Chapter 17

0Shares

நதியோரம் நடந்தபோது

தீண்டிச் சென்ற தென்றல் காற்றே

வறண்டு போன என் மனதின்

தாகம் தீர்க்கும் நீர் ஊற்றே!

 …நதியோரம் நான் நடந்த போது…

சுரேந்திர பூபதி வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தான்.. அவன் திடீரென்று வந்து நிற்கவும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலை, கால் புரியவில்லை, பூர்ணிமாவை விட நான்கு வயது மூத்தவனான அவனை பூர்ணிமா ‘வா, போ’ என்று தான் அழைப்பாள்..

“சுரேன் அண்ணா.. நேற்று உன்கூட போனில் பேசிய போது கூட நீ இந்தியாவிற்கு வந்து விட்டதை ஏன் சொல்லவில்லை..?” என்று சிணுங்கினாள் பூர்ணிமா..

“சுரேந்திரனின் மறு பெயர் சஸ்பென்ஸ்” என்று சிரித்தான் சுரேந்திரன்..

இந்தச் சந்தடியில் வித்யா நழுவி தன் அறைக்குச் சென்று விட்டிருந்தாள்.. அதைக் கவனித்த பிரகாசின் மனம் கனிந்தது.. அருவிக் கரையில் நடந்த சம்பவம் அவன் மனதில் ஆழப் பதிந்திருந்தது.. வித்யா நீரில் மூழ்கியதும் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் நரேந்திரன் நீரில் பாய்ந்த காட்சி அவன் நினைவில் ஆடியது.. தலையில் காயம் பட்டதை உணராதவனாய் வித்யாவிற்காக அவன் துடிக்க வித்யாவோ கண் விழித்த மறுகணம் நரேந்திரனின் முகத்தில் காயம் கண்டு பதறுகிறாள்.. கூடப் பிறந்த தங்கையான பூர்ணிமாவே தன் சகோதரனின் காயத்தைக் கவனிக்கவில்லை.. நரேந்திரனும், வித்யாவும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையையும் ஆழமான காதலையும் அது நிரூபித்தது..

பிரகாஷ் பூர்ணிமாவை நேசித்தது அவள் தன் மாமன் மகள் என்பதற்காக மட்டுமில்லை.. அவளது நியாயம் பார்க்கும் குணத்திற்காக அவனது சொந்தங்களில் அவளது குண இயல்பைக் கொண்டவர்கள் ஒருவர்கூட இல்லை.. பணத்திலே பிறந்து வளர்ந்தாலும் அவளிடம் காணப்படும் எளிமை.. அனைவரையும் நேசிக்கும் தன்மை.. அவனை அவளை நேசிக்க வைத்தது..

தான் பூர்ணிமாவை மணக்காவிட்டால்கூட பூர்ணிமா தன்னைத் தவிர யாரையும் மனத்தால் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள் என்பதை பிரகாஷ் நன்கு அறிவான்.. அவ்வளவு தீவிரமாக தன்னைக் காதலிப்பவள் திருமணத்தை மறுப்பது அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது..

நரேந்திரனைப் பற்றி அவனைப் பெற்ற அன்னையே கவலை கொள்ளாதபோது பூர்ணிமா ஏன் தன் காதலைப் பணயம் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு.. அவனுக்கும் குடும்பம் இருக்கிறது.. தாய் தந்தையர் இருக்கிறார்கள்.. ஒரே தங்கையான பிரபாவதியும் மணமுடித்து குழந்தை பெற்று விட்டாள்.. குடும்பத்திற்கு ஒரே மகன்.. அவன் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்று அவனது பெற்றோர் அவசரப்படுவதில் தவறேதும் இல்லை.. அதுவும் ஐந்து வருடத்திற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டிருந்தது..

இந்நிலையில் பூர்ணிமா திருமணத்திற்கு சம்மதித்து மணிமுத்தாறுக்கு திரும்பி வரப் போவதாக நரேந்திரன் கூறியதும் அவன் வியப்பில் ஆழ்ந்தான்.. பூர்ணிமாவிடம் போனில் பேசினால், “நேரில் வா..” என்றாள்.. அவள் சென்னையிலிருந்து வந்த மறுநாளே பிரகாஷ்.. பூர்ணிமாவைத் தேடி வந்து விட்டான்.. பூர்ணிமா அவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசினாள்.. சென்னையில் நடந்தை எடுத்துரைத்தாள்..

“இப்போது முடிவாய் என்னதான் சொல்கிறாய்..?” என்று எரிச்சலுடன் வினவினான் பிரகாஷ்..

“பிரகாஷ்.. உங்களுக்கு நான் வேண்டுமென்றால் எனக்கு வித்யா என் பெரியண்ணியாக வேண்டும்..”

“எதை வைத்து வித்யாவிற்கு உன் அண்ணன் மேல் காதல் என்கிறாய்..?”

“பிரகாஷ்.. வித்யாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.. அவள் அறிமுகமில்லாத ஆண்களிடம் நின்று பேச மாட்டாள்.. அறிமுகமானவர்களிடம் தனியே பேச மாட்டாள்..”

“உன் அண்ணன் என்பதற்காகப் பேசியிருக்கலா மில்லையா..?”

“ம்ம்.. அந்தக் காரணத்திற்காக மட்டும் பேசுவதாக இருந்தால் கடற்கரையில் என் அண்ணனுடன் தனித்துப் பேசியதோடு நிறுத்தியிருப்பாள்.. இரவில் தனியாக வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் மொட்டை மாடிக்குப் போய் சந்திக்க மாட்டாள்..”

“அப்படியேயிருந்தாலும் காதல் இருகை ஓசையாக இருக்க வேண்டும் பூர்ணி.. ஒரு கை ஓசையாக இருக்கக் கூடாது..”

“இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்..? நரேந்திரன் அண்ணா வித்யாவைப் பார்க்கும் பார்வையில் காதல் தெரிகிறது..”

“அது உன் கற்பனையாக இருக்கலாம்..”

“இருக்கட்டுமே.. கனவு, நனவாகக் கூடாதா..?”

“அவ்வளவு அக்கைற அந்தப் பெண் மீது உனக்கெதற்கு..?”

“என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள் பிரகாஷ்.. என் பணக்காரத் தனத்தைப் பற்றிக் காலேஜே பேசும்போது என்னைப் பற்றி மட்டும் அவள் பேசினாள்.. என் துணைக்காக அவளை என்னுடன் தங்க அழைத்தேன்.. அதற்கான வாடகைப் பணம், சாப்பாட்டுப் பணத்தை பெற்குக் கொள்ளாவிட்டால் தங்க மாட்டேனென்று சொல்லி விட்டாள்.. எனக்கு அவள் கொடுத்த பணத்தில் சென்னையில் எந்த லேடீஸ் ஹாஸ்டலிலும் அவள் தங்கலாம்.. ஒரு பைசா குறைத்துக் கொடுத்ததில்லை.. என் கர்ச்சீப்பைக்கூட தவறுதலாகவோ, ஞாபக மறதியாகவோ எடுத்துப் பயன் படுத்தியதில்லை.. என் அண்ணனைப் பற்றி நான் பேசுவதைக் கேட்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். எங்களிருவருக்காக தன் வாழ்வைப் பணயம் வைக்க வேண்டிய அளவுக்கு நன்றிக் கடன் என்னிடம் துளியளவு கூட அவளுக்கு இல்லை..

மாறாக என்னை எனக்காக நேசித்ததற்கு நான்தான் அவளிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவள் வாழ்வை துச்சமாக எண்ணி என் அண்ணன் சொல்லச் சொன்ன பொய்யை எங்களிருவருக்காக அவள் சொன்னாள்.. தன்மானம் பார்ப்பவள்.. எங்களுக்காக மகியண்ணன் இன்று பேசிய வார்த்தைகளைத் தாங்கிக் கொண்டாள்.. சுய மரியாதை பார்ப்பவள்.. எங்களுக்காக உங்கள் தங்கையும், மீனலோசனி அண்ணியும் செய்த உதாசீனங்களைப் பொறுத்துக் கொண்டாள் பிரகாஷ்!

அவள் பணத்தைப் பெரிதாக நினைப்பவளில்லை.. மனத்தை நினைப்பவள்.. என் திருமணம் மட்டும் முடிந்து விட்டால் அடுத்த கணம் அநாதை மாதிரி இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவாள்.. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. அப்படி அவள் வெளியேறி விட்டால் நான் என் உயிரையே விட்டு விடுவேன்..”

“பூர்ணிமா” என்று அதட்டினான் பிரகாஷ்..

“பைத்தியம் மாதிரி உளராதே.. இவ்வளவு அன்பை அவள் மேல் வைக்க அவள் தகுதியானவள்தானா என்பது முதலில் எனக்குத் தெரிய வேண்டும்..”

உணர்ச்சி மேலிட்டால் பூர்ணிமா பிரகாஷை ‘வா, போ’ என்று தான் அழைப்பாள்..

“நீ அவள் முகத்தைப் பார்த்தால் இப்படிப் பேச மாட்டாய் பிரகாஷ்..” என்று கூறிக் கொண்டிருக்கும்போது நரேந்தினும் வித்யாவும் அங்கே வந்தார்கள்.. பிரகாஷ் வித்யாவின் பால் போன்ற களங்கமில்லாத வெள்ளை முகத்தைப் பார்த்தான்.. அடுத்து வந்த நாள்களில் பூர்ணிமா வித்யாவைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மையே என்பதைக் கண்டு கொண்டான்.. நரேந்திரன் மேல் அளவற்ற அன்பும், மதிப்பும் வைத்திருப்பவன்.. அவன் முகத்தில் வித்யா வந்த பின் தோன்றியிருக்கும் ஒளி அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது..

“பூர்ணி.. நீயே என்னை வற்புறுத்தினாலும், நரேன் மாமா என் தங்கை வித்யாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் நான் உன்னை மணந்து கொள்வேன்..” என்று பூர்ணிமாவிடம் தீர்மானமாய் மொழிந்தான்..

பூர்ணிமா பிரகாஷ் பச்சைக் கொடி காட்டியதும் நரேந்திரனுக்குப் போர்கொடி காட்டி விட்டாள்.. ஆனால் பூர்ணிமாவே அறிய மாட்டாள்.. நரேந்திரன் வித்யாவின் மேல் வெறித்தனமான காதல் கொண்டு விட்டான் என்பதை.

நரேந்திரன் சென்னையில் பூர்ணிமா நிபந்தனை இட்டதும் வித்யாவை மொட்டை மாடியில் சந்திக்கும் முன்னர் ஒரு முடிவு எடுத்திருந்தான்.. தங்கள் குடும்பத்திற்காக ஓர் இளம் பெண்ணின் வாழ்வின் துன்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக அவன் எடுத்த முடிவு அது.. தீய பழக்கங்கள் வந்த பின் திருமணத்தையே தவிர்த்த நேர்மையாளன் ஆயிற்றே அவன்..

நரேந்திரன் சுரேந்திரனிடம் பேசினான்..

“சுரேன்.. உனக்காக ஒரு பெண் பார்த்திருக்கிறேன்.. நீ எதுவும் காதலில் விழுந்து விடவில்லையே.. உனக்காக நான் முடிவு எடுக்கலாமா..?”

“அண்ணா.. உங்களுக்கு அந்த உரிமை உண்டு.. பட் எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்க வேண்டும்..”

“நிச்சயம் பிடிக்கும்.. அவள் மிக மிக அழகானவள்.. இன்ஜினியரிங் படித்திருக்கிறாள்.. ஆனால் நம் ராஜ பரம்பரையில்லை.. ஏழை..”

“ஸோ வாட்..? நான் இந்தியா வருகிறேன்.. எனக்குப் பிடித்திருந்தால் திருமணம் பண்ணிக் கொள்கிறேன்..”

சுரேந்திரனிடம் பேசிய பின் தான் வித்யாவை மொட்டை மாடியில் சந்தித்தான் அவன்.. கடற்கரையிலேயே வித்யாவின் பால் ஈர்க்கப்பட்ட அவன் மனம் அந்த இரவில் நிலவின் ஒளியில் அவளுடன் பேசிய பொழுது முழுதாய் அவளால் வசீகரிக்கப்பட்டுவிட்டது.. மணிமுத்தாறு வந்த பின் ஒவ்வொரு நொடியும் அவளது வரவிற்காக அவன் மனம் ஏங்கி அவள் வரவை எதிர்பார்க்க ஆரம்பித்தது.. அவள் வந்த பின் முதல் நாள் மாலையே அவளுடன் நதியோரம் நடந்தபோது அவன் மனதை கொள்ளை கொண்டு விட்டாள் அவள்.. அந்த மாலை நேரத்தை இப்போது நினைத்தாலும் அவன் நெஞ்சம் இனிக்கும். மேனி சிலிர்க்கும்.. உடலில் ஓர் தாகம் உற்பத்தியாகும்..

அடுத்து வந்த நாள்களின் மாலை நேரங்களை அவர்கள் நதியோரம் கழித்தார்கள்.. ஒருவர் சுமைகளை மற்றவரிடம் இறக்கினார்கள்.. இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.. பாரதியார் பாடல்களை ஒருவர் பாட மற்றவர் கேட்டு மகிழ்ந்தார்கள்..

“நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா..” என்று அவன் பாடினால்..

“ஆற்றங்கரை அருகே அன்று ஒருநாள் – என்னை

அணைத்துப் பல கதைகள் பேசியதெல்லாம்..” என்று அவள் பாடினாள்..

அவளன்றி அவனில்லை என்ற நிலைக்கு நரேந்திரன் வந்திருந்தபோதுதான் அவர்கள் நால்வரும் அருவிக் கரைக்குச் சென்றனர்.. வித்யா நீரில் மூழ்கியது மட்டும்தான் அவன் நினைவில் நின்றது.. அவன் தண்ணீரில் பாய்ந்தது அவளை மீட்டது எதுவுமே அவன் நினைவில் இல்லை.. வித்யா கண் விழித்த பின்தான் அவன் நினைவும் விழித்தது..

அப்போதுதான் பூர்ணிமா அவனிடம் மீண்டும் நிபந்தனையிட்டாள்… ‘வித்யாவை விரட்டி விடுவாய்..’ என்று அவள் குற்றம் சாட்டியபோது அவன் துடித்து விட்டான்.. அவள் சென்று விட்டால் அவன் என்ன ஆவான்..? உயிரில்லாத வெறும் கூடு ஆவான்.. இதை எப்படி மற்றவர்களுக்குப் புரிய வைப்பது என்று அவன் தவித்துக் கொண்டிருக்கும் போது அவன் மறந்து விட்டிருந்த சுரேந்திரன் அவனது கோரிக்கையை நிறைவேற்ற இந்தியா திரும்பி விட்டான்.. வந்தவனின் முதல் பார்வையே வித்யாவை மோகித்த பார்வையாய் இருக்க நரேந்திரன் நிலைகுலைந்து போனான்..

சுரேந்திரன் வந்து ஐந்தாம் மாதம் பேக்டரியில் ஓர் சம்பவம் நடந்தது. தொழிலாளர் ஒருவருக்கு அடிபட்டு விட்டது.. வித்யாவிற்கு தகவல் வந்ததும் அவள் துரிதமாகச் செயல்பட்டாள்.. தொழிலாளர் உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.. அவரது மருத்துவச் செலவுகளுக்கான பில்லை பேக்டரி நிர்வாகத்திற்கு அனுப்பும்படி மருத்துவமனைக்கு தகவல் கடிதம் கொடுத்தாள்.. எதனால் விபத்து ஏற்பட்டது என்று ஆராயும்படி போர்மேன்களைக் கேட்டுக் கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் விபத்து பற்றி அறிக்கை வந்து விட்டது.. அந்தத் தொழிலாளர் மெஷினைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது அவரிருப்பது தெரியாமல் மற்றொருவர் மெஷினை இயக்கும் சுவிட்சைப் போட்டு விட்டார்..

ஆனால் மகேந்திரன் தாம் தூமென்று குதித்தான்.. யார் வீட்டுப் பணத்தை யார் யாருக்குச் செலவழிப்பது என்று கேட்டான்.. அடிபட்ட தொழிலாளி குடித்து விட்டு வந்திருந்தாரென்று கூறி அவரை வேலை நேரத்தில் குடித்ததற்கு வேலை நீக்கம் செய்ய வேண்டுமென்று வித்யாவிடம் சத்தம் போட்டான்.. பேக்டரியில் பதற்ற நிலை உருவானது.. தொழிலாளர்களின் முகங்களில் அதிருப்தி தோன்றியது.. தீவிரமான முகங்களுடன் அவர்கள் கொதிநிலையில் இருந்தார்கள்.. மகேந்திரன் பேக்டரியின் மையத்திலிருந்து கத்திக் கொண்டிருக்க வித்யா ஒரு கட்டத்தில் பொறுமையை கைவிட்டாள்..

“மிஸ்டர் ஜி.எம். எதை வைத்து அந்தத் தொழிலாளி குடித்திருந்தார்ன்னு சொல்கிறீர்கள்..?”

“அவன் குடிகாரன்னு ஊரே சொல்லும்..”

“என் கேள்வி என்னன்னா அவர் வேலைக்கு இன்றைக்குக் குடித்து விட்டு வந்தாரா..?”

“இதற்கு முன்னால் கூட அவன் வேலைக்குக் குடித்து விட்டு வந்ததில்லைம்மா.. உடல் வலிக்க வேலை செய்கிறோம்.. வேலை முடிந்தால் வீட்டுக்குப் போற வழியில் தண்ணி போடறோம்.. இவர் யாரும்மா அதைக் கேட்கிறதுக்கு..?” யூனியன் லீடர் கோபமாய் கேட்டார்..

“வெயிட், வெயிட்.. நான்தான் பேசிக்கிட்டு இருக்கிறேனில்லை.. அப்புறம் ஏன் நீங்கள் நடுவில் வருகிறீர்கள்.. இதோ பாருங்கள் யூனியன் லீடர் உங்களுக்கு அநீதி நடந்தால் மட்டுமே நீங்கள் பேச வேண்டும்..”

“நீங்கள் சரியாத்தான் செஞ்சிருக்கீங்கம்மா.. சார் என்னவோ இந்தக் குதி குதிக்கிறாரு.. எங்க வியர்வையில் தான் அவர் மாளிகை கட்டியிருக்காரு.. பார்த்துப் பேசச் சொல்லுங்க..” யூனியன் லீடரின் வார்த்தைகள் போராட்டத் துக்கு அடிகோல வித்யா, ‘போதுமா’ என்பது போல் மகேந்திரனைப் பார்த்தாள்..

எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாத இவனை வைத்துக் கொண்டு நரேந்திரன் என்ன பாடுபட்டிருப்பான் என்று தோன்றியது.. வித்யா கண்டிப்புடன் மகேந்திரனைப் பார்த்தாள்..

“ஜி.எம் சார்.. ஹாஸ்பிடல் ரிப்போர்ட் தெளிவாக இருக்கிறது.. அவர் குடித்திருக்கவில்லை.. பேக்டரி ரிப்போர்ட்டும் தெளிவாக அவர் சுய நினைவுடன் வேலை பார்த்தாக இருக்கிறது.. ப்ளீஸ் கோ அஹெட்.. திஸ் பிளாப்ளம் இஸ் ஆல்ரெடி ஓவர்..”

“இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..”

“ஐ டோன்ட் கேர்.. நான் இந்தப் பேக்டரியின் பெர்ஸனல் மேனேஜர்.. எனக்கு பவர் இருக்கிறது.. என் வேலையில் தலையிட வேண்டாம்..”

மகேந்திரன் தான் யார் என்று காட்டுவதாய் சவால் விட்டுச் சென்றான்.. யூனியன் 

லீடரைச் சமாதானப் படுத்தி தொழிலாளர்களிடம் தன்மையாகப் பேசி நிலைமையைச் சுமூகமாகக்குவதற்குள் வித்யாவிற்கு போதும் போதுமென்றாகி விட்டது..

அன்று மாலை நதியோரம் நரேந்திரனுடன் பேசிக் கொண்டு நடந்தபோது பேக்டரியில் நிகழ்ந்தவற்றைக் கூறினாள்..

“எனக்குத் தெரியும்.. குகன் கூறினான்.. வித்யா.. நீ மதியம் கூடச் சரியாகச் சாப்பிடவில்லை.. வாடித் தெரிகிறாய்..”

“அப்படியெல்லாமில்லை.. ஆக்சுவலாய் நான் உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்..” நீரில் கால்களால் துழாவியபடி வித்யா கூறினாள்.. நரேந்திரன் துக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்..

“என்னைப் பற்றி நினைத்தாயா..?” என்று வினவினான்..

“உங்களைப் பற்றி நினைக்காமல் வேறு யாரைப் பற்றி நினைப்பேன்..” கலீரென்று சிரித்தபடி வித்யா கூறினாள்..

நரேந்திரன் அவள் முகம் பார்க்க இயலாமல் வானம் பார்த்தான்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link