Chapter 16

0Shares

நதியோரம் நடந்தபோது

நட்புக் காற்றாய் மனம் வருடினாய்

மென்மையாக என்னுள் நுழைந்து

  மெல்ல எந்தன் இதயம் திருடினாய்

  …நதியோரம் நான் நடந்த போது…

பிரகாஷ் தென்காசியிலிருந்து வந்திருந்தான்.. பூர்ணிமாவுடன் தங்கள் திருமணம் குறித்துப் பேச வந்திருந்தான்.. அவர்கள் கூடி கூடிப் பேசினார்கள்.. என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்களால் யூகிக்கவும் முடியவில்லை.. கூடப் பிறந்த தங்கையான பிரபாவதி தூண்டித் துருவிக் கேட்டு விட்டாள்..

“அண்ணா.. என்னதான் முடிவெடுத்திருக்கிறீர்கள் நீயும், பூர்ணிமாவும்..”

“எதைப்பற்றி..?”

“உன் கல்யாணத்தைப் பற்றி.. அதற்காகத்தானே பூர்ணிமாவிடம் பேச வந்தாய்..”

“இல்லையே.. நான் என் தாய்மாமன் வீட்டில் ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்.. தாய்மாமன் மகளை சைட் அடிப்பது போனஸ்.. அவ்வளவுதான் விசயம்..”

“கதையடிக்காதே அண்ணா.. இன்னும் ஒரு வாரம் இங்கேதான் இருக்கப் போகிறாயாமே.. பூர்ணிமா சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கிறது.. நீ என் அண்ணன் தானே..”

“அதில் உனக்குச் சந்தேகமா..? நம் அப்பா ராஜா ரகுநாதர்கிட்டப் போய் கேளேன்.. என் தலைமகன் பிரகாஷ்தான்னு எடுத்துச் சொல்வார்..”

“கேட்கிறேன்.. நல்லாக் கேட்கிறேன்.. நீங்க தனியா ஜவுளிக் கடையைப் பார்த்துக்கிட்டு தவிக்க அண்ணன் இங்கே வந்து வேலைக்காரங்ககிட்ட தங்கைமுறை கொண்டாடிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறது நியாயமான்னு கேட்கிறேன்..”

“வேலைக்காரங்களா.. ஓ வித்யாவைச் சொல்கிறாயா..? பார்த்துப் பேசும்மா.. நாளைக்கே அந்தப் பெண் வீட்டுக்காரங்களா ஆனாலும் ஆகிவிடும்..”

பிரகாஷ் இயல்பாய் சொல்லிவிட்டு நகர்ந்துவிட பிரபாவதியின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.. ஏற்கனவே வித்யாவின் வரவால் பேக்டரி வேலைச் சுமையின்றி நரேந்திரன் மில்லில் தங்கிவிட யுகேந்திரனால் பணத்தை அடிக்க முடியவில்லை.. முதலாளி என்ற ஹோதாவில் சுற்றி வரவும் முடியவில்லை.. மீனலோசனியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.. பேக்டரியில் கால் வைத்த முதல் நாளிலேயே மகேந்திரனை மண்ணைக் கவ்வ வைத்து விட்டாளென்று வித்யாவின் மேல் வெறியாக இருந்தாள்.. அதற்கேற்றாற் போல் வித்யா பேக்டரி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டிருந்தாள்.. மகேந்திரன் உருவாக்கிய குழுவே திணறிப் போனது.. இந்நிலையில் வித்யா வீட்டுக்காரி யாகவே ஆனால்..?

நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்கியது பிரபாவதிக்கு.. மீனலோசனியுடன் சதியாலோசனை செய்ய விரைந்தாள்..

வார இறுதி ஞாயிறு வந்தது.. நரேந்திரன், வித்யா, பூர்ணிமா, பிரகாஷ் நால்வரும் அருவிக்குக் கிளம்பினர்..

“சித்தி.. எங்களுக்கு ஹாட் பேக்கில் சூடாய் பிரியாணியும், சிக்கன் பிரையும் வைத்து விடுங்கள்.. அருவியில் குளியல் போட்டவுடன் அசுரப் பசி எடுக்கும்..”

“வித்யா சுடிதார் போட்டுக்க.. புடவையெல்லாம் பெர்ஸனல் மேனேஜருக்குத்தான்.. இன்னிக்கு அருவியில் குளியல் போட சுடிதார்தான் பெஸ்ட்.. மாற்றுவதற்கு ஒரு செட் எடுத்து வைத்துக்க..”

“அண்ணா… டாடா சுமோவை எடுத்துக் கொள்வோம்.. நாங்க துணி மாற்ற அதுதான் வசதி..”

“பிரகாஷ்.. கிளம்புவதற்கு இத்தனை நேரமா..? என்ன பெண் பார்க்கவா போகிறீர்கள்.. வெளியே வாங்க..”

பூர்ணிமா பரபரத்தாள்.. வித்யாவுக்கு ஊர் சுற்றிக் காட்டப் போகும் உற்சாகம்… அத்தோடு அவள் மனதிலிருந்த திட்டத்தை செயற்படுத்தும் முதல் நாள்..

“பெண் பார்க்கப் போவதா..? அதற்குத்தானே இங்கே வந்திருக்கிறேன்..? உன்னைத்தான் பார்த்தாகி விட்டதே.. வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பேனா..?” என்றபடி பிரகாஷ் வந்தான்..

‘இப்படிப் பேசியே பூர்ணிமாக் கழுதையின் மண்டைக் கனத்தை அதிகப்படுத்துகிறான் இந்த அண்ணன்.. மாப்பிள்ளையாய் லட்சணமாய் முறுக்கிக் கொள்ள வேண்டாமா..?’ பிரபாவதி மனதிற்குள் குமைந்தாள்..

‘வேலைக்காரர்களை வைக்கிற இடத்தில் வைக்க வேண்டாமா..? வீட்டில் தங்க வைக்கிறதும், காரில் கூட்டிப் போவதும், கூடிக்கும்மாளம் போடுவதும் என்று வீடே தலைகீழாய் மாறுகிறது.. சரி செய்ய வேண்டும்’ மீனலோசனி தீர்மானமே செய்து கொண்டாள்..

அருவிக் கரையில் சோவென்று கொட்டிக் கொண்டிருந்த அருவியைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள் வித்யா..

“ஹைய்யோ.. எவ்வளவு ஜோரா நீர் கொட்டுது பார் பூர்ணி.. வெள்ளையாய் பஞ்சு பொதி கீழே விழுவது போல் இருக்கிறது பார்..” என்று ஆர்ப்பரித்து கை கொட்டினாள் வித்யா..

“சரி வா குளியல் போடலாம்..” என்று பூர்ணிமா அவளை இழுத்துக் கொண்டு அருவி நீரில் புகுந்தாள்..

ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரி இறைத்துக் கொண்டு இருவரும் விளையாடிக் கொண்டிருக்கையில் ஆண்கள் பகுதியில் குளிக்க பிரகாஷும், நரேந்திரனும் ஷார்ட்ஷும், பனியனும் அணிந்து வந்தனர்.. யதேச்சையாக அவர்கள் பக்கம் பார்த்த வித்யா மெய் மறந்து விட்டாள்..

உருண்டு, திரண்டு நின்ற புஜங்களுடன் அகன்ற ரோமம் படர்ந்த மார்புடன் நின்ற நரேந்திரனது தோற்றம் அவளைத் தடுமாறச் செய்தது.. அதற்குள் அருவி நீரில் தலையைக் குடுத்து விட்டிருந்த நரேன் குளிக்க ஆரம்பித்திருந்தான்.. மீண்டும் அருவிக்குள் புகுந்தாலும் வித்யாவுக்குள் உற்சாகம் குறைந்து விட்டிருந்தது.. இனம் விளங்காத தாபம் ஒன்று அவளுள் எழுந்தது.. இப்போது நரேந்திரன் சிரித்தவாறு அருவியை விட்டு வெளியே வர நீரில் நனைந்த தலைமுடி கலைந்து அவன் முகத்தில் பரவியிருந்தது.. கலைந்திருந்த தலைமுடியுடன் அவனது கவர்ச்சியான தோற்றத்தை ஏக்கத்துடன் பார்த்தவாறே பூர்ணிமா எச்சரித்ததை கவனிக்காமல் பின்னால் நகர்ந்தவள்  பாசி நிறைந்த பாறையில் கால் வைத்து விட்டாள்.. பூர்ணிமா திகிலுடன் “வித்யா” என்று அலறியது நாற்திசைகளிலும் எதிரொலிக்க வித்யா பாறையில் கால் வழுக்கி நீரின் வேகத்தோடு கீழேயிருந்த ஆழமான நீர்ப்பரப்பில் சறுக்கி விழுந்தாள்.. நீரின் மேல் அவள் தலை எழும்பி மீண்டும் நீரில் அமிழ..

“வித்யா..” என்று கதறியபடி பூர்ணிமா நீருக்குள் பாயப்போனாள்.. அதே கணத்தில் நரேந்திரன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல நீருக்குள் பாய்ந்தான்.. பிரகாஷ் பூர்ணிமாவின் கைபற்றி கரைக்கு இழுத்து வந்தான்..

“இங்கேயே இரு.. உன்னைப் பார்ப்பதா அவளைக் காப்பாற்றுவதா..” என்று அவன் மிரட்டிக் கொண்டிருந்த போது நரேந்திரன் தலை நீருக்கு மேலே தெரிந்தது.. வித்யாவை இழுத்துக் கொண்டு நீந்தி வந்தவன் ஒரு பூமாலை போல் அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு கரையேறினான்.. கரையில் படுக்க வைக்கப் பட்ட வித்யா மூர்ச்சையாகி இருந்தாள்.. பூர்ணிமா பதற்றமாக..

“வித்யா கண்ணைத் திறந்து பாருடி.. என்னைப் பாருடி.. ஐயோ உன்னைப் பலி கொடுக்கத்தான் பாவி நான் மணிமுத்தாறுக்கு கூட்டி வந்தேனா..” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்..

பிரகாஷ் எரிச்சலுடன், “நீ கொஞ்சம் வாயை மூடுகிறாயா..? உன் ரோதனை பெரிய ரோதனையாய் இருக்கிறது.. அவளுக்கு ஒன்றுமில்லை.. உன் அண்ணன் காப்பாற்றி விட்டார்.. நீ பேசாமலிரு..” என்று அதட்டினான்.

நரேந்திரன் இவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வித்யாவின் கை, கால்களை சூடு பறக்கத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான்.. மெல்ல வித்யா கண் விழிக்க பூர்ணிமா ஆனந்தத்துடன்..

“வித்யா..” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்..

“கொஞ்சினது போதும்.. போய் பிளாஸ்கிலிருந்து சூடாய் காபி ஊற்றி எடுத்துக் கொண்டு வா..” என்று விரட்டினான் பிரகாஷ்..

பூர்ணிமா ஓடிப்போய் காபி கொண்டு வந்து வித்யாவின் கையில் கொடுத்து குடிக்க வைத்தாள்.. மெல்ல தன்னிலைக்கு வந்த வித்யா முதலில் பார்த்தது நரேந்திரனின் ரத்தம் வழிந்த நெற்றியைத்தான்..

“ஐயோ.. இது என்ன ரத்தம் கொட்டுது..” என்று அவள் பதறவும் தான் மற்ற இருவரும் நரேந்திரனின் நெற்றியைப் பார்த்தார்கள்.. கூர்மையான கல் வெட்டி காயம் பட்டிருந்தது.. நரேந்திரன் அப்போதுதான் அதை உணர்ந்வனாய்..

“ஏதோ கல் வெட்டியிருக்கிறது போல.. ஒன்றுமில்லை வித்யா, பதற வேண்டாம்..” என்றவாறு எழுந்து சென்று அருவி நீரில் முகம் கழுவி கைக்குட்டையால் இறுக்கிக் கட்டுப் போட்டான்..

பூர்ணிமாவின் விழிகளும் பிரகாஷின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.. நரேந்திரன் அதைக் கவனிக்காமல் வித்யாவை எழுப்பி உட்கார வைத்தான்..

“ஒன்றுமில்லை நரேன்..” என்றபடி தளர்வாய் எழுந்த வித்யா அருவி நீரைப் பார்த்தாள்.. ஈரம் படிந்திருந்த உடலில் ஒட்டியிருந்த மணலை அருகில் ஓடிய வாய்க்கால் நீரில் கழுவிக் கொண்டாள்..

“வா டிரஸ் மாத்திக்கலாம்..” என்று பூர்ணிமா அழைக்க வண்டிக்குள் ஏறி உடை மாற்றிக் கொண்டனர்.. பிரகாஷும், நரேந்திரனும் உடைகளை மாற்றிக் கொள்ள மௌனமாய் அருவிக் கரையில் அமர்ந்து உண்டனர்..

திடீரென்று பிரகாஷ் அருகில் ஒரு குரங்கு வந்து வாழைப் பழத்தை தூக்கிக் கொண்டு போக பிரகாஷ்..

“பூர்ணிமா பார்த்தாயா உன் சொந்தத்தின் வேலையை..?” என்று கிண்டலடிக்க சூழ்நிலை கலகலப்பாகியது.. பூர்ணிமா முறைத்தவாறு..

“ஆமாம் அது என் அத்தை பிள்ளை..” என்றாள்.. வித்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.. நரேந்திரனின் முகத்தில் ஜீவன் மீண்டது..

சாப்பிட்டு முடித்தவுடன்..

“வித்யா வருகிறாயா.. இந்த அருவியின் பக்கம் ஒரு கிளை நதி ஓடும்.. அதைப் பார்த்துவிட்டு வரலாம்..” என்று  பிரகாஷ் அழைக்க வித்யா யதார்த்தமாய் பின் தொடர்ந்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டே நடந்து மறைய பூர்ணிமா தேவி அண்ணனின் முகம் பார்த்தாள். தன் திட்டத்தை செயலாற்ற ஆரம்பித்தாள்.. இருவரும் நதி நீரில் கால்நனைய நின்று கொண்டிருந்தார்கள்..

“அண்ணா.. நானும் பிரகாஷும் எங்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஓர் முடிவுக்கு வந்திருக்கிறோம்..” என்று ஆரம்பித்தாள் பூர்ணிமா..

“என்னம்மா.. அடுத்த மாதத்தில் முகூர்த்தம் குறித்து விடலாமா..?”

“இல்லை அண்ணா.. உங்கள் திருமணம் நடக்க ஓர் வருடம் அவகாசம் கேட்டீர்கள் இல்லையா..? பிரகாஷ் சொல்கிறார் எனக்கு அவசரமில்லை, உன் அண்ணன் பிரச்சனை முடிந்து வித்யாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும்.. அதன் பின்னால் நாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிறார்..”

“என்ன விளையாடுகிறாயா..? நீ சொன்னது என்ன..? இப்போது நடந்து கொள்வது என்ன..?”

“அண்ணா.. பிரகாஷ் வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்றுதானே நீங்கள் அவசரப்பட்டீர்கள்..? இப்போது அவர் பொறுமையாய் இருக்க ஒப்புக் கொண்டு விட்டார்.. அப்புறமென்ன..?”

“ஏன் பூர்ணி புரிந்து கொள்ளாமல் பேசுகிறாய்.. முதலில் உன் கல்யாணம் நடக்கட்டும்.. அதற்குப் பின்..”

“அதற்குப் பின்னால் வித்யாவை வீட்டை விட்டு விரட்டி விடுவீர்கள்.. அப்படித்தானே அண்ணா..”

“பூர்ணிமா..” அதிர்ந்து போனான் நரேந்திரன்.. விரட்டி விடுவதா வித்யாவையா..?

“எனக்குத் தெரியும் அண்ணா.. நீங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது மொட்டை மாடியில் வைத்து வித்யா விடம் பேசியதை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்.. அண்ணா..! அவள் என் மேல் வைத்த பாசத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டீர்களே.. எல்லோரும் படித்தது போல் அவள் படிக்கவில்லை.. போராடிப் படித்தாள்.. அந்தப் படிப்பை படிக்க உதவிய வேலையையும் அவள் படிப்பால் கிடைத்த வேலையையும் உதறிவிட்டு உங்கள் பின்னால் வந்தாளே.. எதற்காக.. என் மேல் கொண்ட அன்பிற்காக.. அந்த அன்பை அவளை வீழ்த்தும் ஆயுதமாகப் பயன்படுத்தி சூதாட்டம் ஆடி விட்டீர்களே..”

“பூர்ணி.. எல்லாம் தெரிந்தும் ஏன் இங்கு வந்தாய்..?”

“வித்யாவை என் அண்ணியாக்கிக் கொள்ள..”

“பூர்ணி.. புரியாமல் பேசாதே.. வித்யாவை நான் விட்டுவிட மாட்டேன் நம்பு..”

“இல்லை.. நான் நம்பமாட்டேன்… எப்போது நீங்களும், அவளும் கணவன் மனைவியாக என் கல்யாணத்தை நடத்தி வைப்பீர்களோ அப்பொழுதுதான் என் கல்யாணம் நடக்கும்..”

நரேந்திரன் அவஸ்தையில் சிக்கினான்.. அதே நேரம் வித்யாவும் பிரகாஷும் பேசிக் கொண்டே வர அவர்களது பேச்சு நின்றது..

வித்யாவும், பிரகாஷும் கலகலப்பாய் பேசிக் கொண்டே வர பூர்ணிமா இறுக்கமாய் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள்..

நரேந்திரன் யோசனையாய் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்..

வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டின் கலகலப்பு கூடியிருப்பது தெரிந்தது..

யாராக இருக்கும் என்ற யோசனையுடன் பூர்ணிமா செல்ல,

“ஹாய் பூர்ணிமா.. ஹவ் ஆர் யூ..?” என்றபடி சுரேந்திரன்.. அவளது நான்காவது அண்ணன் சுரேந்திர பூபதி அவள் தோளைச் சுற்றி கைபோட்டு வினவினான்..

“சுரேன் அண்ணா.. எப்போது வந்தாய்..?” என்று கண்களை அகல விரித்தாள் பூர்ணிமா.. அவளுக்குப் பதில் சொல்வதற்குள் அவள் பின்னே வந்த வித்யாவைப் பார்த்த சுரேந்திரனின் கண்கள் வியப்பில் விரிந்தன..

“வாவ்.. இந்த ஊரில் இப்படி ஒரு பியூட்டியா..?” என்று அவன் கூறு பூர்ணிமாவின் முகம் கூம்பியது..

மீனலோசனி, பிரபாவதி தேவியின் முகங்கள் மலர்ந்தன..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link