Chapter 16
நதியோரம் நடந்த போது..
அருகினிலே நீ வந்தாய்…
உன் மனதைத்தான் தந்தாய்..
இன்று ஏன் மாற்றம் கொண்டாய்..?
-நதியோரம் நான் நடந்த போது-
ஊரும்.. உலகமும் நினைத்ததைப் போல மகேந்திரன் அத்தனை சுயநலமான மனிதனில்லை.. கொட்டிக் கொட்டிக் குளவியாக்குவதைப் போல மீனலோசனி அவனை அது போல ஆக்கி விட்டாள்..
எந்த ஒரு ஆணுக்கும்.. அவனை விடத் தகுதியான ஆண்மகனைப் புறக்கணித்து நீதான் எனக்கு வேண்டும் என்று ஒரு பெண் வந்து நின்று விட்டால் மனதிற்குள் ஒரு வெற்றிப் பெருமிதம் ஏற்பட்டு விடும்.. அதுதான் மகேந்திரனின் மனதிலும் ஏற்பட்டது..
நரேந்திரன் சாதனையாளன்.. மூழ்க இருந்த மணிமுத்தாறு அரண்மனையின் கௌரவத்தைக் காப்பாற்றியவன்.. கடனில் இருந்த பேக்டரியையும்.. மில்லையும் லாபத்தில் ஓட வைத்தவன்.. அவன் புகழையே பாடிக் கொண்டிருந்த உற்றார்.. உறவினரின் மத்தியில் அவனின் தம்பிகள் அடையாளத்தை இழந்து கொண்டிருந்தார்கள்.. எங்கும் நரேந்திரனைப் பற்றிய பிரமிப்பான பேச்சே ஒலித்துக் கொண்டிருக்க…
அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண்ணோ அவனை விட்டு அவனுடைய தம்பியான நரேந்திரனை விரும்புகிறாள்..
இந்த ஒன்றே மகேந்திரனை மாற்றியது.. அவன் மீனலோசனி ஆட்டி வைத்தால் ஆடும் பம்பரமாக மாறிப் போனான்…
“எப்படி…?” மகளிடம் கேட்டார் துக்காராம்..
“இதை நான் கேட்கனும்ப்பா.. இதைச் செய்தால் இது நடக்கும்ன்னு எப்படிப்பா பிளான் போடறிங்க…?” மீனலோசனி வியந்து போனாள்..
“அது ஒருவகையான கணக்கும்மா.. அதை நீயும் இனிப்போட ஆரம்பிக்கணும்.. இது வரைக்கும்
நீ என் மகள் மட்டும்தான்… இனி மணிமுத்தாறு அரண்மனையின் மருமகள்… எல்லாத்துக்கும் என் ஆலோசனையை எதிர்பார்க்காமல் நீயே எல்லாத்தையும் செய்து முடிக்கக் கத்துக்கனும்.. இப்பப் பார்த்தியா..
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சிருக்கோம்.. நரேந்திரனோட கல்யாணத்தையும் நிறுத்தி
விட்டோம்.. மகேந்திரனையும் நம்ம பேச்சைக் கேட்கிறதைப் போலக் கொண்டு வந்துட்டோம்..
இதுதான் கணக்குங்கிறது.. இந்தக் கணக்கை நீயும் போட ஆரம்பித்தா வாழ்க்கையில் எங்கேயோ போய் விடுவ…”
மீனலோசனி அன்று கணக்குப் போட ஆரம்பித்தவள்தான்.. இன்றுவரை அதை நிறுத்த வில்லை.. துக்காராமின் பாசறையில் கணக்குப் போடக் கற்றுக் கொண்டவள் சாதுர்யமாக அதை வாழ்க்கையில் கையாண்டாள்.. மகேந்திரனைப் பொறுத்தவரை அவள் போட்ட கணக்குகள் அப்படியே நிறைவேறின.. மகேந்திரனின் வழிமுறையைப் பின்பற்றி யுகேந்திரனும் திருமணம் பண்ணிக் கொண்டபோது மீனலோசனி மனதுக்குள் ‘சபாஷ்’ போட்டுக் கொண்டாள்.. பிரபாவதியையும் அவளது கணக்கைப் பின்பற்ற வைத்தாள்…
மனிதர்கள் போடும் கணக்குகளே நிறைவேறிக் கொண்டிருந்தால் தெய்வம்.. பார்த்துக் கொண்டே-யிருக்குமா…?
மீனலோசனியின் கணக்கிற்கு அப்பாற்பட்டு எங்கோ இருந்த வித்யா மானசீகமாக நரேந்திரனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.. அந்தக் காதல் மீனலோசனியின் காதலைப் போல கணக்குப் போடும் காதலாக இல்லாமல் புனிதமான காதலாக இருந்து வைத்ததில் அவளின் காதல் ஜெயித்து விட்டது…
மீனலோசனியின் கணக்கு பொய்த்துப் போனது.. நடக்காது என்று அவள் நினைத்திருந்த நரேந்திரனின் திருமணம் நடந்தே விட்டது.. அதிலும் அதிபுத்தி சாலியான.. நரேந்திரனை அவனுக்காக மட்டுமே நேசிக்கிற வித்யா அவனுக்கு மனைவியாகி விட்டாள்..
அதை மீனலோசனியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதிலும் எந்த அரண்மனையின் மருமகளாக வேண்டும் என்று பிறந்தது முதல் அவள் தவமிருந்தாளோ.. அந்த அரண்மனை வித்யாவின் உடைமையாகி விட்ட போது அவளுக்கு மூச்சே நின்று விடும் போல ஆகிவிட்டது.. மகேந்திரன் வெட்டி அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்த பேக்டரியை விட்டு வெளியேற்றப் பட்டான்.. இதைவிடக் கொடுமையாக அவன் பொய் கணக்கு எழுதி கொள்ளையடித்துக் கொண்டு வந்த பண வரத்து நின்று போய் விட்டது…
‘எல்லாம் யாராலே…? இந்த வித்யாவினாலே…’
மீனலோசனியின் மனதில் வன்மம் வந்தது.. அவள் வித்யாவின் சிறகையொடித்து மூலையில் தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்…
பிரபாவதிக்கு அந்த அளவிற்கு வன்மமில்லை.. வித்யாவின் மீது அவளுக்கு கோபமிருந்தாலும் அவளுடைய அண்ணன் பிரகாஷின் மனைவியும் நரேந்திரனின் செல்லத் தங்கையுமான பூர்ணிமாவின் உயிர்தோழி வித்யா என்பதினால் பிரபாவதி தன் கோபத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தாள்…
“ஆக அந்த வித்யாவோட கொட்டத்தை அடக்க ஒருத்தி வந்தாச்சுன்னு சொல்லு..” மீனலோசனியின் கண்கள் மின்னின…
“வருகிறவ சுரேந்திரனுக்கு மனைவியாகப் போகிறவ… அவனோ பெரியண்ணனுக்கு பாத பூஜை பண்ணுகிறவன் அதே மரியாதையை பெரியண்ணிக்கும் கொடுக்கிறவன்.. அப்படியிருக்கும் போது அவனுடைய மனைவியை வித்யாவை வெறுக்கும்படி விட்டு விடுவானா…?”
“உன் ஹஸ்பெண்டும்.. என் ஹஸ்பெண்டும் கூடத்தான் பெரியத்தானுக்கு பாத பூஜை பண்ணிக்கிட்டு இருந்தாங்க… கல்யாணம்ன்னு ஒன்று நடந்து நாம அவங்க வாழ்க்கைக்குள்ளே வந்த பின்னாலே அதை நடக்க விட்டோமா…?”
“ஆமாமில்ல…”
“ஆமாம்தான்.. இல்லையென்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது..”
“நாம செய்ததை மதன்பூர் மகாராஜாவின் மகளும் செய்வான்னு என்ன நிச்சயம் அக்கா…?”
“அங்கே பார்.. அவள் கண்ணைப் பார்…”
மீனலோசனி சொல்ல இவள் எங்கே பார்க்கச் சொல்கிறாள் என்ற நினைவுடன் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தாள் பிரபாவதி..
அங்கே மிக அலட்சியமான பார்வையுடன் காரிலிருந்து இறங்கி நின்றாள் நிவேதிதா தேவி.. அவள் கண்களில் தெரிந்த அந்த அலட்சியத்தை மீனலோசனியின் கண்கள் கூடப் பிரதிபலித்ததில்லை…
“இவதானே நிவேதிதா…?”
“இவதான் பிரபா.. நாமதான் அத்தை ரூமில இருந்த படத்தில் பார்த்தோமே…”
“இந்த சுரேந்திரன் செய்ததை நினைச்சுப் பார்த்தீங்களாக்கா…?”
“அதை நினைத்தால்தான் என் வயிறு எரியுதே பிரபா.. என் வீட்டுக்காரரைப் பார்த்து பேக்டரியை விட்டு வெளியே போன்னு சொன்ன ஆளில்லையா அவன்…?”
‘நீ அதிலேயே இரு….’ கடுப்பானாள் பிரபாவதி
“நான் அதைச் சொல்லலைக்கா…”
“வேற எதைச் சொன்ன..?”
“இந்த வீட்டுக்குள்ளே அத்தையும்.. பெரியத்தானும்.. வித்யாவும் மட்டுமா இருக்கிறாங்க…? நாமள்ளாம் இல்லையா…? நம்ம கண்ணிலே அவன் காதலியோட போட்டோவைக் காட்டாம அவங்க கண்ணிலே மட்டும் காட்டியிருக்கான் பார்த்தீங்களா…? நான் அதைச் சொன்னேன்…” எடுத்துச் சொன்னாள் பிரபாவதி..
“நம்மைத்தான் அவன் கணக்கிலேயே எடுத்துக்கலையே பிரபா…” மீனலோசனி வயிறெரிந்தாள்..
“அப்படியிருக்கப்ப அவனுக்கு மனைவியாகப் போகிற இந்த நிவேதிதா மட்டும் நம்மைக் கண்டுக்குவாளா…?”
“நாம கண்டுக்க வைப்போம்…” கண்சிமிட்டினாள் மீனலோசனி..
“எப்படிக்கா..?” பிரபாவதி ஆவலுடன் கேட்டாள்…
“அ.. அ… எல்லாத்தையும் முதலிலேயே போட்டு உடைத்து விட்டால் எப்படி பிரபா…? பொறுத்திருந்து பார்…” மர்மச் சிரிப்புடன் சொன்னாள் மீனலோசனி..
‘இவ எதையும் செய்வா.. அண்ணன் சொல்வதைப் போல எப்பவும் இவளிடம் நாம ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்…’
எப்போதும் போல அப்போதும் நினைத்துக் கொண்டாள் பிரபாவதி…
“சரி சரி… இங்கேயே நின்றுக்கிட்டிருந்தா எப்படி பிரபா…”
“வேற என்ன செய்கிறதுக்கா…?”
“அடக்கடவுளே..! இது கூட உனக்குத் தெரியாதா..?” மீனலோசனி மட்டம் தட்ட.. பிரபாவதிக்கு கடுப்பு வந்தது..
“உங்களைப் போல எல்லாம் தெரிந்தவங்களா என்னை எங்க வீட்டிலே வளர்த்து விடலையேக்கா…” பணிவுடன் சொல்வதைப் போல மறைமுகத் தாக்குதலைக் கொடுத்தாள் பிரபாவதி…
‘ஜாடை பேசுகிறா…’
பல்லைக் கடித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாகசமாக சிரித்து வைத்த மீனலோசனி உடனடியாக வெள்ளைக் கொடியை பறக்கவிட்டாள்…
“அது வேற ஒன்றுமில்லை பிரபா.. அவங்க வீட்டுக்குள்ளே வரும்போது நாம மூத்த மருமகள்களாக லட்சணமாக அரண்மனையின் ஹாலில் நிற்க வேண்டாமா…? அப்போத்தானே அத்தை அவங்களுக்கு நம்மை அறிமுகப் படுத்துவங்க..? இல்லைன்னா கூப்பிட்டா அறிமுகப் படுத்தி வைக்கப் போகிறாங்க..?”
மீண்டும் மீனலோசனியின் புத்தி கூர்மையில் அயர்ந்து போனாள் பிரபாவதி..
எத்தனை தடவைதான் இது நமக்குத் தோணலையே என்று பிரபாவதி நினைத்துக் கொள்வாள்…?
அவளுக்கே அது அலுப்பாகி விட இது வேலைக்கு ஆகாது என்ற நினைவுடன் அதை கை விட்டாள்..
“இப்படிச் சொல்லியிருந்தா முதலிலேயே அத்தையுடன் நாமும் சேர்ந்து கீழேயே நின்றிருக்கலாமே..?”
“அது என்ன தேவைக்கு…?”
இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று மண்டை காய்ந்து போனாள் பிரபாவதி…
“என்னக்கா நீங்க இப்படியும் சொல்கிறிங்க.. அப்படியும் சொல்கிறீங்க..? என்னதான் சொல்ல வர்றீங்க..?”
உண்மையில் ஏன் அக்கா இப்படிக் கழுதைபோல முன்னால் போனாக் கடிக்கறிங்க.. பின்னால் வந்தால் உதைக்கறிங்க என்றுதான் கேட்க ஆசைப்பட்டாள் பிரபாவதி..
அப்படிக் கேட்டு.. அதனால் மீனலோசனி முகம் திரும்பிக் கொண்டு விட்டால் இது போன்ற ஆலோசனைகளுக்கு பிரபாவதி எங்கே போவாள்..?
தன் கையே தனக்கு உதவி என்று நிமிர்ந்து நிற்க அவளென்ன வித்யாவா…?
அதனால் சொல்ல நினைத்ததை வேறு வகையில் சொன்னாள் பிரபாவதி.. அதில் மகிழ்ந்துபோன மீனலோசனி மிகக்கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டாள்..
‘மாடு’ என்றால் திட்டு.. அதையே ‘பசுவைப் போல..’ என்று சொன்னால் பாராட்டு.. மிக அழகான உலகம் இது..!
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.