Chapter 19
நதியோரம் நடந்த போது..
தூரத்திலே இடிமுழக்கம்…
இடி முழக்கம் சொல்லியது..
எதையென்று மனதில் சுணக்கம்..
-நதியோரம் நான் நடந்த போது-
‘இது எதற்கான அறிகுறி..?’
வித்யாவிற்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வெகு நேரமானது…
லேசான தூறல் நொடிப் பொழுதில் கனத்த மழைத் துளிகளுடன் சடசடவென கொட்டியது எப்படி..?
அவளது மனக்கிலேசத்தை அறியாதவனாக தூக்கத்தில் புரண்டு படுத்த நரேந்திரன் அவள்மீது கை போட்டு இறுக்கினான்.. அவன் தொட்டவுடன் குழைந்து நடுங்கும் அவளின் உடல் அதிர்வை எதிர்பார்த்தவனுக்கு அவளிடம் எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லாததைக் கண்டு ஆச்சரியம் வந்தது…
“வித்யா…”
அவள் முகத்தைத் திருப்பிக் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.. அதில் தெரிந்த சஞ்சலத்தில்
அவனது புருவங்கள் சுருங்கின…
“என்னடி..?”
“ஒன்.. ஒன்னுமில்லையே…”
“அதுக்கு ஏன் உன் வாய் தந்தியடிக்குது..?”
வித்யா சிணுங்கலுடன் அவன் மார்பில் குத்தினாள்.. அவள் கைகளைப் பிடித்து முத்தமிட்டவன்.. அவள் தலையில் செல்லமாக முட்டினான்…
“உன் தலைக்குள்ளே எது குடையுது..?”
“ம்ஹீம்.. பூர்ணியைப் போல நீங்களும் ஆரம்பிச்சுட்டிங்களா..? அவளும் இதையேதான் கேட்டா..”
“அவகிட்ட ஒப்பிச்சிருப்பியே.. அது என்னடி உன் பிரச்னைகளை உன் புருசன்கிட்டச் சொல்ல மாட்ட.. அதுவே உன் பிரண்ட் கேட்டா எல்லாத்தையும் கொட்டிக் கவிழ்த்திடறே..?”
“அதெல்லாம் ஒன்னும் கொட்டிக் கவிழ்க்கலை…”
“இதை நான் நம்பனுமாக்கும்..?”
“நம்பாட்டிப் போங்க..”
“எங்கே போகச் சொல்ற..? உன்னை விட்டு எங்கேயும் போறதா இல்லைடி.. போனா உன்னையும் சேர்த்து கூப்பிட்டுக்கிட்டுத்தான் போவேன்..”
நரேந்திரனின் வார்த்தைகளில் வித்யாவின் மனக்கிலேசம் மறந்து போக.. அவள் சஞ்சலத்தை மறந்தவளாக அவன் மார்பில் ஒன்றினாள்.. அவளின் காதலில் அவனுக்குள் காதல் கலந்த காமம் பொங்கியது.. அது தந்த வேகத்தில் அவன் முரட்டுத்தனமாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.. மெல்ல.. மெல்ல.. அவனது ஆக்ரமிப்பில் வித்யா மூழ்கீப் போனாள்..
மதன்பூரில் நரேந்திரனின் குடும்பத்திற்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது.. மணிமுத்தாறுக்கு கார்களின் அணி வகுப்பு வந்ததைப் போலவே.. மதன் பூருக்கும் நரேந்திரனின் குடும்பத்தினரின் கார்கள் அணி வகுத்துச் சென்றன…
மாப்பிள்ளை வீடு பார்க்க கிளம்பிய அண்ணன் தம்பிகள் அவரவர் கார்களில் அவர்களுடைய குடும்பத்துடன் ஏறிக் கொள்ள.. சுரேந்திரனின் காரில் சௌதாமினி ஏறிக் கொண்டாள்.. மாலினியும்.. பூர்ணிமாவும் அவர்களின் குடும்பத்துடன் அவரவர் கார்களில் ஏறிக் கொள்ள.. நரேந்திரனின் அத்தை குடும்பமும்.. மாமா குடும்பமும் அவர்களுடைய கார்களுடன் சேர்ந்து கொண்டார்கள்..
மதன்பூரின் பிரமாண்டமான அரண்மனையில் அவர்களுக்கு வட இந்திய உணவு வகைகளுடன் தென்னிந்திய உணவு வகைகளைச் சேர்த்து பிரமாதமான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது.. சாப்பாட்டு மேஜையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்த்த பூர்ணிமா…
“இதுதான் ஒன்றுபட்ட இந்தியா வித்யா..” என்று தோழியுடன் முணுமுணுத்தாள்…
விருந்தில் அமர்ந்து கொண்ட போது கவனமாக வித்யாவின் அருகே அமர்வதை மீனலோசனி தவிர்த்த போது…
“இந்தியா ஒன்று பட்டதுதான்.. அதிலிருக்கிற மனிதர்களின் மனங்கள்தான் ஒன்றுபடவில்லை..” என்று சத்தமாகவே சொல்லி வைத்தாள்…
அதைக் கேட்ட நிவேதிதான் அக்கா ஸ்வாதிகா மெலிதாகச் சிரித்தாள்.. மீனலோசனியின் முகம் விழுந்து விட்டது..
“இவ சொல்கிறதைக் கேட்டியா பிரபா.. இங்கே வந்தும் இவ நம்மை வாருகிறதை விடலையே…”
பிரபாவதியிடம் அவள் முணுமுணுத்தபோது பிரபாவதிக்கு எரிச்சல் வந்தது..
பூர்ணிமா அவளின் அண்ணனின் மனைவி.. ஒரே சகோதரனுடன் பிறந்த அவளுக்கு பிறந்த வீட்டில் பந்தமும் பாசமும் நிலைத்திருக்க வேண்டுமானால் அவளின் அண்ணனின் மனைவியை பகைத்துக் கொள்ள முடியுமா..?
அதனாலேயே பூர்ணிமா மணிமுத்தாறுக்கு வருகை தருகிற போதெல்லாம் மீனலோசனியுடன் பேசுவதையே தவிர்த்து விடுவாள் பிரபாவதி…
இப்படித்தான் பிரபாவதி பேசாமல் இருந்தாலும் அவளின் காதோரமாக வந்து எதையாவது மீனலோசனி முனுமுனுத்து வைத்து விடுவாள்.. பார்க்கிற பூர்ணிமாவிற்கு அது மீனலோசனி பேசிய பேச்சு என்று தெரியுமா..? பிரபாவதியும்.. மீனலோசனியும் கூட்டுச் சேர்த்து கொண்டு வித்யாவைப் பற்றிப் புறம் பேசுகிறார்கள் என்று தோன்றிவிடாதா..?
மணிமுத்தாறிலேயே அப்படியெனும் போது.. மதன்பூரில் பூர்ணிமா அருகிலேயே இருக்கும் போது அவளைப் பற்றி மீனா பேசி வைத்தால் பிரபாவதிக்கு எரிச்சல் வராதா..?
அவள் அவசரமாக கணவன் பக்கம் சாய்ந்து அவனிடம் பேசுவதைப் போல முகத்தைத் திருப்பித் தப்பித்தாள்..
மீனலோசனிக்கா அந்த யுக்தி புரியாது..?
அவள் முகம் விழுந்து விட்டது.. மானசீகமாக பற்களை நறநறத்துக் கொண்டாலும் சிரித்த முகம் மாறாமல் அவள் மகேந்திரனின் பக்கமாக சாய்ந்து அவன் காதில் ரகசியம் பேச ஆரம்பித்தாள்..
‘இவதான் புருசன் காதில ரகசியம் பேசுவாளா..? எனக்கு என் புருசன் காதில ரகசியம் பேசத் தெரியாதா.. யாரு கிட்ட..?’
அவளின் மிதப்பான பார்வையில் பூர்ணிமாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. வித்யாவிற்கு அந்தச் சிரிப்பு எதற்கான சிரிப்பென்று பிடிபடவில்லை…
“என்னடி..?” என்று வினவினாள்..
“அப்படியே நாடகம் பார்க்கிறதைப் போலவே இருக்குடி வித்யா…”
“எதைச் சொல்கிற..?”
“என்னத்தைச் சொல்ல..? கண்ணதாசன் அழகாக எழுதிவைச்சார்.. காதோடுதான் நான் பாடுவேன்னு…”
“அது அருமையான பாட்டாச்சே…”
“அந்த அருமையெல்லாம் யாருக்குப் புரிகிறது..?”
யாருக்கும் புரிந்ததோ இல்லையோ.. மீனலோசனிக்கு தெளிவாகவே புரிந்தது.. எதைச் செய்தாலும் அதைக் கண்டு பிடித்து விடும் பூர்ணிமாவை என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை…
தெரியாத எதையும் தெரியாதென்று அவள்தான் ஒப்புக்கொள்ள மாட்டாளே.. அதனால் அவளின் மிதப்பான பார்வையை நாத்தானாரின் மீது வீசி விட்டு அவள் மௌனமாகி விட்டாள்…
விருந்து முடிந்து கிளம்பும் போது திருமணத்தைப் பற்றி கங்காதர்ராவ் பேசினார்.. திருமண நாள் நிச்சயிக்கப் பட்டது.. அதை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கங்காதர்ராவ் சொன்னார்.. நரேந்திரன் யோசிக்க ஆரம்பித்த போதே அவனை முந்திக் கொண்டு…
“நோ… நோ..” என்று சொல்லி விட்டான் சுரேந்திரன்…
“எங்க அரண்மனையில் இது வழக்கம் மாப்பிள்ளை..”
“பட்.. ஐ டோன்ட் லைக் இட்.. நாங்க பார்த்தோம்.. பழகினோம்.. காதலிச்சோம்.. இப்பக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறோம்.. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே.. அதை விழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..?”
“எங்கேஜ்மென்ட் ரிங்கை நீங்க மாற்றிக்க வேண்டாமா..?”
“மணமேடையில் மாற்றிக்கிறோம்.. அண்ணா.. டைரக்டா கல்யாணம்தான்.. சொல்லிட்டேன்..”
அந்தக் கண்டிப்பில் நிவேதிதாவின் முகம் சுருங்கியதை கண்டு கொண்டாள் மீனலோசனி.. தனியாக நிவேதிதா நின்று கொண்டிருந்த நேரம் பார்த்து அவளருகே சென்று புன்னகைத்தாள்.. பதிலுக்கு நிவேதிதா லேசாகக் கூடச் சிரிக்க வில்லை…
‘ம்ஹீம்.. என் கடைசி மச்சினன் எங்கேயிருந்து இவளைத் தேடிக் கண்டு பிடிச்சானோ.. சிரிக்கத் தெரிந்ததுகதான் மனிதப் பிறவி.. இது என்ன பிறவியோ..’
இப்படி நினைத்துக் கொண்ட மீனலோசனிக்கு அவளும் அந்த ரகம்தான் என்ற விவரம் வசதியாக மறந்து விட்டது…
போட்டுக் கொடுக்க வந்தவள் புன்னகையை எதிர்பார்த்தால் வேலைக்கு ஆகுமா..? அதனால் அதெல்லாம் நமக்கு எதற்கு என்று அதை ஓரம் கட்டி அனுப்பிவிட்டு தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்..
“நான்தான் சுரேனின் பெரியண்ணி…”
“சுரேன் அப்படிச் சொல்லலையே..”
இதைச் சொன்ன நிவேதிதாவின் விழிகளில் தெரிந்த உதாசீனத்தில் அவளுக்கு மணிமுத்தாறு அரண்மனையின் ரகசியங்கள் அத்துபடி என்ற விவரம் தெள்ளத் தெளிவாக மீனலோசனிக்கு விளங்கியது..
‘இந்த சுரேன் அத்தனையையும் இவளிடம் ஒப்பிச்சிட்டான் போல..’ பல்லைக் கடித்தாலும் சமாளித்துக் கொண்டு புன்னகை செய்தாள் மீனலோசனி..
“நான்தான் மணிமுத்தாறு அரண்மனையில் மூத்தமருமகளாக காலடி வைத்தவள்…”
“பட்.. சுரேனோட இரண்டாவது அண்ணனை மேரேஜ் பண்ணிக்கிட்டு மருமகளாய் காலடி வைச்சீங்க.. ஆம் ஐ ரைட்..?”
‘இவ வாயைத் திறக்கவே இல்லைன்னு ஏக்கப்பட்டது தப்பாப் போச்சே.. இவளுக்கு இத்தனை பேச்சுக்கூடப் பேசத்தெரியுமா..? இதுக்கு இவ பேசாமடந்தையாவே இருந்திருக்கலாம்..’ மீனலோசனி ஏக்கப் பட்டுப் போனாள்..
“நீ தப்பாவா சொல்லிடப் போற..? ரைட்டுத்தான் நிவேதா.. அதைப் பத்திப் பேச்சு இப்ப எதுக்கு..?”
“நான் பேசலை.. நீங்கதான் பேசினீங்க..”
பட்டுக் கத்தறித்தாள் நிவேதிதா.. மீனலோசனிக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. இப்படிப் பேசுகிறவளிடம் எப்படித்தான் போட்டுக் கொடுப்பது..?
‘கொஞ்சமாவது மூத்தவரின் பெண்டாட்டியை மதிக்கனும்னு நினைக்கிறாளா..?’
அவளுக்குள் சினம் மூண்டது.. அவளும் நரேந்திரனின் மனைவியை மதிப்பதில்லை என்பது வழக்கம் போல வசதியாக அவளுக்கு மறந்து போனது…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.