Chapter 06
நதியோரம் நடந்தபோது
நிலாவெளியில் உலா வந்தோம்…
உலா வந்த அந்தப் பொழுதுகளை..
உற்றவளே..! நீ மறப்பாயா..?
-நதியோரம் நான் நடந்தபோது-
“இவங்களுக்குன்னு தான் அம்பா சமுத்திரத்தில பங்களாவை கொடுத்தாச்சே.. அப்புறமும் ஏன் நம்ம கூடவே இருந்து கடுப்பைக் கிளப்பறாங்க…?”
மாடியில் அவர்களுக்கான பிரத்யேக அறைக்குள் வந்த நரேந்திரன் எரிச்சல் பட்டான்… அவனருகே
வந்த வித்யா அவனின் சட்டை பொத்தான்களை கழட்டியபடி..
“இதை அத்தையிடம் கேட்க வேண்டியதுதானே..?” என்று சிரித்தபடி கேட்டாள்…
பதிலுக்கு நரேந்திரன் சிரிக்கவில்லை.. அவளை முறைத்தான்…
“எப்படிக் கேட்பது…? என் கூடப் பிறந்த தம்பிகள்.. குடும்பத் தோடு ஏன் வீட்டை விட்டு வெளியேறலைன்னு அம்மாவிடம் என்னால் கேட்க முடியுமா..?”
“தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக எரிச்சல் படறிங்க…?”
“அதில்லை வித்யா.. அவங்க இந்த வீட்டில் இருந்தால் இருந்துட்டுப் போகட்டும்.. அதில் எனக்கொன்னும் ஆட்சேபனை இல்லை.. ஆனா.. தினமும் உன்னையும்… என்னையும் ஜாடை பேசி வம்புக்கு இழுப்பதையே ஒரு வேலையாய் வைத்திருக்காங்களே.. அதனால்தான் எரிச்சல் வருது… பேக்டரிக்குள்ள மகி குழப்பம் பண்றான்.. வீட்டுக்குள்ளே அவன் பெண்டாட்டி எகத்தாளம் பேசறான்னா.. எப்படி பொறுத்துக்கிட்டுப் போகிறது வித்யா…? இந்த அவதிக்காகத்தானே நம்ம கல்யாணத்துக்கு முன்னாலேயே பாகம் பிரிவினை செய்தேன்…? இவங்க அதுக்கு அர்த்தமில்லாம ஆக்கிக்கிட்டு இருக்காங்களே…”
அதுதான் அவர்களின் நோக்கம்.. அது வித்யாவிற்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.. பேக்டரியையும்.. மணி முத்தாறு அரண்மனையையும் வித்யாவிற்கு விட்டுக் கொடுக்க.. அவனது தம்பிகளும்.. தம்பி மனைவிகளும் தயாராக இல்லை.. பிரபாவதி பிரகாஷின் கோபத்திற்குப் பயந்து வெளிப்படையாக எதையும் பேசுவதில்லை.. மறைமுகமாய் காய் நகர்த்துவதோடு பேசாமல் இருந்து கொள்வாள்..
மீனலோசனி அப்படியிருப்பதில்லை.. வித்யா வீட்டிலிருக்கும் நேரங்களில் அந்த வீட்டிற்கு வித்யாவை உரிமையில்லாதவளாகவும்.. மீனலோசனியும்.. பிரபாவதியும் மட்டுமே உரிமைக்காரர்கள் என்றும் நிலை நாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டாள்…
வித்யா வேலையாள்களிடம் வேலை சொன்னால் உடனே அதே வேலையாளிடம் மீனலோசனி வேலை சொல்வாள்.. யார் சொல்வதைக் கேட்பது என்று அவர்கள் தடுமாறி நிற்கும் போது வித்யா பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விடுவாள்…
“பரவாயில்லை சண்முகம்.. இதை அப்புறமாகச் செய்துக்கலாம்…” என்று சொல்லி விடுவாள்..
அந்த வார்த்தைகளைக் கேட்பதும் அந்த சண்முகத்தின் முகத்தில் பரவும் நிம்மதியில் வித்யாவின் மனம் வலிக்கும்…
சின்னச் சின்ன உரிமைப் பிரச்னைகளில் வீட்டு வேலையாள்கள் சிக்கித் திணருவதா…?
இதை நரேந்திரனிடம் அவளால் கொண்டு போக முடியாது.. அவன் கோபக்காரன்.. வித்யாவின் மேல் சிறு துரும்பு பட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.. உடனடியாக தம்பிகளின் குடும்பங்களை வெளியேற்றி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பான்..
அதில் சௌதமினிக்கு உடன்பாடில்லை என்பதை வித்யா தெளிவாக கணித்து வைத்திருந்தாள்…
சௌதாமினியின் தாய் மனம் அதைத் தாங்காது.. அதிலும் அவள் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள்.. சுற்றிலும் பலர் இருக்க.. கலகலப்பான சூழ்நிலையில் பிறந்து.. வளர்ந்து.. வாழ்க்கைப்பட்டு.. வாழ்ந்து பார்த்தவள்.. வீடு முழுவதும் வேலையாள்கள் ‘ஜே ஜே’ வென்று இருக்கலாம்.. அது பெற்ற பிள்ளைகளுக்கும்… மருமகள்களுக்கும்.. பேரக்குழந்தைகளுக்கும் ஈடாகுமா…?
அதிலும்.. மீனலோசனி சௌதாமினியின் கூடப் பிறந்த அண்ணனின் மகள்.. பிரபாவதியோ.. நரேந்திரனின் தந்தையான ராஜேந்திர பூபதியின் கூடப் பிறந்த தங்கையின் மகள்.. கூடுதலாக பூர்ணிமாவின் நாத்தனார் வேறு…
இந்த நிலையில் அந்த இரண்டு மருமகள்களையும் வீட்டை விட்டுத் தனிக்குடித்தனத்திற்கு அனுப்ப சௌதாமினியால் முடியுமா…?
மகேந்திரனின் குழந்தைகளான அரவிந்தனையும்.. பூஜாவையும்.. யுகேந்திரனின் குழந்தையான காமினியையும் தினமும் தூக்கி மடியில் போட்டுக் கொஞ்சாமலிருக்க அவளால் முடியுமா…?
அதனாலேயே சௌதாமினி மகன்களை தனியே அனுப்புவதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.. பேக்டரியையும்.. மில்லையும் அதைப் போலவே செய்துவிட வேண்டுமென்று மகேந்திரனும்.. யுகேந்திரனும் திட்டம் போட்டார்கள்.. அது நடக்கவில்லை….
பாகப் பிரிவினை நடந்து முடிந்த மறுநாளில் வழக்கம் போல மகேந்திரன் பேக்டரிக்குப் போன போது… அவனின் கேபின் கதவு மூடப்பட்டு பூட்டுத் தொங்கியது…
“குகன்…” கோபத்துடன் இரைந்தான் மகேந்திரன் குகன் மெதுவாக ஆடி அசைந்து வந்தான்…
“என்ன சார்…?”
“வாட் இஸ் திங்…?”
மூடப்பட்டக் கதவைக் காட்டி மகேந்திரன் கொந்தளித்தான்… குகன் நிதானமாக.. பூட்டைத் தூக்கிப் பார்த்து விட்டு…
“இது பூட்டு சார்…” என்று விளக்கம் சொன்னான்..
“ஏய்ய்…!” ஒற்றை விரலை உயர்த்தி மகேந்திரன் கர்ஜித்ததிற்கு குகன் அலட்டிக் கொள்ளவே இல்லை..
போடா.. நீயுமாச்சு.. உன் கோபமாச்சு.. என்ற ரீதியில் முகத்தில் சலனமில்லாமல் மகேந்திரனையே பார்த்துக் கொண்டிருந்தான்..
“இது யார் செய்த வேலை…?”
“நான் செய்த வேலையில்லை சார்… எம்.டி செய்த வேலை..”
“என்னது…?!”
கொதிப்புடன் அவன் நரேந்திரனைத் தேடிப் போன போது.. அவனும் சுரேந்திரனும் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்… சுரேந்திரனின் முகம் இறுகியிருந்தது..
“என் ரூமை யார் பூட்டியது..?” மகேந்திரன் கவனமாக ‘அண்ணா’ என்ற வார்த்தையைத் தவிர்த்து விட்டு மொட்டையாகக் கேட்டான்…
“ஏன்.. நான்தான் பூட்டினேன்…?” நிதானமாக பதில் சொன்னான் நரேந்திரன்..
“யாரைக் கேட்டுப் பூட்டினீங்க…?”
“யாரைக் கேட்கணும்..? சுரேந்திரனை மட்டும்தான் நான் கேட்கனும்.. அவன்தான் இந்த யோசனையையே சொன்னான்..”
“உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா இப்படியொரு வேலையைச் செய்ய யோசனை சொல்லியிருப்ப..?” மகேந்திரன் சுரேந்திரனின் மீது பாய்ந்தான்..
“சும்மா குதிக்காதீங்க அண்ணா.. முதலில் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்க.. உங்களுக்கு பேக்டரியில என்ன வேலை…?” சுரேந்திரன் அழுத்தம் திருத்தமாக கேட்டான்…
“அது.. அது…” மகேந்திரனுக்கு பேச்சு வரவில்லை..
“என்ன.. அது அதுன்னு ராகம் போடறிங்க…? பேக்டரிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? இது எனக்கும்.. பெரியண்ணனுக்கும் உரிமையானது.. இங்கே உங்களுக்கும் யுகே அண்ணனுக்கும் உரிமையில்லை…”
“டேய்.. நேற்று வரை இந்த பேக்டரியின் ஜெனரல் மேனேஜரா நான் இருந்தவண்டா..”
“அந்தக் கொடுமையைத்தான் இந்தக் கணக்கு வழக்கு சொல்லுதே.. ஏன்னா.. உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கிடையாதா…? இது நம்ம வீட்டு சொத்துக்கிற நினைப்பு உங்க மனசில இருந்திருந்தா..
இந்த அளவுக்கு நீங்க கொள்ளையடிச்சிருப்பீங்களா…? ஊரான் வீட்டுச் சொத்தை வாரிச்சுருட்டிக்கிட்டு ஓடுகிறவங்க செய்த வேலையைப் போலயில்ல செய்து வைத்திருக்கீங்க.. இதே நிலைமை கண்டினியூ ஆகியிருந்தா பேக்டரி திவாலாகியிருக்கும்…”
சுரேந்திரன் எதைக் கேட்டாலும் நேருக்கு நேராய்த்தான் கேட்பான்.. நரேந்திரனைப் போல முகத்தாட்சண்யம் பார்க்க மாட்டான்.. அவனின் அதிரடிக் கேள்விகளில் அரண்டு போன மகேந்திரன்..
“என்னை மட்டும் கேட்கறியே.. போய் மில்லை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கிற யுகேந்திரனைக் கேளு..” என்று சொல்லி விட்டான்…
“வெரி குட்.. ராஜா ராஜேந்திர பூபதியோட இரண்டு மகன்களும்.. அவர் கட்டிக் காப்பாத்தின சொத்துக்களை ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொண்டு கொள்ளையடிக்கிறாங்க.. இதை வெளியில் சொல்லி விடாதீங்க.. நம்ம வம்சப் பெருமை கொடிகட்டிப் பறந்திடும்.. ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. உங்களுக்கும்.. யுகே அண்ணனுக்கும் உழைத்துப் பிழைப்பதில் விருப்பமே இல்லையா..? அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டி.. சுருட்டி.. கொள்ளையடித்து.. அதில் உட்கார்ந்து சாப்பிடத்தான் விருப்பமா..? எப்படியண்ணா…? நாம ஆறு பேரும்.. ஒரே தாயின் வயிற்றில்தானே பிறந்தோம்..? எங்க உடம்பில் மட்டும் நேர்மையாய் உழைத்துப் பிழைக்கும் ரத்தம் ஓடுது.. உங்க இரண்டு பேரின் உடம்பில் மட்டும்.. ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் ரத்தம் ஓடுதுன்னா என்னால நம்பவே முடியலையே…”
“சுரேன்.. நீ அதிகமாய் பேசற..”
“நீங்க செய்து வைத்திருக்கிற வேலைகளுக்கு நான் பேசுவது ரொம்பவும் குறைச்சல்.. யுகே அண்ணனை நான் ஏன் கேள்வி கேட்கணும்..? அது உங்க சொத்து.. நீங்களும் அவரும்தான் மில்லுக்கு சொந்தக்காரங்க.. நீங்கதான் போய் கேள்வி கேட்கனும்.. இது எங்க பேக்டரி.. இதில எனக்கும்.. பெரிய அண்ணனுக்கும் மட்டும்தான் உரிமையிருக்கு.. இங்கே கேள்வி கேட்க நீங்க வராதீங்க.. கெட் அவுட்..”
நரேந்திரனே.. சுரேந்திரன் ‘கெட் அவுட்’ என்று மகேந்திரனைப் பார்த்துச் சொல்லுவான் என்பதை எதிர்பார்க்கவில்லை.. சூழ்ந்திருந்த தொழிலாளர்களின் மத்தியிலே அந்த வார்த்தையை சுரேந்திரன் சொல்லி விடவும் மகேந்திரனின் முகம் பேயறைந்ததைப் போல ஆகிவிட்டது.. அவன் அவமானத்தில் முகம் சிறுத்துப் போனவனாக பேக்டரியை விட்டு வெளியேறி விட்டான்…
“இந்த அளவுக்குப் பேசியிருக்கனுமா..?” நரேந்திரனுக்கு மனம் தாங்கவில்லை…
“கத்தியெடுக்காமல் ஆப்பரேசனை பண்ண முடியாதுண்ணா..” சுரேந்திரன் தெளிவான முகத்துடன் புன்னகைத்தான்…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.