Chapter 22
நதியோரம் நடந்த போது..
எனக்காக நீயும் வந்தாய்…
கூட நடந்து வந்தவளே…
ஊடலுடன் ஏன் பிரிந்து போனாய்..?
-நதியோரம் நான் நடந்த போது-
வித்யா காரை விட்டு இறங்கி பேக்டரிக்குள் நடந்தாள்… இப்போதெல்லாம் அவள் தனியாகத்தான் காரில் வருகிறாள்.. நரேந்திரன் கூட வருவதில்லை.. அடிக்கடி சென்னைக்குப் போகிறேன் என்று வெளியூர் பயணங்களை ஏற்படுத்திக் கொள்கிறான்…
‘கார்த்திகாயினியைப் பார்க்கப் போகிறானோ…’
வித்யாவின் மனதிற்குள் சந்தேக மேகங்கள் சூழ்ந்தன.. இருந்தும் அவள் எதையும் நரேந்திரனிடம்
வாய் விட்டுக் கேட்கவில்லை… வித்யாவின் மனதை முகத்தின் வழியே படித்து விடும் நரேந்திரன்தான் அவளைக்கண்டு கொள்ளாமல் சதா ஏதோ ஒரு சிந்தனையிலேயே உழன்றானே…
‘கார்த்திகாயினியைப் பற்றிய கவலையாய் இருக்கும்…’
ஊமையாய் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் வித்யா.. நிவேதிதாதான் மணிமுத்தாறுக்கு மருமகளாய் வந்த முதல் வாரத்திலேயே அவள் எதற்காக சுரேந்திரனைத் தேடிப் பிடித்து காதலித்தாள் என்ற விவரத்தைப் போட்டு உடைத்து விட்டாளே…
“எனக்கு கார்த்திகாயினி அக்காவை ரொம்பப் பிடிக்கும்… சின்ன வயதில் நான் எப்போதும் கார்த்திகாயினி அக்காவின் பின்னாலேயேதான் அலைவேனாம்.. என் அம்மா சொல்வாங்க.. அக்கா என்னை மடியில் தூக்கி வைத்துக்குவாங்களாம்…”
நிவேதிதாவின் இறுக்கமான முகத்தில் ஏற்பட்ட இளக்கத்தை வியப்புடன் பார்த்தாள் வித்யா…
‘இவளுக்கும்.. அந்த கார்த்திகாயினிக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பு அத்தனை இறுக்கமானது போல..’ வித்யா நினைத்துக் கொண்டாள்…
யாரிடமும் ஒட்டுதல் காட்டாத நிவேதிதா கூடப் பிறந்த அண்ணன்.. அக்காவை விட்டு.. ஒன்று விட்ட சகோதரியின் மீது எப்படி அவ்வளவு இறுக்கமான பாசப் பிணைப்பை உண்டாக்கிக் கொண்டாள் என்று ஆச்சரியப் பட்டுப் போனாள் வித்யா…
அதை அறிந்தவளைப் போல நிவேதிதாவும் அந்தப் பாசப் பிணைப்பைப் பற்றித்தான் சொன்னாள்…
“எனக்கு கௌதம் அண்ணா.. ஸ்வாதிகா அக்காவை விட கார்த்திகாயினி அக்காவைத்தான் பிடிக்கும்.. எங்க அரண்மனையில் நாங்க மூன்று பேர் வாரிசா இருந்தோம்.. அக்கா அப்படியில்லை.. அவங்க அரண்மனையில அவங்க மட்டும்தான் ராணி.. எனக்கு அது பிடிச்சிருந்தது…”
‘உனக்கு அது மட்டும்தானே பிடிக்கும்..’ வித்யா கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள்..
அவளுக்கு அலுப்பாக இருந்தது.. அவளுக்கும் நரேந்திரனுக்கும் இடையே பள்ளம் பறிக்கத்தான் சுரேந்திரனைத் தேடிப் பிடித்துக் காதலித்தேன் என்று சொல்கிறாள் அவன் மனைவி.. அந்தக் காவியக் காதல் கதையை வேலை மெனக்கெட்டு அவள் வந்து சொல்ல.. வேலையைக் கெடுத்துக் கொண்டு வித்யா ‘ஊம்’ போட்டுக் கேட்க வேண்டுமா.. என்ன..?
“ம்ஹீம்.. நீயெல்லாம் வாட்சைப் பார்க்க உன்னிடம் கதை சொல்லனும்னு எனக்கு விதித்திருக்கு பாரேன்..”, நிவேதிதா இகழ்ச்சியாகச் சொன்னாள்…
“உன்னிடம் கதை சொல்லச் சொல்லி நான் கேட்டேனா..?” வழக்கமான நிதானத்துடன் பதிலுக்கு கேட்டாள் வித்யா…
“நீ கேட்க மாட்ட.. எப்படிக் கேட்ப..? இந்தக் கதை உன் வாழ்க்கையை ஆட்டி வைக்கப் போகிற கதையாச்சே…”
“என் வாழ்வை ஆட்டி வைக்க உன்னால் முடியாது..”
“ஆனா கார்த்திகாயினி அக்காவால் முடியுமே…”
வித்யாவின் உயிர் துடித்தது.. அவள் வாழ்வை கார்த்திகாயினி ஆட்டி வைத்து விடுவாளா..? அவளுடைய நரேந்திரனை அவளிமிருந்து பிரித்து விடுவாளா..?
“அவளுக்குத்தான் கல்யாணம் ஆகி விட்டதே…” வித்யா பற்றுக் கோடாக அதைப் பிடித்துக் கொண்டாள்…
அதைக் கேட்ட நிவேதிதாவின் முகம் மாறியது.. அவள் விழிகளில் தீயின் ஜ்வாலை தெரிந்தது..
“அதுக்குப் பெயர் மேரேஜா..? இது எல்லாத்துக்கும் நரேந்திரன்தான் காரணம்..”
“ஷட் அப் நிவேதா.. நரேன் உன் கணவரின் அண்ணன்.. அந்த மரியாதை உன் மனதில் இருக்கட்டும்..”
“ஹ..! என் ஹஸ்பெண்டுக்கு பிரதர்ங்கிறதெல்லாம் இப்போது வந்த உறவு.. அதுக்கு முன்னாலே அவர் என் கார்த்திகா அக்காவின் சந்தோசத்தை குழி தோண்டிப் புதைத்த ராட்சஸன்…”
“நிவேதா..”
“சும்மா கத்தாதே.. என் பெரியப்பா அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தார்.. ஜெய்ப்பூர் ராஜவம்சம்…”
“அப்புறம் என்ன..? உங்க வம்சப் பெருமையில் தானே உங்க அக்கா கல்யாணம் பண்ணிக் கொண்டாங்க..? அதற்காக ஏன் நரேனைத் திட்டுகிற..?”
“பேசாதே.. அந்த ஆள் பெயருக்குத்தான் அக்காவை மனைவியாக வைத்திருக்கிறார்.. மற்றபடி அவருக்கு ஊருக்கு ஒருத்தி.. அவர் குழந்தைகளுக்கு ராஜ வம்சத்துப் பெண்தான் அம்மாவா இருக்க முடியுமாம்.. அதுக்காகத் தான் அக்காவை மேரேஜ் பண்ணிக்கிட்டாராம்..”
“என்னது…?”
வித்யா அதிர்ந்து போனாள்.. கார்த்திகாயினி சந்தோசமாக இல்லையா..? அவள் சந்தோசமாக இல்லையென்பதைத்தான் மதன்பூரில் நரேந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாளா..? அதனால்தான் நரேந்திரன் வித்யாவை மறந்து சதா.. ஏதோ ஒரு சிந்தனையிலேயே உழல்கின்றானா…?
“நரேந்திரன் மட்டும் காதலித்த என் அக்காவை கை விடாமலிருந்தால் என் அக்காவுக்கு இந்த நிலைமை வந்திருக்காதே..” நிவேதிதா பொருமினாள்…
நரேந்திரனை அவள் குற்றம் சொல்வதை வித்யாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை…
“ஏன்..? அதை இப்படியும் சொல்லலாமே.. கார்த்திகா மட்டும் காதலை உதறிவிட்டு வேறு ஒருவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் நரேனுக்காக காத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே…” வித்யா பதில் கொடுத்தாள்…
“எப்படிக் காத்திருக்க முடியும்..? காதலியை மறந்து குடும்பம்தான் முக்கியம்ன்னு நினைக்கிற ஒருத்தனுக்காக என் அக்கா காத்திருக்கனுமா..?”
“வேணாம்ன்னு அவங்க நினைத்தாங்க.. வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. இதில் நரேனின் தப்பு என்ன இருக்கு..? காதலியை அவர் மறக்கலை… அவருடைய காதலிதான் அவரை மறந்துட்டாங்க…” வித்யாவுக்கு ஆற்றாமையாக இருந்தது..
அவளின் நரேந்திரன் என்ன நிலையில் இருந்தான் என்பதெல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும்…
வித்யா முகம் சிவக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அவளை தீர்க்கமாகப் பார்த்தாள் நிவேதிதா..
“இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்.. நான் எதற்காக சுரேந்திரனைத் தேடிப் பிடித்துக் காதலித்தேன் தெரியுமா..? இந்த மணிமுத்தாறு அரண்மனையில் ஏன் மருமகளாக காலடி வைத்தேன் தெரியுமா..?”
“தெரியாது…”
“எந்தக் குடும்பத்தைக் காரணம் காட்டி என் அக்காவை உன் அருமை நரேந்திரன் உதறினானோ.. அந்தக் குடும்பம் அவனைத் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக…”
‘அதைத்தான் ஏற்கனெவே நரேனின் குடும்பம் செய்து விட்டதே…’ மனதிற்குள் வேதனைப் பட்டாள் வித்யா..
பூர்ணிமா மட்டும் நரேந்திரனுக்காக.. போராடாமல் இருந்திருந்தால் அவனின் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று நடந்திருக்குமா…?
அதையெல்லாம் இவளிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வேறு ஒரு காரணத்திற்காக சீறினாள் வித்யா..
“ஜாக்கிரதை நிவேதா.. இனியொரு முறை என் கணவரை ‘அவன்.. இவன்..’ன்னு நீ பேசினால் உன் பல்லை உடைத்து விடுவேன்…”
“வாட்…”
“போடி..”
ஏற்கனெவே அகன்றிருந்த நிவேதிதாவின் விழிகள் மேலும் அகல்வதைக் கவனிக்காதவளைப் போல வெளியே நடந்து விட்டாள் வித்யா…
‘யாருகிட்ட..?’ அவளுக்கு கோபம் கொந்தளித்தது…
‘இவ மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா..? எவ்வளவு தைரியமிருந்தா என்கிட்டேயே நரேனை ‘அவன்’ ‘இவன்’ன்னு பேசுவா…’
அன்று முழுவதும் அந்தக் கோபம் வித்யாவின் மனதில் இருந்தது…
‘இவ பெரிய மகாராணியாய் இருந்தால் அது இவள் மட்டுக்கு.. எனக்கென்ன வந்தது..? என் புருசனை மரியாதை குறைவாய் பேச இவள் யார்..? இவளுடைய ஒன்று விட்ட அக்காவை என் நரேனா கைவிட்டார்..? அவள்தானே இவரை கை விட்டாள்..?’
நரேந்திரனை யாரெல்லாம் கைவிட்டார்கள் என்ற நினைவில் மனம் நொந்தாள் வித்யா…
‘வந்துட்டா.. பெரிசா நியாயம் பேசிக்கிட்டு.. என் நரேனுக்கு அநியாயத்திற்கு மேல் அநியாயம் நடந்ததே.. அது இவளுக்குத் தெரியுமா…’
வித்யா நிவேதிதாவிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.. தானுண்டு.. பேக்டரியுண்டு என்று இருந்தவளிடம் பேக்டரிக்குள் நுழைந்து வம்பு வளர்த்தாள் நிவேதிதா..
“அண்ணி.. நிவி நம்ம பேக்டரி அட்மினிஸ்ட்ரேசனில் பங்கெடுத்துக்கனும்னு ஆசைப்படறா…”
சுரேந்திரன் வித்யாவிடம் இந்த தகவலைச் சொன்ன போது நரேந்திரன் ஊரில் இல்லை.. சென்னைக்கு சென்றிருந்தான்… நிவேதிதாவின் ஆசை எதுவென்று வித்யாவுக்குப் புரிந்தது.. அவள் பேக்டரியின் நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட வில்லை.. நரேந்திரன்.. வித்யாவின் நிம்மதியைக் குலைக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறாள்..
“இதில் நான் சொல்ல என்ன இருக்கு சுரேன்.. பேக்டரி உங்களுக்கும்.. உங்கள் அண்ணனுக்கும் சொந்தமானது.. பொதுவானது.. இதை உங்க அண்ணனிடம் சொன்னால் போதுமே…”
“அண்ணனிடம் சொல்லிட்டேன் அண்ணி…”
“ஓ…”
வித்யாவுக்கு பேச்சு வரவில்லை.. அவளுடைய நரேந்திரன் ஏன் இதைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை..?
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.