Chapter 21

0Shares

நதியோரம் நடந்தபோது

நுரை நீரில் மனம் நெகிழும்

நொடிப் பொழுதில் நுரை கரைய

நெடுமூச்சு வெளியேறும்

…நதியோரம் நான் நடந்த போது…

மறுநாளிலிருந்து அட்டவணை ஒன்றைத்தானே தயாரித்தவளாய் வித்யா இயங்கினாள்.. காலை ஏழே முக்காலுக்கே சமையலறைக்குள் போய்விடுவாள்..

“ஏம்மா.. நின்று கொண்டே சாப்பிட்டால் எப்படி உடம்பில் ஒட்டும்..? ஸ்டூலிலாவது உட்கார்ந்து சாப்பிடும்மா..” என்று கடிந்தபடி கண்ணம்மா அவசரமாய் அவள் தட்டில் தோசையைப் போட்டு சட்னியை ஊற்றுவாள்..

“பஃபே சிஸ்டம்ன்னு ஒன்று இருக்கிறது ஆன்ட்டி.. அதில் எல்லாம் நின்று கொண்டேதான் சாப்பிடுவார்கள்..” என்று பதில் கூறிக் கொண்டே தட்டை கழுவும் தொட்டியில் போட்டு விட்டு கை கழுவி விட்டுச் சென்று விடுவாள் வித்யா..

எட்டு மணிக்கெல்லாம் பேக்டரி ஜீப்பை ஓட்டிக் கொண்டு குகன் வந்து விடுவான்.. மதியம் கேண்டீனில் சாப்பிட்டு விடுவாள்.. மாலைக் காபியும் அங்கே குடித்து விடுவாள்.. இருள் பரவும்வரை மாங்கு, மாங்கென்று நேரம் பார்க்காமல் உழைப்பாள்.. நதியோரப் பெருமாள் கோவிலைக் கடக்கும்போது மட்டும் ஜீப்பை நிறுத்தச் சொல்லி ஒரு நிமிடம் கோவில் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள்.. பின் கண் கலங்க கடவுளிடம் வேண்டிக் கொண்டு ஜீப்பைக் கிளப்பச் சொல்வாள்.. இரவு உணவை மாடிக்கு தன் ரூமிற்குக் கொண்டு வரச் சொல்லி கண்ணம்மாவிடம் கூறி விட்டாள்.. எல்லா விதங்களிலும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டவளின் தனிமைச் சிறையை உடைக்க பூர்ணிமா முயற்சி எடுக்கவில்லை.. மனதிற்குள் வித்யாவின் செயல்பாடுகளை பூர்ணிமா, பிரகாஷ், நரேந்திரன் மூவருமே ஆதரித்தனர்.. சுரேந்திரனால் வித்யா தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்ட வேலியை உடைக்க முடியவில்லை.. அத்தோடு ஒருவர் விருப்பத்திற்கு எதிரான எதையும் செய்யக்கூடாது என்ற கொள்கையுடையவன் அவன்..

மீனலோசனிக்கும், பிரபாவதிக்கும் சந்தேகம் மூண்டது..

“என்ன பிரபா.. நம்ம வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த மகாராணி பேச்சு மூச்சில்லாமல் ஒதுங்கிப் போகிறாள்..? உனக்கு ஏதாவது தெரியுமா..?”

“அக்கா.. அவரும் உங்களைப் போல்தான் சொல்கிறார்.. பெரியவர் முகமே இருளடித்தது போல் இருக்கிறதாம்.. ஒன்றையும் சரிவரக் கவனிப்பது இல்லையாம்.. பித்துப் பிடித்ததுபோல் இருக்கிறார்ன்னு மில்லில் பேசிக் கொள்கிறார்களாம்..”

“உன் பாடு தேவலை.. பணத்தை எந்தக் கணக்கில் எழுதினாலும் கேட்கவோ, பார்க்கவோ ஆளில்லை.. போலீஸ்காரி போல் அல்லவா அந்த வித்யா கண்காணிக் கிறாள்..? எந்தக் கணக்கும் எழுத முடியாமல் வெட்டியாய் பேக்டரிக்கும் வீட்டுக்கும் அவர் அலைந்து கொண்டிருக்கிறார்..”

“ஜி.எம். போஸ்ட்டுக்கான சேலரி லட்சத்தில் வருமே..?”

“உன் வீட்டுக்காரருக்கும் தானே வருகிறது..”

“அதைத்தான் சொல்ல வந்தேன் அக்கா.. அது மட்டும் தான் மீதம்.. சுரேந்திரன் தினசரி கணக்குகளை தவறாமல் செக் பண்ணுகிறானாம்.. தம்பி முன்னால் தலை குனிவு வரக்கூடாதுன்னு என்னவர் அடக்கி வாசிக்கிறார்.”

“அப்படியா கதை..? அது சரி பிரபா.. அண்ணன் சைட் அடித்தவளை தம்பியும் சைட் அடித்தான்.. இவள் என்னடா என்றால் இருவர்கிட்டயும் ஒட்ட மாட்டேன் என்கிறாள்.. தனியாகப் போகிறாள்..  வருகிறாள்.. யார் மனதில் யார் இருக்கிறார்கள்..?”

“யார் மனதில் யார் இருந்தால் நமக்கென்ன அக்கா பெரியவர், சின்னவர் இருவர் மனதிலும் இவள் இருந்துவிடக் கூடாது..”

“அதுதான் பிரபா எனக்கும் கிடந்து அடித்துக் கொள்கிறது.. பெரியவர் சொத்தைக் காப்பாற்றினவர்.. அவருக்குத்தான் முழு உரிமையும் இருக்கிறது.. இவள் அவர் மனைவியாகி விட்டால் இந்த வீட்டின் மூத்த மருமகள் அவளாகி விடுவாள்.. நாம் இருவரும் அவளுக்கு அடுத்துத்தான்..” மீனலோசனி கவலையுடன் கூறினான்..

“இளையவரை மண முடித்தாலும் அதே கதைதான்.. பெரியவராவது குடும்பம் என்று பார்ப்பார்.. சுரேன் அதையெல்லாம் பார்க்க மாட்டார்.. திருமணம் முடிந்தவுடன் பாகப்பிரிவினைதான்.. அனாமத்துப் பணத்தையெல்லாம் ஒன்றாகப் போட்டு பாகம் பிரித்து விடுவார்.. அவளைச் சென்னையிலேயே கோடீஸ்வரி ஆக்கிவிடுவார்..”

“அண்ணன் தம்பி இருவரில் யாரையும் அவள் மணந்து விடக் கூடாது..”

“நடந்து விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும் அக்கா..?”

“நடக்காது பிரபா..”

“எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்கிறீர்கள்..?”

“சுரேன் வித்யாவைப் பார்க்கும் பார்வையில் ஆசை தெரிகிறது.. பெரியவரைப் பற்றி நமக்குத் தெரியாதா..? தம்பி விரும்புகிறவளை தான் எப்படி மணப்பது என்று நினைப்பார்..”

“அனுபவம் பேசுகிறது இல்லையா அக்கா..” என்றாள் பிரபாவதி குத்தலாக.. கலந்து பேசும் மனநிலையில் இருந்த மீனலோசனி அதை சட்டை செய்யவில்லை..

“ஆனால் சுரேந்திரனும் அவளை மணக்க நாம் விட்டு விடக் கூடாது பிரபா..”

“எப்படி.. நம்மால் என்ன செய்ய முடியும்..?”

“எதுவும் செய்ய முடியும்.. முதலில் நடப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டும்.. பெரியவர் தியாகி போல் வித்யாவைத் தம்பிக்கு விட்டுக் கொடுப்பார். திருமண ஏற்பாடுகள் நடக்கும்.. கடைசி நேரத்தில் நாம் நம் கைவரிசையைக் காட்ட வேண்டும்..”

“என்ன செய்ய வேண்டும்..?”

“சுரேனுக்கு அவன் அண்ணன் மேல் பாசம் அதிகம்.. அண்ணன் காதலித்த பெண்ணை தனக்காக விட்டுக் கொடுக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்..”

“தெரிய வைத்தால்..”

“அவன் வித்யாவை மணந்து கொள்ள மாட்டான்..”

“காரியத்தையே கெடுக்கிறீர்கள் அக்கா.. சரிதான் என்று சந்தோஷமாக பெரியவர் வித்யாவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுவார்..”

“நீ வித்யாவைத் தெரிந்து கொண்டது அவ்வளவு தான்.. அண்ணன் கூட கார் ஏறினவள் தம்பிகூடப் போக மறுத்து விட்டாள்.. தம்பிகூட மணவறை வரைப் போனபின் அண்ணனிடம் தாலிகட்டிக் கொள்வாளா..?”

பிரபாவதியால் அந்தக் கணம் மீனலோசனியின் புத்திக் கூர்மையை மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை..

“பேசுவதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. இங்கேதான் ஆளுக்கு ஒரு திசையில் முடங்கிக் கொண்டு இருக்கிறார்களே.. எப்படித் திருமணப் பேச்சை ஆரம்பித்து மணவறை வரை கொண்டு போவது..?”

“அதை நான் பார்த்துக் கொள்வேன்.. அத்தை எதற்கு இருக்கிறார்கள்..” என்றாள் மீனலோசனி..

மீனலோசனியும், பிரபாவதியும் சதி ஆலோசனையி-லிருக்க நரேந்திரனோ நதி ஆலோசனையில் இருந்தான்.. தனியே நதிக்குப் போவதும் நேரம் காலம் தெரியாமல் அங்கேயே இருப்பதும் தனக்குத்தானே பேசிக் கொள்வதுமாய் நதிக்கரையோரமே குடியிருந்தான்.. வீட்டில் பிடிக்க முடியாமல் பூர்ணிமா தன் அண்ணனை நதியோரம் தேடிப் பிடித்தாள்..

பிரகாஷ் காரில் அமர்ந்துகொள்ள நரேந்திரனைத்தேடி பிரகாஷுடன் வந்திருந்த பூர்ணிமா மட்டும் காரிலிருந்து இறங்கிச் சென்றாள்.. தன் போக்கில் நதிநீரை வெறித்துக் கொண்டிருந்தவன் தோளில் ஓர் மென்கரம் படியவும் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தான்..

“பூர்ணிமாவா..?” அவன் குரலில் ஏமாற்றம் தென்பட்டது..

“வேறு யாரை எதிர்பார்த்தீர்கள் அண்ணா..? வித்யாவையா..? அவளைத்தான் சிறகை ஒடித்து தனிமைச் சிறையில் தள்ளி விட்டீர்களே..”

“பூர்ணி.. எனக்குத் தண்டனை கொடுக்கத் தெரியாது.”

“தண்டனை அனுபவிக்கத்தான் தெரியுமென்பதை கண்கூடாய் பார்த்துக் கொண்டிருக்கிறேனே.. வித்யா சாத்வீகமானவள்.. தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டு விட்டாள்.. உங்களைத் தவிர யாராலும் அதை உடைக்க முடியாது.. தெரிந்தும் ஏன் நரகத்தில் மூழ்கி இருக்கிறீர்கள்..?”

நரேந்திரனின் கண்கள் கலங்கின.. ஆதுரமாய் தங்கையை நோக்கின.. இவள் தங்கையல்ல.. தாய்..

“நான் என்னம்மா செய்வது..?”

“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் அண்ணா.. நடந்தது என்ன என்பதை என்னிடம் கூறுங்கள்.. ஏதாவது செய்ய முடியுமா என்று நான் பார்த்துக் கொள்கிறேன்..”

நரேந்திரன் பெருமூச்சு விட்டான்.. அதன் உஷ்ணத்தில் நதி நீர் சூடேறியது.. பூர்ணிமா அண்ணனின் அருகமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

“பூர்ணி.. உன்னை என் தங்கையாக நினைத்து இப்போது பேசவில்லை.. ஒரு பிரண்டாக நினைத்துத்தான் பேசப் போகிறேன்..”

“பேசுங்கள் அண்ணா.. மனதில் உள்ள பாரத்தை என்னிடம் இறக்கி வையுங்கள்.. எத்தனை பாரம்தான் சுமக்க வேண்டும் என்று ஓர் அளவு இருக்கிறதண்ணா.. ஒட்டகம் கூட ஓர் அளவுக்கு மேல் சிறு துரும்பை வைத்தாலும் கீழே விழுந்து விடும்.. நீங்களும் விழுந்து விடக் கூடாது என்று தான் நான் துடிக்கிறேன் அண்ணா..”

“பூர்ணிம்மா.. என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த ஏமாற்றங்கள் என்னைத் தவறான பாதைக்கு திசை திருப்பி விட்டன..”

“பாதை தவறினால் திருத்திக் கொள்ளலாமே அண்ணா..”

“வித்யாவும் இதைத்தான் கூறினாள்.. உங்கள் தவறுகளோடு உங்களை ஏற்றுக் கொள்ள ஒருத்தி வருவாள் என்றாள்..”

“வித்யாவிடம் இதை ஐ மீன்.. நீங்கள் தவறான பாதையில் சென்று விட்டதைக் கூறினீர்களா..?”

“ம்ம்.. சொன்னேன்.. அதைக் கேட்டபின்தான் அதைக் கூறினாள் பூர்ணிம்மா.. வித்யாவை சென்னையில் பார்த்தது முதல் நாள் நானாக இல்லை.. அவள் என் வாழ்வில் வேண்டுமென்ற துடிப்பு..”

“அவளிடம் இதைச் சொன்னீர்களா..?”

“சொல்ல எனக்கு ஏது தகுதி..? பணம் அந்தஸ்து இருந்தால் செய்த தவறு இல்லையென்று ஆகி விடுமா..? அதனால் ஒரு காரியம் செய்தேன்..”

“என்ன செய்தீர்கள்..?”

“சுரேந்திரனிடம் வித்யாவைப் பற்றிக்கூறி அவளை மணந்து கொள்ள முடியுமா..? என்று கேட்டேன்..”

“அண்ணா..!” ஸ்தம்பித்தாள் பூர்ணிமா.. நரேந்திரன் அந்த குளிர்ச்சியான சூழலிலும் வியர்த்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்..

“ஆமாம் அம்மா! என் வேண்டுகோளுக்கு இணங்கித் தான் சுரேன் தாய் நாடு திரும்பினான்.. அவன் இந்தியா வந்தது வித்யாவிற்காக..”

“என்ன காரியம் செய்து விட்டீர்கள் அண்ணா..? வித்யாவின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்..? அவள் உங்களை நேரில் பார்க்காமல் போட்டோவைப் பார்த்தே காதலித்தவள் அண்ணா..”

“அப்போதே எனக்கு அது கொஞ்சம் தெரிந்தது பூர்ணிம்மா.. ஆனால் அவளுக்கும் எனக்கும் இருந்த வயது வித்தியாசம், என் தவறான பாதை, இதையெல்லாம் மனதில் நினைத்து நமக்காக தன் வாழ்வைப் பணயம் வைக்கிறவளின் வாழ்வு வீணாகி விடக்கூடாதென்ற எண்ணத்தில் செய்தேன்..”

“நல்ல எண்ணம்தான் அண்ணா, உங்கள் சிந்தனையில் பழுது சொல்ல முடியாது.. ஆனால் வித்யாவைப் பற்றி ஒரு வினாடி நினைத்துப் பார்த்தீர்களா..? அவளை மீனலோசனியென்று நினைத்து விட்டீர்களா..? அவள் வெறுத்து ஒதுங்கி விட்டால் நம் நிழலைக் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டாள்.. இது அவளுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ..?”

“எனக்கும் அதே தவிப்புத்தான் பூர்ணிமா.. அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் எனக்குத் துணிவில்லை.. சுரேந்திரன் வித்யாவின் மேல் ஆசைப்படுகிறான்.. என் உயிருள்ள வரை நான் அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..”

“என்ன சொன்னீர்கள் அண்ணா…” பூர்ணிமா ஆச்சர்யத்துடன் நரேந்திரனைப் பார்த்தாள்.. இந்த நரேந்திரன் அவள் அறியாதவன்.. இதை.. இதை.. இதைத்தான் அவள் அவனிடமிருந்து எதிர்பார்த்தாள்..

“நீங்கள் வித்யாவைக் காதலிக்கிறீர்களா..?”

“அவளும் என்னைக் காதலிக்கிறாள்..”

பூர்ணிமாவின் முகம் மலர்ந்தது.. அவள் பூவாகிச் சிரித்தாள்.. தன் தமையனின் தோள் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.. அண்ணனை எழுப்பினாள்..

“எழுந்திருங்கள் அண்ணா.. விசயத்தை என்னிடம் சொல்லி விட்டீர்கள் இல்லையா..? இனி உங்கள் திருமணம் என் பொறுப்பு.. நான் பார்த்துக் கொள்கிறேன்.. எது வந்தாலும் நான் சமாளிக்கிறேன்..”

“வித்யாவுக்கு உண்மை தெரிந்தால்.. அவள் என்னை மன்னிப்பாளா..?”

“மன்னிப்பாள்.. உங்களை மன்னிக்காமல் யாரை மன்னிக்கப் போகிறாள்.. வாங்க போகலாம்..”

“சுரேன் என்னைத் தவறாக நினைக்க மாட்டானா..?”

“மாட்டான்.. அவன் ஜென்டில்மேன்.. உண்மை தெரியாததால் வித்யாவின் பின் சுற்றுகிறான்..”

நரேந்திரனின் மனம் லேசாகியது.. இருவரும் எழுந்து சென்றார்கள்.. பூர்ணிமா அவள் காரில் ஏறப்போன சமயம்,

“பூர்ணி.. பிரகாஷ் தனியே வரட்டும்.. நீ என்னுடன் வருகிறாயா..?” என்று அழைத்தான் நரேந்திரன்..

தமையனின் கண்களில் இருந்த தவிப்பைக் கண்டவள் கார்க் கதவை மூடினாள்..

“பிரகாஷ் நீங்க பின்னாலேயே தொடர்ந்து வாங்க.. நான் அண்ணன் கூடப் போகிறேன்..”

“இத்தனை வருடங்களாக அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்..” என்றான் பிரகாஷ்..

“வாட்.?.”

“நீ உன் அண்ணனுக்காக வாழ்கிறேன் என்று சொல்ல நான் உனக்காக வாழ்கிறேன் என்று உன் பின்னால் தொடர்ந்து வருகிறேனே.. அதைச் சொன்னேன்..”

“வழியுது.. துடைத்துக் கொள்ளுங்கள்.. இனி இந்த துரத்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்..”

“என்னடி அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறாய்..? என்ன செய்யப் போகிறாய்..?”

அவன் தனிமையில் அழைக்கும் ‘டீ’யை அண்ணன் முன் சொன்னதால் முறைத்தவள் கூறினாள்..

“வெயிட் அன்ட் ஸீ..”

சௌதாமினி அறையில் ஓய்வாகப் படுத்திருந்த வேளையில் மீனலோசனி உள்ளே நுழைந்தாள்.. 

பூனை போல் ஓசைப்படாமல் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தாள்.. “அத்தை” என்று அழைத்தாள்..

“யாரது..?” என்று கண் விழித்த சௌதாமினி மரு மகளைக் கண்டதும்,

“என்னம்மா..?” என்று வினவியவாறு எழுந்து அமர்ந்தாள்..

“தொந்தரவு பண்ணி விட்டேனா அத்தை…?” வினயமாக மீனலோசனி வினவ ‘அதுதான் பண்ணி விட்டாயே.. என்னவென்று சொல்லித்தொலை’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்ட சௌதாமினி வெளியில்,

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையம்மா.. என்ன விசயம் சொல்..” என்றாள் தேனினும் இனிய குரலில்..

“நம்ம வீட்டிற்கு வந்திருக்கிறாளே வித்யா..”

“ஆமாம்.. அவளுக்கென்ன..? அவள்தான் யார் கண்ணிலும் படுவதே இல்லையே.. சாப்பிடுவதற்குக் 

கூட சமையலறைக்குப் போய் விடுகிறாளே.. அப்புறம் என்ன வந்தது..?” மதியத் தூக்கம் கெட்ட சௌதாமினி எரிச்சலுடன் கூறினாள்..

“அவளைப் பற்றி ஒன்றுமில்லை அத்தை.. நம்ம சுரேன்தான்..”

“இதோ பார் மீனா.. சுரேன் தங்கமான நேர்மையான பிள்ளை..”

“தெரியும் அத்தை.. அதனால்தான் வித்யா மேல் ஆசையிருந்தும் மனதில் வைத்துக் கொண்டு தவிக்கிறார்.. நீங்க பெரியவங்க.. நல்லது நடக்க வேண்டுமென்று நினைத்தால் காலாகாலத்தில் நடத்தி வைத்துவிட வேண்டும் அத்தை..” எடுத்துக் கூறினாள் கைகார மீனலோசனி..

“அப்படியா சொல்கிறாய்.. இது எப்படி என் கண்ணில் படாமல் போயிற்று..?” சௌதாமினி யோசித்தாள்..

“வீட்டில் உங்களைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.. கூடிக் கூடிப் பேசுகிறார்கள்.. யாரும் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார்கள்..”

“நான் சுரேந்திரனிடம் விசாரிக்கிறேன்..”

சௌதாமினி சுரேந்திரனிடம் விசாரித்தாள்..

“சுரேன்.. அந்த வித்யாப் பொண்ணு மேல் உனக்கு நோக்கமா..?”

“ஐ லைக் ஹெர்ம்மா.. திருமணத்திற்கு ஏற்ற பெண் அவள்..”

அவன் சாதாரணமாய் கூறிச் சென்றுவிட சௌதாமினியின் மனம் சுறுசுறுப்பானது.. சுரேந்திரன் அவளது செல்லப் பிள்ளை.. அவன் விரும்பிய எதையும் நிறைவேற்றாமல் அந்த வீட்டில் யாரும் இருந்ததில்லை..

சௌதாமினி வித்யாவிடம் பேசினாள்.. விளைவு..?

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link