Chapter 08

0Shares

நதியோரம் நடந்த போது…

      நதிநீரின் சுழல் கண்டேன்…

சிந்தா நதிச் சுழலிலே..

    சிக்கிக் கொண்டேன்.. இனி என்ன ஆவேன்..?

-நதியோரம் நான் நடந்தபோது-

மீனலோசனிக்கும் சரி.. பிரபாவதிக்கும் சரி.. மணி முத்தாறு அரண்மனையை விட்டு வெளியேறு

வதில் துளிக்கூட விருப்பமில்லை.. என்னதான் அம்பாசமுத்திரத்தில் அவர்களுக்கென்று கொடுக்கப் பட்டிருந்த பங்களாக்கள் ஆடம்பரமானதாகவும்.. அழகாகவும் இருந்தாலும்.. அவை மணிமுத்தாறு அரண்மனையின் காம்பவுண்டு கேட்டிற்குப் பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்..

இவ்வளவு ஏன்…? மகேந்திரனும் சரி… யுகேந்திரனும் சரி.. சென்னையில் ஆளுக்கு இரண்டு பங்களாக்களை வளைத்துப் போட்டிருந்தார்கள்.. அங்கே குடியேறச் சொன்னாலும்.. அவர்களின் மனைவிகள் இசைந்து கொடுக்க மாட்டார்கள்..

மணி முத்தாறு அரண்மனையும் அதன் வாழ்க்கை முறையும் அவ்வளவு பிரசித்தி வாய்ந்தது..

பல ஏக்கர் பரப்பளவில்.. சுற்றிலும் பூங்காக்களும்.. நீச்சல் குளமும் அமைந்திருக்க.. நடுவில் வெண் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த அரண்மனை அது..

அங்கே வேலை செய்தவர்களுக்கு அந்த ராஜ குலத்தவரின் பரம்பரைப் பெருமையைப் பற்றி நன்றாகவே தெரியும்.. அவர்கள் அந்த அரண்மனையில் வேலை செய்வதில் பெருமைப்படுகிறவர்கள்..

சென்னையிலும்.. அம்பாசமுத்திரத்திலும்.. அந்தப் பரம்பரைப் பெருமையை எதிர்பார்த்து விட முடியாது…

“இந்தா பாரும்மே.. வேலைக்காரின்னா உனக்கு அம்புட்டு இளக்காரமா பூடுச்சா.. மரியாதையாய் பேசிப் பழகு..” என்று அவர்களுக்கே பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொடுத்து விடுவார்கள் சென்னை வாசி வேலையாள்கள்..

“உன் ஒரு வீடுதான் அபூர்பமா..? வேலைக்கு ஆள் வேனும்னு தன்னாலே ஜனங்க அல்லாடிக்கிட்டு கிடக்குது.. இஷ்டம்ன்னா வேலைக்கு வரேன்.. இல்லேன்னா வேற வீட்டைப் பார்த்துக்கறேன்.. நீயும் வேற ஆளைப் பார்த்துக்க..” என்று அன்றே கணக்கை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்து விடுவார்கள் அம்பாசமத்திர வேலையாள்கள்..

அவர்களிடம் மணி முத்தாறு அரண்மனையில் வேலை செய்யும் வேலையாள்கள் தரும் மரியாதையையும்.. பணிவையும் எதிர்பார்த்து விட முடியாது..

அரண்மனைக்கு ராணியாக.. பளிங்கு மாளிகையில் வாழ்வது எப்படி…? சாதாரண பங்களாவில் பத்தோடு பதினொன்றாக வாழ்வது எப்படி…?

அதற்காகவா.. மீனலோசனியும்.. பிரபாவதியும்.. தவமாய் தவமிருந்து.. மணி முத்தாறு அரண்மனையின் வாரிசுகளின் மனதில் இடம் பிடித்து… அந்த அரண்மனையின் மருமகள்களாக வந்தார்கள்…?

மீனலோசனி பல்லைக் கடித்தாள்.. பிரபாவதி புருவங்களை நெறித்தாள்.. மனைவிகளின் மௌன யுத்தத்தை தாங்க முடியாதவர்களாக.. மகேந்திரனும்.. யுகேந்திரனும்.. சௌதாமினியிடம் முறையிட்டார்கள்..

“என்னம்மா.. நீங்க நடக்கிறதையெல்லாம் பார்த்துக்கிட்டும்.. கேட்டுக்கிட்டும் பேசாம இருக்கீங்க..?”

“என்ன பேச மகி..? உன் அண்ணன் சொல்வதும் நியாயம்தானே…?”

“அந்த நியாயம் மகி அண்ணனுக்கு மட்டும்தானா அம்மா…? சுரேனுக்கு இல்லையா…?”

“அவனுக்கு கல்யாணம் ஆகவில்லை யுகே.. அதை நினைப்பில வைக்காம பேசினா எப்படி…?” சௌதாமினிக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது..

“தெரியும்மா.. உங்களுக்கு சின்ன மகன்தான் செல்லமகன்.. நானும்.. மகியண்ணாவும் தத்து மகன்கள்.. மகியண்ணா.. நீ உன் குடும்பத்துடன் கிளம்பு.. பிரபா.. நம்ம சாமான்களை பேக் பண்ணு.. நாமும் கிளம்புவோம்.. இது அப்பா வாழ்ந்த வீடு.. இந்த வீட்டில் அவர் பெற்ற பிள்ளைகளுக்கு மத்தியிலேயே பாரபட்சம் வந்து விட்டது.. அவர் வாழ்ந்த வீட்டிலேயே கடைசி வரைக்கும் நாமளும் வாழலாம்ன்னு நினைச்சோம் பாரு… அது நடக்காது போல.. நீ கிளம்பு..”

இதைச் சொன்ன யுகேந்திரனும் அசையவில்லை.. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மகேந்திரனும் அசையவில்லை.. அவர்களே அப்படியெனும் போது.. அவர்கள் தாலி கட்டிய மனைவிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. யாருக்கு வந்த விருந்தோ என்பதைப் போல.. அவர்கள் கைவிரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

சௌதாமினிக்கு மனம் தாளவில்லை.. அவள் பெற்ற பிள்ளைகள் தனிக்குடித்தனம் போவதா…? அதை அவள் பார்த்துக் கொண்டிருப்பதா…? மனம் துடிக்க பெரிய மகனை ஏறிட்டாள்..

“நரேன்…”

“அம்மா..”

“குருவிக் கூட்டைக் கலைச்சிராதேப்பா…”

நரேந்திரனுக்கு மனம் தாங்கவில்லை.. கடைசியில் எப்பேற்பட்ட வார்த்தைகளை அவனைப் பார்த்துச் சொல்லி விட்டாள் அவனைப் பெற்ற தாய்…

இதற்காகவா அவன் இத்தனை வருடமும் போராடினான்…?

“கூட்டைக் கலைச்சது நானில்லைம்மா.. அது தானாய் கலைஞ்சிருச்சு…”

“போனதை விடு நரேன்.. என் காலமிருக்கிற வரை என் பிள்ளைகள் என் கூடவே இருக்கனும்னு நான் ஆசைப்பட்றது தப்பாப்பா…?”

அது தப்பு என்று நரேந்திரனால் எப்படிச் சொல்ல முடியும்..? அவனுக்கு மட்டும்.. அவன் கூடப் பிறந்த தம்பிகளை குடும்பத்துடன் வெளியே துரத்த வேண்டுமென்ற ஆசையா…?

‘ஆனால்…?’ அவன் பார்வை வித்யாவின் மீது படிந்தது…

அவனின் காதல் மனைவியை அந்த வீட்டிற்கு உரிமையில்லாதவளாக மீனலோசனியும்.. பிரபாவதியும் ஆக்கி விடுவார்களே.. அதை அவனால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா..?

‘முடியாது…’ ஒரு கணவனாக அவன் மனம் கடினமானது..

“அம்மா.. இது பாகப் பிரிவினையில் என் பங்குக்கு வந்த வீடில்லை.. அப்பா என் பெயருக்கு எழுதி வைத்தது.. இது பரம்பரை வீடாக இருக்கலாம்.. ஆனா.. ஒன்னை நீங்க எல்லோரும் நினைவில் வைத்துக்கங்க.. இந்த அரண்மனையின் பேரிலயும் பலகோடி கடன் இருந்தது..”

“நரேன்…” செனதாமினி அதிர்ச்சியாகி விட்டாள்..

“ஆமாம்மா.. இத்தனை நாளாய் இந்த உண்மையை நான் வெளியே சொல்லலை.. கடனை அடைத்து இந்த அரண்மனையை நான் மீட்டேன்.. இந்த அரண்மனையின் மேலே எனக்கு மட்டும்தான் பரிபூரணமான உரிமையிருக்கு.. குடியிருக்கிற அரண்மனை வாழ்க்கையில சொந்தம் கொண்டாடுகிறவங்க.. அந்த அரண்மனை ஒரு காலத்திலே கடனில் பறிபோக இருந்தது.. என்பதையும் தெரிஞ்சு வைச்சுக்கட்டும்.. இது என் அரண்மனை.. என்னைப் பெற்ற தாய்க்கும்.. கட்டின மனைவிக்கும்.. எனக்குப் பிறக்கப் போகிற பிள்ளைகளுக்கும் மட்டும்தான் காலம் பூராவும் இந்த  அரண்மனையில் வாழ்கிற உரிமையிருக்கு… மத்தவங்க இருக்கலாம்.. அது விருந்தாளியாகத்தான்.. வீட்டுக்கு உரிமையானவங்களா இல்லை..” நரேந்திரன் முடிவாகக் கூறி விட்டான்..

சூடு.. சொரனை இருக்கிறவர்கள் என்றால் நரேந்திரனின் பேச்சைத் தாங்க முடியாமல் அந்த நொடியிலேயே வீட்டை விட்டுப் போயிருப்பார்கள்.. மீனலோசனியும்.. பிரபாவதியும்தான் அதை கிலோ என்ன விலை என்று கேட்பார்களே.. பிரபாவதி கூட கொஞ்சம் ரோசம் பார்ப்பாள்.. மீனலோசனி அசைந்தே கொடுக்க மாட்டாள்.. வெட்டி ரோசத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஒட்ட முடியுமா.. என்று கேட்பாள்.. அவளைப் பார்த்து பிரபாவதியும் வருகின்ற ரோசத்தை திருப்பி அனுப்பி விடுவாள்…

மகேந்திரனும்.. யுகேந்திரனும்.. ராஜா ராஜேந்திர பூபதியின் பிள்ளைகள்.. அவர்களுக்கு ‘சுரீர்’ என்றுதான் இருந்தது.. சொந்த வீடாக நேற்று வரை இருந்த வீட்டில்.. இன்று முதல் நீ விருந்தாளியாகத்தான் இருந்தாக வேண்டும் என்றால் எந்த மகன்தான் கேட்டுக் கொள்வான்..

‘கிளம்பு…’ என்று சொல்லத்தான் இருவரும் அவரவரின் மனைவிகளின் முகம் பார்த்தார்கள்.. அதில் தெரிந்த கடுமையில் சொல்ல நினைத்த வார்த்தை.. சொல்லாமலே தொண்டைக் குழிக்குள் நின்று போய் விட்டது..

“அப்படியே.. நாடகம் பார்ப்பதைப் போலவே இருக்கு..” சுரேந்திரன் தோள்களைக் குழுக்கினான்…

நரேந்திரனுக்கு சிரிப்பு வந்தது.. ஆனால் சிரிக்கவில்லை..

“உலகமே நாடக மேடைன்னு சும்மாவே அறிஞர் அண்ணா சொன்னார்…?” தாயைப் பார்த்துக் கேட்டான் சுரேந்திரன்..

நரேந்திரனைப் போல சௌதாமினியால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.. அவள் வாய் 

விட்டுச் சிரித்தபடி இளைய மகனின் காதைப் பிடித்துத் திருகினாள்..

“இதையெல்லாம் எங்கேயிருந்துடா பிடிப்ப…?”

“படிச்சதில் இருந்து பிடித்ததுதான்.. எப்படியோ.. பாகப்பிரிவினையில் கிடைத்த வீட்டிற்கு இவங்க இரண்டு பேரும் குடித்தனம் போகப் போறதில்லை…”

“உன் கல்யாணம் இருக்குடா சுரேன்..”

“எங்கேம்மா.. இருக்கு.. வாசலிலா…?”

“போடா போக்கிரி.. உனக்குப் பெண் கொடுக்க வருகிறவங்க.. நம்ம அரண்மனையின் ஒற்றுமையைத்தான் பார்க்கணும்..”

“அது பொய்யான ஒற்றுமைம்மா.. எங்க மனதுக்குள்ள வேற்றுமை ஆரம்பித்து வெகு காலமாகி விட்டது..”

“யார் வீட்டில்தான் பிரச்னை இல்லை…? வீட்டுக்கு வீடு வாசல்படிதான் சுரேன்..”

“இது வீடில்லைம்மா.. அரண்மனை..”

“உன் கல்யாணம் முடிகிற வரை குடும்பம் உடைய வேண்டாம்.. சுரேன்..”

“அது குடும்பத்தோட நிற்கட்டும்.. பேக்டரிபக்கம் வந்துவிடக் கூடாது.. எனக்கென்ன போச்சு.. தினம்தினம் இந்த நாடகங்களைப் பார்க்க வேண்டிய தலைவிதி எனக்கில்லை.. நான் அடுத்த வாரமே பாரினுக்குப் போறேன்..”

“எதுக்குடா….?”

“விட்ட படிப்பை முடிக்கத்தான்.. இங்கே என் சார்பா பெரியண்ணனும்.. பெரியண்ணியும் பேக்டரியைப் பார்த்துக்குவாங்க.. அதை மீறி பேக்டரியில் யாராவது கால் வைத்தாங்கன்னு வையுங்க.. சும்மாயிருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு என் பங்கு சொத்து முக்கியம்.. நான் பெரியண்ணனைப் போல தியாகியில்லை..”

“என்னடா சுரேன் இப்படிப் போசற…?”

“இவங்க இரண்டு பேரும் தெளிவானவங்கம்மா.. பாகப்பிரிவினையில வந்த வீட்டை உடனடியா 

கைப்பற்றி வாடகைக்கும் விட்டுட்டாங்க.. ஆனா.. பெரியண்ணனின் பங்கான இந்த அரண்மனையை 

விட்டு வெளியே போக மாட்டேங்கிறாங்க.. இது என் பங்குக்கு வந்திருக்கணும்.. அப்போத் தெரியும்… இந்த சுரேந்திரன் யாருன்னு…”

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link