Chapter 28
நதியோரம் நடந்த போது..
நெஞ்சுக்குள்ளே ஏதோ பாரம்..
பகிர்ந்து கொள்ள நீயுமின்றி..
மனதுக்குள்ளே ஏதோ ஏக்கம்..
-நதியோரம் நான் நடந்த போது-
விலகி நடந்த சுரேந்திரனைப் பார்த்த போது வித்யாவின் மனம் வலித்தது.. அவன் அவளுடைய கணவனின் சகோதரன்.. அவளிடமும் சகோதரனைப் போல பாசம் காட்டியவன்…
அவனின் அந்த பாசத்தை நிவேதிதா உடைத்து விட்டாள்… அவளால் சுரேந்திரனை இந்த அளவுக்கு
பேச வைக்க முடியுமென்று வித்யா நினைத்தும் பார்த்த தில்லை..
‘நித்தம்.. நித்தம்..
மாறுவது எத்தனையோ…’
என்றோ கேட்ட பாடல் அவள் மனதில் ஒலித்தது.. இப்போதெல்லாம் இது போன்ற பாடல் வரிகள் தான் அவள் மனதில் ஒலித்து வைக்கின்றன…
தாய்மை அடைந்திருக்கும் அந்தத் தருணத்தில் இது போன்ற பாடல்கள் மனதில் தோன்றுவது சரியல்ல என்று நினைத்துக் கொண்டாலும்.. அந்தப் பாடல்களை நினைவு படுத்திக் கொள்ளாமல் இருக்க வித்யாவினால் முடியவில்லை…
“ரொம்ப நன்றிங்கம்மா..” மனதார நன்றி சொன்னான் ரங்கதுரை..
அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த தொழிலாளர்களின் முகத்திலும் அந்த நன்றி உணர்வு தெரிந்தது…
“இருக்கட்டும்.. இது என் கடமை..” வித்யா முறுவலித்தாள்..
“நீங்க மாறிட்டிங்களோன்னு நினைச்சேன்ம்மா.. அப்படியில்லை.. நீங்க எப்பவும் எங்க பக்கம்தான்னு நிருபிச்சிட்டிங்க.. நாங்க சௌகரியமா இருந்தப்ப.. நீங்க அமைதியா இருந்தீங்க.. அதுவே எங்களுக்கு ஒரு பிரச்னைன்னு வருகிறப்ப.. எங்க பக்கம் நின்று உங்க குடும்பத்தையே எதிர்த்து நியாயம் கேட்கறிங்க.. நீங்க மாறவே இல்லைம்மா..” ரங்கதுரை நெகிழ்ந்தான்..
“நீங்களும் எங்க குடும்பம்தான் ரங்கதுரை…”
“உங்களைப் போல எல்லா முதலாளிகளும் இருந்துட்டா… தொழிலாளிகளும்.. முதலாளிகளோட குடும்பம்தான்ம்மா..”
“நன்றி ரங்கதுரை.. இனியாவது வேலையை ஆரம்பிக்கலாமில்லையா..?”
“இதோ போறோம்மா…”
தொழிலாளர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்.. புயலுக்குப் பின்னால் நிலவும்
அமைதி அங்கே நிலவியது.. வித்யா சோர்வுடன் நடந்து அவள் கேபினுக்குள் நுழைந்தாள்.. சுழல் நாற்காலியில் அமர்ந்தாள்.. சுழன்றாள்.. சற்று முன்னால் அவள்மீது பழி போட்டு சுரேந்திரன் பேசிய பேச்சுக்களும் மனதில் சுழன்றது..
‘எப்படிப் பேசிவிட்டான்..’ அவள் மனம் பொருமியது…
அவன் மனைவி சொன்னாள் என்பதற்காக வித்யாவை அவன் அப்படிக் கேட்டு விடுவதா..?
‘எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்-அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு..’
என்று சொன்னாரே வள்ளுவப் பெருந்தகை..! அதை சுரேந்திரன் மறந்தானா..? அவனுக்கு நிவேதிதாவின் குணம் தெரிந்திருக்கும்தானே.. தெரிந்தும் அப்படிப் பேசலாமா…?
‘நன்றிம்மா..’ ரங்கதுரை சொன்னதை நினைத்துக் கொண்டாள்… அவள் விழிகளில் கண்ணீர் பெருகியது…
‘எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்..?
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார் – இனி
என்னோடு யார் ஆடுவார்..?’
அவள் மனதில் பாடல் ஒலித்தது.. எவ்வளவு பிரயத்தனப் பட்டாலும் தடுக்க முடியாமல் மனதில்
தோன்றி விட்ட பாடலில் அவள் விழிகளில் கண்ணீர் சுரந்தது…
‘கண்ணீரை நானெங்கு
கடன் வாங்குவேன்..?
அது கடலாக வந்தாலும்
தடை போடுவேன்..
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீகாணலாம்..’
இமைசிமிட்டி கண்ணீரை தடுத்தபடி மௌனமாக வேலையில் மூழ்கி விட்டவளை அனுதாபத்துடன் பார்த்தான் குகன்.. அந்த நல்ல மனம் படைத்த பெண்ணின் மனதில் அமைதியில்லாமல் இருப்பது அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல தெள்ளத் தெளிவாக தெரிந்தது.. அவனது செல் போன் ஒலித்தது.. எடுத்து அதன் சின்னத்திரையைப் பார்த்தான்.. ஒளிர்ந்த எண்களில் அவன் கண்களும் ஒளிர.. அதை காதுக்கு கொடுத்து…
“குட் மார்னிங் சார்…” என்றான்..
“வாட் ஹேப்பன் குகன்..?” மறுமுனையில் நரேந்திரன் கேட்டான்..
“சார்…” என்று ஆரம்பித்த குகன் அனைத்தையும் ஒப்பித்து முடித்து விட்டு செல்போனை அணைத்தான்.. அவன் மனதில் திருப்தி நிலவியது…
‘இனி சார் பார்த்துக்குவார்…’
சற்று முன் இருந்த மனநிலை மாறியவனாக அவன் விசிலடித்தபடி நடந்தான்..
மதிய உணவு நேரத்தின் போது சுரேந்திரன் வித்யாவின் கேபினுக்கு வந்தான்.. வேலையாக இருந்த வித்யா தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்..
“ஐ ஆம் ஸாரி அண்ணி..” என்றான் சுரேந்திரன்..
வித்யா பதில் சொல்லவில்லை…
“உங்க கோபம் எனக்கும் புரியுது.. பட்.. உங்களுக்கும் நிவிக்கும் டெர்ம்ஸ் சரியில்லைங்கிறது உண்மைதானே..”
இதற்கு மேலும் பதில் பேசாமலிருக்க வித்யாவினால் முடியவில்லை.. அவள் வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..
“அதுக்குக் காரணம் நானில்லை சுரேன்..” என்றாள்.
“யார் காரணம்ங்கிறது முக்கியமில்லை அண்ணி..”
“நோ சுரேன்.. அதுதான் முக்கியம்..”
“நிவிக்கு உங்க மேல பெரிதா பகையேதும் இல்லை அண்ணி..”
“ஓ..”
சுரேந்திரன் எதையோ சொல்லத் தயங்கியவனாக பேசாமல் இருந்தான்.. வித்யா.. மேஜையின் மீதிருந்த ஃபைல்களை ஆராய்ந்தபடி அவன் பேசட்டும் என்று கார்த்திருந்தாள்…
“மீனா அண்ணி எதையோ சொல்லி நிவியின் மனதைக் கலைத்திருக்காங்க..” மறைமுகமாக கூறினான் சுரேந்திரன்…
‘போடா.. நீயும் உன் ஆராய்ச்சியும்..’ என்று தோன்றியது வித்யாவிற்கு..
நிவேதிதா ஊருக்கெல்லாம் பாடம் எடுப்பாள்.. அவளுக்கு மீனலோசனி பாடம் எடுத்தாளா..? என்ற நினைவில் வித்யாவின் இதழோரமாக குறுஞ்சிரிப்பு தோன்றியது…
மீனலோசனியின் குணம் சரியில்லைதான்.. ஆனால் நிவேதிதாவின் குணம் அவளைவிட சரியில்லாதது.. அவள் நரேந்திரனை பழிவாங்குவதற்காகவே சுரேந்திரனைத் தேடிப் பிடித்துக் காதலித்தவள்…
புத்திசாலியான சுரேந்திரன் இத்தனை நாள்களாக அதை உணராமல் இருக்கிறானென்றால் நிவேதிதா எப்பேற்பட்ட கெட்டிக்காரியாக இருக்க வேண்டும்..?
அப்படிப்பட்டவளின் மனதை மீனலோசனி கலைத்தாளாம்..
“இதையெல்லாம் என்னிடம் எதுக்காக சொல்கிறிங்க சுரேன்…”
“உங்களுக்கும்.. நிவிக்கும் மத்தியிலே இருக்கிற மிஸ் அன்டர்ஸ்டாண்ட் சரியாகனும்…”
“மிஸ் அண்டர்ஸ்டாண்ட்டா..?”
வித்யாவிக்கு சிரிப்பு வந்தது.. நிவேதிதாவின் அண்டர்ஸ்டாண்டிங் எப்பேற்பட்டது என்று தெரிய வரும்போது இவன் என்ன சொல்வான் என்ற நினைவில் அவள் மெலிதான சிரிப்புடன் அவனை ஏறிட்டாள்…
அவனோ அவளின் சிரிப்பைக் கண்டு முகம் சுருங்கினான்…
“இதில சிரிக்க என்ன இருக்கு அண்ணி…?”
“நிறைய இருக்கு சுரேன்.. உங்களுக்கு அது இப்போது புரியாது.. ஒருநாள் உங்களுக்கு எல்லாம் புரிய வரும் போது இந்த சிரிப்புக்கான அர்த்தமும் புரியவரும்.. நிவேதிதாவைப் பொறுத்தவரையில் என்பக்கமிருந்து எதுவும் ஆரம்பிக்காது..”
“எனக்கும் அது தெரியும்..”
“தெரிந்தும் ஏன் அதைப் பத்திப் பேசனும்.. அவங்க எதையாவது ஏடா கூடாமா செய்து வைத்தா நான் பொறுத்துப் போகனும்னு சொல்ல வந்தீங்களா..?”
அதற்காகத்தான் சுரேந்திரன் வந்திருந்தான்.. அதை கண்டு கொண்ட வித்யாவின் மீது அவனுக்குள் மதிப்பு பெருகியது…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.