Chapter 29
நதியோரம் நடந்த போது..
நீ பேச நான் கேட்டேன்..
நான் பேச வந்த போது..
கேட்காமல் எங்கே போனாய்..?
-நதியோரம் நான் நடந்த போது-
“என்னால அது முடியாது சுரேந்திரன்.. உங்க வொய்ப் எனக்கெதிரா எதையாவது செய்தால் நான் பொறுத்துப் போகலாம்.. ஆனா தொழிலாளர்களுக்கு எதிரா எதைச் செய்தாலும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்..”
வித்யா உறுதியாகச் சொல்லி விட்டாள்.. அவள் அதைத்தான் சொல்லுவாள் என்பதை அறிந்து வைத்திருந்த சுரேந்திரன் மௌனமாக வெளியேறி விட்டான்…
வித்யாவின் மனதில் எரிச்சல் சூழ்ந்தது.. என்ன மனிதர்கள் இவர்கள் என்ற எண்ணத்தோடு.. அரையும்.. குறையுமாய் சாப்பிட்டு முடித்தாள்.. மாலையில் வீடு திரும்பிய போது அவளை ‘வா’வென்று அழைக்க யாருமில்லாததைப் போல உணர்ந்தாள்.. சௌதாமினியும்.. பூர்ணிமாவும் தென்படவில்லை.. ஹாலில் குழுமியிருந்த மற்றவர்கள் அவளை வழியில் போகிற ஒரு பெண்ணைப் பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு தங்களுக்குள் கூடிப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்…
வித்யா இதற்கெல்லாம் பழகியிருந்தாள்.. நரேந்திரன் கூட இருந்திருந்தால் இவர்கள் இப்படிப்பட்ட பார்வையைப் பார்ப்பார்களா என்ற நினைவுடன் வேலையாளை அழைத்து மாடியிலிருந்த அவளுடைய அறைக்கே காபியையும்.. இரவு உணவையும் கொண்டு வரச் சொல்லி விட்டு மாடியேறினாள்.. ஹாலில் குழுமியிருந்தவர்களின் விழிகள் அவள் முதுகைத் துளைப்பதை உணர்ந்தும் அவள் அதைப் பொருட் படுத்தவில்லை…
“இவளுக்கு இருக்கிற தைரியத்தைப் போல யாருக்கும் இருக்காது…” மீனலோசனி பல்லைக் கடித்தாள்..
“உங்களுக்கு இருக்காதா அக்கா..?” வழக்கம் போல சமயம் கிடைத்தும் போட்டுத் தாக்கினாள் பிரபாவதி..
மீனலோசனிக்கு பற்றிக் கொண்டு வந்தது.. இருந்தாலும் அவளால்தான் பிரபாவதியை பகைத்து கொள்ள முடியாதே.. அதனால் பேச்சை வேறு திசையில் திருப்பி விட்டாள்…
“என் தைரியமெல்லாம் இவளிடம் செல்லாது பிரபா.. நம்ம நிவேதாவோட தைரியம்தான் செல்லும்…”
இதைக் கேட்ட நிவேதிதாவின் முகத்தில் வந்த கர்வத்தை பார்த்த மீனலோசனி பிரபாவதியிடம்
கண்களால் சமிக்ஞை செய்து அதைச் சுட்டிக்காட்டினாள்.. இருவரும் அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டார்கள்..
“தைரியமிருந்து என்ன செய்ய அக்கா.. அந்த வித்யாவை அடக்கி ஒடுக்கி மூலையில் உட்கார வைக்க நம்ம நிவேதாவால முடியலையே..” பிரபாவதி எடுத்துக் கொடுத்தாள்…
“அதைச் சொல்லு.. ஏன் நிவேதா.. இன்னைக்கும் பேக்டரியில உன்னை லேபர்ஸ் கிட்ட மன்னிப்புக் கேட்க வைச்சிட்டாளாமே.. உண்மையா..?” மீனலோசனி போலி அனுதாபத்துடன் கேட்டாள்…
அவளுடைய அனுதாபத்தைப் பற்றி நிவேதிதாவிற்கா தெரியாது..? அவள் கோபத்துடன் மீனலோசனியை முறைத்தாள்.. அவளோ
“கூல்டவுன் நிவேதா.. என்னை முறைத்து என்ன செய்ய..? அவளை உன்னாலே அசைக்க முடியலையே..” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள்..
“அது பேக்டரி.. எதைச் செய்தாலும் லேபர்ஸ் போராட்டம் வந்து விடுகிறது..” எரிச்சல் பட்டாள் நிவேதிதா..
“அப்ப வீட்டிலே அதை ஆரம்பி…” இலகுவாக சொன்னாள் மீனலோசனி…
“எப்படி..?” புருவங்களை உயர்த்தினாள் நிவேதிதா..
“அதுவா..? அது செம ஈஸி.. காதைக் கொடு சொல்கிறேன்..” நிவேதிதாவின் காதைக் கடித்தாள் மீனலோசனி…
அவள் ரகசியக் குரலில் சொல்லச் சொல்ல.. நிவேதிதாவின் முகத்தில் வெளிச்சம் பரவியது…
“டன்..” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு எழுந்து சென்றாள்…
அவர்களின் பேச்சில் தலையிடாமல் தள்ளி அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரபாவதி..
“இது நடக்கும்ன்னா நினைக்கறிங்கக்கா..?” என்று கேட்டாள்..
“நடக்குதோ.. நடக்கலையோ.. இன்னும் கொஞ்சம் நேரத்திலே உள் வீட்டு கலவரம் வெடிக்கப் போகுது.. அது நடந்தா சரி.. என்னவோ இந்த அரண்மனை பெரியவருக்கு மட்டும்தான் சொந்தம்ன்னு சொல்லிக்கிறார் இல்லியா.. அதை ஆட்டி வைக்க நம்மாலே முடிந்தா எனக்கு அது போதும்.. இப்ப பெரியவர் ஊரில இல்ல.. அந்த வித்யாவுக்கு சப்போர்ட் பண்ண யாருமில்ல… முதலில் எல்லாம் சுரேந்திரன் சப்போர்ட் பண்ண வருவான்… இப்ப அவன் வொய்பே பஞ்சாயத்தைக் கூட்டும் போது அவன் யார்
பக்கம் நிற்பான்..?”
“அதைச் சொல்லுங்க.. பேக்டரியிலேயே நிவேதிதாவின் பக்கம் நின்று விட்ட ஆளாச்சே…”
“அதுவேதான்.. இது வீடு.. இங்கே தொழிலாளர் சப்போர்ட்டும் வித்யாவுக்கு கிடைக்காது.. என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்..”
இந்த உள்வீட்டு சதியாலோசனை பற்றி அறியாத வித்யா விலகிப் போகும் கணவனைப் பற்றிய யோசனையுடன் கண்மூடிப் படுத்திருந்தாள்… மசக்கையினால் ஏற்பட்ட அயர்வோடு.. ஓய்வெடுத்துக் கொள்ளக் கெஞ்சிய உடலோடு.. மெதுவாக கண் செறுக உறங்க ஆரம்பித்தவளை எழுப்பியது அழைப்பு மணி..
அழைப்பு மணியின் ஓசையில் கதவைத் திறந்து பார்த்தாள் வித்யா.. பதட்ட முகத்துடன் நின்று கொண்டிருந்தாள் கனகா…
“என்னாச்சு கனகா..?”
“பெரியம்மா உங்களை கீழே வரச் சொன்னாங்கம்மா..”
“அப்படியா.. இதோ வர்றேன்..”
இதைச் சொல்ல எதற்காக கனகா பதட்டப்பட வேண்டும் என்ற யோசனையுடன் கீழே போனவளுக்கு யுத்தம் காத்திருந்தது…
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள்கள் சமையலறையை ஒட்டிய நீண்ட வராந்தாவில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார்கள்.. வித்யா அந்த வீட்டின் மருமகளானவுடன் அந்த வழக்கத்தை மாற்றினாள்.. அவ்வளவு பெரிய அரண்மனையில் வேலையாள்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டுமா என்பது அவளின் எண்ணமாக இருந்தது…
“ஏன் நரேன்.. நீண்ட சாப்பாட்டு மேஜையையும்… உட்கார்ந்து சாப்பிட பெஞ்சையும் போட்டு விட்டா இவங்க சாப்பிட தோதாயிருக்குமில்ல..?”
“சூப்பர் வித்யா…”
மனைவி சொன்னதை உடனே செய்து விட்டான் நரேந்திரன்.. அதைப் பற்றித்தான் நிவேதிதாவிடம் சொல்லிக் கிளப்பி விட்டிருந்தாள் மீனலோசனி…
“நாங்க அப்பவே சொன்னோம் நிவேதா.. பெரியவர் எங்க பேச்சை காதில போட்டுக்கலை.. பெண்டாட்டி சொல்கிறதுதான் சரின்னு சொல்லிட்டாரு.. நம்ம வீட்டுக்காரங்க நாம சொல்கிறதை என்னைக்கு சரின்னு சொல்லியிருக்காங்க..? சொல்லு..”
“என் வீட்டுக்காரர் சொல்வார்..”
“அதைத்தான் பேக்டரியில தினம் தினம் பார்க்கிறோமே…”
“அது பேக்டரி.. இது வீடு…”
நிவேதிதா பிரச்னையை கிளப்பி விட்டாள்.. வேலையாள்கள் தரையில்தான் உட்கார்ந்து
சாப்பிட வேண்டும் என்று சொன்னாள்… சாப்பாட்டு மேஜைகளையும்.. பெஞ்சுகளையும் தூக்கச் சொல்லி உத்தரவிட்டுக் கொண்டிருந்தாள்.. சௌதாமினி அதைத் தடுக்க முடியாமல் கைகளைப் பிசைந்தபடி வித்யாவிற்கு தகவல் சொல்லி விட்டிருந்தாள்..
கனகாவின் முகம் எதனால் அத்தனை பதட்டத்துடன் இருந்தது என்று அப்போதுதான் புரிந்து கொண்டாள் வித்யா…
“யாரும் பெஞ்சைத் தூக்கக் கூடாது…”
உறுதியுடன் வித்யா சொல்லி விட்டதில் ‘அப்பாடி..’ என்ற நிம்மதியுணர்வு சௌதாமினியின் முகத்தில் வந்தது.. ‘கடனே’ என்று நிவேதிதா சொன்னதை வேண்டா வெறுப்புடன் செய்து கொண்டிருந்த வேலையாள்கள் தொட்டுக் கொண்டிருந்த பெஞ்சுகளை விட்டு விலகி நின்றார்கள்.. அதற்காகவே காத்திருந்த நிவேதிதா கத்த ஆரம்பித்து விட்டாள்…
“என்ன சுரேன் இது..? என் ஆர்டருக்கு மதிப்பில்லையா..? இங்கேயும் உங்க பெரியண்ணி வைத்ததுதான் சட்டமா..? உங்க மனைவிக்குன்னு ஒரு உரிமையைக்கூட உங்களால் தர முடியாதா..?”
இது எந்தக் கணவனையும் சீண்டி விடுகின்ற கேள்வி.. சமீப காலமாக நிவேதிதா இது போன்ற யுக்திகளைக் கடைபிடித்தே சுரேந்திரனை அவளுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருந்தாள்…
“உங்க அம்மா எதுக்கெடுத்தாலும் பெரிய மருமகளுக்கு இது பிடிக்காது.. பெரிய மருமகளுக்கு அது பிடிக்காதுன்னே சொல்கிறாங்களே… மத்த மருமகள்களுக்கு வாயைத்திறந்து பேச உரிமையிருக்கா.. இல்லையா…?” யுத்தகளத்தில் உடல் சோர்வை காரணம் காட்டி வித்யாவினால் பின்வாங்க முடியவில்லை…
Reviews – Nathiyoram / நதியோரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.