Chapter 10
நதியோரம் நடந்த போது
தொலைவினிலே தொடுவானம்…
தொடுவான நிழல் கண்டு…
தொட்டுவிட மனதில் எண்ணம்…
நதியோரம் நான் நடந்த போது…
காலைப் பனியில் நனைந்த மலர்களைக் காணும் போது மனதில் புதுவிதமான உற்சாகம் பரவுவதை உணர்ந்தான் நரேந்திரன்.. மெலிதான விசிலுடன் பக்கத்தில் நடந்து வந்த வித்யாவை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.. அந்தப் பார்வையை இனம் கண்டு கொண்ட வித்யா முகம் சிவந்தாள்.. லேசான தடுமாற்றத்துடன் நிலம் பார்த்தவள்..
“என்ன…?” என்று கேட்டாள்…
“என்ன… என்ன…?” ஒன்றுமறியாதவனைப் போல அவன் கேட்டாள்..
‘கள்ளன்…!’
அவன் குறும்பை ரசித்தாள் வித்யா.. முதன் முதலாக அவள் நேரடியாகப் பார்த்தபோது நரேந்திரன் அவளைப் பார்த்த பார்வைக்கும்.. இப்போது பார்க்கும் பார்வைக்கும் இடையிலிருந்த வித்தியாசத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் உண்டானது..
‘இது எப்படி சாத்தியமானது..?’
அவளுக்குள் பிரமிப்பு எழுந்தது.. அவள் தொட்டுவிட முடியாத வானத்தைத் தொட்டு விட
மனதில் ஆசை கொண்டாள்.. அவனோ ராஜகுமாரன்… ராஜா.. அந்த அரசனின் மீது ஆசைப்பட்ட அவள் ஒரு சாமானியப் பெண்.. தாயில்லாத ஏழை.. தகப்பனிருந்தும் அவளது பிறந்த வீட்டில் அகதியாக்கப் பட்டவள்.. இருக்க இடமில்லாத.. படிக்க வழியில்லாத அநாதை.. உழைத்துப் பிழைத்து படித்தவள்…
அவள் எட்டாக் கனியான அவன் மீது காதல் கொண்டாள்.. அவன் தொட்டு விட முடியாத இமயம் போன்றவன் என்பதை அறிந்திருந்தும் அவன் மேல் ஆசை கொண்டாள்.. அந்தக் காதலையும் ஆசையினையும் மனதில் பூட்டி வைத்திருந்த அந்த பேதைப் பெண்ணின் கனவு ஒருநாள் நனவானது.. நிழலாக அவள் மனதில் வந்தவன் நிஜமாக அவள் சொந்தமாக ஆனான்..
வித்யாவின் உடலில் பட்டு அழுந்திய தாலிச்செயினை அவளின் விரல் அன்புடன் பற்றி வருடியது.. இதைத் தந்தவன் அவள் மனதில் ஆராதித்த அவளுடைய நரேந்திரன் என்ற நினைவில் அவள் மனதில் பிரியம் பொங்கியது..
அவளது செய்கையைக் கவனித்துக் கொண்டிருந்த நரேந்திரனின் புருவங்கள் உயர்ந்தன.. அவளைத் துளைப்பதைப் போலப் பார்த்தவனின் பார்வை அவளின் மனதைப் படிக்க முயன்றது..
“என்னடி…?”
“ஒன்.. ஒன்னுமில்லையே…” வித்யா தடுமாறினாள்..
“ஒன்னுமில்லாததுக்கா இத்தனை தடுமாற்றம்…? ஊம்..?” அவன் உல்லாசமாகச் சிரித்தான்…
“ஒன்னுமில்லைன்னா.. ஒன்னுமில்லைதான்..” வித்யா அவன் முகம் பார்க்க முடியாமல் முகம் சிவந்தாள்..
நரேந்திரனின் மனதில் அவள்… மீதான காதல் பெருகியது.. அவனது ஒரு சிறு பார்வையில் மயங்கித் தலை குனியும் அவளின் மயக்கம் அவன் மீதானது என்பதில் அவனுக்குள் கர்வம் உண்டானது.. அவளுடன் அவன் கூடியிருந்த பொழுதுகளை அவன் நினைத்துப் பார்த்தான்.. அவன் மீதான பிரியத்தை அவள் வெளிப்படுத்திய அந்தத் தருணங்களை நினைத்துப் பார்த்தான்.. அவளது பிரியத்தின் வேகத்தில் மூச்சுத்திணறிய போது அவன் உள்ளம் நிறைந்த வினாடிகளை நினைத்துப் பார்த்தான்..
‘இது தான் காதல்…’ அவனுக்குள் அவள் மீதான வாத்சல்யம் அதிகரித்தது..
“பார்த்த முதல் நாளே – உன்னைப்
பார்த்த முதல் நாளே…”
வித்யாவுக்கு பாட வேண்டும் போலத் தோன்றிவிட அவள் மெலிதான குரலில் பாடினாள்…
அன்றைய விடியல் அவளுக்குப் பிடித்தமானதாக அமைந்திருந்தது.. காலை நேர உலாவலுக்கு எழுந்தவளை எழுந்து கொள்ள முடியாமல் நரேந்திரன் கரம் இழுத்து அணைத்துக் கொண்டதில் அவளுக்குள் ரம்யம் உருவாகியிருந்தது.. குளித்த பின் தோட்டத்தில் நடக்கக் கிளம்பியவளுடன் கூடவே அவனும் நடக்க வந்ததில் அவள் மனதின் ரம்யம் அதிகமானது.. தோட்டத்து மலர்களின் பனியில் நனைந்த இதழ்கள் அதை மேலும் அதிகரிக்க வைத்தது.. போதாக் குறைக்கு அவளுடைய நரேந்திரனின் ரகசியப் பார்வை அவளை எங்கோ அழைத்துச் சென்றது.. அவனை நேரடியாய் பார்த்த முதல் நாளை நினைத்தபடி அவள் மெல்லப் பாட ஆரம்பித்தாள்…
“காட்சிப் பிழை போலவே – உணர்ந்தேன்
காட்சிப் பிழை போலவே…”
நரேந்திரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளின் காதல் மழையில் நனைந்தவனால் அந்தப் பாடலின் பொருளுக்குள் புதைந்து கொள்ள முடிந்தது..
“ஓர் அலையாய் மாறி
எனை அடித்தாய்…
கடலாய் மாறி
எனை இழுத்தாய்…
என் கனாவில் கூட உன் முகம்
உன் முகம்.. என்றும் மறையாதே…”
‘உண்மை தான்…’ நரேந்திரன் நினைத்துக் கொண்டான்..
‘இவளின் கனவிலும் நான்தான்.. இருப்பேன்…’
அந்த நிச்சயத்தில் அவனின் நெஞ்சம் நனைந்தது.. இப்படியொரு காதலை அவன்மேல் வைத்திருக்கும் வித்யாவினால் அவனைத் தவிர வேறு ஒருவனின் கரம் பிடிக்க முடிந்திருக்குமா…?
‘முடியாது…’ உறுதியுடன் அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்..
அவனைத் தவிர வேறு ஒருவனை அவள் மனதாலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்..
நரேந்திரனின் மனதில் கார்த்திகாயினி தேவியின் நினைவு வந்தது…
அவளும் அவனைக் காதலிப்பதாகத்தான் சொல்லிக் கொண்டாள்.. அதற்கு முன்னால் அவனும் அவளைப்
போல ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்தானா என்பதை உறுதி செய்து கொண்டாள்..
‘ஒரு வேளை.. நான் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவனாக இல்லாமல் இருந்திருந்தால்…?’
நிச்சயமாக நரேந்திரனிடம் அவள் காதல் சொல்லியிருக்க மாட்டாள்.. இதை நரேந்திரன் அறிவான்..
கார்த்திகாயினியின் மனதில் வம்சப் பெருமை உண்டு.. அதைத் தாண்டி மற்ற எதையும் நினைத்துக்
கூடப் பார்க்க மாட்டாள்.. நரேந்திரன் மணி முத்தாறு ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.. பார்க்க அழகாக.. கம்பீரமாக இருந்தான்.. வெளிநாட்டில் படித்தான்…
இந்தக் காரணங்களினால் மட்டுமே அவள் நரேந்திரனைக் காதல் சொல்லத் தகுந்தவனாகத் தேர்ந்தெடுத்தாள்.. இதில் ஒன்று குறைந்திருந்தாலும் அவள் அவனைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க
மாட்டாள்..
ஆனால் வித்யா அப்படியில்லை.. அதை நரேந்திரன் அறிந்திருந்தான்.. பூர்ணிமாவின் பின்புலத்தைப் பற்றி பெரிதாக.. பிரமிப்பாக வித்யா பேசியதேயில்லையென்று பூர்ணிமா சொன்னது இன்னமும் அவன் நினைவில் நின்றது..
அவனிடமும் அவள் அப்படித்தானே இருந்தாள்..? நீ ராஜா மகனாய் இருந்தால் எனக்கென்ன வந்தது.. என் முன்னால் சிகரெட் பிடிக்காதே.. அப்படிப் பிடித்தபடி என்னுடன் பேச முயன்றால் நான் அதை அனுமதிக்க மாட்டேன்.. எழுந்து போய் விடுவேன் என்று சொன்னவள் அல்லவா அவள்..!
என்றுமே நரேந்திரனை நரேந்திரனாகத்தான் அவள் பார்த்திருக்கிறாள்.. மிகப் பெரும் கோடிஸ்வரன் என்றோ.. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்றோ நினைத்தும் பார்த்ததில்லை..
அவளுக்கு நரேந்திரன் என்றால் உயிர்… அந்த நரேந்திரனை அவனுக்காக மட்டுமே அவள் காதலித்தாள்.. அவனுக்காக அவளுடைய லட்சியத்தையும் மறந்தாள்.. வாழ்க்கைப் போராட்டத்தையும் மறந்தாள்.. அவளுடைய இன்னல்களை மறந்து.. அவனுடைய இன்னல்களை மட்டும் நினைவில் வைத்து அவனைப் பின் தொடர்ந்து மணி முத்தாறுக்கு வந்தாள்.. அவனை விட இளையவனான கவர்ச்சியான சுரேந்திரனின் மனைவியாகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தும் சுரேந்திரனின் முகம் பார்க்காமல் அதைத்
தூக்கி எறிந்தாள்…
‘வித்யா…!’ அவன் மனம் நெகிழ்ந்தது.. அந்த நெகிழ்வில் அவன் உதடுகள் தன்னிச்சையாகப் பாடின..
“காட்டிக் கொடுக்கிறதே – உன்
கண்கள் காட்டிக் கொடுக்கிறதே..”
வித்யாவின் விழிகள் அவனை ஏறிட்டன.. அதில் தெரிந்த காதலில் நரேந்திரன் நெகிழ்ந்துருகினான்..
“காதல் வழிகிறதே – உன் கண்ணில்
காதல் வழிகிறதே…”
வித்யாவின் கைபிடித்து அவன் இழுத்த வேகத்தில் பூக்குவியலாய் அவன் மார்பில் சாய்ந்தாள் அவள்.. நரேந்திரனின் கரங்கள் அவளை வளைத்துக் கொள்ள அவளின் கரங்கள் அவன் முதுகில் பரவிப்படர்ந்தன.. அவளின் அணைப்பு தந்த நெருக்கத்தில் அவள் தோள் வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டான் அவன்..
“உன் அலாதி அன்பினில்
நனைந்தபின்.. நனைந்த பின்…
நானும் மழையானேன்….”
அவள் காதோடு அவன் பாடினான்…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.