Chapter 30

0Shares

நதியோரம் நடந்த போது..

      களிப்பை மட்டும் நான் உணர்ந்தேன்..

நீவராத பொழுதினிலே..

      களைப்பை மட்டும் நான் உணர்ந்தேன்..

-நதியோரம் நான் நடந்த போது-

வித்யா சுரேந்திரனிடம் சொல்லியிருந்ததைப் போல அவளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நிச்சயமாய் அவள் பொறுத்துப் போயிருப்பாள்.. ஆனால் பாதிப்பு வருவது வேலையாள்களுக்கு.. அவளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

சௌதாமினி சின்ன மருமகளிடம் தன்மையாக பேசிப் பார்த்தாள்…

“நிவி.. இந்த அரண்மனையில வேலை செய்கிறவங்க.. காலம்.. காலமாய் இங்கேயே வேலை செய்கிறவங்க.. அவங்களை வெளி ஆளா நாங்க பார்க்கலை.. வீட்டு ஆளுகளாத்தான் நாங்க பார்க்கிறோம்..”

“நாங்கன்னா யாரு.. அத்தை..? நீங்களும் உங்க பெரிய மருமகளுமா..?”

பதில் சொல்ல முடியாமல் சௌதாமினி திணறிய போது நிவேதிதா பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டாள்..

“ஸ்டுப்பிட்.. இது அரண்மனையா..? இல்லை வெறும் ஓலைக்குடிசையா..? ஒரு ராஜபரம்பரைக்கான எந்த சம்பிரதாயங்களும் இங்கே இல்லை… கேட்டா.. எல்லாம் பெரிய மருமக கொண்டுவந்த சட்டம்ன்னு சொல்கிறிங்க.. அவங்களுக்கு அரண்மனையின் பழக்க வழக்கங்களைப் பற்றி என்ன தெரியும்..? ஓலைக் குடிசையைப் பற்றிக் கூடத் தெரியாதவங்க அவங்க.. அவங்க யாரு அரண்மனையின் சட்ட திட்டத்தை மாற்ற…?”

“நிவேதிதா..”

“ஏன் அத்தை கோபப் படறிங்க..? நான் உண்மையைத் தானே சொன்னேன்..? ஹாஸ்டலில் இருக்கக் கூட வழியில்லாம உங்க மகளின் வீட்டில் ஒட்டிக்கிட்டு படிச்சவங்கதானே அவங்க..?”

“நிவேதிதா…”

“ஒன்று எல்லா மருமகள்களையும் ராஜ பரம்பரையில் இருந்து எடுத்திருக்க வேண்டும்.. இல்லையா.. எல்லோரையுமே இதைப் போல வழியில் போகிறவங்களா பார்த்து எடுத்திருக்கனும்.. இரண்டும் இல்லாம கலந்து எடுத்தா இந்தக் கதைதான்…”

நிவேதிதா பேசிய பேச்சுக்களை சௌதாமினி-யாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இந்த அளவிற்கு வித்யாவைப் பேச வேண்டுமா என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.. ஆனாலும் நிவேதிதாவை கண்டித்து வைக்க அவளால் முடியவில்லை.. அதை சுரேந்திரன்தான் செய்ய வேண்டும்.. அந்த நேரம் பார்த்து சுரேந்திரன் வெளியே போயிருந்தான்…

சின்ன மகன் வெளியே போயிருக்கிறான்.. பெரிய மகனோ ஊரிலேயே இல்லை.. அந்த நேரம் 

பார்த்து நிவேதிதா கெட்டிக்காரத்தனமாக வேலையை ஆரம்பித்திருப்பதை சௌதாமினியால் புரிந்து கொள்ள முடிந்தது…

என்ன செய்வது என்ற கவலையுடன் அவள் வித்யாவைப் பார்த்தாள்.. வித்யாவிற்கு எந்த விதமான கவலையும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.. அவள் நிவேதிதாவின் அலட்டலையும்.. அதிகாரத்தையும் அலட்சியம் செய்தாள்…

“லுக் நிவேதிதா.. நான் வழியில் போனாலும் உன் வழியில் போகவில்லை.. அதை ஞாபத்தில் வைத்துக் கொண்டு பேசு.. நான் பூர்ணிமாவின் வீட்டில் ஃபேயிங் கெஸ்டாத்தான் தங்கியிருந்தேன்.. அதை இங்கே வேலை செய்கிற கண்ணம்மா ஆண்ட்டியிடம் நீ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்…”

“கண்ணம்மா ஆண்ட்டியா..? உனக்கு வேணும்னா அது ஆண்ட்டியா இருக்கலாம்.. எனக்கு செர்வண்ட்தான்.. வேலையாள்களிடம் ஈக்குவலாப் பேசி எனக்குப் பழக்கமில்லை… உன்னிடம் சரிசமமாய் நின்று பேசுவதே அதிகம்..”

“என்னிடம் பேசச் சொல்லி உன்னை நான் கேட்டேனா..? கண்ணம்மா ஆண்ட்டியை பூர்ணிமா சித்தின்னுதான் கூப்பிடுவா.. அவளிடம் போய் இப்படிச் சொல்லிப் பாரு தெரியும்…”

“ஹ.. எல்லாக் கதையும் எனக்கும் தெரியும்.. பூர்ணிமாவினாலதானே நீ இந்த வீட்டுக்குள்ள மருமகளாய் நுழைந்திருக்க..?”

“நோ நிவேதிதா.. தப்புக் கணக்குப் போடற.. நீ எப்படி சுரேந்திரனைக் காதலிச்சதாலே இந்த வீட்டுக்குள்ள மருமகளாய் நுழைந்தியோ.. அதைப் போல நான் நரேந்திரனைக் காதலித்ததினாலே இந்த வீட்டுக்குள் மருமகளாய் நுழைந்தேன்…”

“நீயும்.. நானும் ஒன்றா..?”

“நிச்சயமாய்.. நீயும்.. நானும் இந்த வீட்டுக்கு மருமகள்கள்…”

“நான் மதன்பூர் ராஜாவின் மகள்..”

“இருந்துட்டுப் போ.. எனக்கென்ன வந்தது.. நீ யாராய் இருந்தால் எனக்கென்ன..? என்னைப் பொறுத்தவரை 

நீ சுரேந்திரனின் ஃவொய்ப்… அவ்வளவுதான்..”

“அவ்வளவுதானா..? சுரேந்திரனின் வொய்புக்குன்னு பவர் ஏதும் இல்லையா..? இங்கே நீ வைத்ததுதான் சட்டமா..?”

“மற்றதில் எப்படியோ எனக்குத் தெரியாது.. இந்த விசயத்தில் நான் வைத்ததுதான் சட்டம்.. இந்த அரண்மனையின் வேலைக்காரங்க சாப்பிடறதுக்காக டேபிளும்.. பெஞ்சும் வாங்கிப் போடக்கூட நமக்கு வசதியில்லாமல் போய் விட்டதா…?”

“வசதியைப் பத்தின பிரச்னையில்லை இது…”

“அதைத்தான் நானும் சொல்றேன்.. இது மனித உணர்வுகளைப் பற்றிய பிரச்னை.. இது நாள் வரைக்கும் டேபிள்.. பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டவங்களை.. உனக்கு அதுக்கான உரிமையும்.. தகுதியும் இல்லைன்னு சொல்லி.. தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னா.. அவங்க மனசு என்ன பாடுபடும்..?”

“அதைப்பத்தி எனக்கு கவலையில்லை…”

“எனக்கு கவலையிருக்கு…”

“இது ஊடே வந்த பழக்கம்தான்…”

“ஊடே வந்தாலும்.. வந்து விட்டதுதானே.. அதை மாத்தினா அவங்க மனசு கஷ்டப்படாதா..?”

“இது அரண்மனை…”

“எனக்கு இது என் வீடு…”

“ம்ஹீம்.. இவ்வளவு பெரிய அரண்மனையை வீடுன்னு சொல்லக் கூடிய அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்திருக்கு…”

“இருக்கட்டுமே.. அது அதிர்ஷ்டமாவே இருக்கட்டுமே.. இது என் வீடாக மாறிப் போன பின்னால் எப்படிச் சொன்னால்தான் என்ன..? எனக்கு அதைப் பற்றி ஒன்றுமேயில்லை…”

“உனக்கு ஏன் இருக்கப் போகிறது…? அரண்மனையைப் பற்றியும்.. அதன் பழக்க வழக்கங்களைப் பற்றியும் உனக்கு என்ன தெரியும்..? அரண்மனைக்குன்னு சில வழக்க வழக்கங்கள் இருக்கு.. அது மாறக்கூடாது…”

“மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது…”

“சோசலிசம் பேசறவங்க அரண்மனைக்கு வெளியே போய் பேசனும் உள்ளேயிருந்தா அரண்மனையின் பழக்க வழக்கங்களை அனுசரிக்கிறவங்களா இருக்கனும்…”

“இல்லைன்னா..?”

இந்தக் கேள்வி வித்யாவிடமிருந்து வரவில்லை.. மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்த பூர்ணிமா-விடமிருந்து வந்தது…

‘அப்பாடி…’

தனித்துப் போராடிக் கொண்டிருந்த வித்யாவிற்கு உதவிக்கரம் வந்துவிட்டதில் சௌதாமினி நிம்மதிப் பெருமூச்சை விட்டாள்..

“சொல்லு நிவேதிதா.. அப்படியில்லைன்னா என்ன ஆகும்..?”

பூர்ணிமா கம்பீரமாக நடந்து வந்து வித்யாவின் அருகில் நின்று அவள் தோளைச் சுற்றி கைபோட்டுக் கொண்டாள்…

வித்யாவிடம் மோதியதைப் போல பூர்ணிமா தேவியிடம் மோத நிவேதிதாவினால் முடியவில்லை…

“நான் மணிமுத்தாறு அரண்மனையில் பிறந்து வளர்ந்தவள்.. ராஜா ராஜேந்திர பூபதியின் செல்ல மகள்.. உன்னைப்போலவே ராஜ பரம்பரை.. என் கேள்விக்கு நீ பதில் சொல்லலாமில்லையா..? வித்யா கேள்வி கேட்டால் தானே உன் பரம்பரைப் பெருமையைச் சொல்லிப் பீற்றிக்குவ..? என்னிடம் சொல்லு.. அப்படியில்லைன்னா என்ன ஆகும்…?”

பூர்ணிமாவின் கிடுக்குப்பிடி கேள்விகளில் நிவேதிதா பதில்பேச முடியாமல் திணறினாள்.. அப்போதுதான் வீட்டிற்குள் வந்த சுரேந்திரன் சூழல் மாற்றத்தை உணர்ந்தவனாய் புருவங்களை உயர்த்தினான்..

“வா அண்ணா.. உனக்கு இப்பத்தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா..?”

“ஏன் பூரணி..? எதனால இப்படிக் கேட்கிற..? நான் அம்பாசமுத்திரம் வரைக்கும்தானே போயிருந்தேன்..?”

“அதற்குள் உன் வொய்ப் இங்கே ஒரு யுத்த காண்டத்தையே ஆரம்பிச்சு வைச்சுட்டாங்க.. ஏன் அண்ணா.. இதையெல்லாம் என்னன்னு கேட்டு நீ உன் வொய்பை கண்டித்து வைக்கவே மாட்டியா..?”

அன்று இரவில் நிவேதிதாவை சுரேந்திரன் அதிக அளவில் கடிந்து கொண்டான்…

0Shares

Reviews – Nathiyoram / நதியோரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link