Chapter 26

0Shares

நதியோரம் நடந்த போது..

      வெந்நிலவின் வரவு கண்டேன்..

தந்நிலவில் குளிராமல்..

      தவிப்பினிலே தனிமை கொண்டேன்..

-நதியோரம் நான் நடந்த போது-

இதமான குளிர் காற்று வித்யாவின் உடல் தழுவியது.. நதிக்கரையில் நடந்தவளுக்கு நரேந்திரனின் நினைவு மட்டுமே நெஞ்சில் இருந்தது.. லேசாக உடல் தள்ளாடிய போது தாங்கிக் கொள்ள அவன் வருவானா என்று மனம் கலங்கியபடி தன்னை சமாளித்துக் கொண்டு படித்துறையில் அமர்ந்தாள் வித்யா.. சலசலத்து ஓடிய நதிநீர் தோழியின் தனிமையான வரவில் திகைத்ததைப் போல மௌனமாக இருந்தது…

‘காற்று வெளியினில் கண்ணம்மா…

  நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்..’

இந்தப் படித்துறையில் வைத்துத்தான் பாடினான் நரேந்திரன்.. அவன் காதலைச் சொன்னான்.. இன்று அவன் மனைவியாக அவனின் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அந்தச் செய்தியை அவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் தனிமையில் அமர்ந்திருக்கிறாள் வித்யா.. அவனோ.. அவனது முன்னாள் காதலியைத் தேடிப் போயிருக்கிறான்…

வித்யாவிற்கு கண்கள் மங்குவதைப் போல இருந்தது.. அவளின் உடல் உபாதைகளை அவளால் யாரிடம் சொல்ல முடியும்…?

அவைகளைச் சொல்லித் தலைசாய தாயின் மடி இருக்கிறதா..? இல்லையே.. அவளின் சித்தி மனம் மாறியிருக்கலாம்.. குணம் மாறவில்லையே… வித்யாவின் தயாள குணத்தால் அவள் வெறுப்புக் காட்டுவதை நிறுத்தியிருக்கிறாள்.. விருப்பம் காட்டவில்லையே…

மணிமுத்தாறு அரண்மனையில் சௌதாமினி விரும்பியதைப் போல அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் ஒரே அரண்மனையில் தான் வசிக்கின்றனர்… வீடு முழுவதும் நிறைந்திருப்பவர்களில் ஒருவர் கூட வித்யாவின் உடல்நிலையைக் கவனித்து பரிவோடு கேள்வி கேட்கவில்லையே…

சொந்தங்களின் மத்தியில் தனித்தீவாய் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை வித்யா அன்று உணர்ந்தாள்.. நரேந்திரன் மட்டும் வழக்கமான நரேந்திரனாக இருந்திருந்தால் அவளை இந்த அளவுக்கு மறுக விட்டிருக்க மாட்டான்.. அனைத்துமானவனாக அவளை ஆதரித்திருப்பான்.. அவன்தான் இப்போது அப்படியில்லையே…

வித்யா துயரத்துடன் ஓடும் நதி நீரை வெறித்தாள்.. அவள் கைகள் தன்னிச்சையாக வயிற்றைத் தடவின…

‘ஏ நதியே..! உன் சிநேகிதி வந்திருக்கிறேன்.. உன் கரையினில்தான் என் மனதுக்குப் பிடித்தவனிடம் என் மனதைச் சொன்னேன்.. தயாள குணம் படைத்த என்னவன்.. என்னை ஏற்றுக் கொண்டான்.. இன்று அவன் மகவை என் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன்.. இதை அவனிடம் சொல்ல முடியாமல் எங்கோ அவன் விலகி நிற்கிறான்.. அதனால் உன்னிடம் சொல்ல வந்திருக்கிறேன்.. கேட்டுக் கொள்ள.. எனக்கென்று பூர்ணிமாவிற்கு இணையாக இருக்கும் சிநேகிதி நீ மட்டும் தான்.. அவளிடம் இதை நான் பகிர்ந்து கொள்ள முடியாது.. அவளுடைய அண்ணனிடம் பகிர்ந்து கொள்ளாமல் அவளிடம் எப்படி இதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும்..? ஆனால் உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.. இந்த நொடியில் உன்னை விட்டால் எனக்கென்று யாருமில்லை…’

வித்யா.. நதி நீரில் கால் நனைத்தாள்.. தோழியின் மனதைப் படித்ததைப் போல.. நதிநீர் வேகம் குறைந்து அவள் பாதம் நனைத்து அவளைத் தொட்டு ஆறுதல் படுத்தியது..

சோர்வுடன் எழுந்து கொண்ட வித்யா.. காருக்குச் சென்றாள்.. காத்திருந்த டிரைவர் அவள் முகம் பார்த்தான்..

“பேக்டரிக்கு போங்க…”  சோர்வுடன் சொல்லிய வித்யா சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்…

பேக்டரிக்குள் கார் நுழைந்த போது.. அங்கே கூட்டம் குழுமியிருந்தது.. தூரத்திலேயே கலவரமான சூழல் உருவாகியிருப்பதைக் கண்டு கொண்ட டிரைவர்..

“ஏதோ ரகளை நடந்திருக்கு போலம்மா…” என்றான்..

“அப்படித்தான் தெரியுது…”

“என்னன்னு தெரியலையே…”

“கிட்டப் போய் விசாரிச்சாத்தான் தெரியும்.. எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணித்தானே ஆகனும்…”

அலுப்புடன் சொன்ன வித்யாவை ஒர்முறை திரும்பிப் பார்த்தான் டிரைவர்.. அவன் எதையோ சொல்ல நினைப்பதை புரிந்து கொண்ட வித்யா…

“என்ன விசயம்..?” என்று கேட்டாள்…

“இப்பல்லாம் அடிக்கடி ரகளை வருதும்மா.. பழைய மாதிரி இல்லை…”

டிரைவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டாள் வித்யா.. அவன் நிவேதிதாவின் வரவுக்கு முன்னாலிருந்த காலத்தை ‘பழைய மாதிரி’ என்று சொல்கிறான்…

இதற்கு வித்யா என்ன பதிலைச் சொல்வாள்..? ஆமாம்.. அப்படித்தான் என்று சொல்ல முடியுமா..?

மௌனமாக காரை விட்டு இறங்கியவளை தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.. விவரத்தை விசாரித்த வித்யா தலையைப் பிடித்துக் கொண்டாள்.. அங்கே பூகம்பம் உருவாகியிருந்தது…

நிவேதிதா.. ரங்கதுரையின் கன்னத்தில் அடித்திருந்தாள்..

தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவனின் கன்னத்தில் முதலாளியின் மனைவி அறைந்து விட்டால் என்ன நிகழுமோ.. அது அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது..

ஒட்டு மொத்த தொழிலாளர்களும் வேலையைப் புறக்கணித்து விட்டு அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.. ஒவ்வொருவரின் முகத்திலும் அக்கினியின் ஜீவாலை தெரிந்தது.. வித்யா சுரேந்திரனிடம் விவரம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. சுரேந்திரனும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான்..

தொழிலாளர்களை சமாதானப் படுத்த முனையாமல் அவர்களுக்கு குறையாத கோப முகத்துடன் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த வித்யாவிற்கு எரிச்சல் வந்தது..

‘என்ன மனிதன் இவன்..!’

நரேந்திரன் இல்லாத நேரத்தில் அஸிஸ்டெண்ட் எம்.டி தானே ஆக்டிங் எம்.டியாக செயல்பட வேண்டும்..? அதை விட்டுவிட்டு இவனும் தொழிலாளர்களை முறைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது என்ற ஆயாசத்துடன்…

“இதெல்லாம் என்ன சுரேன்…?” என்று கேட்டாள் வித்யா…

சுரேந்திரன் பதில் சொல்வதற்குள் தொழிலாளிகளில் ஒருவன் முந்திக் கொண்டு கூச்சலிட்டான்…

“இவர்கிட்டப் போயி கேட்கறிங்களே மேடம்.. இவரோட நாயம் வேற மாதிரியில்ல இருக்கு…”

சப்தம் போட்டவனைப் பார்த்து பேசாமலிருக்கும்படி சைகை செய்தாள் வித்யா..

“நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு.. இவர் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னு நாமளும் கேட்டுத் தெரிந்துக்கலாமே…”

‘நாமும்’ என்று தொழிலாளர்களுடன் கூட்டுச் சேர்ந்த வித்யாவை சொந்தமில்லாத பார்வை பார்த்தான் சுரேந்திரன்.. அவனின் அந்தப் பார்வையினை மனதில் பதிய வைத்துக் கொண்டாள் வித்யா…

“ஸோ.. நீங்க லேபர்ஸ் பக்கம்தான் நிப்பீங்க…?”

“இல்லை சுரேன்.. நியாயத்தின் பக்கம் நிற்பேன்.. ரங்கதுரையின் கன்னத்தில் நிவேதிதா அடிக்கலாமா..?”

“நிவேதிதாவின் ஸ்டேட்மென்ட் வேறாய் இருக்கு அண்ணி…”

“என்னவாம்…?”

“ரங்கதுரை அவளின் கையைப் பிடித்து இழுத்ததினால் சட்டுன்னு கன்னத்தில் அடித்திருக்கிறாள்.. இட்ஸ் கொயட் நேச்சுரல்.. யாராய் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பாங்க.. ஏன்..? நீங்களா இருந்தாலும் அதைத்தானே செய்திருப்பீங்க…?”

சுரேந்திரன் கேட்ட கேள்வியில் உதடுகளைக் கடித்தாள் வித்யா.. ஒரு கணவனாக மனைவியின் செயலை நியாயப் படுத்த சுரேந்திரன் முனைவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தால் அவள் யோசிக்காமல் சட்டென்று அடித்து விடுவது இயல்புதான்.. அதில் தவறேதும் இருப்பதாக வித்யாவிற்கும் தோன்றவில்லை…

ஆனால்.. ரங்கதுரை ஏன் அப்படிச் செய்தான்..?

வித்யா ரங்கதுரையைப் பார்த்தாள்.. அவள் பார்வை கேள்வி கேட்டது.. அதைப் புரிந்து கொண்ட ரங்கதுரை பதில் சொன்னான்..

“அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க மேடம்.. நான் அப்படிப்பட்ட ஆளில்லை…”

இதுபோன்ற தன்னிலை விளக்கத்தை ரங்கதுரை சொல்லித் தான் கேட்க வேண்டிய நிலைமையை எண்ணி நொந்து போனாள் வித்யா.. அவன் நல்லவன்.. கோபக் காரனாக இருந்தாலும் கண்ணியம் மிக்கவன்.. பெண்களிடம் மரியாதை தவறாமல் கௌரவம் காப்பவன்…

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link