Chapter 20
நதியோரம் நடந்தபோது
நிழலாக கூட வந்தாள்
எனக்காக எனை நேசித்தாள்
எனைத்தானே அவள் பூஜித்தாள்
…நதியோரம் நான் நடந்த போது…
அவள் அழைப்பிற்காக காத்திருந்தது போல் குகன் அருகில் ஓடி வந்தான்.. வித்யா சுரேந்திரனைப் பார்த்துக் கூறினாள்..
“சார் நேற்றிலிருந்து நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்..”
“என்ன முடிவு..?”
“இனி பேக்டரியின் ஜீப்பில்தான் வேலைக்கு வந்து போவதென்று.. மதியச்சாப்பாடு கூடப் பேக்டரி கேண்டினில் சாப்பிடுவதாக இருக்கிறேன்..” என்றாள் வித்யா அவன் மனம் கோணாதவாறு..
“ஏனிந்த திடீர் முடிவுன்னு தெரிஞ்சுக்கலாமா..?”
“நேற்று உங்கள் வீட்டில் நடந்த தகராறு என்னை பாதித்து விட்டது.. பேக்டரியின் பெர்ஸனல் மேனேஜருக்கு ஜீப்பில் போய் வர உரிமையுண்டு.. அதனால் அதில் வந்து போவதாக இருக்கிறேன்.. அப்புறம் சாப்பாடு.. சார்.. எதற்காக சாப்பிடுகிறோம்.. வயிறு நிறைவதோடு மனமும் நிறைவதற்காகத்தானே.. பேக்டரியின் மற்ற லேபர்ஸ் சாப்பிடும் சாப்பாட்டை நானும் சாப்பிட்டால் என் வயிறோடு மனமும் நிறையும்.. புரிகிறதா சார்..” வித்யா தெளிவாகப் பேசினாள்..
“யெஸ் ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்.. வித்யா உன் விருப்பம் போல் செய்.. ஐ லைக் இட்..”
சுரேந்திரன் இலகுவாகப் பேசிவிட்டுக் காரில் ஏறிப் போய் விட்டான்.. வித்யா குகனைப் பார்த்தாள்..
“அவரிடம் நான் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந் தீர்கள் தானே..”
“யெஸ் மேடம்.. இனிக் காலை எட்டு மணிக்கெல்லாம் உங்களைக் கூப்பிட ஜீப்பில் வந்து விடுவேன்.. மாலையில் ஜீப்பிலேயே வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன்..”
“தேங்க்ஸ் குகன்..” மனதராக் கூறினாள் வித்யா.. எண்ணமறிந்து செயல்படும் உதவியாளன் இருந்து விட்டால் மலை அளவு பிரச்னை வந்தால்கூட சமாளித்து விடலாம்.. உடலில் ஒரு தெம்பு ஊற,
“போகலாமா..” என்று வித்யா கேட்டாள்..
“போகலாம் மேடம்” என்று குகன் ஜீப்பைக் கிளப்பினான்.. நதியோரப் பாதையில் ஜீப் போய் கொண்டிருந்தது.. மலைச்சாரல் கலந்த பாதை அது.. ஒரு புறம் சுழித்தோடும் நதி.. மறுபுறம் அழகான மரங்களும், செடிகளும், கொடிகளும் சேர்ந்த பசுமை..
எப்போதும் இந்தப் பாதையில் நரேந்திரனுடன் காரில் வரும்போதும், போகும்போதும் வித்யா இரு புறக் காட்சி களையும் ரசிப்பாள்.. ஆனால் இன்று எங்கோ வெறித்துப் பார்த்தபடி இலக்கில்லாமல் அலைந்தது அவள் பார்வை.. சூன்ய வெளிக்குள் வெறித்தவள் திடீரென்று..
“குகன் ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்க..” என்றாள்..
குகன் ஜீப்பை நிறுத்தினான்.. தூரத்தில் பெருமாள் கோவில் தெரிந்தது.. அதன் பின்னே ஓடும் நதிக்கரையில் படித்துறையில் மேல் படியில் அமர்ந்திருப்பது யார்..? நரேந்திரன் மாதிரி இருக்கிறதே.. அவள் மனதின் கேள்விக்குப் பதில் சொல்வது போல்..
“அது எம்.டி சார் தான் மேடம்” என்றான் குகன்..
வித்யாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.. அவர்களது படித்துறை அது.. நேற்றைய நினைவின் சின்னம் அது.. அவளில்லாமல் அவன் தனியே அமர்ந்து இருக்கிறான்.. அவளைத் தவிர்க்கிறான்.. வித்யா திரும்பி பக்கவாட்டில் ஓடிக் கொண்டிருந்த நதியைப் பார்த்தாள்..
‘ஏ நதியே.. நீ போய் தூது சொல்ல மாட்டாயா..? உன் எண்ணம் நிறைந்தவள் இங்கேதான் இருக்கிறாள்.. உனக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறாள்.. நீ அவளோடு வந்தால்தான் நான் உன் கால் நனைப்பேன் என்று எனக்காக நீ அவரிடம் பேச மாட்டாயா..? எனக்குத் தாய் இல்லை.. தந்தை இருந்தும் எனக்கு அவர் சொந்தமில்லை.. உறவுகள் கைவிட்ட அநாதை நான்.. உன்னை என் உறவாக நினைத்துக் கேட்கிறேன்.. என்னவரிடம் என் நினைவுகளைக் கொண்டு சேர்க்க மாட்டாயா..?’
வித்யா மனதின் வலி தாள மாட்டாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. வேக மூச்சுக்களை விட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் குகனைப் பார்க்காமல் சாலையைப் பார்த்தவாறு
“போகலாம் குகன்..” என்றாள் கண்ணீர் குரலில்..
குகன் மறு பேச்சில்லாமல் வண்டியை எடுத்தான்.. என்ன துயரம் அவளுக்குள் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் அந்த மென்மையான பெண்ணின் துயரம் அவனைப் பாதித்தது..
நதியோரம் அமர்ந்திருந்த நரேந்திரனின் நிலையை அறிந்திருந்தால் அவள் துடித்துப் போயிருப்பாள்.. மதிய உணவு வேளையில் அவன் மனம் தவித்து விட்டது..
இந்நேரம் அவள் சுரேந்திரனுடன் பேசிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்.. இப்போது தலையில் அவனுக்கு புரையேறி இருக்கும்.. அவள் யதார்த்தமாய்த் தான் தட்டுவாள்.. ஆனால் அவன் மயங்கி விடுவான்.. இந்நேரம் சாப்பிட்டு முடித்திருப்பார்கள்..
இதே நினைவு அவனை ஆட்டி வைக்க அவன் சாப்பிட மறந்தான்.. அவன் சாப்பிடா விட்டாலும் யார் கேட்கப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே ‘ஏன் வித்யா இல்லையா.. உனக்கு ஒன்று என்றால் உயிரை விட்டு விடுவாளே..?’ என்று மனம் எதிர் கேள்வி கேட்டது.
‘நான்தான் அதைக் குலைத்து விட்டேனே..’ என்று மனதிற்குள் அழுது தீர்த்தான்.. துயரம் குறையவில்லை.. அவனுக்கு ஏங்கித் தவிக்க வேண்டும் என்ற விதியை எழுதிய இறைவனுடன் மனதிற்குள் வாக்குவாதம் நடத்தினான்..
மாலை நெருங்க நெருங்க மனதின் தாபம் அவனைக் கொன்று தின்றது.. பித்துப் பிடித்தவன் போலானான்.. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. இந்நேரம் சுரேந்திரன் காரோடு வந்திருப்பான்.. வித்யா காரில் ஏறியிருப்பாள்.. என்ன பேசியிருப்பார்கள்..
பித்துப் பிடித்த மனம் தவித்தது.. நேற்று இரவு சுரேந்திரன் வந்து பேசிய போது உள்ளத்தைத் திறந்து காட்டியிருந்திருக்க வேண்டும்.. அதை விட்டு விட்டு அவன் வந்து கேட்டதும் மௌனமாக ஏன் இருந்தான்..?
“அண்ணா.. நானும் வந்து ஐந்து மாதங்களாகி விட்டது.. வித்யாவுடன் பேசிப் பழக சந்தர்ப்பமே கிடைக்க வில்லை, அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. ஆனால் பேசினால்தானே ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்..”
சுரேந்திரன் முதல் நாளிரவு நரேந்திரனின் அறைக்கு வந்து அவனிடம் சொன்ன வார்த்தைகள் இவை.. நரேந்திரனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. சுரேந்திரனே தொடர்ந்து பேசினான்..
“அதனால் அண்ணா நாளையிலிருந்து நானே வித்யாவை பேக்டரிக்குக் கூப்பிட்டுப் போய் வருகிறேனே.. இப் யு டோன்ட் மைன்ட்.. மதியம் லஞ்ச்சைக் கூட நாங்கள் சேர்ந்து சாப்பிடுவது நல்லது..”
நரேந்திரனுக்குப் புரிந்தது.. தன்னை வித்யாவிட மிருந்து விலகி நிற்கச் சொல்கிறான்..
நரேந்திரனின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு அவனது கடைசித் தம்பி நகர்ந்து விட்டான்.. நிலைக் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக் கொண்ட நரேந்திரன்..
“எந்த நேரத்திலேடா நீ பிறந்தாய்..? எதுவுமே உனக்கு நிலைக்காதா..?” என்று கேட்டுக் கொண்டான்..
கார்த்திகாயினி தேவியைக் காதலித்தது இளமையின் வேகத்தில் அந்த இழப்பு அவனைப் பாதிக்கவில்லை..
திருமணம் மாறியதோ சூழ்நிலையால்.. அது சிறிதளவு கூட அவனைப் பாதிக்கவில்லை..
ஆனால் வித்யாவை நேசித்தது உள்ளத்தின் தாபத்தால். எத்தனையோ ஜென்மங்களாய் பழகின உணர்வு ஓர் சொந்தம், ஓர் ஈர்ப்பு இவை யாவும் அவள் மேல் தான் அவனுக்கு ஏற்பட்டது..
‘உங்கள் குறைகளுடனே உங்களை ஏற்றுக் கொள்ள ஒருத்தி வரமாட்டாளா..?’ என்று சூசகமாய் கேட்டாள்..
அந்த ஒருத்தி அவள் தான் என்று அவன் அணைப்பில் அடங்கி உணர்த்தினாள்..
இன்று தம்பிக்காக அவளை தாரை வார்த்துக் கொடுக்க நேரும் அவன் நிலையை அறிந்தாள் காறி உமிழ்ந்துவிட மாட்டாளா..? என்று நினைத்து நினைத்து வருந்தினான்.. அவன் மனம் அலை பாய்ந்தது..
ஆறுதல் தேடி ஆலயம் சென்றான்.. உலகளந்த பெருமாளின் பாதம் கண்டு கதறினான்.. போக்கிடம் அற்ற அந்த ராஜகுமாரன் நதிக்கரையோரம் தன்னந்தனியாக நடந்தான்..
அவர்கள் முதல் நாள் அமர்ந்திருந்த படித்துறையில் அமர்ந்தபோது அவன் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.. அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு நேரம் இருந்தானோ அவன் உணரவில்லை.. அருகே,
“சார்” என்ற குரல் கேட்டது.. நிமிர்ந்து பார்த்தான்.. குகன்..!
“ஏன் சார் தனியாக உட்கார்ந்து இருக்கிறீர்கள்..?”
“நத்திங் குகன்.. ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணிக்க வந்தேன்.. டோன்ட் ஒர்ரி.. ஆமாம் நீ எங்கே இங்கே வந்தாய்..?”
“வித்யா மேடத்தை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன்..”
போகும்போதே அவன் உட்கார்ந்து இருந்ததை இருவரும் பார்த்ததை அவன் கூறவில்லை..
நரேந்திரனின் உடலில் உள்ள அத்தனை செல்களிலும் புது ரத்தம் பாய்ந்தது.. அவன் பரபரப்பானான்..
“ஏன்.. வித்யா சுரேந்திரனின் காரில் போக வில்லையா..? அது வந்து சுரேந்திரன் வித்யாவை டிராப் பண்ணி விடுவதாகக் கூறினானே.. அதனால் கேட்டேன்..” நரேந்திரன் தடுமாறினான்..
குகனின் பார்வை கூர்மையானது.. நரேந்திரனின் தடுமாற்றத்தைக் கவனிக்காதவன்போல் அவன் கூறினான்.
“சுரேந்திரன் சார் வந்தார் சார்.. ஆனால் வித்யா மேடம் அவாய்ட் பண்ணி விட்டார்கள்.. இனி பேக்டரி ஜீப்பில் போய் வரப் போறேன்னு சொல்லி விட்டார்கள்.. அதனால் நான் காலையிலும், மாலையிலும் அவங்களை ஜீப்பில் கூப்பிட்டு வந்து திரும்பவும் வீட்டில் கொண்டு விடுவதாக இருக்கிறேன்..”
அவன் பேசப் பேச நரேந்திரனின் முகம் மலர்வதைக் கண்டும் காணதவன் போல் அவன் கோர்வையாய் பேசினான்..
“மதியம் லன்ச்.. வித்யா.. சுரேன் கூட சாப்பிட்டிருப் பாங்களே..”
குகனின் மனதில் நரேந்திரன்பால் இரக்கம் சுரந்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாய்..
“நோ சார்.. இன்றைக்கு நம்ம பேக்டரியோட லேபர் ராமசாமி வீட்டு காது குத்தும் விழாவிற்கு போய் விட்டோம்.. மேடம் அங்கேயே சாப்பிட்டு விட்டாங்க..”
“சுரேன் வரவில்லையா..?”
“வந்தார்.. லன்ச் கேரியர் எடுத்துக்கொண்டு வந்தார்.. வித்யா மேடம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு ராமசாமி வீட்டு விசேஷத்திற்குப் போய் விட்டாங்க..”
“அப்போ நாளை சுரேன் லன்ச் கொண்டு வந்தால்..?”
நரேந்திரனின் மலர்ந்த முகம் வாட குகன் உணர்ச்சியை வெளிக்காட்டாத குரல்..
“இனி லன்ச்சை பேக்டரி கேண்டினில்தான் சாப்பிடப் போகிறேன்னு வித்யா மேடம் சொல்லி விட்டாங்க..”
“ஓ.. ஜ ஸீ..”
நரேந்திரனின் உதடுகளில் பாடல் தோன்றியது.. திடீரென்று மனதில் உல்லாசம் குமிழிட்டது.. குகனின் தோள்களில் கைபோட்டுக் கொண்டான்..
“தேங்க்ஸ் குகன்..” என்றான்.. எதற்காக என்று அவன் சொல்லவில்லை..
“இட்ஸ் மை டியூட்டி சார்..” என்றான் குகன்.. எதை என்று குகனும் சொல்லவில்லை..
“வீட்டுக்குப் போகலாமா சார்..?” என்று மெதுவாகக் கேட்டான் குகன்..
“ஓ போகலாமே..”
நரேந்திரன் எழுந்து கொண்டான்.. இருவரும் பேசிய படி நடந்து நரேந்திரனின் கார் அருகே வந்தார்கள்.. குகன் கார் கதவைத் திறந்து விட்டான்..
“தேங்க்ஸ் எகெய்ன் குகன்.. நீயும் கிளம்பு..”
“ஓகே சார் பை..”
காரின் விளக்குகள் புள்ளியாய் மறைய குகன் திரும்பி பெருமாள் கோவிலின் கோபுரத்தைப் பார்த்தான்.. மூன்று நாமம் வடிவத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.. கன்னத்தில் போட்டுக் கொண்டான்.. ஜீப்பில் ஏறிக் கிளம்பினான்.. அவனுக்குச் சிரிப்பு வந்தது..
காதல் எத்தனை பெரிய மனிதரையும் குழந்தையாக்கி விடும் சக்தி படைத்தது போலும்..
இடி விழுந்தாலும் கலங்காத இமயம் போன்றன் ஓர் பெண்ணின் இமையோரப் பார்வை விலகிவிடுமோ என்று இடிந்து போய் விட்டான்.. இதை எங்கே போய்ச் சொல்வது..?
பேசாமல் வீட்டில் போய் மனைவியிடம் சொல்லலாம் என்று ஜீப்பின் வேகத்தைக் கூட்டி வீட்டுக்குப் போனான்..
“ஏன் லேட்..?” என்றாள் கதவைத் திறந்துவிட்ட உஷா.. குகனின் மனைவி..
“அது பெரிய கதை” என்று ஆரம்பித்து அவன் சொல்லி முடிக்க..
“உங்க எம்.டி ஒரு ஏமாளி..” என்றாள் உஷா..
‘அதுதான் ஊருக்கே தெரிந்த கதையாயிற்றே..!’ என்று நினைத்துக்b காண்டவன்..
“ஆமாம்.. ரொம்பக் கண்டு விட்டாய்.. வந்து சோற்றைப் போடுடி..” என்றான் மனைவியிடம்..
கூர்க்கா கேட்டைத் திறந்துவிட நரேந்தரனின் கார் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்று நின்றது.. இறங்கி காரைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டவன் உற்சாகமாய் படியேறி உள்ளே சென்றான்..
வரவேற்பறையில் அமர்ந்திருந்த பூர்ணிமாவும், பிரகாஷும் அவனைத் திரும்பிப் பார்க்க சிரித்துக் கொண்டே கையாட்டிவிட்டு மாடியில் ஏறி மறைந்தான்..
பூர்ணிமா பிரகாஷைப் பார்த்து
“தோட்டத்துக்கு வா..” என்றாள்
“என்ன நடக்கிறதுன்னு உனக்கு ஏதாவது புரிகிறதா..?” என்றான் பூர்ணிமா தோட்டத்து சிமெண்ட் பாதையில் மெதுவாய் நடந்தபடி..
“தலையும் புரியவில்லை.. வாலும் புரியவில்லை..” என்றான் பிரகாஷ் உடன் நடந்தபடி..
“இல்லை பிரகாஷ்.. எப்போதும் நான் கல்யாணத்தை தள்ளிப் போட்டால் அண்ணன் குதிகுதின்னு குதிப்பார்.. இப்போது மறுப்பே சொல்லவில்லை.. வித்யாவும் அவரும் சேர்ந்து போவதும், வருவதும்.. என் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது..”
“ஒருவேளை உன் கண் பட்டுத்தான் இப்படி ஆகிவிட்டார்களோ..?”
“போடா..” என்று கோபித்துக் கொண்டு அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விட்டாள் அவள்..
“ஏய்ய்.. ஸாரி.. ஸாரி.. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா.. இப்போ உனக்கு மூடு வந்தால் என்னை வாடா.. போடாங்கறே இல்ல அது போல்தாண்டா..”
“பிரகாஷ்.. நானே குழம்பிப் போய் இருக்கிறேன்.. என்னவாக இருக்கும்.. உங்களுக்கு எதுவும் தோன்று கிறதா..?”
“இதோ பார் நீங்கள் இருவரும் வந்த இந்த ஆறு மாதங்களில் நான் வார இறுதியில் மட்டும் தான் வருகிறேன்.. மற்ற ஐந்து நாள்களில் என்ன நடக்கிறது என்பது உனக்குத்தானே தெரிய வேண்டும்..”
“எனக்குத் தெரியவில்லையே..” அவள் குழந்தையாய் விழித்தாள் அதை ரசித்தபடி அவன் கூறினான்..
“இந்தப் பிரச்னைக்கு மூலகாரணம் உன் பெரிய அண்ணன் தான் என்று எனக்குள்ளே ஒரு பட்சி சொல்லுது பூர்ணி.. நீ ஒன்று செய்..”
“என்ன.. என்ன..” பூர்ணிமா பரபரத்தாள்..
“உன் பெரிய அண்ணனிடம் நேரடியாய் கேட்டு விடு..”
“என்னவென்று கேட்க..?”
“‘என்ன’ என்று கேளு..”
பூர்ணிமா கேட்டாள்.. நரேந்திரனின் முகம் பார்த்துக் கேள்வி கேட்டாள்.. ‘என்ன..?’ என்ற கேள்வியைக் கேட்டாள்..
கேள்வியின் நாயகன் பதில் சொல்ல முடியாமல் திணறினான்..
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.