Chapter 18

0Shares

நதியோரம் நடந்த போது…

      நட்புசொல்லி வந்த தோழி..!

பாரம் சுமக்க நானிருக்க…

    பரிதவிப்பில் ஏன் கரைந்து போனாய்..?

-நதியோரம் நான் நடந்த போது-

மேகங்கள் சூழ்ந்த ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள் வித்யா.. சற்றுமுன் நிர்மலமாக இருந்த வானத்தில் எப்போது கார்மேகங்கள் வந்து சூழ்ந்தன என்று அவளால் அனுமானிக்க முடியவில்லை..

“எதைப் பார்க்கிற வித்யா..?” பூர்ணிமா கேட்டாள்..

“இல்லை.. நாம வந்தப்ப வானம் தெளிவாத்தானே இருந்துச்சு..? எப்ப மழைமேகம் வந்துச்சுன்னு தெரியலையே..” வித்யா வானத்தைப் பார்த்தபடி சொன்னாள்..

“நீயென்ன வானிலை ஆராய்ச்சியா பண்ற..?” சிரித்தாள் பூர்ணிமா.. அந்தச் சிரிப்பு வித்யாவைத் 

தொற்றித் கொள்ளவில்லை.. ஏதோ ஓர்விதமான சிந்தனையுடனே இருந்தாள்.. அதை பூர்ணிமாவும் கவனித்தாள்.. அவளது நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன..

“அப்புறம்…?”

பூர்ணிமாவின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்தாள் வித்யா.. அவள் எதைக் கேட்கிறாள் என்று வித்யாவிற்கு புரியவில்லை..

“என்னடி..?”

“சொல்லுன்னு சொன்னேன்…”

“எதை…?”

“உன் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கவலைகளை..”

வித்யாவின் தலையைத் தொட்டுக் காட்டி தலை சாய்த்துச் சிரித்தாள் பூர்ணிமா..

“ஏய்ய்…” வித்யாவும் கூடச் சேர்ந்து சிரித்தாள்.. ஆனால் அந்தச் சிரிப்பில் உயிர்ப்பில்லை..

“வித்யா..”

“ஊம்…?”

“பேக்டரியில் தொழிலாளர் பிரச்னையை அந்த ரங்கதுரை கிளப்பி விடுகிறானாமே..”

“யெஸ்.. பட்.. ஐ கேன் மேனேஜ்.. டோன்ட் ஒர்ரி…”

“அதுக்குப் பின்னாலே மகியண்ணனின் வேலையிருக்காமே..”

“இதை உனக்கு யார் சொன்னது…?”

“நீ ஏண்டி சொல்லலை…?”

“இதுதான் என் கேள்விக்கான பதிலா…?”

“நீ சொல்லியிருக்க வேணாமா வித்யா…?”

“ஏய்ய்.. இது பெரிய விசயமில்லை பூர்ணி..”

“பெரிசோ.. சிறிசோ.. பிராப்ளம் வந்திருக்கு.. அதை என்னிடம் பகிர்ந்துக்கனும்னு நீயேண்டி நினைக்கலை…?”

பூர்ணிமாவின் மனத்தாங்கலில் வித்யாவின் மனம் நெகிழ்ந்தது.. இதுதான்.. இந்த அன்புதான்.. வித்யாவைக் கட்டிப் போட்டது.. யாரிடமும் ஒட்டிப் பழகாத வித்யாவை பூர்ணிமாவின் வீட்டில் தங்கிப் 

படிக்க ஒப்புக் கொள்ள வைத்தது.. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும்.. பார்க்கப் போன வேலையையும் துறந்துவிட்டு பூர்ணிமாவுக்காக ஊர் விட்டு ஊர் வரச் செய்தது..

“பூர்ணி..” வித்யா தோழியைக் கட்டிக் கொண்டாள்..

“நீயா தனியா மனதுக்குள்ளே வைத்துக்கிட்டு மறுகணுமா…? நான் உனக்கு இல்லையா…? உன் வருத்தத்தை என்னிடம் சொல்லனும்னு ஏண்டி உனக்குத் தோணலை…? பிரகாஷ் சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு…”

“அண்ணன் சொன்னாரா…? அவருக்கு எப்படித் தெரியுமா..?”

“அவருக்கு எல்லாம் தெரியும்.. யார் அவர்..?” பெருமையுடன் சிரித்தாள் பூர்ணிமா..

“அதைச் சொல்லு.. ஆணைப்பட்ட பூர்ணிமா தேவியின் காதலைப் பெற்ற வீராதி வீரணாச்சே..” வித்யாவும் கூடச் சேர்ந்து சிரித்தாள்…

இப்போது அவளின் சிரிப்பில் உயிர்ப்பு வந்திருந்தது..

“என்னவோ சரித்திர கலைத்து கதாநாயகனைச் சொல்கிறதைப் போல இருக்கே..” பூர்ணிமா கண் சிமிட்டினாள்..

“இல்லையா பின்னே…?” வித்யா பதிலுக்கு கண்சிமிட்டினாள்..

“சொல்லு.. சொல்லு… சொல்லு…”

“எதைடி சொல்லச் சொல்கிற…?”

“அவர் எந்தக் காலத்து கதாநாயகன்..?”

“சோழர் காலத்து கதாநாயகன்..”

“ராஜராஜ சோழனா…? ராஜேந்திர சோழனா…?”

“இரண்டும் இல்லை.. ராஜராஜ சோழனின் நண்பன்..”

“யு மீன் வந்திய தேவன்…?”

“யா…”

“இதைப் பாருடா.. அப்ப நான்தான் குந்தவையா..?”

“இல்லையா.. பின்னே…?”

“ஒ.. அந்தக் குந்தவை தம்பிக்குத்தானே சப்போர்ட் பண்ணினா…? எனக்கு எல்லோருமே அண்ணன்களாச்சே..”

“இந்தக் குந்தவை பெரியண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுகிறவளாச்சே…”

இருவரும் மீண்டும் சேர்ந்து சிரித்தார்கள்.. வானத்தில் மேகங்கள் சூழ்ந்து.. இப்போது மழை வரவா.. இல்லை இரு வினாடிகள்.. கழித்து வரவா என்று கேட்டுக் கொண்டிருந்தன..

“மழை வரப் போகுது பூர்ணி…”

“வரட்டுமே… உனக்கு ஞாபகம் இருக்கா வித்யா.. சென்னையில் நாம படித்துக்கிட்டு இருந்த காலத்தில் மழை வந்தால் நாம ரெண்டு பேரும் மொட்டை மாடிக்கு ஒடிப் போய் நின்னு மழையில் நனைவோமே..”

“மறக்க முடியுமா…?”

அந்த நாள்களின் நினைவில் மனம் நனைந்தாள் வித்யா… எத்தனை இனிமையான நாள்கள் அவை.. பாதங்கள் கொப்பளிக்க சுடு மணலில் நடந்து வந்தவளுக்கு பாலைவனச் சோலையைத் தந்த நாள்கள்..

“நீயும்.. நானும் சொட்டச் சொட்ட நனைந்துக்கிட்டு கண்ணம்மா சித்தி போட்டுத் தந்த சூடான 

டீயைக் குடிப்போமே.. அந்த ‘டீ’யின் ருசி வேற எந்த ‘டீ’க்கும் இருந்ததில்லை தெரியுமா..”

“ஆமாமாம்…”

“அந்த மொட்டைமாடியின் நினைவுகள் என்னைக்கும் மனதை விட்டுப் போகாது வித்யா..”

“ஆமாமாம்..” வித்யா முணுமுணுத்தாள்…

அவள் மனதில் அந்த நிலாக்கால நினைவு எழுந்தது.. பௌர்ணமியின் முழு நிலவின் ஒளியில்.. 

அந்த சென்னை வீட்டின் மொட்டை மாடியில்.. கோட்டுச் சித்திரம் போல் நின்று கொண்டிருந்த நரேந்திரன் தோன்றினான்.. அவனும் அவளும் உணர்ந்த மனதின் அலைகள் நினைவில் வந்தன..

“மறக்க முடியாதுதான் பூர்ணி..” வித்யாவின் விழிகள் கனவில் மிதந்தன..

“பேசாமல் அந்த நாள்களிலேயே நாம் இருந்திருக்கலாம் வித்யா..” குழந்தை போல பூர்ணிமா பேசினாள்..

“நடக்கிறதைப் பேசுடி..” வித்யா அவள் தோளில் செல்லமாகத் தட்டினாள்..

“அப்படிங்கற…?”

“அப்படித்தான்…”

“அப்போச் சொல்லு.. வீட்டுக்குள்ளே மீனா அண்ணியும்.. பிரபா அண்ணியும்.. உள் 

வீட்டுக் கலவரத்தை வெடிக்க வைத்துக்கிட்டு இருக்காங்களாமே…?”

“இது என்ன புதிதா…?”

“இருக்கட்டும்டி.. இதுக்க ஒரு முடிவு வேணாமா..?”

“சிந்துப் பாத்தின் கன்னித்தீவுக்கு கூட ஒரு முடிவு வந்திரும்.. இதுக்கு வராது.. விடு பூர்ணி..”

“அம்மாவைச் சொல்லனும்.. பேசாமல் மகியண்ணனையும் யுகே அண்ணனையும் தனிக்குடித்தனம் போக விடலாமில்லையா…?”

“அதுதான் தாய் மனசு…”

“என்னவோ போடி.. எனக்கு உன்னை நினைத்தால் தான் கவலையாய் இருக்கு..”

‘இது இவளின் என் மீதான தாய் மனசு…’

வித்யா தோழியின் தோளில் சாய்ந்தாள்.. தாயில்லாத அந்தப் பேதையை.. தாய் போல அரவணைத்துக் கொண்டாள் பூர்ணிமா…

“நீ கவலைப்படாதே பூர்ணி.. உன் அண்ணன் இருக்கார்.. அவர் கண்ணுக்குள் வைத்து என்னைப் பார்த்துக்குவார்…”

“அந்த தைரியத்திலதான் இவங்க மத்தியிலே உன்னை விட்டுட்டு.. தென்காசிக்குப் போக என்னால முடியுது…”

“பேக்டரியைப் பத்திப் பிரச்னையில்லை.. ரங்கதுரை அடிப்படையிலே நல்லவன்தான்.. அவனை உங்க மகியண்ணன் தூண்டி விட்டுக்கிட்டு இருக்கிறார்.. அதை அவன் என்னைக்குத் தெரிஞ்சிக்கிறானோ.. அன்னைக்கு நிலைமை சரியாகிவிடும்..”

“அந்த நாள் எப்போவரும்..?”

“வரும் போது வரும்..”

“அதுவரை..?”

“நான் பார்த்துக்குவேன் பூர்ணி..”

லேசான தூறல் பூச்சாரலாய் அவர்கள் மீது விழுந்தது.. அவர்கள் இன்பமாக உணர்ந்தார்கள்.. சற்றுத் தொலைவில் தெரிந்த நதிநீர் வெள்ளி ரிப்பனைப் போல ஓடிக் கொண்டிருந்தது.. அந்தச் சூழ்நிலை அவர்களின் மனதில் ரம்யத்தை அளித்தது.. அவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. நட்புடன் அளவளாவுவதில் உள்ள சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் வித்யா.. அவர்களின் பேச்சு சுரேந்திரனின் திருமணத்தின் பக்கம் திரும்பியது..

“எனக்கு ஒன்னுதான் புரியலை வித்யா…”

“அந்த ஒன்னு என்னன்னு நீயே சொல்லிரு..”

கலகலத்துச் சிரித்தாள் வித்யா.. ஏனோ பூர்ணிமா அந்தச் சிரிப்பில் இணைந்து கொள்ளவில்லை…

“என்னடி..?” வித்யா புருவங்களை உயர்த்தினாள்..

“நம்ம சுரேன் அண்ணா.. எப்படிப் போய் இவளைத் தேடிப் பிடிச்சுக் காதலித்தான்..?”

இதற்கு வித்யாவினால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? அவள் மௌனம் சாதித்தாள்.. அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தனக்குள்ளே யோசித்தபடி பேசிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா..

“ஏனோ தெரியலை வித்யா.. அவளை எனக்குப் பிடிக்கலை..”

“உன் அண்ணனுக்குப் பிடித்திருக்கே…”

“அதானே எனக்கும் ஆச்சரியமாயிருக்கு..”

“அழகா இருக்கிறா.. படித்திருக்கா.. இத்தனைக்கும் மேலாய் உங்களுக்குப் பொருத்தமான ராஜவம்சம்..”

இதைச் சொல்லும் போது வித்யாவின் குரல் கம்மியது.. பூர்ணிமா துணுக்குற்று தோழியின் முகம் பார்த்தாள்…

“முட்டாள்..! என்னடி பேச்சு இது..? இதை பெரியண்ணனிடம் பேசிப் பார்.. உன் அத்தனை பல்லையும் உதிர்த்து விடுவார்.. உங்களுக்குன்னு பிரிச்சு வேற பேசற…”

தோழியின் உரிமையான பாசம் மிகுந்த அதட்டுதலில் வித்யாவின் மனம் ஆறுதலை அடைந்தது..

“அத்தை சொன்னதைத்தான் சொன்னேன் பூர்ணி..”

“அம்மாவுக்கு அறிவில்லை…”

“அவங்க யதார்த்தமாகத்தான் சொன்னாங்க.. சொல்லனும்னு சொல்லலை.. மனதிலிருந்ததை யோசிக்காம போசிட்டாங்க…”

“யோசிக்க வேணாமா..? இவங்க வீட்டுக்குப் பெரியவங்க இல்லியா..?”

“விடு பூர்ணி…”

“என்னவோ போ.. இந்த மதன்பூர் மகாராணி தானாகத்தான் வந்து நம்ம சுரேன் அண்ணாவிடம் காதல் சொல்லியிருக்கா.. ம்ஹீம்.. இருந்திருந்து இவள் கண்ணில் தான் சுரேன் படனுமா..?”

வனாத்தில் மின்னல் வெட்டி பெரும் சப்தத்துடன் இடி இடித்தது…

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link