Chapter 23
நதியோரம் நடந்த போது..
உன்வரவை கண்கள் தேடும்..
தினந்தோறும் வந்துவிட்டு…
நான் தேடும்போது நீ எங்கே போனாய்..?
-நதியோரம் நான் நடந்த போது-
“நிவி ஜி.எம்மா இருக்கட்டும் அண்ணி…”
சுரேந்திரன் சொன்னபோது வித்யா மறுத்துப் பேசவில்லை.. பேக்டரியின் எம்.டியாக நரேந்திரனும்
உதவி எம்.டியாக சுரேந்திரனும் இருந்தார்கள்.. வித்யா பெர்ஸனல் மேனேஜராக இருந்தாள்.. மகேந்திரன் பார்த்துக் கொண்டிருந்த ஜி.எம் பதவி காலியாகவே இருந்தது..
அதில் நிவேதிதா அமர்வதை வித்யாவால் எப்படி ஆட்சேபிக்க முடியும்…?
‘இனி பேக்டரியின் நிலவரம் என்னவாக இருக்கும்..?’
வித்யாவால் அனுமானிக்க முடிந்தது.. அவள் கணித்ததைப் போலவே நிவேதிதா பேக்டரிக்குள் பிரச்னைகளை உண்டாக்க ஆரம்பித்தாள்…
அன்றும் அதுபோலவே அவள் செய்து வைத்திருக்க.. வித்யா காரை விட்டு இறங்கும் போதே அவளிடம் வழக்கு வந்து விட்டது..
“என்ன மேடம் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? தொழிலாளின்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிருச்சா..?”
அப்போதுதான் வந்தவளிடம் ரங்கதுரை இப்படிக் கொதித்தால் அவள் என்னவென்று பதில் சொல்லுவாள்..?
ரங்கதுரையோ அதையெல்லாம் நினைத்துப் பார்த்தாகத் தெரியவில்லை.. அவனுடைய மீசை துடித்துக் கொண்டிருந்தது…
“கூல் டவுன் சார்.. என்ன விசயம்ன்னு நிதானமாச் சொல்லுங்க.. நீங்க சொன்னாத்தானே எனக்கு என்னன்னு தெரியும்..?” அவள் அமைதியாகவே பதில் சொன்னாள்..
“நிதானமா பேசுன்னா எப்படிப் பேசறது மேடம்..? எங்க சுயமரியாதையை காலடியில் போட்டு மிதிக்கறிங்க.. தொழிலாளியின் உரிமையைத் தட்டிப் பறிக்கறிங்க..”
“யார்…? நானா…?”
“அதை நீங்க செய்தா என்ன…? ஜி.எம் அம்மா செஞ்சா என்ன…? ரெண்டுமே ஒன்னுதானே…”
‘போச்சுடா..’ என்றிருந்தது வித்யாவிற்கு…
இரண்டும் ஒன்றில்லை.. வேறுவேறு என்று இவனுக்கு யார் சொல்வது என்ற நினைவுடன் இயலாமை மேலோங்க ரங்கதுரையின் முகம் பார்த்தாள்…
“இன்னைக்கு என்ன பிரச்னை…?”
“தினமும் நடக்கிறதைப் போல்தான்ம்மா.. ஜி.எம் மேடம் ரவுண்ட்ஸ் வந்திருக்காங்க.. நம்ம சுப்பிரமணி அவங்களுக்கு வணக்கம் சொல்லலை..”
“சொல்லியிருக்கலாமே…”
அப்படிச் சொல்லியிருந்தால் பிரச்னையைத் தவிர்த்திருக்கலாமே என்ற நினைவில்தான் யதார்த்தமாக அந்த வார்த்தைகளை வித்யா சொல்லி விட்டாள்… ரங்கதுரையோ பிலுபிலுவென்று அவளை பேச்சில் உலுக்கி விட்டான்..
“ஏன் சொல்ல மாட்டிங்க…? எங்க வியர்வையிலே தேரோட்டுகிற முதலாளி வர்க்கம்தானே நீங்க…?”
“யூனியன் லீடர் சார்.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை..”
“நீங்க எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் அந்த அர்த்தத்தில்தானேம்மா வந்து முடியும்…?”
“அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டா நான் என்ன செய்கிறது…? எப்படியும் நம்ம சுப்பீரியரைப் பார்த்தா நாம மரியாதைக்கு வணக்கம் சொல்லனுமா.. வேண்டாமா..?”
“சொல்லனும்தான்.. எப்பச் சொல்லனும்..? மேலே ஃபேன் ஓட.. காலை ஆட்டிக்கிட்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தா சொல்லனும்..மெஷின் ஓட.. அதில தலையைக் கொடுத்து வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கிறவன்.. யார் வருகிறாங்கன்னு பார்த்தாத்தானே சொல்ல முடியும்…?”
‘நியாயம்தான்…’ வித்யா நினைத்துக் கொண்டாள்..
இயந்திரத்துடன் வேலை பார்ப்பவனின் கவனம் நொடிப்பொழுதுக்கு சிதறினாலும் எப்படிப்பட்ட விபத்து நிகழும் என்பதை அவள் அறியாதவளா…?
ஆனால் இந்த நியாயத்தை நிவேதிதாவிடம் யார் சொல்வது…? அவளால் சொல்ல முடியுமா…? அப்படிச் சொல்ல முடியாமல்தானே இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி வெடிக்கின்றன…
“எனக்கு உங்க பக்க நியாயம் புரிகிறது யூனியன் லீடர் சார்.. நான் இதை எம்.டியிடம் சொல்கிறேன்…”
“ஏன்ம்மா.. ஜிஎம் அம்மாகிட்டச் சொல்ல மாட்டிங்களா…? வணக்கம் சொல்லலைங்கிறதுக்காக வாடா.. போடான்னு அவனைப் பேசியிருக்காங்க.. தொழிலாளின்னா அவ்வளவு ஈஸியாப் போயிருச்சா…? உழைக்கிறோம்… அதுக்கான சம்பளத்தைத்தான் உங்ககிட்ட வாங்கறோம்.. நீங்க ஒன்றும் இலவசமாக் கொடுக்கலை.. நாங்க ஒன்றும் கொத்தடிமை இல்லை…”
“விசயத்தை பெரிசாக்க வேணாம் சார்…”
“இது பெரிசான விசயம்தான் மேடம்.. எங்க சுயமரியாதை பெரிசில்லைன்னா.. வேற எதுதான் பெரிசு…?”
உண்மைதானே.. சுயமரியாதையைவிட பெரிதான ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா…?
“என்ன செய்யனும்னு நினைக்கறிங்க…?”
“அவங்க சுப்பிரமணிகிட்ட மன்னிப்புக் கேட்டாகனும்…”
“இல்லைன்னா…?”
“இங்கே யாரும் வேலை செய்ய மாட்டோம்.. லே.. வாங்கலே.. பேக்டரியோட கதவை இழுத்து மூடுங்கலே…”
நொடிப் பொழுதில் அங்கே கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியதில் வித்யா முடிவெடுத்து விட்டாள்..
இதைப் போல தினமும் பல பிரச்னைகளை நிவேதிதா உருவாக்குவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வித்யாவுடன் மோதினால் கூட வித்யா பொறுமையாக போய் விடுவாள்… தொழிலாளிகளின் சுய மரியாதையுடன் விளையாடிப் பார்க்க நிவேதிதா நினைப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
செல்போனை எடுத்து காதுக்கு கொடுத்தவள் சுரேந்திரனை அழைத்தாள்… மறுநொடியில் சுரேந்திரனின் குரல் கேட்டது…
“சொல்லுங்க அண்ணி…”
“பேக்டரியின் முன் வாசலுக்கு வாங்க சுரேன்…”
சுரேந்திரன் உடனடியாக வந்து விட்டான்.. அங்கிருந்த கொந்தளிப்பான சூழலைக் கண்டு புருவங்களை உயர்த்தினான்…
“என்ன ஆச்சு…?”
வித்யா விவரத்தைச் சொன்னதும் சுரேந்திரனின் புருவங்கள் முடிச்சிட்டன… அவனுடைய செல்போனை எடுத்து நிவேதிதாவை அழைத்தான்.. வந்தவளிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னான்.. இப்போது நிவேதிதா கொந்தளித்தாள்…
“என் சைடில எனன நியாயம் இருக்குன்னு நீங்க பார்க்க மாட்டிங்களா சுரேன்…”
“சொல்லு.. அதில் நியாயம் இருக்குதான்னு பார்க்கிறேன்..”
“சுப்பிரியருக்கு.. மரியாதை கொடுக்கனும்.. அதைக் கேட்டு வாங்குகிறபடி உங்க பேக்டரி லேபர்ஸை நீங்க பழக்கி வைத்திருக்கீங்க.. மதன்பூரில் இப்படி இல்லை.. எங்க நிழலைக் கண்டால் கூட உடனே சல்யூட் வைத்து விடுவார்கள்.. மரியாதை தெரியாதவங்கதான் உங்க ஊரில் இருக்காங்களா…?”
“நிவி… எங்களுக்கும் மரியாதை தெரியும்.. பேக்டரியின் செக்யூரிட்டி உன்னைக் கண்டதும் விஷ் பண்ணலையா…? நம்ம ஆபிஸில் அட்மினிஸ்ட்ரேசன் செக்சனில் இருக்கிறவங்க உன்னைக் கண்டதும் விஷ் பண்ணலையா…?”
சுரேந்திரன் கேட்டுக் கொண்டிருந்த போதே அங்கே வந்த குகன் நிவேதிதாவிடம்…
“குட்மார்னிங் மேடம்…” என்று சொன்னான்…
சுரேந்திரனின் பார்வை ‘கேட்டுக்கிட்டியா…’ என்று கேட்க நிவேதிதா திணறிப் போனாலும் உடனே சமாளித்துக் கொண்டாள்..
“நான் சொன்னது உங்க லேபர்ஸை…”
“அவங்க வேலை மெஷினோடு.. மெஷின் முன்னால் இருக்கிறவங்க முதலாளியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டாங்க.. நீ ஸாரி சொல்லு…”
“ஓகே… சுரேன்.. நீங்க உங்க லேபர் விஷ் பண்ணாததுக்கு விளக்கம் சொல்லிட்டிங்க.. மேட்டர் இஸ் ஓவர்.. இதில் நான் ஸாரி சொல்ல வேண்டிய அவசியம் என்ன…?”
“என்ன பேசற…? நீ எப்படி ‘வாடா’ போடான்னு பேசலாம்…?”
“அது கோபத்தில் பேசினது.. இப்ப நீங்க விளக்கம் சொல்லிட்டிங்கள்ல… இனி இதை அவாய்ட் பண்ண டிரை பண்றேன்…”
நிவேதிதா அசைந்து கொடுக்காமல் வழக்கடித்ததில் ரங்கதுரையின் ரத்தாஅழுத்தம் எகிறியது..
“டிரை பண்றிங்களா…? இவ்வளவு ஈஸியா பேசறிங்களே… எங்க மரியாதை உங்களுக்கு இவ்வளவு ஈஸியா போயிருச்சா…? இனிமே நீங்க டிரை பண்றது இருக்கட்டும்மா.. இப்ப நீங்க பேசினதுக்கு என்ன பதில்…?”
“சுரேன்! இவங்ககிட்டயெல்லாம் நான் ஈக்குவலா பேச முடியாது.. யார்கிட்ட யார் ஸாரி கேட்கிறது…?
எங்க மதன்பூரில் என்னிடம் நின்று பேசக்கூட எங்க லேபர்ஸ் யோசிப்பாங்க…”
எரிகிற கொந்தளிப்பில் நிவேதிதா எண்ணையை ஊற்றிக் கொண்டேயிருக்க சுரேந்திரன் கோபமானான்..
“முதலில் உன் வாயை மூடுகிறயா…?” என்று சீறினான்..
“சுரேன்.. இவங்க முன்னாலே என்னை அதட்டுகிறிங்களா..?” நிவேதிதா வெகுண்டாள்…
“ஷட் அப்.. இவங்க என்னோட லேபர்ஸ்.. இவங்க வேற நான் வேற இல்லை.. முதலில் ஸாரி சொல்லு…”
நிவேதிதாவிற்கு வேறு வழி இருக்கவில்லை.. அரை குறையாக அவள் “ஸாரி..” என்று வாய்க்குள் முணுமுணுக்க.. வெற்றிபெற்ற தொழிலாளர்களின் கொந்தளிப்பு குறைந்தது.. சுரேந்திரன் வேகமாக போய்விட.. கோப மூச்சுக்களுடன் வித்யாவை முறைத்தாள் நிவேதிதா…
“இது உன் வேலைதானா…?”
“நீ செய்து வைத்த வேலை…”
“அது எப்படி நரேனைப் போலவே சுரேனும் நீ என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்கிறார்..?
நீ போட்டிருக்கும் மயக்க மருந்தின் ரகசியத்தை என்னிடமும் சொல்லேன்..”
“நிவேதிதா…”
“உண்மையைச் சொன்னால் ஏன் கத்துகிறாய்…?”
“ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுஷி…”
வித்யா வேகமாக போய்விட நிவேதிதாவின் கோபம் அடங்க மாட்டேன் என்று திமிறியது..
மாலையில் மணிமுத்தாறு அரண்மனைக்குள் அவள் நுழைந்த போது மீனலோசனி அவளைத் தேடி வந்தாள்…
“இன்னைக்கு பேக்டரியில் பிரச்னையாமே.. அந்த வித்யா உன்னை ஸாரி கேட்க வைத்தாளாமே..” என்றும் கேட்டாள்.
அதற்குள் இவளுக்கு எப்படி விவரம் தெரிந்தது என்று நிவேதிதா திகைத்துப் போனாள்.. காற்றில் கூட விவரத்தைக் கறந்து விடும் மீனலோசனியின் ஆற்றலைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்…?
“வித்யா கேட்க வைக்கலை.. சுரேன் கேட்க வைத்தார்…”
“நினைத்துக்கிட்டு இரு.. அந்த வித்யாதானே சுரேனுக்கு போனை போட்டு விவரத்தைச் சொன்னா…?”
“என்னிடம் சொல்லலை..”
“உனக்கு இதில் ஒரு திருப்தியா…? ஆனாலும் நிவேதிதா… உனக்கு விவரம் போதாது.. அவ்வளவுதான் நான் சொல்வேன்…”
“வாட்…!”
“கோபப்பட்டால் பட்டுக்க.. பின்னே என்ன…? அந்த பேக்டரிக்குள்ளே தொழிலாளர்களுக்கு ஏதாவது ஒன்றுன்னா வித்யா அவங்க பக்கம்தான் நிற்பா.. இதுவரைக்கும் அது போல நடக்காமல் இருந்தது..
நீ வந்து அப்படிப்பட்ட நிலைமையை உண்டாக்கிட்ட..”
மீனலோசனி என்னவோ நிவேதிதாவிற்கு ஆலோசனை கூறும் எண்ணத்துடன்தான் அதைச் சொன்னாள்.. அது நாள் வரை மகேந்திரன் யூனியன் தலைவரை தூண்டி விட்டு வித்யாவிற்கு எதிராக
வேலை செய்ததை எடுத்துச் சொன்னாள்.. அதனால் தொழிலாளர்களை பகைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு நன்மை செய்வதைப் போல வித்யாவிடம் மோத விடச் சொன்னாள்.. ஆனானப்பட்ட மீனலோசனியாலேயே நிவேதிதாவின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனது உலக மகா அதிசயம்தான்…
“ஐ.. ஸீ.. ” என்ற நிவேதிதாவின் கண்கள் மின்னின..
‘ஆஹா… இனி இவ தொழிலாளர்களை பகைத்துக்க மாட்டா…’ மகிழ்ந்து போன மீனாவிற்கு…
‘அது என்ன தேவைக்கு…?’ என்று நிவேதிதாவின் நினைவைப் பற்றித் தெரியாது…
நிவேதிதாவே வித்யாவுடன் மோதும் எண்ணத்துடன் இருந்தாள்… அதிகார வர்க்க மனப்பான்மை கொண்டவளிடம் தொழிலாளர்களிடம் கை கோர்த்துக் கொள் என்று சொன்னால் கேட்டுக் கொள்வாளா…?
வித்யாவுடன் நேருக்கு நேர் மோதினால் சுரேந்திரனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் நிவேதிதா வாய்ப்புக்களை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. அப்போது பார்த்து மீனலோசனி அதற்கு வழி சொல்லிக் கொடுத்து விட.. நிவேதிதா உற்சாகமாகி விட்டாள்…
‘அப்படியா.. அங்கே அடித்தால் இங்கே வலிக்குமா..? இவளும் தொழிலாளியாய் இருந்தவள்தானே.. அதனால் தான் ரோசம் பொத்துக்கொண்டு வருதோ.. வரட்டும்.. அப்படி வந்தால்தான் அவளை உண்டு இல்லைன்னு ஆக்க முடியும்.. எத்தனை நாளைக்குத்தான் சுரேன் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவார்…? என்றைக்காவது ஒருநாள் எனக்கு சப்போர்ட் பண்ணித்தானே ஆகணும்….? அப்போது குடும்பம் உடைந்துதானே போகும்…’
நிவேதிதா தினமும் பிரச்னைகளை உருவாக்கினாள்.. வித்யா சளைக்காமல் அவளுடன் போராடினாள்.. தொழிலாளர்களின் பக்கம் நின்ற வித்யாவின்மீது தொழிலாளர்களின் பழைய நம்பிக்கை மீண்டது.. ரங்கதுரையின் மனதிலிருந்த கசடும்.. பொறாமையும் பறந்தோடியது.. தூண்டி விட வந்த மகேந்திரனிடமே அவன் பொரிந்து தள்ளி விட்டான்..
“சும்மா போங்க சார்…. உங்களுக்கு எதுக்காக அந்தம்மா மேலே இத்தனை காண்டு..? உங்களைப் போல முதலாளி வர்க்கத்தில் உங்க அண்ணன் பெண்ணைக் கட்டாம எங்களைப் போல தொழிலாளிகள் வர்க்கத்தில் கட்டிட்டார்.. அதுதானே…”
‘போச்சுடா…’ மகேந்திரன் தலையில் கை வைத்துக் கொண்டு போய் விட்டான்…
நிவேதிதா பேக்டரிக்குள் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்க.. கார்த்திகாயினி தேவி.. வித்யாவின் மனதிற்குள் குழப்பத்தை விதைத்துக் கொண்டிருந்தாள்..
நரேந்திரன் மணிமுத்தாறில் இருக்கும் சமயங்களில் அவனுக்கு வரும் செல் போன் அழைப்புகளில் கார்த்திகாயினியின் பெயர் அதிகமாக இருந்தது..
‘இவன் அவகூட போனில் பேசுகிறானா…’
வித்யாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. கார்த்திகாயினியின் போன் வரும்போது நரேந்திரன் தனிமையில் பேசப்போய் விடுவதை அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்… ஓர் முறை அப்படி அழைப்பு வந்தபோது நரேந்திரன் குளியலறையில் இருந்தான்.. வித்யா பெயரைக் கவனிக்காமல் அவனின் செல்போனை எடுத்து உயிர்ப்பித்து விட்டாள்.. அவள் பேசுவதற்கு முன்னால் செல்போனில் பெண் குரல் குழைவுடன் பேசியது..
“இன்னைக்கு நீங்க என்னுடன் இருந்திருக்கனும் நரேந்தர்.. ஏன் வரவில்லை…?”
வித்யா உறைந்து போனவளாக செல்போனின் திரையைப் பார்த்தாள்.. அது ‘கார்த்திகாயினி’ என்று ஒளிர்ந்தது….
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.