Chapter 11
நதியோரம் நடந்த போது
பூவாசம்தனை நுகர்ந்தேன்…
பூவைத் தேடிப் போனபோது…
பூவையவள் முகம் கண்டேன்..
-நதியோரம் நான் நடந்த போது-
காதோரமாக ஒலித்த அவன் பாடலில் மூழ்கியவளாக விலக மறந்து வித்யா சிலையாக
நின்றதை மாடியறையின் ஜன்னலில் இருந்து பார்த்த மீனலோசனியின் வயிறு எரிந்தது..
‘ம் ஹீம்… காதலித்தேன் என்று தான் பெயர்.. ஒரு நாளாவது இந்த மனிதர் இப்படிக் கட்டித் தழுவியிருப்பாரா…? இதிலும் அந்த வித்யாதான் கொடுத்து வைத்தவள்…’
அவள் காதில் புகை வந்து கொண்டிருக்க அதை அறியாதவனாக மகேந்திரன் அவளை அழைத்தான்..
“மீனு.. ஏய்ய் மீனு…”
அவன் சும்மா ‘மீனு…’ என்று அழைத்ததோடு நிறுத்தியிருந்தாலாவது அவள் பேசாமல் இருந்திருப்பாள்.. கூடவே.. ‘ஏய்ய் மீனு…’ என்று அழைத்ததும் மகாக் கடுப்பாகிக் போனாள்…
“சும்மா மீன் பிடிக்கிறவனைப் போலவே பேசி வைக்காதீங்க.. சொல்லிட்டேன்…”
‘என்ன இவ.. எப்பவும் போலத்தானே இவளை மீனுன்னு கூப்பிட்டேன்.. அதுக்கு எதுக்கு இந்த
அளவுக்கு கோவிச்சுக்கிறா…?’ மகேந்திரனுக்குப் புரியவில்லை..
“ஏண்டி.. உன்னைப் புதுசாவா மீனுன்னு கூப்பிடறேன்…? இப்படிக் கூப்பிட வேணாம்ன்னா வேற எப்படிக் கூப்பிடறது…? வேனும்னா லோசனின்னு கூப்பிடவா…?”
“சசிக்கலை.. என்னவோ லோசன்னு சொல்றதைப் போல இருக்கு…”
“வேற என்னதாண்டி செய்கிறது..? உனக்குப் புதுசா பெயர் வைச்சுக் கூப்பிடவா…?”
“ஏன்…? என் பெயருக்கு என்னவாம்…?”
“உனக்கு என்னதாண்டி பிரச்னை…?”
“என்னவோ பிரச்னை.. அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போகிறீங்க…?”
“ஏண்டி… காலையிலேயே மனுசனை மூட் அவுட் ஆக்கற…? உனக்கு என்ன ஆச்சு…?”
மீனலோசனியிடம் கேட்டபடி ஜன்னலருகே வந்த மகேந்திரனும் தோட்டத்தைப் பார்த்து விட்டான்.. இப்போது நரேந்திரனும் வித்யாவும் விலகியிருந்தார்கள்.. ஆனாலும் கை கோர்த்தபடி ஆழ்ந்த குரலில் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்…
“ம்ம்ச்.. இது வேறயா…?” மகேந்திரன் அலுத்துக் கொண்டான்..
“உங்களுக்கெதுக்கு இத்தனை சலிப்பு…?” மீனலோசனி எரிச்சல் பட்டாள்…
“அதான் கல்யாணம் ஆகிருச்சே.. இன்னமும் காதல் ஜோடிகளைப் போல பின்னிப் பிணையனுமா…?” மகேந்திரன் கோபப் பட்டான்…
“கல்யாணம் முடிந்தால் காதல் காணாமல் போயிரனுமா…? ம்ஹீம்.. வித்யா கொடுத்து வைத்தவ..”
மீனலோசனியின் அனல் பெருமூச்சில் மகேந்திரனின் மனதில் நரேந்திரனின் மீது வன்மம் மூண்டது அந்த வன்மத்தை மேலும் அதிகமாக்கினாள் மீனலோசனி…
“இங்கேயும் காதல் பண்ணினோம்ன்னுதான் பேரு..”
“மீனா…”
“ஏன் கத்தறிங்க…? இல்லாததையா சொல்லிட்டேன்…?”
“உனக்கு என்னடி குறை வைத்தேன்…?”
“ம்ம்.. இதிலொன்னும் குறைச்சலில்ல…”
“வேற எதில்தான் குறை…? சொல்லித் தொலையேன்…”
“இது… இது… இதுதான் குறை… பெண்டாட்டி கிட்டப் பேசறது மாதிரியா பேசி வைக்கறிங்க…? என்னவோ எதிரிக்காரியிடம் பேசறதைப் போலப் பேசி வைத்தா என்னன்னு சொல்றது…?”
“நீ தானே அப்படிப் பேச வைக்கிற…?”
“எல்லாத்துக்கும் நான்தான் காரணமா…? கீழே தோட்டத்துப் பக்கம் எட்டிப் பாருங்க…”
“அதான் பார்த்தாச்சே…”
“அங்கே பெண்டாட்டி கிட்டக் கொஞ்சிக் குழாவுகிறாரே உங்க அண்ணன்.. அவருக்கு யார் சொல்லிக் கொடுத்தது…?”
“எதைடி…?”
“ம்ம்ம்…? அதையும் நான்தான் சொல்லனுமா…? பெண்டாட்டிகிட்டக் கொஞ்சறதை யார் சொல்லிக் கொடுத்தது…? அந்த வித்யாதான் சொல்லிக் கொடுத்தாளா…?”
மகேந்திரனால் மீனலோசனி நரேந்திரனைப் பற்றிப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவன் மனதிற்குள் புகைச்சல் ஏற்பட்டாலும் அவனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.. அதனால் வேறுவகையில் தனது கோபத்தை அவன் வெளிப் படுத்தினான்..
“நீ எதுக்கு அங்கே பார்த்த…?”
“எங்கே…?”
“தோட்டத்தை.. அதான் புருசனும் பெண்டாட்டியும் கொஞ்சிக் குழாவிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுதில்ல…? அதுக்கப்புறமும் தோட்டத்தை பார்த்துக்கிட்டு நிற்கிறயே.. இது என்னடி பழக்கம்…?”
மீனலோசனிக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவள் ஒன்றைச் சொல்லப் போனால்.. அது வேறு மாதிரி திரிந்து விட்ட நிலையில் அவள் பேசமுடியாமல் மௌனியானாள்..
இது மகேந்திரன் கையாளும் யுக்திகளில் ஒன்று.. ஏதேனும் ஒரு விவகாரத்தில் அவன் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்.. வேறு ஒரு விவகாரத்தில் எதிராளியை நுழைத்து அவர்களை வாயடைத்துப் போகச் செய்யும் வித்தையில் அவன் கை தேர்ந்தவன்.. அவனால் அந்த வித்தையைப் பிரயோகிக்க முடியாது போனது நரேந்திரனிடமும் சுரேந்திரனிடமும் மட்டும்தான்.. அவர்கள் இருவருமே மகேந்திரனின் அந்த யுக்தியை தெளிவாக அறிந்தவர்கள்.. அதை முறியடிக்கும் வித்தையில் கை தேர்ந்தவர்கள்… இப்போது கூடுதலாக வித்யாவும் அந்த வரிசையில் சேர்ந்திருந்தாள்…
பேச முடியாமல் போன மீனலோசனி கணவன் மட்டம் தட்டி விட்ட கோபத்தில் ஜன்னலை விட்டு
அகல முயன்றாள்… அந்த நேரம் பார்த்து சௌதாமினி தோட்டத்துப் பக்கம் போவது அவள் பார்வையில் பட்டுவிட்டது…
சற்று முன்னள்தான் கணவன் அவளை மட்டம் தட்டிப் பேசினான் என்பதை மறந்து போனவளாக..
“என்னங்க.. உங்க அம்மா…” என்றாள்…
“எங்கேடி…?” மகேந்திரன் எட்டிப் பார்த்தான்…
தோட்டத்தில் ரகசியம் பேசிக் கொண்டிருந்த நரேந்திரனும்… வித்யாவும் சௌதாமினியின் வருகையினால் விலகி நிற்பதைக் கவனித்த மகேந்திரன்…
“இதை முதலிலேயே செய்து தொலைத்- திருக்கலாம்..” என்று எரிச்சல் பட்டான்..
மீனலோசனிக்கு எதையாவது சொல்ல வேண்டும் போலப் பற்றிக் கொண்டு வந்தது.. ஆனால்.. அடுத்த மட்டம் தட்டலுக்கு ஆளாக விரும்பாதவளாக தோட்டத்தில் கவனத்தை செழுத்தினாள்.. சௌதாமினி அங்கே இருந்த சாய்வான சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொள்ள.. பக்கத்தில் நரேந்திரனும்.. வித்யாவும் அமர்ந்து பேச ஆரம்பித்ததைக் கவனித்தவளுக்கு ஆத்திரம் உண்டானது…
“இதென்னங்க அநியாயமா இருக்கு…? இது குடும்பமா.. இல்லை வேறு எதுவுமா…?”
“வாய் நீளுது மீனா… ஜாக்கிரதை…”
“இதுக்கு மட்டும் ரோசம் வந்துருமே.. இங்கே குத்துக்கல்லாட்டம் நீங்களும்.. நானும் இருக்கிறோம்..”
“யுகேயையும்.. பிரபாவையும் விட்டுட்டியே..”
“இதை மட்டும் சொல்லிருங்க.. அங்கே உங்க அண்ணனிடம் மட்டும் ரகசியம் பேசும் உங்க அம்மாவை எதுவும் கேட்டுகாதீங்க..”
“அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம நாமா ரகசியம்ன்னு முடிவு கட்டி விடக் கூடாது மீனா…”
“அங்கே பாருங்க.. அந்த மூணு பேரும் எப்படி வட்ட மேஜை மாநாடு போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு..
அது ரகசியம்ன்னு உங்களக்குத் தோணலையா…?”
“அப்படியா சொல்கிற…?”
மனைவியின் சொல்படி மகேந்திரன் தோட்டத்தை உற்றுப் பார்த்தான்.. உன்னிப்பாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த அந்த மூவரின் முகத்திலும் இருந்த தீவிரம் ‘அப்படித்தான்…’ என்றது…
“ஆமாம்டி மீனா.. அவங்க என்ன பேசிக்கிறாங்க…?”
இப்படிக் கேட்ட கணவனை எரிதணல் கொண்டு வரவா என்பதைப் போல அனல் பார்வை பார்த்தாள் மீனலோசனி..
“என்னைக் கேட்டா… எனக்கென்ன தெரியும்…? வேணும்னா குறி சொல்கிற குறத்தியை மணி முத்தாறு மலையில இருந்து வரச் சொல்லி குறிகேட்டுச் சொல்லவா..?”
இப்போது வாய் மூடி மௌனியாவது மகேந்திரனின் முறையாகிவிட்டது.. மனைவியைப் பார்ப்பதற்குப் பதில் தோட்டத்தைப் பார்ப்பது உசிதம் என்று மனதிற்குத் தோன்றிவிட தோட்டத்துப் பக்கம் பார்வையைத் திருப்பினான்..
‘இவ மூஞ்சியைப் பார்க்கிறதுக்கு பச்சைப் பசேல்ன்னு இருக்கிற செடி.. கொடியையாவது பார்க்கலாம்.. மனசுக்கு குளிர்ச்சியா இருக்கும்…’
ஆனால் மகேந்திரனின் பார்வை பசுமையான செடி கொடியின் மீது படியாமல் அதனருகே அமர்ந்திருந்த தாயின் மீதும்.. அண்ணனின் மீதுமே படிந்தது..
‘அப்படி என்னதான் பேசிக்கிட்டு இருக்காங்க..’
அதையறியும் ஆவல் மனதில் குறுகுறுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜன்னலை விட்டு அகன்று விட்டான்.. இல்லாவிட்டால் மீனலோசனி இன்னும் கொஞ்சம் குத்திக் காட்டிப் பேசிவிடுவாளே..
‘என்னவா இருக்கும்…?’
அன்று முழுவதும் அந்த மர்மம் அவன் மண்டையைப் போட்டுக் குடைந்தது.. அன்றைய இரவில் அந்த மர்மத்தை உடைத்தாள் மீனலோசனி…
“உங்க சின்னத்தம்பி காதலிக்கிறாராம்..”
“யாரைடி சொல்கிற…? சுரேந்திரனையா சொல்கிற…?”
“பின்னே.. சின்னத்தம்பி பிரபுவையா சொல்வேன்..?”
இப்படிப் பேசின மனைவியை என்ன செய்வது என்ற யோசனையுடன் பற்களை நறநறத்தான் மகேந்திரன்…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.