Chapter 14

0Shares

நதியோரம் நடந்த போது..

காலடியில் சுடு மணல்தான்..

நீர் தன்னில் பாதம் நனைத்தால்..

நீராக அங்கே நீயிருந்தாய்…

-நதியோரம் நான் நடந்த போது-

மதன்பூரின் இளவரசியான நிவேதிதா தேவியின் கண்களில் அலட்சியமும்.. மிடுக்கும் ததும்பி 

வளைந்தன.. முதல் பார்வையிலேயே அவள் ஆணவத்தில் மீனலோசனியையும்.. பிரபாவதியையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவாள் என்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொண்டார்கள்.. ஆனாலும் 

அவர்கள் அதைப் பொருட் படுத்தாமல் முகம் நிறைய மகிழ்வோடு அவளை வரவேற்றதிற்கு காரணம் 

இருந்தது…

அது.. அந்த நிவேதிதா மணி முத்தாறு அரண்மனையில் காலடி வைத்தவுடன் அவளுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வித்யாவை தூசு போல அலட்சியமாக நோக்கினாள் என்பது..

சுநேரந்திரன் வெளிநாட்டுப் படிப்பை முடித்து விட்டு மணி முத்தாறுக்குத் திரும்பிவிட்டான்.. தினமும் பேக்டரிக்கு போய் வர ஆரம்பித்தான்.. அவனிடம் நிவேதிதாவைப் பற்றிக் கேட்கும்படி சௌதாமினி சொன்னதால் நரேந்திரனும் கேட்டான்..

“நெக்ஸ்ட் வீக்.. அவளோட பேமிலி இங்கே வருகிறாங்கண்ணா..” என்றான் சுரேந்திரன்…

“என்னடா இது..? பெண் வீட்டுக்குத்தானே நாம் முதலில் போகனும்..?” நரேந்திரனின் புருவங்கள் ஏறின..

“பெண் பார்க்கத்தான் போகனும்.. நான்தான் பெண்ணைப் பார்த்துட்டேனே…”

“அந்தப் பெண்ணும் மாப்பிள்ளையைப் பார்த்திருக்கும் தானே…?”

“ஆமாம்.. அதுக்கென்ன..?”

“அப்புறம் எதுக்காகடா அவங்க மாப்பிள்ளை பார்க்க வருகிறாங்க..?”

நரேந்திரன் சுள்ளென்ற கோபத்துடன் கேள்வி கேட்டான்.. மூத்தவனும்.. கடைசித் தம்பியும் மோதிக் கொள்வதைப் பார்க்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசை கொண்டிருந்த மகேந்திரனும்.. யுகேந்திரனும் 

அந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் கண்கொட்டாமல் பார்த்தார்கள்.. கூடப் பார்வையிட அவர்களின் துணைவிகளையும் கண் சமிக்ஞையில் அருகே அழைத்துக் கொண்டார்கள்…

சௌதாமினிக்கு நரேந்திரனின் கோபம் குறித்து கவலை எழுந்தது.. அவள் மூத்த மகனை சமாதானப் படுத்த முயன்றாள்…

“அதை மாப்பிள்ளை பார்க்க வருகிறாங்கன்னு நாம ஏன் நினைக்கனும் நரேந்திரா..?”

“இவன் அப்படித்தானேம்மா சொல்கிறான்..?”

“அப்படியா சொன்னான்..? என்ன சுரேன்.. நீ அப்படியா சொன்ன..?”

“பெண் பார்க்கத்தானே பெண் வீட்டுக்குப் போகனும்..? நான்தான் பெண்ணைப் பார்த்துட்டேனேன்னு சொன்னதை அண்ணன் அப்படிச் சொல்கிறார்ம்மா…”

“கேட்டாயா நரேந்திரா.. அவன் அதைத்தான் சொல்லியிருக்கிறான்.. நீ நினைப்பதைப் போல சொல்லவில்லை…”

“இதுக்குப் பெயர் என்னம்மா..? பெண் பார்க்கத்தான் பெண் வீட்டுக்குப் போகனும்னா.. மாப்பிள்ளை பார்க்கத்தானே மாப்பிள்ளை வீட்டுக்கும் வருவாங்க..?”

“நரேந்திரா..! என்னப்பா இப்படிக் கோபப்படற..?”

“கோபப்படாம என்ன செய்யச் சொல்கிறீங்கம்மா..? இது வரைக்கும் இல்லாத வழக்கத்தை இவன் 

கொண்டு வருகிறான்.. அதுக்கு கோபப் படாம கொஞ்ச சொல்கிறீங்களா..?”

“அண்ணா.. அவங்களை நான் வரச்சொல்லலை…”

“பின்னே..?”

“அவங்கதான் இங்கே வரனும்னு சொன்னாங்க..”

“நீ வேண்டாம்ன்னு சொல்லியிருக்கனுமா இல்லையா..?”

“இதில் இத்தனை பார்மாலிட்டீஸ் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாதே அண்ணா…”

“என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே…”

இந்த வார்த்தைக்கு.. உங்களை எதற்காக கேட்க வேண்டும் என்ற கேள்வியினை சுரேந்திரன் நரேந்திரனைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று மகேந்திரனும்.. யுகேந்திரனும்.. ஆவலாக எதிர்பார்த்தார்கள்…

அப்படி மட்டும் நடந்து விட்டால்.. ஆயிரத்து ஐந்து தேங்காய்களை உடைப்பதாக அவர்களின் மனைவிமார்கள் வேண்டிக் கொண்டார்கள்…

கடைசியில் பார்த்தால்.. அந்த அன்புச் சகோதரர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.. அவர்களின் ஆசை மனைவிகளின் வேண்டுதலும் பலிக்கவில்லை… மாறாக…

“வேண்டும்ன்னா.. அவங்களை வர வேண்டாம்ன்னு நான் சொல்லி விடவா அண்ணா..?” என்று தான் சுரேந்திரன் கேட்டான்..

நரேந்திரனாவது உச்சானிக் கொம்பிலிருந்து இறங்காமல் இருப்பான் என்று பார்த்தால்.. அவனோ..

“சேச்சே.. அது நல்லாயிருக்காது சுரேன்.. வர வேண்டும்ன்னு கிளம்பிக்கிட்டு இருக்கிறவங்களை வராதேன்னு சொன்னா அது முறையாய் இருக்காது.. நம்ம குடும்பத்துக்கு அது வழக்கமில்லை.. அவங்க வரட்டும்..” என்று மலையிறங்கி விட்டான்..

“ஸாரிண்ணா..” வருத்தப்பட்டான் சுரேந்திரன்…

“போடா முட்டாள்.. இதுக்குப் போய் எதுக்காக இவ்வளவு வருத்தப்படறே..” பெருந்தன்மையாகப் பேசினான் நரேந்திரன்..

“நீங்க சொன்னதைப் போல நான் உங்களை ஒருவார்த்தை கேட்டிருக்கனும்..”

“உனக்கு இதில் இத்தனை விவரம் இருக்கும்ன்னு தெரியுமா..? காதல் உன் சொந்த விசயம் சுரேன்.. உனக்குப் பிடித்த பெண்ணை நீ தேர்வு செய்தாய்.. அதில் நாங்க தலையிடவே மாட்டோம்.. கல்யாணம் குடும்பங்கள் சேர்ந்து முடிவு பண்றதுடா.. அதில ஆயிரம் சாஸ்திரம் சம்பிரதாயம் இருக்கும்.. அதை நாம பார்க்கனும்.. அதுக்காகத்தான் நான் கோபப்பட்டேன்..”

“அதனால் என்னண்ணா.. என்மேல் உங்களுக்கு இல்லாத உரிமையா..?”

அவர்கள் கட்டித் தழுவிக் கொள்ளாத குறையாகப் பேசிக் கொண்டே போய்விட.. மகேந்திரனும்.. யுகேந்திரனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்…

இப்படிப்பட்ட பாசப் பிணைப்பு தங்களுக்குள் இருக்கிறதா என்ற கேள்வி அவர்கள் நெஞ்சில் எழுந்தது.. ஏன் அவ்வாறு இல்லை என்ற ஏக்கமும் கூடவே சேர்ந்து எழுந்தது.. அதை அவர்களின் மனைவிமார்கள் இனம் கண்டு கொண்டார்கள்…

‘ஆஹா.. இரும்பு இளகுதே…’ மீனலோசனி சுதாரித்தாள்…

“எத்தனை நேரம்தான் இந்த நாடகத்தைப் பார்த்துக் கிட்டு உட்கார்ந்திருப்பீங்க..?”

சௌதாமினி எழுந்து போய் விட்ட தைரியத்தில் அவள் கேட்க.. பிரபாவதி அவள் போட்டுக் கொடுத்த தடத்தில் கால் பதித்தாள்..

“அதுதானே.. அவங்களைப் பாருங்க.. உள்ளுக்குள்ளே பகையை வைச்சுக்கிட்டு.. வெளியே சிரிச்சு மழுப்பிக்கிறதை.. கேட்டிங்களா அக்கா.. பெரியவர் மனசுக்குள்ளே சுரேந்திரன் மேலே கோபமிருக்கு..

அவரிடம் கேட்காம சுரேனா ஒரு முடிவெடுத்திருக்காரே.. அதைப் போல சின்னவர் மனசிலயும் பெரியவர் மேலே கோபமிருக்கு.. இவர் முடிவெடுத்ததை அவர் தட்டிக் கேட்டுட்டாரே.. ஆனாலும் பாருங்கக்கா.. இரண்டு பேருமே கட்டித் தழுவிக்காத குறையாய் பேசிக்கிட்டே போகிறதை.. என்னவோ ராமர்.. லட்சுமணர் போலவேதான் போஸ் கொடுத்துக்கிட்டு போகிறாங்க… மனசுக்குள்ளே ஆயிரம் இருக்கு..”

“ஆயிரமா..? குறைச்சுச் சொல்றியே பிரபா.. அது கோடி இருக்கும்…”

“இருக்கும்.. இருக்கும்…”

யார் மனதில் என்ன இருக்கிறது என்று மகேந்திரனும் யுகேந்திரனும் நன்றாகவே அறிவார்கள்…

கோடி இருப்பது அவர்களின் மனைவிகளின் மனதில்தான் என்பதும் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்…

நடிப்பது நரேந்திரனும்.. சுரேந்திரனும் அல்ல.. அவர்கள்தான் என்பதையும் அவர்களின் மனச்சாட்சி தெள்ளத் தெளிவாக அறியும்..

இருந்தும் அவர்கள் மனைவிகளின் பேச்சை ஆமோதித்துச் சிரித்தார்கள்…

என்ன செய்வது..? ராஜா ராஜேந்திர பூபதியின் மகன்களாக இருந்தாலும் அவர்களுடைய மனைவிகளுக்கு அவர்கள் கணவன்களாகிப் போய் விட்டார்களே.. இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் போனால்தானே அவர்களிடம் இருக்கும் அபத்தங்களை அவர்களின் மனைவிகள் கண்டும் காணாமல் போவார்கள்..?

குடும்ப வண்டி ஓட வேண்டாமா..?

நிவேதிதா தேவியின் குடும்பத்தை வரவேற்க மணிமுத்தாறு அரண்மனை தயாரானது..

அந்த ராஜ குடும்பத்தின் இளைய மருமகளைப் பார்க்க.. மீனலோசனியின் குடும்பமும்.. பிரபாவதியின் குடும்பமும் மணிமுத்தாறு அரண்மனைக்கு வந்து இறங்கி விட்டார்கள்.. இளைய சகோதரனின் வருங்கால மனைவியைப் பார்க்கவென்று கூடப் பிறந்த பெண்களான மாலினி தேவியும்.. பூர்ணிமா தேவியும் குடும்பத்துடன் வந்து விட்டார்கள்..

அரண்மனை ‘ஜே ஜே’ என்று திருமணக் கொண்டாட்டத்துடன் இருந்தது.. இந்தக் கொண்டாட்டம் நரேந்திரனுக்கும்… வித்யாவிற்கும் திருமணம் நடந்தபோது எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது என்ற நினைவில் வித்யா லேசாக மனம் நைந்தாள்…

‘நீயென்ன இந்த மாளிகையின் மகாராணியாக வேண்டும் என்றா ஆசைப்பட்டாய்..? நரேந்திரனின் மனதினில் மகாராணியாக வேண்டுமென்றுதானே ஆசைப்பட்டாய்..?’ அவள் மனம் அவளை அதட்டியது…

“எப்படியிருக்க வித்யா..?”

பிறந்த வீட்டிற்கு வந்த மறுகணமே தோழியைத் தேடி வந்து விடும் பூர்ணிமா.. அன்றும் அது போல வந்து வித்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்…

“ஃபைன்…”

இதைச் சொல்லும் போது அவள் மனம் ‘பொய்’ என்று கூவியது…

‘நீ நல்லாவா இருக்கே..?’

பேக்டரியில் ரங்கதுரையுடனும் வீட்டில் மற்ற இரு மருமகள்களுடனும் போராடிக் கொண்டிருக்கும் அந்த வாழ்க்கையில் வித்யா தோழியைப் பார்த்து முகம் மலரச் சிரித்தாள்…

“எனக்கென்ன குறை..? நான் ரொம்ப நல்லாயிருக்கேன்…”

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link