Chapter 03
நதியோரம் நடந்த போது..
சின்னதாக காதல் சொன்னேன்..
சொன்ன மொழி சிறியதுதான்..
என் காதல் பெரியதுதான்…
-நதியோரம் நான் நடந்த போது-
மகேந்திரனுக்கு ஓட்டம் பழக்கமான ஒன்றல்ல.. அவன் பிறர் உழைப்பில் வாழ்ந்து பழகிய உல்லாசி.. அவனுக்கு வேலை செய்யப் பிடிக்காது.. அந்த வேலையினால் வரும் லாபத்தைக் கொள்ளையடித்து அனுபவிக்கப் பிடிக்கும்…
அப்படிப்பட்டவன்.. விடிந்தும் விடியாதபோதே எழுந்து மில்லுக்கு கிளம்பி ஓட நேர்ந்தது.. அதில் கொடுமை என்னவென்றால்.. அவன் என்னதான் கோழி கூவுவதற்கு முன்னாலேயே அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்பி மில்லிற்கு ஓடினாலும்.. அங்கே அவனுக்கு முன்னால் யுகேந்திரன் பிரசன்னமாகியிருப்பான்..
‘இவன் தூங்கவே மாட்டானா..?’ மகேந்திரனுக்குள் எரிச்சல் மண்டும்…
அவன் சாதாரணமாக செலவு கணக்கை எழுதினாலும் கூட யுகேந்திரன் அதை ஊன்றி.. ஊன்றி கவனித்து ஆயிரம் கேள்விகளைக் கேட்டான்.. பதிலுக்கு.. அவன் காட்டிய கணக்கில் மகேந்திரனுக்கு சந்தேகம் தட்டுப்பட.. இவனும் ஆயிரம் கேள்விகளைக் கேட்டான்.. அவர்கள் ஒருவருக் கொருவர் போர்முரசு கொட்டிக் கொண்டார்கள்…
“இந்த மில்லுக்கு நீ மட்டும்தான் முதலாளியா..? இது உனக்கு மட்டும்தான் சொந்தமா..?”
நாள் தோறும் இதே கேள்வியை அவர்கள் மாறிமாறிக் கேட்டுக் கொண்டார்கள்.. அதிகாரப் போராட்டத்தில்.. யதேச்சதிகாரமாக.. சர்வாதிகாரியாய் இருந்தே பழக்கப் பட்டிருந்த மகேந்திரன் மண்டை காய்ந்து போனான்.. இதற்கெல்லாம் காரணமான நரேந்திரனையும்.. அவனை இப்படியாகப்பட்ட முடிவுகளை எடுக்க வைத்த வித்யாவையும் துவம்சம் செய்யும் வெறி அவனுக்குள் கிளர்ந்தது..
நல்லவர்கள்தான் திடிரென்று எதிரியுடன் கை கோர்க்கத் தயங்குவார்கள்.. கெட்டவர்களுக்கு அப்படியில்லை.. அவர்களுக்கென்ன கொள்கைப் பிடிப்பா இருக்கப் போகிறது..?
மகேந்திரன் ரங்கதுரையுடன் கை கோர்த்தான்..
“ஆயிரம்தான் இருந்தாலும் அது நான் வளர்த்த பேக்டரி ரங்கதுரை.. ராத்திரி பகல்ன்னு பார்க்காம உழைத்து உருவாக்கினது. ம்ஹீம் எங்கிருந்தோ வந்தவ என் அண்ணனை மயக்கி அதைத் தட்டிக்கிட்டுப் போயிட்டா…”
ரங்கதுரை முட்டாளல்ல… அந்த பேக்டரியை மகேந்திரன் வளர்த்த லட்சணம் அவனுக்கு நன்றாகவே தெரியும்.. அவன் இரவு.. பகல் பார்க்காமல் உழைத்த லட்சணமும் தெரியும்.. இருந்தாலும்.. மகேந்திரன் சொன்னதில் இருந்த ஒரு உண்மை அவனை யோசிக்க வைத்தது..
“இப்பல்லாம் முதலாளியா ஆகனுமுன்னா.. முதலாளிக்கு மகனாப் பிறந்திருக்கனும்னு அவசியமில்லை ரங்கதுரை.. எவனாவது ஒரு இளிச்சவாயன் முதலாளியா இருக்கானான்னு பார்த்து அவனை மயக்கினாப் போதும்.. குப்பை மேட்டில் கிடக்கிற காகிதம் கூட.. கோபுரத்தின் உச்சிக்குப் பறந்து போய் ஒட்டிக்கிரும்…”
உண்மைதானே என்று நினைத்தான் ரங்கதுரை.. நேற்று வரை அவனைப் போல ஒரு தொழிலாளியாக இருந்து வந்த வித்யா.. இன்று முதலாளியாக மாறி நிற்கிறாளென்றால் அதற்கு எது காரணம்…? மகேந்திரன் சொல்வதுதானே காரணம்…?
இது மனித இயல்பு.. நேற்று வரை அவர்களுடன் பணியாற்றுகிறவர்கள்.. திடிரென்று பதவி உயர்வு பெற்றால் பொறாமை கொள்வது மனித இயல்புதானே..
ரங்கதுரைக்குள்ளும் அந்த பொறாமை துளிர் விட்டிருந்தது.. அதற்கேற்றார் போல.. வித்யா.. அடிக்கடி.. நாங்க முடிவு பண்ணியிருக்கோம்.. நாங்க யோசிக்கிறோம்.. என்ற ரீதியில் பேசி வைத்தது அவனது ஆத்திரத்தை அதிகப் படுத்தியது.. அந்த வார்த்தைகள் வித்யாவை முதலாளியாக அடையாளப் படுத்திக் காட்டியதில் அவன் வெகுண்டான்.. முதலாளியின் மனைவி முதலாளிதானே என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை.. மாறாக நேற்று வரை இவளும் நம்மைப் போல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தொழிலாளிதானே என்ற எண்ணம் மட்டுமே அவனுக்குள் தலை தூக்கியது..
அதன் விளைவாக அவன் எடுத்ததெற்கெல்லாம் வித்யாவுடன் மோத ஆரம்பித்தான்.. தொட்டதெற்-கெல்லாம் குற்றம் சொன்னான்.. சின்ன விவகாரத்திற்குக் கூட போர் கொடியை உயர்த்தினான்…
பொறுமையிழக்கும் தருணங்களை நரேந்திரனுக்கு அள்ளி வழங்கிக் கொண்டே இருந்தான்… நரேந்திரனை பேச விடாமல் வித்யா தடுத்துக் கொண்டே இருந்தாள்..
“இவங்க உங்க தொழிலாளிகள் நரேன்…”
“உனக்கும் இதில் உரிமையிருக்கு வித்யா…”
“எனக்கு உங்க மேல்தான் உரிமை…”
“ஏய்ய்.. யாரோ போலப் பேசாதேடி…”
நரேந்திரன் முறைத்துக் கொள்வான்… உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால்… மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.. வித்யாவுக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி…
பேக்டரியில் நான் தொழிலாளி என்று அவள் சொன்னால் நரேந்திரன் சண்டைக்கு வருவான்… முதலாளி என்று சொன்னால் ரங்கதுரை சண்டைக்கு வருவான் என்றால்.. அவள் பாவம் என்ன செய்வாள்..?
வாயைத் திறந்தால்தானே வம்பு என்று அவளால் மௌனம் காக்க முடியுமா…? ஒப்புக் கொண்ட வேலையிலிருந்து விலகிக் கொள்ளத்தான் முடியுமா..? அதை நரேந்திரன் அனுமதிக்க மாட்டானே…
“வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவா… ஆயகுடியை விட்டு நீ வெளியேறி.. போராடிப் படிச்ச…?”
“இருந்தாலும் நரேன்…”
“பேசாதே.. என்னால் உன் திறமை வீணாகி விட்டதுன்னு காலம் பூராவும் நான் வருத்தப்படனுமா..?”
நரேந்திரனின் கேள்வி அவளைப் பேசவிட்டாமல் செய்துவிடும்.. வித்யா கெட்டிக்காரிதான்… திறமையான நிர்வாகிதான்.. அவளால் தொழிலாளர்களின் நலன்கள் மேம்பட்டதேயொழிய குறையவில்லை… ஆனாலும் ரங்கதுரை அமைதியடையவில்லையே…
குறை அவனுடைய மனதில் இருந்தது.. அதனால் இல்லாத ஒன்றைக்கூட இருப்பதைப் போலக் கூறி தொழிலாளர்களின் மனதில் வேற்றுமையுணர்வை தூண்டி விட்டான்.. சின்ன விவசாரத்தைக் கூட ஊதிப் பெரிதாக்கினான்..
“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க சார்.. புது ஆர்டரை ஏத்துக்கிட்டு வேலை செய்ய முடியுமா.. முடியாதா…?” மனதை திடப் படுத்திக் கொண்டு கடுமையாகக் கேட்டாள் வித்யா…
சிலசமயம் சாட்டையை கையில் எடுத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது.. அதைப் பிரயோகிக்க வேண்டும். என்ற அவசியமே இல்லை.. ஆனால்.. அது கையில் இருந்தால்தான் வேலை நடக்கும் என்றால் இது கொடுமை அல்லவா…?
வித்யாவிற்கு சாட்டையைக் கையிலெடுக்க விருப்பமே இல்லை.. எனினும் அவள் அதைத்தான் செய்ய வேண்டியிருந்தது.. அவளுக்காக இல்லாவிட்டாலும்.. நரேந்திரனின் மனைவி என்ற கௌரவத்தை காப்பாற்றிக் கொள்பதற்காகவாவது அவள் அதைச் செய்துதான் ஆகவேண்டும்…
“முடியாதுன்னா என்னம்மா செய்வீங்க…?” ரங்கதுரை முறைத்தான்..
“நோ அதர் வே.. போனஸ்ஸை குறைக்க வேண்டியது தான்.. சம்பளத்தை உயர்த்துவதைப் பற்றி யோசிக்க வேண்டியதுதான்.. ஆள் குறைப்பு செய்ய வேண்டியதுதான்…”
“செஞ்சிருவீங்களோ…? நாங்க விட்டுருவமோ..? ஸ்ட்ரைக் வெடிக்கும்மா…”
“வெடிக்கட்டும்.. பேக்டரியை இழுத்து மூடலாம்.. புது வேலைகளைச் செய்ய முடியாத பேக்டரியை வைத்துக்கிட்டு என்ன செய்ய…? பேசாம வேற தொழிலைத் தொடங்கிட்டுப் போக வேண்டியதுதான்… நஷ்டம் யாருக்கு…?”
“பணமிருக்கிற திமிராம்மா…?”
“ஊஹீம் வேலை நடக்காத தொழிலை விட்டுவிட்டு வேற தொழிலை ஆரம்பிக்கலாம்கிற புத்திசாலித்தனம்…”
“அப்ப… இத்தனை வருசமா வேலை பார்த்த தொழிலாளர்களின் கதி…?”
“அதை நீங்களும் யோசிக்கனும் சார்… யூனியன் லீட்ரா இருந்தால் தொழிலாளர்களின் நலனைப்
பத்தி யோசிக்கனும்.. அதை விட்டுட்டு.. அவர்களின் வேலையைப் பிடுங்குவதைப் பற்றி யோசிக்கக் கூடாது.. வேலையைச் செய்ய மாட்டேன்.. சம்பளம் மட்டும் கூட வேண்டும்… போனஸ் வேண்டும்.. இன்னும் அதிகப்படி சலுகைகள் வேண்டும்ன்னு கேட்டால்.. கொடுக்கப் பணத்திற்கு எங்கே போவது..? எங்கேயாவது கொள்ளை அடிக்கப் போக வேண்டியதுதான்..”
“எங்களைச் சொல்றிங்களா…?”
“ஊஹீம் முதலாளிகளைச் சொல்கிறேன்…”
வித்யா கவனமாக ‘எங்களை…’ என்ற வார்த்தையைத் தவிர்த்தாள்.. ரங்கதுரையின் வேகம் கொஞ்சம் இறங்கியது.. அவன் யோசித்தான்.. வித்யா சொல்வதில் உள்ள உண்மைகள் அவனுக்கு பிடிபட்டன…
‘நாமதான் எதுக்கெடுத்தாலும் குதிக்கிறோமோ…’
அவனுக்கு மனச்சாட்சி உறுத்தியது.. அவன் தணிந்து போக முடிவு செய்தான்… அதே சமயம் அதை முதலாளிகள் அறியாத வண்ணம் அவன் செய்தாக வேண்டும்…
“போனாப் போகுதுன்னு இந்த ஒரு முறை இந்த வேலையைச் செய்ய நாங்க ஒப்புக்கிறோம்..
நாங்க உழைப்பாளிகம்மா.. எங்களாலே முதலாளிக கொள்ளையடிக்கப் போக வேணாம்.. ஆனா இதையே சாக்கா வைச்சுக்கிட்டு தொடர்ந்து இதைப் போலவே பண்ணினீங்கன்னா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்.. சொல்லிட்டேன்..”
அவன் வீறாப்பு குறையாமல் பேசிவிட்டு வெளியே போய் விட்டான்.. அதுவரை பொறுமையை
இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த நரேந்திரன் வெடித்தான்..
“இவனிடமெல்லாம் நீ இந்தளவுக்கு பேசியாகனுமா..?”
“ரிலாக்ஸ் நரேன்.. நீங்க ஏன் இதை பெர்ஸனல் மேனேஜரின் டியுட்டியாக நினைத்துப் பார்க்கக் கூடாது..?”
“ஐ நோ வித்யா… பட்… என் முன்னாலேயே அவன் மிரட்டறான்.. எனக்கு எந்த அளவுக்கு கோபம் வந்ததுன்னு உனக்குத் தெரியுமா…?”
“அதான் உங்க முகம் ஜொலிச்சதே.. அவன் பேசினதுக்கு நான் பயந்து போனேனா…? இல்லையே.. அப்படியிருந்தாத்தான் நீங்க கோபப்படனும்…”
“அதைச் சொல்லு… யாரு நீ…?”
மனநிலை மாறிப் போனவனாக நரேந்திரன் ஆசையுடன் வித்யாவை அணைத்துக் கொண்டான்.. அவன் தோள் வளைவில் முகம் புதைத்த வித்யா அவன் காதில்
“நான் நரேந்திரனின் பொண்டாட்டி..” என்றாள்… நரேந்திரனின் காதினில் தேன் பாய்ந்தது..
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.