Chapter 24

0Shares

நதியோரம் நடந்த போது..

      நீ சொன்னதெல்லாம்.. கானல் நீரா..?

தண்ணீரில் எழுதியதைப் போல..

      கண்ணீரில் நான் எழுதிய கதையா..?

-நதியோரம் நான் நடந்த போது-

வித்யாவினால் தன் காதுகளையும்.. கண்களையும் நம்ப முடியவில்லை.. அவள் ஸ்தம்பித்து விட்டாள்…

எவ்வளவு உரிமையுடன் சொல்கிறாள்..? அன்று அவளுடன் வித்யாவின் நரேந்திரன் இருந்திருக்க வேண்டுமாமே.. அப்படியா..? அவளுடைய நரேந்திரன் அப்படியொரு வாக்குறுதியை அவனுடைய முன்னாள் காதலிக்குக் கொடுத்திருந்தானா…?

அவள் முன்னாள் காதலியாக இருந்தாலும்.. அவள்தான் நரேந்திரனின் முதல்காதலி என்ற நினைவில் வித்யா தவித்துப் போனாள்… அந்த முன்னாள் காதலியும்.. முதல் காதலியுமான கார்த்திகாயினி தேவியுடன் வித்யாவின் நரேந்திரன் ரகசிய உறவில் இருப்பதில் துடித்துப் போனாள்…

குளியலறையில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.. வித்யாவிற்கு கண்ணீர் வந்தது.. அடக்கிக் கொண்டாள்..

‘அழாதே வித்யா…’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..

‘உன் நரேன் ஏற்கனெவே ஒரு பெண்ணைக் காதலித்தவன் என்று உனக்குத் தெரியும்தானே.. தெரிந்துதான் நீ அவனைக் காதலித்தாய்.. இன்னொருத்தியைக் காதலித்தவனின் மனதில் அவளைப் பற்றிய நினைவுகள் வராமலிருக்கும் என்று எந்த நம்பிக்கையில் நீ முடிவு செய்தாய்…?’

அவள் மனதுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.. வித்யா ஜன்னல் திரையை விலக்கி.. தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த நதியைப் பார்த்தாள்.. அவளுடைய சிநேகிதியான நதி.. அவளுடைய துடிப்பை உணர்ந்து கொண்டதைப் போல.. மௌனமாக ஓடிக் கொண்டிருந்தது.. ஜன்னல் கம்பியில் முகம் பதித்திருந்த வித்யாவின் முகம் கண்ணீரின் ஈரத்தில் நனைந்திருந்தது..

எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும்.. கண்ணீருக்கு அனை போட முடியவில்லை என்பதை உணர்ந்த வித்யாவின் மனதில் பாறாங்கல் ஏறி அமர்ந்தது.. கனக்கும் மனதின் சுமையை இறக்க வழி தெரியாமல் தவித்துப் போனாள் அந்தப் பேதை…

லேசாக கண்ணைச் செறுகியதைப் போலத் தோன்றியதில் அவள் அவசரமாக ஜன்னலை விட்டு விலகி படுக்கைக்குச் சென்று சரிந்து படுத்து.. கண் மூடிக் கொண்டாள்…

கண் திறக்க முடியாமல் அவளை அழுத்தும் சோர்வு எதனால் ஏற்பட்டிருக்கிறது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. அந்தச் சோர்வு.. அந்த ஒரு மாத காலமாகவே அவளைப் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது.. சோர்வு மட்டுமல்ல.. எதைச் சாப்பிட்டாலும் அவள் வயிற்றில் விழுவதற்கு முன்னாலேயே குமட்டல் எடுத்து வாந்தியாய் வெளிவந்து விடுகிறது.. இதைச் சொல்ல நரேந்திரன் அவளருகில் இல்லை.. முதல் நாள்வரை அவன் வெளியூரில்தான் இருந்தான்.. அன்றுதான் மணி முத்தாறுக்கு வந்தான்.. பின்னாலேயே போனில் கார்த்திகாயினியின் அழைப்பும் வந்து விட்டது…

வித்யாவின் மனதுக்கு.. அந்த வாந்தியும்.. மயக்கமும் எதனால் ஏற்படுகின்றன என்று மிக நன்றாகவே தெரியும்.. அதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள அவள் லேடி டாக்டரை அணுகியாக வேண்டும்.. அந்த நொடியில் அவளுடைய நரேந்திரன் அவளருகில் இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்..

‘இன்னைக்கு நீங்க என்னுடன் இருந்திருக்கனும் நரேந்தர்…’

கார்த்திகாயினியின் குரல் அவள் காதுகளில் ஒலித்தது… வித்யாவினால் ஏன் அந்த நிச்சயத்தில் இருக்க முடியவில்லை..?

அவள் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் அவள் எதிர்பார்க்கும் இனிப்பான செய்தியை லேடி டாக்டர் சொல்லும்போது அவளுடைய நரேந்திரன் அவளுடன் இருக்க வேண்டாமா..?

சொல்லி விடலாம்.. ஒற்றை வரியில் அவள் உடல் நிலையைப் பற்றித் தெரிவித்து விடலாம்.. ஆனால் அவளால் அதைச் சொல்லவும்.. செய்யவும் முடியவில்லை..

அவள் முகம் பார்த்து.. அவளின் உடல் நிலையையும்.. மனநிலையையும் தெரிந்து கொண்ட அவளுடைய நரேந்திரன் எங்கே போய் விட்டான்..? கார்த்திகாயினியின் பின்னால் போய் விட்டானா..? அப்படிப் போய் விட்டவனை அவளுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டி அவள் இழுத்துப் பிடித்துக் கொள்வதா..?

‘ஒருநாளும் நான் அதைச் செய்ய மாட்டேன்…’

வித்யா மனதிற்குள் உறுதியுடன் சொல்லிக் கொண்டாள்.. அவளைவிடக் கார்த்திகாயினி தேவிதான் முக்கியம் என்று நரேந்திரன் நினைத்தால் வித்யா அவன் போக்கில் அவனை விட்டு விட்டு விலகிக் கொள்வாள்.. அவன் மனதைத் திருப்ப முனைய மாட்டாள்…

குளியலறை திறக்கும் சப்தம் கேட்டது.. வித்யா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. குளியலறையை விட்டு வெளியே வந்த நரேந்திரனின் விழிகளைச் சந்திக்காமல் முகம் திருப்பிக் கொண்டாள்.. மனைவியைப் பார்த்தபடி வந்த நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின.. அவன் முகம் பார்க்காமல் முதுகைக் காட்டிப் படுத்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்து அவளின் இடுப்பைத் தொடப் போனான்…

அவனின் அருகாமையை உணர்ந்த வித்யாவின் மனம் பரவசத்துடன் ‘டிக்..டிக்’ கென்று அடித்துக் கொண்டது.. இதோ அவன் அவள் இடுப்பைத் தொடப் போகிறான்.. அவளை அவன் பக்கமாகத் திருப்பப் போகிறான்.. ஏண்டி முகம் திருப்பிக் கொள்கிறாய் என்று கேட்கப் போகிறான்.. கலைந்திருக்கும் அவள் முடியை சீர் படுத்தப் போகிறான்.. கலங்கிச் சிவந்திருக்கும் அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்க்கப் போகிறான்.. உன் உடம்பு சரியில்லையா வித்யா என்று பதறப் போகிறான்.. வா டாக்டரிடம் போகலாம் என்று சொல்லப் போகிறான்..

இத்தனையையும் எதிர்பார்த்து வித்யாவின் மனம் தவித்துக் கொண்டிருந்த போது நரேந்திரனின் போன் ஒலித்தது.. நரேந்திரனின் கை வித்யாவின் இடுப்பைத் தொடாமல் விலகி செல்போனை எடுத்தது.. செல் போனின் திரையில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் அவனும் விலகி எழுந்து பால்கனிக்குப் போய் விட்டான்…

வித்யாவின் பரவச உணர்வுகளும்.. எதிர்பார்ப்புகளும் ஒரு நொடியில் கலைந்து.. மறைந்து விட்டன.. காற்றில் கலந்து விட்ட கற்பூரமாய் தொலைந்து போன உணர்வுகளைத் தேடுபவளைப் போல சூன்யவெளியில் பார்வையைப் பதித்திருந்தாள் வித்யா…

நரேந்திரன் பால்கனியின் கதவை இறுக்கிச் சாத்தியிருந்தான்.. சாத்தப்பட்டிருப்பது பால்கனியின் கதவுகளா.. இல்லை.. அவன் மனக் கதவுகளா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் வித்யா…

அவளுடைய நரேந்திரன் மூடப் பட்டிருக்கும் கதவுகளுக்கு அந்தப் பக்கமாக.. அவள் கை தொடும் தூரத்தில்தான் இருக்கிறான்.. ஆனால்.. வித்யாவிற்கு மட்டும் அவன் அவளின் கைக்கு எட்டாமல் வெகு தொலைவில் இருப்பதைப் போன்ற பிரமை உண்டானது..

பால்கனியின் கதவைத் திறந்து வந்தவனின் முகத்தில் கடுமை விரவியிருந்தது… அப்படிப்பட்ட கடுமையை அதற்கு முன்னால் அவன் முகத்தில் வித்யா பார்த்ததே இல்லை..

‘இது என் நரேந்திரன்தானா..’ துக்கத்துடன் அவள் துடித்தாள்.. 

“எனக்கு வந்த போனை நீ அட்டெண்ட் பண்ணினயா..?”

அவனின் கேள்வியில் வித்யாவின் விழிகள் விரிந்தன.. எத்தனை அதிகாரமாகக் கேட்கிறான்.. எவ்வளவு கோபத்துடன் கேட்கிறான்.. அவனுக்குத் தெரியும்.. போனில் பேசியவள் கார்த்திகாயினி தேவிதான் என்பது.. அவள் என்ன பேசியிருக்கிறாள் என்பதும் தெரிந்திருக்கும்… உண்மையில் அவன் குற்ற உணர்வில் தடுமாறியிருக்க வேண்டும்.. விளக்கம் சொல்ல முடியாமல் கைகளைப் பிசைந்திருக்க வேண்டும்.. அவன் அதைச் செய்யாமல் அவளை அதட்டுகிறான் என்றால் இதை வித்யா எங்கே போய் சொல்வாள்…?

‘பெருமாளே…’

கைப்பொருளை களவு கொடுத்த சிறுமியாய் அவள் மனதுக்குள் அரற்றினாள்…

அவளுடைய பெருமாளின் செவிகளில் அவளின் வேதனைக் குரல் ஏன் ஒலிக்கவில்லை..? எதுவுமே இல்லாத அந்தப் பேதைக்கு இருந்தது நரேந்திரனின் காதல் மட்டும்தான்.. அதையும் பங்குபோட கார்த்திகாயினி வருவாளென்றால் பெருமாள் அதை எப்படி அனுமதித்தார்..?

“கேட்கிறேனில்ல.. பதில் சொல்லு…”

“ம்ம்ம்…”

“ம்ப்ச்.. இதென்ன பழக்கம்..? என் போனை நீ எதுக்காக அட்டெண்ட் பண்ணின…?”

வித்யா அதிர்ந்து போனாள்.. அவனுடைய போன் காலை அவள் எடுத்துப் பேசியிருக்கக் கூடாதா..? அவள் வேறு.. அவன் வேறா..?

செல்போனில் கார்த்திகாயினியின் பெயரை வெளிப்படையாக அவன் பதிவு பண்ணி வைத்திருக்கிறான் என்பது அவள் அறிவில் உறைத்தது…

அதற்கு என்ன அர்த்தம்…?

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link