Chapter 18
நதியோரம் நடந்தபோது
நீரோரம் பாதம் நடக்கும்
காலடியில் மணல் குறுகுறுக்கும்
கண்ணீரே விழி நனைக்கும்
…நதியோரம் நான் நடந்த போது…
அந்தி மாலையின் சூழ்நிலை மனதை மயக்கியது.. வெயில் தாழ்ந்த நேரம் நடப்பதோ நதி ஓரம்.. மனம் மயங்கக் கேட்பானேன்..? வித்யாவிற்குப் பாட வேண்டும் போல் மனதில் உல்லாசம் பிறந்தது.. திரும்பி நரேந்திரனின் முகம் பார்த்தாள்.. அவன் முகம் சோர்ந்திருந்தது.. காரணம் விளங்கவில்லை.. அவன் பாட்டில் மயங்குபவன்..
“பூ மாலையில் ஓர் மல்லிகை..
இங்கு நான்தான் தேன் என்றது..
உந்தன் வீடு தேடி வந்தது..
இன்னும் வேண்டுமா என்றது..”
பி.சுசீலா பாடிய பாடல்.. வித்யா பாடும்போது வித்தியாசமே இல்லை.. கோடிக்கணக்கில் பணமிருந்தும் யாசகனாய் தவித்த அந்த துரதிர்ஷ்டசாலி அவள் குரலில மயங்கினான். தன் துயரம் மறந்தான்.. காதலில் உருகினான் அந்தி மயங்கி இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் நதி நீரை சாட்சியாக வைத்து நரேந்திரன் நடுங்கும் தன் கரங்களால் அவள் கரம் பற்றினான்..
“வித்யா..” என்றழைத்த அவன் குரலும் நடுங்கியது.
அவன் கைகளுக்குள் சிக்கியிருந்த தன் இரு கரங்களையும் விடுவிக்க விரும்பாதவளாய் வித்யா ஆனந்தத்தில் மூழ்கி நின்றாள்.. தவத்தின் பயனாக வரம் பெற்ற பக்தனைப் போல் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தாள்.. அவன் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள்..
நரேந்திரன் அனைத்தையும் மறந்தான்.. அவன் முன்னே நதியும் அதன் கரையோரம் நின்ற வித்யாவும் மட்டுமே தெரிந்தனர்.. அவள் முகம் கவிழ்ந்தது.. தன் ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தினான்.. நிமிர்ந்த அவள் விழிகள் அவன் விழி பார்க்க முடியாமல் வெட்கின.. வித்யா முகம் சிவக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் இதயம் போல் இமைகளும் படபடத்தன.. நிற்க முடியாமல் தொய்ந்தாள்.. நரேந்திரன் தாங்க மாட்டாமல் அவளை இறுக அணைத்தான்.. அவன் கைகளுக்கு மறுப்பே தெரிவிக்காமல் அவள் அடங்கியதும் அவள் மனதைப் புரிந்து கொண்டவன் நம்ப முடியாதவனாய் திகைத்துப் போனான்..
தன் மார்பில் முகம் புதைத்திருந்த அவள் கூந்தலில் முகம் புதைத்தவன் தாங்க முடியாமல் விம்மியழுதான்.. அவன் கண்ணீரில் மனம் கரைந்தாலும் அவள் அவனைத் தேற்ற முனையவில்லை.. தேற்றுவதற்காகக் கூட அவனை விட்டு விலக அவளால் முடியவில்லை..
எத்தனையோ யுகங்கள் போலக் கழிந்த நிமிடங் களுக்குப் பிறகு அவன் மெதுவாய் அவளை விடுவித்தான்.. சுற்றி இப்போது மையிருட்டு கவிந்திருந்தது… பேச அவனுக்கு நா எழும்பவில்லை.. அவன் பேசாமல் பேச அவள் விரும்பவில்லை.. இருவரும் மௌனமாக நடந்து காருக்கு வந்தனர்.. உள்ளே அமர்ந்த பின்னும் காரைக் கிளப்பாமல் நரேந்திரன் அசைவின்றி அமர்ந்திருந்தான்.. பின்னர் ஒரு பெருமூச்சு விட்டான்..
“வித்யா நீ தேவதை.. நான் சாக்கடையில் சுகம் கண்டவன்..”
“இதையே எத்தனை முறை சொல்வீர்கள்..”
“அத்தனை முறை சொல்லியுமா உன் மனம் என்னை வெறுக்கவில்லை..?”
“முடியவில்லை..”
“என்ன..?”
“என்னால் உங்களை வெறுக்க முடியவில்லை..”
அவள் நாத்தழுதழுத்தாள்.. நரேந்திரன் உதடு கடித்து துயரம் அடக்கினான்.. சொல்லி விடலாமா..? சுரேந்திரனை வரவழைத்தது தான் தான் என்பதைச் சொல்லி விடலாமா..? எதற்காக வரவழைத்தான் என்பதையும் சொல்லிவிடலாமா..? சொன்னால் இவனை மன்னிப்பாளா..? மனதின் குற்றச்சாட்டு தாங்காமல் பேய் துரத்துவது போல் காரை விரட்டினான்.. வீட்டில் காரை நிறுத்தியதும் இறங்கியவன் அவள் முகம் பார்க்காமல் வீட்டிற்குள் மறைந்தான்.. ஏனிந்த மாற்றமென்று வித்யாவிற்கு விளங்கவில்லை..
வானில் சிறகடித்த பறவை நொடிப் பொழுதில் இறக்கை வெட்டுண்டு தரையில் வீழ்ந்தது.. வித்யாவின் அடிபட்ட உணர்வுகள் அடி மனதில் அமிழ்ந்தன..
“ஏண்டி முகம் என்னவோ போலிருக்கு இந்தா காபி சாப்பிடு..” என்றபடி காபியோடு வந்தாள் பூர்ணிமா..
“ஆமாம்.. வேலைக்காரி போல அவளுக்கு நீ காபி கொண்டு வந்து கொடு.. வைக்கிற இடத்தில் வைக்காத தால் தான் அவள் இந்த ஆட்டம் போடுகிறாள்..” என்று சீறினாள் அங்கே வந்த மீனலோசனி..
“யாரை வைக்கிற இடத்தில் வைக்கனும் அண்ணி..?”
“வேலைக்காரங்களை..” வித்யாவை முறைத்தவாறு பதில் சொன்னாள் அவள்..
“எந்த வேலை பார்க்கிறவர்களை.. ஐ மீன் சமையல் வேலை பார்க்கிறவர்களையா..? டிரைவர் வேலை பார்க்கிறவர்களையா..? பெர்ஸனல் மேனேஜர் வேலை பார்க்கிறவர்களையா..? இல்லை ஜி.எம். வேலை பார்க்கிற வர்களையா..? சொல்லுங்கள் எந்த வேலைக்காரரை எந்த இடத்தில் வைக்கணும்..?”
மீனலோசனியின் முகம் பயங்கரமாய் மாறியது..
“யாரை, யாரோடு இணை சேர்க்கிறாய்.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்.. அந்தக் கதை நடக்குதா..?”
“எப்படியோ பிடாரின்னு ஒத்துகிட்டாச் சரி..”
“பூர்ணிமா..” மீனலோசனியின் அலறல் அந்த மாளிகையின் சுவர்களில் எதிரொலித்தது.. சௌதாமினி அவசரமாய் அறையை விட்டு வெளியே வந்தாள்.. பிரபாவதி மாடிப்படிகளில் இறங்கி ஓடி வந்தாள்.. யுகேந்திரன் பின்னாலே தொடர்ந்து வந்தான்.. தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சுரேந்திரனும், பிரகாசும் அவசரமாய் வீட்டுக்குள் வந்தனர்.. மகேந்திரன் மனைவியின் அருகில் நின்று கொண்டு தங்கையை முறைத்துக் கொண்டிருந்தான்.. வித்யாவிற்கு பதட்டமாய் இருந்தது.. அவள் நகர முடியவில்லை.. அவள் பொருட்டு பூர்ணிமா போராடிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்து நகர்வது தர்மமல்ல என்பது அவளது எண்ணம்.. பூர்ணிமா மீனலோசனியை அலட்சியமாகப் பார்த்தாள்..
“எதுக்குக் கத்தறீங்க..?”
“கத்தறேனா..? நானா..? ஏன் பேச மாட்டாய்.. உனக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள்.. நாலு, போடு போட்டு வளர்த்திருந்தால் இப்படி இருக்க மாட்டாய்..”
“எப்படி இருக்கிறேன்..? நிச்சயம் பண்ணிய கல்யாணத்தை நிறுத்தி மாப்பிள்ளையை மாற்றி தாலி கட்டிக் கொண்டேனா..?”
“பூர்ணிமா” மீண்டும் அலறினாள் மீனலோசனி..
“சும்மா கூப்பாடு போடாதீர்கள்.. பேச வேண்டாம் என்று நானும் பொறுத்துப் போகிறேன்.. அடக்க ஒடுக்கத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களா..? கல்யாணம் பேசும்போது நான் இவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன்.. இவனைத் தான் காதலிக்கிறேன்னு சொல்ல மாட்டீங்க.. பார்த்துப் பார்த்து புடவை வாங்கும் போது ஒழுக்கமான பெண் போல் வந்து செலக்ட் பண்ணுவீங்க.. நகை வாங்கும்போது பல்லைக் காட்டிக்கிட்டு வாங்கிப் போட்டுக்குவீங்க.. கல்யாணம் பண்ணும்போது தெரியாத்தனமாய் உங்களைப் பெற்றவங்க பேச்சை நம்பி நீங்க தங்கக்கம்பின்னு நினைச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்க சம்மதித்த மாப்பிள்ளையின் கழுத்தை அறுப்பீங்க.. நீங்கள்ளாம் வளர்ப்பைப் பற்றிப் பேசுகிறீர்கள்.. உங்களைப் பெற்றவங்க உங்களை வளர்த்ததுபோல் என் வீட்டில் என்னை வளர்க்கலை.. புரிந்ததா..? எனக்கு இஷ்டம்ன்னா கல்யாணம் பண்ணிக்குவேன்.. இல்லைன்னா வேண்டாம்னு சொல்லுவேன்.. என் சுயநலத்துக்காக மற்றவங்களை காயப்படுத்த மாட்டேன்.. காதலாம் கத்தரிக்காயம்.. இவங்கள்லாம் பேச வந்திட்டாங்க.. இங்கே பாருங்க என்னைப் பேசுகிற தகுதி உங்களுக்குக் கிடையாது..”
“அவள் என்ன பேச்சு பேசுகிறாள்.. நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறீர்களே..” மீனலோசனி கணவனிடம் பாய்ந்தாள்..
“அவளாய் பேசலை மீனு.. தூண்டி விடறவங்க வேற” என்றான் மகேந்திரன் வித்யாவை குரோதமாய் பார்த்தபடி..
“யாரும் என்னைத் தூண்டி விடவில்லை.. இந்த வீட்டில் யார் யாரைத் தூண்டி விடுகிறார்கள்ன்னு எனக்குத் தெரியும்.. அண்ணா பேக்டரி விசயம் பேக்டரியோடு.. வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள்..”
“அப்போ எனக்குப் பவர் இல்லையா..?”
“உங்கள் பவரைத்தான் பார்த்திருக்கிறேனே.. அடுத்த வருக்கு நிச்சயம் பண்ணின பெண்ணை அவர் காலிலேயே விழுந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதுதானே உங்க பவர்.. வேண்டாம் அண்ணா.. நான் உங்களிடம் பேசுவதில்லை.. என்னிடம் வம்பு வளர்க்காதீர்கள்..”
“அம்மா.. எனக்கு ஒரு முடிவு தெரியணும்.. நான் பேக்டரியில் டம்மி ஆக்கப்பட்டிருக்கிறேன்.. நீங்கள் எதுவுமே கேட்க மாட்டீர்களா..?” மகேந்திரன் தாயிடம் புகார் செய்ய சௌதாமினி கை பிசைந்தாள்..
“இதெல்லாம் எனக்கு என்னப்பா தெரியும்.. அண்ணன் முடிவு தானே இது..? அண்ணனிடம் கேள்..”
“அவரா.. அவர்தான் முன் போலில்லையே.. பெண் ணெனும் மாயப் பிசாசு அவரைப் பிடித்து ஆட்டுகிறதே..”
மகேந்திரன் வித்யாவைப் பார்த்துக் கொண்டே விஷமமாகக் கூறினான்..
“அப்போ உங்களை எந்தப் பிசாசு பிடித்திருக்கிறது அண்ணா..”
இந்த வார்த்தைகள் எப்போதும் பூர்ணிமாவின் வாயிலிருந்து தான் வரும்.. ஆனால் சுரேந்திரனின் வாயிலிருந்து வந்தன, மகேந்திரனும், யுகேந்திரனும் திகைத்துப் போயினர்..
“சுரேன்.. நீயா.. அண்ணன் என்ற மரியாதை இல்லாமல் எப்போது பேசக் கற்றுக் கொண்டாய்..?” மகேந்திரன் கண்டித்தான்..
“உங்களைப் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன்..” என்றான் அவன்..
“என்ன உளருகிறாய்..?”
“உளறலா.. உங்களிடமா..? நீங்கள் அண்ணனை பிசாசு பிடித்திருக்கிறது என்று கூறலாம்.. நான் கூறக்கூடாதா..?”
மகேந்திரன் செய்வதறியாது மனைவியைப் பார்த்தான்.. அவள் பல் கடித்து வார்த்தைகளைத் துப்பினாள்..
“கல்யாணம் ஆகாத ஆண்களைப் பிடிக்கிற பிசாசு அது.. ஒன்று தான் மாட்டியிருக்கிறது என்று நினைத்தோம். இப்ப இரண்டையுமில்லை பிடித்து ஆட்டுகிறது.. பிரபா.. ஜாக்கிரதை.. உன் கணவரைப் பத்திரமாய் பார்த்துக் கொள்.. மூன்றாவதாய் அவரைப் பிடித்து விடப் போகிறது.”
“நான் விட்டு விடுவேனா அக்கா.. பேயோட்டி விட மாட்டேன்..?” என்றாள் பிரபாவதி வித்யாவை ஏளனமாய பார்த்துக் கொண்டு..
“குட் பிரபா.. நாகரிகமாகப் பேசுகிறாய்.. நம் வீட்டில் இப்படியெல்லாம் நீ பேசி நான் கேட்டதில்லையே.. பழக்க தோசமா..?” என்று பிரகாஷ் கோபத்துடன் மீனலோசனியைப் பார்த்தவாறு தங்கையைக் கேட்டான்..
“கணவருக்கு ஓர் அவமானமென்றால் மனைவி பார்த்துக் கொண்டு நிற்பாளா..?” என்று யுகேந்திரன் கேட்டான்..
“தாராளமாய்.. ஆனால் இப்போது பூர்ணிமா கேட்டாளே.. என் வீட்டில் என்னை நன்றாகத்தான் வளர்த்து வைத்திருக்கிறார்கள்.. உங்களுக்குத்தான் வளர்ப்பு சரியில்லையென்று.. அப்படி பிறந்த வீட்டிற்குப் பெயர் வாங்கிக் கொடுக்காமலிருக்க வேண்டும்..” என்றான் பிரகாஷ்..
பிரபாவதி அடங்கி விட்டாள்.. மீனலோசனி கொதித்துப் போனாள்..
“ஒரு பெண்ணுக்கு இத்தனை ஆதரவா..? சபாஷ்..” என்றாள்..
“ஆனால்.. உங்களுக்கு ஒருபெண்கூட ஆதரவுக்கு வரமாட்டாள்..” என்றாள் பூர்ணிமா..
“அப்போ.. இவள் செய்வதுதான் சரி என்பீர்கள்.. என் கணவரை அவமதிப்பீர்கள் அப்படித்தானே..?”
இப்போது சுரேந்திரன் பேசினான்..
“யார்.. அவமதித்தது..? அண்ணி.. நான் வந்தவுடன் பேக்டரி, மில் இரண்டிற்குமே போய் நிலைமையை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. இரண்டிலுமே டோட்டலாய் ஜி.எம் சரியில்லை.. மகியண்ணா, யுகேயண்ணா முறைக்க வேண்டாம்.. உண்மை அதுதான்.. பெரிய அண்ணன் இரட்டைக் குதிரை சவாரி செய்துக்கிட்டு இருந்தார்.. வித்யா வரவும் ஒரு குதிரையில் ஒழுங்காய் சவாரி செய்கிறார்.. உங்களுக்கு அது பொறுக்க வில்லை… மகி அண்ணா.. இன்றைக்கு பேக்டரியில் நீங்கள் நடந்து கொண்ட முறை மிகவும் தவறு.. வொர்க்கர்ஸை அவமானப்படுத்தினால் அது ஸ்ட்ரைக்கில் போய் முடியும்.. வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் பண்ணினால் நமக்கு எவ்வளவு லாஸ் ஆகும் என்ற பொறுப்புணர்ச்சி ஜி.எம். என்று கூறிக் கொள்ளும் உங்களுக்கு வேண்டாமா..? உரிமை மட்டும் கொண்டாடினால் போதுமா..? உணர்ந்து செயல்பட வேண்டாமா..? வித்யா இஸ் கரெக்ட், அவங்க மட்டும் இன்னைக்கு சரியான முறையில் செயல்பட வில்லையென்றால் நிச்சயம் ஸ்ட்ரைக் நடந்திருக்கும்.. ஆக்சுவலா நீங்கள் வித்யாவுக்கு தேங்க் பண்ணனும்.. ஷி இஸ் வெரி இண்டலிஜெண்ட் அதை விட்டு விட்டு..” சுரேந்திரன் பேசப்பேச மகேந்திரனின் முகம் சுருங்கியது.. அவன் விருட்டென்று நகர மீனலோசனி பின் தொடர்ந்தாள்.. பிரபாவதி மாடியேற யுகேந்திரன் பின் தொடர்ந்தான்.. சௌதாமினி சுரேந்திரனின் அருகே வந்து அவன் முடிகோதினாள்…
“எப்படியடா இப்படித் தெளிவாகப் பேசக் கற்றுக் கொண்டாய்..?”
“அதற்குத்தானேம்மா.. வெளிநாடு போனேன்..”
“எதற்கு இப்படிப் பேசக் கற்றுக் கொள்ளவா.. படவா.. வா சாப்பிடலாம்.. வித்யா நீ போய் முகம் கழுவிக் கொண்டு வாம்மா.. எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே..” என்றவாறு சௌதாமினி மகனை அழைக்க அவனோ..
“வித்யா முகம் கழுவி விட்டு வரட்டுமே சேர்ந்து சாப்பிடலாம்” என்றான்..
வித்யா மௌனமாய் மாடிப்படி ஏறினாள்.. நடந்த நிகழ்வுகள் அவளைப் பாதித்திருந்தன.. வித்யா பூர்ணிமா, பிரகாஷ் மூவரின் மனதிலும் ஒரே கேள்விதான் அப்போது இருந்தது..
இவ்வளவு கலாட்டா வீட்டில் நடக்கும்போது வீட்டிலேயிருந்த நரேந்திரன் அறையை விட்டு வெளியே வரவேயில்லையே ஏன்..?
ஆனால் அவர்கள் அறிய மாட்டார்கள்.. நரேந்திரன் அறையை விட்டு வெளியே வந்தான் என்பதை, வித்யாவைப் பேசியதைக் கேட்டு கண்டித்துப் பேச அவன் வாய் திறந்த அதே நேரத்தில் சுரேந்திரன் பேச ஆரம்பிக்க அவன் அமைதியாகி விட்டதை, வித்யாவுடன் சேர்ந்து சாப்பிட சுரேந்திரன் விரும்பியதைக் கேட்டதும் மீண்டும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டதை..
வித்யாவிற்குச் சாப்பிடக் கீழே போகவே மனமில்லை. ஆனால் பூர்ணிமா அவளை அழைத்துப் போக வந்து விட்டாள்..
“நீ ஒதுங்கிப் போக வேண்டும் என்றுதான் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்.. நீ அவர்களை ஜெயிக்க வைத்து விடாதே.. வா சாப்பிடப் போகலாம்..”
“பூர்ணி… உன் பெரிய அண்ணன் சாப்பிட வந்திருக்கிறாரா..?”
“வந்து விட்டுப் போய்விட்டார்..”
“வாட்..?”
“நாம் போவதற்குள் சாப்பிட்டுப் போய் விட்டாராம்.. முகம் வாடி இருக்கிறதாம்.. சித்தி சொன்னார்கள் அலுப்பாக இருக்கும்.. நீ வா..”
‘இல்லையே’ என்று அவள் மனம் தவித்தது.. அன்று மாலை தானே அவளோடு நதியோரம் நடந்து வந்தான்.. அவள் பாடல் கேட்டு மயங்கினான்.. அப்புறம்.. அப்புறம்.. அவன் தோள் தொட்ட இடங்கள் இன்னும் சிலிர்க்கிறதே.. அவன் மட்டும் எப்படி முகம் வாடினான்..? கட்டித் தழுவி உச்சி முகர்ந்தானே.. ஏன் விலகிச் செல்லுகிறான்…?
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.