் நடந்த போது…
அன்று மாலை வீடு திரும்பும்போது பூர்ணிமா உற்சாகமாக இருந்தாள்.. அவளது துள்ளலுக்கான முதல் காரணம் அன்று வித்யாவிற்கு டியூட்டி இல்லை.. இரண்டாவது காரணம் இருவரும் ஷாப்பிங் போகப் போகிறார்கள்.. போய் ஒன்று போல் இருவருக்கும் உடை எடுக்கப் போகிறார்கள்..
முதல்நாள் இரவே முடிவெடுத்து விட்டாள் பூர்ணிமா.
“வித்யா.. டியூட்டிக்கு கிளம்புவதற்குள் இதற்குப் பதில் சொல்லி விட்டுப்போ.. நாளைக்கு நாம் ஷாப்பிங் போகிறோமா இல்லையா..?”
“போகிறோம்..”
“நாமிருவரும் ஒரே கலரில் ஒரே விலையில் டிரஸ் எடுக்க வேண்டும்…”
“என் சுரிதாருக்கான பணத்தை நான் கொடுத்து விடுவேன்..”
“ஏண்டி.. என்னை மூட்-அவுட் ஆக்குகிறே.. இப்ப நான் பணக்காரி.. உனக்கு டிரஸ் எடுத்துத் தருகிறேன்னு சொன்னேனா..?”
“சொன்னாலும் சொல்வே.. உன்னை நம்ப முடியாது..”
“என் குணம் உனக்குத் தெரியும்.. சரி உன் குணமும் எனக்குத் தெரியுமில்லையா..? நீ தான் சுயமரியாதை சுந்தரியாயிற்றே.. உன்னிடம் வாய் கொடுத்துவிட்டு நான் துன்பப்படவா..? நான் வாயே திறக்க மாட்டேன்..”
வித்யா முறைத்தாள்..
“நான் என்னடி உன்னைத் துன்பப்படுத்தினேன்..?”
“எடுத்ததெற்கெல்லாம் பெட்டியைத் தூக்கிக்கிட்டு வெளியே போய் விடுவேன்னு பயமுறுத்தறியே அது துன்பம் இல்லையா..?”
“நீ நான் போட்ட கண்டிசன்களை மீறலைன்னா வம்பே இல்லையே..”
“மீறமாட்டேன் தாயே.. மீறவே மாட்டேன்.. நாளைக்கு என் சுரிதாருக்கான பணத்தை நானே கொடுத்து விடுகிறேன்.. அதற்கு விடுவாயில்லையா..? அப்பா.. நீ இருக்கிறாயே.. சரியான கறார் பேர்வழிடி.. நீ எங்க பெரிய அண்ணன் மாதிரி..”
வித்யாவின் மனம் துள்ளியது..
“அப்போ உன் பெரிய அண்ணனும்.. நானும் ஒன்றா..?” என்றாள் கோபம் கொண்டவள் போல் நடித்த வளாய் அதைப் புரியாத அப்பாவியாய் பூர்ணிமா கூறினாள்..
“நிச்சயம் ஒன்றுதான் வித்யா.. யோசித்துப் பார்த்தால் என் பெரியண்ணன் குணங்கள் அப்படியே உனக்கிருக்கிறது புரியும்.. ஒருவேளை அதனால்தான் எனக்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டதோ என்னவோ..”
“அப்படியென்ன உன் பெரிய அண்ணன் பெரிய குணக்குன்றாம்..?” வித்யா வேண்டுமென்றே பேச்சை வளர்த்தாள்..
“பின்னே.. அவர் குணம் யாருக்கு வருமாம்..?”
“எனக்கு வந்திருக்கிறது என்று சொன்னாயே..”
“அதனால்தான் உன்னைப் பிடித்திருக்கிறது என்றும் சொன்னேனே..”
“போதும்டி.. ஐஸ் வைத்தது.. உனக்கென்ன நாளைக்கு சாயங்காலம் உன்னுடன் ஊர் சுற்ற வரவேண்டும்.. அவ்வளவுதானே வருகிறேன்.. இப்போது டூயுட்டிக்கு நேரமாகி விட்டது.. ஆளைவிடு..”
அன்று காலேஜ் விட்டு திரும்பியவுடனே முகம் கழுவி காபி வேலையை முடித்துக் கொண்டு அவர்கள் படியிறங்கினார்கள்.. வித்யா ஸ்கூட்டியை எடுக்க பூர்ணிமா பின்னால் ஏறிக் கொண்டாள்.. வித்யாவின் முகம் இளகியது.. மனம் மென்மையானது..
இரண்டு பேரும் சேர்ந்து செல்வதற்காக பூர்ணிமா கண்டுபிடித்த வழி அது.. காலேஜ் தவிர மற்ற இடங்களுக்கு போகும்போது தனித்துச் செல்ல பூர்ணிமா விரும்பமாட்டாள்.. வித்யாதானே தன் காரில் ஏற மறுக்கிறாள்..? தான் வித்யாவின் ஸ்கூட்டியில் ஏறிவிட்டால்.. யோசனையை செயல் படுத்தியும் விட்டாள்.. எங்கே சென்றாலும் இருவரும் வித்யாவின் ஸ்கூட்டியில் பறந்தார்கள்.. காலேஜிற்கும் அப்படியே போய்வர பூர்ணிமாவிற்கு ஆசைதான்.. வித்யாதான் தடுத்துவிட்டாள்.
“உனக்காக ஒரு காரையும் அதை ஓட்ட டிரைவரையும் அனுப்பி வைத்திருக்கும் உன் குடும்பத்தாருக்காகவாவது நீ காரில் தான் காலேஜ் வர வேண்டும்..” என்று கண்டிப்பாய் கூறிவிட்டாள்..
அன்று வித்யாவின் தோளைப் பற்றிக் கொண்டு சளசளத்தபடி பூர்ணிமா வர அதற்குப் பதில் சொல்லியபடி வண்டியை விட்ட வித்யா கேட்டாள்..
“நியு இயர் வருகிறது.. சரி.. அதற்குப் புது டிரெஸ் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்.. அதுவும் சரி.. அது எதற்கு உனக்கும் எனக்கும் ஒரே கலர் ஒரே விலையில் டிரெஸ் எடுக்க வேண்டுமென்கிறாய்..”
“எனக்கென்னவோ ஆசையாய் இருக்கிறது வித்யா.. நீயும் நானும் ஒரே கலரில் டிரெஸ் போட்டுக் கொண்டு காலேஜில் போய் ஓர் கலக்கு கலக்க வேண்டுமென்று..”
“அதுதான் ஏன்..?”
“வித்யா.. அந்த ஜெனிஃபர் இருக்காளில்ல.. அவள் போன வாரம் ஒரு கேள்வி கேட்டாள்.. ‘நீயும் வித்யாவும் திக் பிரண்ட்ஸ்ன்னு நீதான் சொல்லிக்கிறே.. அவள் தனியா ஸ்கூட்டியில் வர்றாள்.. நீ காரில் வர்ற.. ஒரே வீட்டில் தங்கியிருக்கிறீங்கன்னு நீங்களா வாய் திறந்து சென்னால் தான் தெரியும்’ன்னு சொல்கிறாள்டி.. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…”
“இதற்குப் போய் மூட்-அவுட் ஆவார்களா..? மண்டு.. மண்டு.. மற்றவர்களுக்காகவா நாம் வாழ்கிறோம்..? நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டும்.. மற்றவர்களைக் கேர் பண்ணக் கூடாது..”
“இது.. இதைத்தான்.. என் பெரிய அண்ணனும் அடிக்கடி சொல்லுவார்.. இப்போப் புரிகிறதா நான் ஏன் ‘என் அண்ணனும் நீயும் ஒன்று’ன்னு சொல்கிறேன் என்று..?”
சிக்னலுக்காக வண்டியை நிறுத்திய வித்யாவுக்கு புல்லரித்தது.. நரேந்திரனின் குணாதிசயங்கள் பூர்ணிமாவின் வாய்மொழியின் உபயத்தால் அவளுக்கு இப்போது அத்துபடியென்றாலும் அவன் பெயரை கேட்பது கூட ஒரு தனி சுகம்..
“ஆமாண்டி.. நடுரோட்டில் இத்தனை டிராபிக் நடுவில் உன் அண்ணன் புராணம் பாடு.. பெருமை பேச நேரம் பார்த்தே பார்..” என்று போலியாய் அலுத்துக் கொண்டாள் வித்யா..
“எங்கேயிருந்தாலும் என் அண்ணன் பற்றி நினைக்காமலிருக்க என்னால் முடியுமா..? சரி சரி சிக்னல் விழுந்து விட்டது வண்டியை எடு..”
“பூர்ணி.. ஒரே கலரில் டிரெஸ் வாங்குவது சரி.. ஒரே விலையில் என்றால்.. கொஞ்சம் உதைக்கிறார் போலிருக்கிறதே..”
“இல்லையே..” என்றாள் பூர்ணிமா கைகளை விரித்து..
“வண்டியில் உட்காரும்போது ஆடாமல் உட்காருன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்.. ஒழுங்காய் உட்காரு.. இப்ப ஏன் டான்ஸ் ஆடறே..? நான் சுடிதார் அதிக விலையில் எடுக்கமாட்டேன்..”
“ஆனால் அழகாய் எடுப்பாய்..”
“நிச்சயமாய்.. என் உடைகள் விலை குறைவாயிருக்கும்.. ஆனால் அழகாய் நேர்த்தியாய் இருக்கும்.. சீஃப் அன்ட் பெஸ்ட்தான் என்னுடைய சாய்ஸ்.. ஆனால் நீங்களெல்லாம் விலையைப் பார்த்துத்தானே டிரெஸ் எடுப்பீர்கள்..?”
“அது அப்போ..”
“எப்போ..?”
“வித்யா என்கிற சர்வாதிகாரியை நான் சந்திப்பதற்கு முன்பாக..”
“நான் சர்வாதிகாரியா..” என்று லேசாய் தலை திருப்பி விழிகளை உருட்டியவள் வண்டியின் முன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.. அந்தத் துணிக்கடையின் வாசலில் வண்டியை நிறுத்திப் பூட்டிச் சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டவள் தோழியைப் பார்த்து..
“வா.. வா.. சீக்கிரம் எடுத்து விட்டு சீக்கிரம் வீட்டிற்குப் போகலாம்..” என்று கூறினாள்..
“பறக்காதே.. நீ போய் சமையலா பண்ணப் போகிறாய்.. என்றைக்காவது ஒருநாள் இப்படி வெளியே வருகிறோம்.. அவசரப்பட்டால் எப்படி..?”
“ம்ம்.. அது ஒருவேளை என் மிடில்கிளாஸ் குணமாக இருக்கலாம்.. விளக்கு வைப்பதற்குள் வீட்டிற்கு திரும்பி விட வேண்டுமென்ற கட்டுப்பாடு.. விளக்கு வைத்தபின் வெளியேயிருக்க நேர்ந்தால் ஏதோ குற்றம் செய்தது போல் மனம் குறுகுறுக்கும்.. வீட்டிற்குள் நுழைந்த பின்தான் சரியாகும்..”
“ஒரு துணுக்கு படித்திருக்கிறேன்.. யானையை முதலில் சங்கிலியால் கட்டிப் போடுவார்களாம்..
அது உடைக்கப் பார்த்து முடியாமல் அடங்கி விடுமாம்.. பின்னர் வெறும் கயிறால் கட்டிப் போடுவார்களாம்.. அது ஒரே இழுவையில் அறுந்துவிடும் என்பதை அறியாமல் யானையும் அடங்கி இருக்குமாம்.. அதுபோல் பெண்கள் மனோதத்துவ ரீதியாக இப்படிப் பயப்படுவதற்கு ஏதேனும் காரணம் இருக்கும்..”
“சரி என்ன கலர் எடுக்கலாம்..”
“உன் விருப்பப்படி எடு.. உன் உடைகள் எப்போதுமே ரசனையுடன் அமைந்திருக்கும் வித்தி.. என்னிடம் விலையுயர்ந்த சுடிதார்கள் நிறைய உண்டு.. ஆனால் உன்னுடையதுபோல் அழகாய், ரசனையாய் ஓர் உடை கூட இல்லை..”
“இதுதானே வேண்டாம்கிறது.. விட்டால் என்னை ஓட்டு ஓட்டு என்று ஓட்டுவாயே.. ஏய் பூர்ணி இந்த பிங்க் கலர் பிடிச்சிருக்கா பாரு..”
பூர்ணிமாவுக்கு பிடித்திருந்தது.. அன்று ஒரே கலரில் உடைகள் எடுத்தது பின்நாளில் ஓர் மறக்க முடியாத அனுபவத்தை தனக்கு ஏற்படுத்தப் போவதை வித்யா அறியவில்லை..
இருவரும் ஐஸ்கிரீம் பார்லர் போனார்கள் ஐஸ்கீரிம் சாப்பிட்டார்கள்.. பீச்சிற்குப் போனார்கள்.. கடல்நீரில் கால் நனைய விளையாடினார்கள்.. பின்னர் மூச்சு வாங்க ஈர உடையுடன் மணலில் உட்கார்ந்தார்கள்..
“தேங்காய்.. மாங்காய்.. பட்டாணி.. சுண்டல்..” என்றபடி ஒரு சிறுவன் சில்வர் தூக்கோடு அருகில் வந்து நின்றான்..
“ஏண்டா.. காலம் காலமாய் ஒரே டயலாக் தான் சொல்வீர்களா வேறு டயலாக் கிடையாதா..” என்று கிண்டலாக வினவினாள் வித்யா..
“இந்த டயலாக்கைத்தான் என் அப்பா எனக்குச் சொல்லிக் குடுத்தாருக்கார்..” என்றான் அந்தப் பையன்..
“அவருக்கு அவர் அப்பா சொல்லிக் குடுத்தாரா..?” என்றவள்..
“என்னடா படிக்கிறாய்..?” என்று விசாரித்தாள்..
“ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா.. கார்ப்பரேசன் ஸ்கூல்..” என்றான் அவன் மிகப் பெருiயாக..
“நல்லாப் படிப்பியாடா..”
“நான்தான்க்கா கிளாஸ் பர்ஸ்ட்..” என்றான் அவன் வாயெல்லாம் பல்லாக..
“வெரிகுட்.. நல்லாப் படிக்கணும்.. இங்கே எவ்வளவு நேரம் சுண்டல் விற்பாய்..?”
“சாயந்திரம் ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை விற்பேன்க்கா..”
“சரி.. வீட்டுக்குப் போனதும் படிக்க ஆரம்பிச்சிடனும்.. என்ன.. எங்கே எங்களுக்கு இரண்டு பொட்டலம் சுண்டல் கொடு பார்க்கலாம்..”
சுண்டல்காரப் பையன் போனதும் பூர்ணிமா சுண்டலைப் பிரித்து வாயில் போட்டபடி..
“என்னடி சுண்டல்கார பையனுடன் பேச்சு வார்த்தையையெல்லாம் பலமா நடத்தினே.. என்ன பேட்டி எடுத்தியா..?” என்று கேட்டாள்..
“பொதுவாய் குழந்தை தொழில் தவறு என்பதுதான் என் கருத்து பூர்ணிமா.. அதே நேரம் படித்துக் கொண்டே இதுபோல் சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதிப்பது தவறு இல்லைன்னும் நினைக்கிறேன்.. என்னையே எடுத்துக்கயேன்.. என் படிப்புக்கு நான் வேலை செய்து சம்பாதிக்கவில்லையா..?”
“நீ சொல்வதும் சரிதான் வித்யா.. அவர்கள் பாவம் ஏழைகளாக இருப்பார்கள்.. ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து சுமையைப் பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை தான்..”
“காந்தியடிகள் அன்றைக்கே சொல்லியிருக்கார் பூர்ணி.. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ என்று.. இன்றைக்கு எத்தனை பெண்கள் தையல் மிஷின் தைப்பது மூலம் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள் தெரியுமா..?”
அவர்கள் பேசிக் கொண்டே சுண்டலைக் காலிப் பண்ணினர்.. பின்னர் கேலியும்.. கிண்டலுமாக வீடு வந்து சேர்ந்தனர்..
அடுத்து வந்த நாள்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு ஓட புது வருடப் பிறப்பு வந்தது.. இருவரும் ஒரே கலரில் ஆடை அணிந்து கோவிலுக்குப் போய் வந்தனர்..
அடுத்த வாரத்தில் ஓர் நாள் அந்த உடையை கல்லூரிக்கு அணிந்து சென்றனர்.. பிடிவாதமாக காரைத் தவிர்த்து வித்யாவின் பின்னால் ஸ்கூட்டியில் உட்கார்ந்து வந்தாள் பூர்ணிமா.. ஜெனிபரின் முன் பெருமையாய் போய் இறங்கினாள்..
“ஹாய்.. ஜெனிஃபர் சீக்கிரம் வந்துட்டபோல..” என்ற பூர்ணிமாவின் கேள்வியைக் கவனிக்காமல் அவர்கள் இருவரின் உடைகளைக் கவனித்த ஜெனிஃபர்..
“வாவ்..” என்றாள்..
“ஹேய்.. எவ்வளவு அழகாக இருக்கிறது.. பிங்க கலரில்.. பிளாக் எம்பிராய்டரி.. அதில் சின்னச் சின்ன ஸ்டோன் பதித்து ஸ்மார்ட் வொர்க்.. ஒரே கலரில்.. எங்கே வாங்கினீர்கள்..?”
பூர்ணிமா பெருமையாய் சிரித்துக் கொள்வதை பரிவுடன் கவனித்தாள் வித்யா.. அவளிடமுள்ள ஒரு பட்டுச் சேலையின் விலை ஐந்து லட்ச ரூபாய்..! அதைக் கேட்டு தான் மலைத்துப் போனது நினைவுக்கு வந்தது அவளுக்கு.. சில நூறு ரூபாய்களில் வாங்கிய இந்த சுடிதாருக்கா இவ்வளவு பெருமை..? ‘என்னருமைத் தோழியே.. உன் அன்பிற்கு நான் அடிமையானேன்.. எப்போது கழிப்பேன் இந்த அன்புக்கடனை..’ என்று நெகிழ்ந்தாள்..
அன்று அவர்களின் உடைகளை தோழிகள் அனைவரும் கவனித்து புகழ்ந்தனர்.. சில பெண் லெக்சரர்கள்கூட விசாரித்தனர்.. மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் வித்யா நைட் டுயூட்டிக்கு போக வேண்டும் என்பதால் காபி குடித்தவுடன் தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டாள்.. மாலை ஆறு மணி அளவில் எழுந்து முகம் கழுவித் தயாரானவள் மாடிப் பால்கனியில் தொட்டிச் செடிகளில் ஒரு செடியில் ரோஜாப் பூ பூத்திருப்பதைக் கவனித்து அதன் அருகில் சென்று குனிந்து அந்தப் பூவைக் கிள்ளி எடுத்தாள்.. அதே நேரத்தில் அவள் பின்னாலிருந்து இரண்டு முரட்டுக் கரங்கள் அவள் கண்களைப் பொத்தின..
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.