Chapter 12
நதியோரம் நடந்த போது
நான்கண்ட சொர்க்கம் நீதான்…
என் விரல் கோர்த்து கதைசொன்னாய்..
என் மன வீட்டில் குடி புகுந்தாய்..
-நதியோரம் நான் நடந்தபோது-
“சுரேந்திரனா…?”
சௌதாமினி சொன்ன செய்தியைக் கேட்டதும் நரேந்திரனும் இந்தக் கேள்வியைத்தான் கேட்டான்..
“நம்ம சுரேந்திரனேதான்..”
கலகலத்துச் சிரித்த சௌதாமினியின் முகத்தி லிருந்த சந்தோச அலைகளைப் பார்த்த போது இவளுக்குத்தான் சுரேந்திரனின் மீது எவ்வளவு பாசம் என்ற எண்ணம் வித்யாவின் மனதில் எழுந்தது…
சௌதாமினி நரேந்திரனின் திருமணத்தின் போது சந்தோசப் பட்டாள்தான்.. ஆனால் இந்த அளவுக்கு அவள் சந்தோசப் படவில்லை என்பது ஏனோ அந்த நொடியில் வித்யாவின் ஞாபக அலையில் எழுந்தது..
மூத்த மகனின் திருமணத்தை மறந்து.. அவன் மீது கடமையை மட்டுமே சுமத்தி விட்டு அவன் நிழலில் மற்ற பிள்ளைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் என்று அவள்மீது வித்யா கூறிய குற்றச் சாட்டு மறைந்து விட்டது என்ற நிம்மதியை மட்டுமே சௌதாமினியின் முகம் அன்று பிரதிபலித்ததை வித்யா நினைத்துப் பார்த்தாள்…
அதன்பின் பூர்ணிமாவின் திருமணம் பிரபாவதியின் அண்ணனான பிரகாஷீடன் நடந்த போது.. சௌதாமினியின் முகத்தில் இதே ஆனந்தம் நிலவியது..
“கேட்டியா வித்யா…”
நரேந்திரனின் கேள்வியில் வித்யாவின் சிந்தனை அலைகள் அறுந்தன.. அவள் சிந்தனை கலைந்தவளாக நரேந்திரனின் முகத்தைப் பார்த்தாள்…
“என்ன சொன்னீங்க…?” இப்படிக் கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தான் நரேந்திரன்..
“என்ன யோசனையில் இருக்கிற வித்யா…? நம்ம சுரேன் காதல் செய்கிறானாம்…”
“ஓ.. அப்படியா…?” வரவழைத்துக் கொண்ட ஆச்சரியத்துடன் கேட்டாள் வித்யா…
“அப்படியேதான்…” உற்சாகமாக பதில் சொன்னான் நரேந்திரன்…
தங்கை.. தம்பிகளின் வாழ்வில் அவனுக்கிருக்கும் அக்கறை குறித்த பாராட்டு வித்யாவின் மனதில் எழுந்தது.. அவனது மனைவியாக அவனது அக்கறையில் பங்கேற்கும் பொறுப்பு அவளுக்கிருப்பதை உணர்ந்தவளாக வித்யா லேசாகச் சிரித்தாள்.. அதோடு சுரேந்திரன் நியாயமானவன் என்ற பிரியமும் அவளுக்குள் எழுந்தது..
சுரேந்திரனின் வாழ்வு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்துக் கொண்டாள் வித்யா.. அந்த நினைவுடனே சுரேந்திரனின் காதலியைப் பற்றிய விவரங்களை அவள் விசாரித்தாள்…
“பெண் யாராம்…?”
அவளது கேள்விக்கு முகம் முழுவதும் பூரிப்புடன் சௌதாமினியே பதில் சொன்னாள்…
“மதன்பூர் சமஸ்தான இளவரசியாம்.. நான் நினைக்கவே இல்லை வித்யா.. எங்கள் ராஜ பரம்பரைக்கு ஏற்ற பெண்ணை சுரேந்திரன் தேர்வு செய்வான் என்று..”
சௌதாமினியின் பதிலில் வித்யாவின் மனதில் அடி விழுந்தது.. அவள் மனதில் சிறிய வெற்றிடம் உருவானது.. அந்தக் குடும்பத்தில் அவளுக்கு இடமில்லை என்பதைப் போல அவள் உணர்ந்தாள்.. அதை உணராதவளாக சௌதாமினி பேசிக் கொண்டே போனாள்…
“இந்த சுரேந்திரன் இருக்கானே.. இவன் சரியான விளையாட்டுப் பிள்ளை.. நிச்சயமாக இவன் நம் ராஜவம்சத்துப் பெண்களில் ஒருத்தியை கை நீட்ட மாட்டான் என்று நான் நினைத்தேன்.. அவனும் அப்படித்தான் இருப்பான்.. அதனால்தான் அவன் உன்னைச் சொல்லவும் எனக்கு பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை…”
இப்போது எதற்காக இந்தப் பேச்சு என்ற நினைவில் வித்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. நரேந்திரனுக்கும் அதே எண்ணம்தான் என்பது அவன் முகச் சுருக்கத்திலிருந்து தெரிந்தது.. சௌதாமினியின் உற்சாகம் மற்றவர்களின் மனநிலையை உணராததாக இருந்தது.. அவள் பொழியும் மழையைப் போலப் பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டேயிருந்தாள்..
“நரேந்திரன் வீட்டுக்கு மூத்தவன்.. படிக்கும் போதே கிரண்பூர் சமஸ்தான இளவரசியைக் காதலித்தவன்.. இவன்தான் எங்கள் பரம்பரைக்குப் பொருந்ததமாக ராஜ வம்சத்துப் பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வான் என்று நினைத்தேன்..”
‘அடி தாங்கா உள்ளமீது இடி தாங்குமா’ என்று கவிஞர் சொன்னது இதைத்தானா என்று மனதிற்குள் அரற்றினாள் வித்யா…
அவளுடைய நரேந்திரனின் முதல் காதல் அவள் மீது ஏற்படவில்லை.. இந்த உண்மை அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது..
அவன்.. அவனுடைய ராஜ வம்சத்தைப் போலவே ராஜ வம்சத்தில் பிறந்த கிரண்பூர் சமஸ்தான இளவரசியான கார்த்திகாயினி தேவியைக் காதலித்தவன்.. சந்தர்ப்ப சூழ்நிலையால்.. விதி வசத்தால் காதலியுடன் சேர அவனால் முடியாமல் போய் விட்டது.. அதன் பின் வாழ்வின் போக்கில் ஓர் நாள் வித்யாவைச் சந்தித்தான்.. அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டான்..
ஒருவேளை.. அவனும் கார்த்திகாயினியும் பிரியாமல் இருந்திருந்தால்…?
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கினாள் வித்யா…
இந்த வாழ்வு கார்த்திகாயினி விட்டுக் கொடுத்த வாழ்வா…? அவளுடைய நரேந்திரன் அவளுக்கு மட்டுமே சொந்தமானவனாக இல்லையா…?
இடியை அவள் மனதில் இறக்கிய சௌதாமினி அதைப் புரிந்து கொள்ளாதவளாக பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்..
“கடைசியில் பார்த்தால் நரேந்திரன் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டான்.. சுரேந்திரனோ எங்களைப் போல ராஜ பரம்பரையைச் சேர்ந்த பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லுகிறான்.. இறைவனின் விளையாட்டை என்னவென்று சொல்வது..?”
எதுவும் சொல்ல முடியாதவளாக மௌனித்தாள் வித்யா..
“அந்தப் பெண் சுரேந்திரன் கூடப் படித்துக் கொண்டிருந்தாளா..?” நரேந்திரன் கேட்டான்…
“ஊஹீம்.. அப்படியில்லையாம்.. நானும் உன்னைப் போல்தான் முதலில் நினைத்தேன்.. என்னடா சின்னவனும்.. நரேந்திரனைப் போலக் கூடப் படித்த பெண்ணைக் காதலித்திருக்கிறானோ என்ற நினைவு வந்தது.. அப்புறம் பார்த்தால் சுரேந்திரன் அப்படியில்லை யென்கிறான்…”
சௌதாமினி நரேந்திரனின் முதல் காதலைப் பற்றிய நினைவுகளிலிருந்து வெளியே வரவே மாட்டாளா என்றிருந்தது வித்யாவிற்கு…
அவளுக்கு மனம் தாளவில்லை.. அவளும் மனுஷிதான்.. அவள் மனம் இரும்பால் செய்ததில்லை.. அதுமென்மையானது.. ஈரமானது.. அந்த மனதில் நரேந்திரனுக்கு மட்டுமே இடமிருந்தது.. அப்படிப் பட்டவளுக்கு நரேந்திரனின் முதல் காதலைப் பெறும் பாக்கியம் ஏன் இல்லாமல் போனது..?
“அவள் பெயர் நிவேதிதா தேவியாம்.. மதன்பூர் மகாராஜாவின் இளைய மகளாம்.. பார்க்க அழகாக இருப்பாளாம்.. பாரின் டூர் வந்திருந்தாளாம்.. வந்த இடத்தில் யதேச்சையாக சுநேரந்திரனைப் பார்த்திருக் கிறாள்.. முதல் பார்வையிலேயே நம் சுரேனை அவளுக்குப் பிடித்து விட்டதாம்.. நம் சுரேனை யாருக்குத்தான் பிடிக்காது..?” சௌதாமினியின் வார்த்தைகளில் பெருமை தொனித்தது…
“அதைச் சொல்லுங்க.. அப்ப.. அந்தப் பெண்தான் சுரேனிடம் காதல் சொன்னாளா..?” நரேந்திரன் சிரித்தான்..
“அப்படித்தானாம்.. நம்ம ஆள் உடனே சரி கொடுக்க வில்லையாம்…”
“இதைப் பாருடா…”
“உனக்கு என்மேல் காதல் வந்திருக்கலாம்… ஆனா எனக்கும் உன்மேல அதைப் போல காதல் வரணுமில்லையா..? அதனால கொஞ்சநாள் பழகிப் பார்த்துவிட்டு முடிவு சொல்கிறேன்னு சொன்னானாம்…”
“இங்கே பாரு வித்யா.. இவன் பாரினுக்குப் போய் பழகிப் பார்க்கலாமான்னு கேட்டிருக்கான்…”
நரேந்திரனின் பேச்சிற்கு வித்யா மெதுவாக சிரித்து வைத்தாள்… தாய்க்கும்.. மகனுக்கும் இடையில் நடக்கும் பேச்சில் அவளையும் இழுத்து விட நரேந்திரன் முயல்வது அவள் மனதிற்குப் புரிந்தது.. அவள் மீதான அவனின் கவனம் குறித்த இதம் அவள் மனதில் பரவியது.. அவள் மனதிலிருந்த தனிமையுணர்வு மறைய ஆரம்பித்தது.. நரேந்திரனுக்காக அவளும் பேச்சில் கலந்து கொண்டாள்…
“இதென்னங்க இப்படிக் கேட்டுட்டிங்க.. என்ன தான் பாரினுக்குப் படிக்கப் போனாலும்.. மண்வாசனை மறந்து போகுமா..? அதான் நம்ம வீட்டு சின்னவர்.. சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பழகிப் பார்க்கலாம்ன்னு சொல்லியிருப்பார்…”
வித்யா கலகலப்பாக பதில் சொன்னதும் நரேந்திரனின் முகம் மலர்ந்தது.. அவனுக்கு அவளின் மனதைத் தெரியும்.. அதன் சுணக்கம் தெரியும்.. அவளின் முகம் லேசாக மாறினாலும்.. அதை வைத்து அவள் மனதை அவன் கண்டு பிடித்து விடுவான்…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.