Chapter 05

0Shares

கனலாக காய்பவனே..

நீயின்றி நானில்லை..

“பெண்களைத் தாய்க்குலம்ன்னுதான் பொதுவாகச் சொல்வார்கள் தனஞ்ஜெயன்.. தாயை மதிக்கும் நீங்கள்.. தாய்க்குலத்தை வெறுப்பவராக இருக்க முடியாது..”

“இது இப்போது தேவையில்லாத விவாதம் சாருலதா..”

“அதுவும் உண்மைதான்.. எனக்குத் தேவை நீங்கள்தான்..”

“நான் கிருஷ்ணனின் நண்பன்..”

“ஆனால்.. என்னுடையக் காதலன்..”

“நான் உங்களைக் காதலிக்கவில்லை.. அவன்தான் உங்களைக் காதலிக்கிறான்..”

“நானும் அவரைக் காதலிக்கவில்லை.. உங்களைத் தான்.. உங்களை மட்டும்தான் காதலிக்கிறேன்.”

“காதலுக்கும் எனக்கும் காத தூரம்ம்மா..”

“மீத தூரத்தை நாம் சேர்ந்து கடக்கலாம்..”

“போகாத ஊருக்கு வழி தேடாதீங்க..”

“நான் போக வேண்டிய ஊர் அது ஒன்றாக மட்டுமே இருக்கும்போது.. அந்த ஊருக்குத்தானே நான் வழிகேட்பேன்..”

“இது வீண் பிடிவாதம்..”

“இது மட்டும்தான் என் வாதம்..”

“முடிவாக நீங்கள் என்னதான் சொல்லுகிறீங்க..?”

“என் முதலும்.. முடிவும்.. நீங்கள் மட்டும்தான்னு சொல்கிறேன்..”

தனஞ்ஜெயன் பேச்சிழந்தான்.. அவளது அசையாத மன உறுதியைக் கண்டு மலைத்தான்.. ‘என்ன மாதிரியான அன்புப்பிடி இது என்று திகைத்தான்..!’

“அப்படி என்னதான்.. என்னிடம் இருக்கிறது..?”

எரிச்சலுடன் இந்தக் கேள்வியைக் கேட்டவனின் முகத்தை.. இரு முழங்கைகளையும் மேஜைமேல் ஊன்றி உள்ளங்கைகளில் முகத்தைத் தாங்கி.. ஊன்றிப் பார்த்தாள் சாருலதா..

“உங்களிடம் என்னதான் இல்லை தனஞ்ஜெயன்..? உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்கிற பெண்ணிடம்.. உங்கள் நண்பனின் குணத்தை உயர்த்தி.. உங்கள் குணத்தைத் தாழ்த்திச் சொல்கிறீங்களே.. இந்த ஒன்றிலேயே நீங்கள் உயர்ந்துவிட்டீர்களே..”

“ஏம்மா.. உண்மையைத்தானே நான் சொன்னேன்..”

“அந்த உண்மை உங்களிடம் இருக்கிறது தனஞ்ஜெயன்.. நான் யோக்கியனில்லைன்னு சொல்லவும் ஒரு மனதைரியம் வேண்டும்… அது உங்களிடம் இருக்கிறது..”

‘இவள் என்ன மாதிரியான பெண்..?’ தனஞ்ஜெயன் நாற்காலியில் சரிந்து அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான்..

“உலகத்திலேயே நான் பொறுக்கின்னு சொல்கிறவனை கண்ணியவான் என்று கொண்டாடும் பிறவி நீங்களாகத்தான் இருக்க முடியும் சாருலதா..”

“நீங்கள் மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ என்ற புத்தகத்தை படித்ததில்லையா..?”

“ஏங்க.. நானே குடிப்பேன் என்கிறேன்.. என்னைப் போய் காந்தியின் புத்தகத்தை படித்திருக்கிறாயான்னு கேட்டால் எப்படி..? படித்ததில்லை..”

“ஒரு தடவை படித்துப் பாருங்கள்..”

“இந்த நீதி போதனையை எல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் சாருலதா.. அதுதான் உத்தமம்.. எனக்கு அட்வைஸ் கேட்பதென்றால் சிறு வயதிலிருந்தே அலர்ஜி… அட்வைஸ்… பண்ணி முகம் முறித்துக் கொள்ளாமல் வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்..”

“காந்தி ‘சத்திய சோதனை..’ புத்தகத்தில் நீதி போதனைதான் பண்ணியிருக்கிறார்ன்னு யார் சொன்னது..?”

“அப்படியா..! அவரே மகாத்மா.. அவர் அதைத்தானே செய்வார் என்கிற அனுமானத்தில் சொன்னேன்..”

“இல்லை.. ‘சத்திய சோதனை’ என்பது அவருடைய சுயசரிதை… சின்னவயதில் அவர் அசைவம் சாப்பிட்டிருக்கிறார்.. அது முதல் அவர் செய்த சின்னச் சின்ன தவறுகள் வரை அத்தனையும் வெளிப்படையாய் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.. அதுதான் அவரின் மன தைரியம்..”

“அசைவம் சாப்பிட மன தைரியம் வேண்டுமா..? அவனவன்… அதை வகைவகையாய் வாங்கிச் சாப்பிடுகிறான்க… நீங்க இதைப் போய் பெரிதாய் பேச வந்துட்டிங்க..”

“என்ன தனஞ்ஜெயன்.. இது.. நீங்களும் மத்தவங்கபோல பேசினால் எப்படி..?”

“நான் ஊரோடு ஒன்றிப் போகாதவன்னு பெயர் வாங்கினவன்.. என்னைப் பத்தி தப்புத்தப்பாகவே புரிந்து வைத்திருப்பீங்களா..?”

“சரி.. அதை விடுங்க.. காந்தி கதைக்கு வாங்க..”

“ஏங்க.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா.. என் நண்பனின் காதல் கதையைச் சொல்ல வந்தவனை இழுத்துப்பிடித்து உட்கார வைத்து.. இப்படி பிளேடு போடுகிறீங்களே.. காந்தி கதையெல்லாம் எனக்கு எதுக்குங்க..?”

சாருலதா அவனை மௌனமாக முறைத்தாள்.. அவளின் பார்வையில் அனல் தாங்காதவனாய் தனஞ்ஜெயன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சமாதானத்திற்கு வந்தான்..

“ஓகே.. ஓகே.. இப்படி எரிப்பது போல் பார்க்காம சட்டு புட்டுன்னு காந்தி கதையைச் சொல்லி முடியுங்க..”

“அவர் பிராம்மனர் தனஞ்ஜெயன்.. அதுவும்.. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிராம்மணர்கள் ‘அசைவம்’ என்கிற வார்த்தையைக்கூடச் சொல்லமாட்டாங்க.. அவ்வளவு கட்டுப்பாடான காலகட்டத்தில்… இவர் அசைவம் சாப்பிட்டதை துணிச்சலாக எழுதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.. நான் அதைத்தான் சொன்னேன்..”

“ஸோ.. என்னை.. மகாத்மா காந்தியுடன் இணை சேர்க்கிறீங்க..”

“இல்லை.. யாரும்.. யாருக்கும் இணையாக முடியாது… உங்களுக்கு இணை யாருமில்லை தனஞ்ஜெயன்.. உங்களுக்கு நீங்கள் மட்டும்தான் இணையாக முடியும்.. மகாத்மாவேறு.. நீங்கள் வேறு.. உண்மையை ஒப்புக் கொள்ளும் ஹீரோயிசம் அவரிடம் இருந்தது.. அதே ஹீரோயிசம் உங்களிடமும் இருக்கிறது..”

நண்பனின் காதலைச் சொல்ல வந்தவனை அவள் கதாநாயகன் ஆக்கிவிட.. தனஞ்ஜெயன் குழப்பத்துடன் எழுந்து கொண்டான்..

“எனக்கு பதில் சொல்லாமல் எழுந்து விட்டீங்களே..”

“வேறு என்ன செய்ய..? இங்கேயே இலை போட்டு சாப்பிட உட்கார்ந்து விடவா..?”

“அதுவும் நல்ல ஐடியாதான்.. இது லன்ச் டைம்.. என் சாப்பாட்டை நாம் இரண்டு பேரும் ஷேர் பண்ணிக் கொள்ளலாமா..?”

“பகிர்ந்து உண்டால் உங்களுக்கு வேண்டுமானால் பசியாறும்.. ஆனால், எனக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு கவளம் சோறெல்லாம் போதாது.. நான் கேண்டினுக்குப் போகிறேன்.. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்..”

தனஞ்ஜெயன் போன பின்னாலும்.. வெகுநேரம் சாருலதா சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.. 

அவள் மனம் பூராவும்.. தனஞ்ஜெயனின் வருகையும்.. அவனுடைய பேசிய பேச்சுக்களுமே நிறைந்திருந்தன.. சாப்பிட மனம் இல்லாமல் வேலையை ஆரம்பித்து விட்டாள்..

அன்று இரவு கிருஷ்ணன்.. தனஞ்ஜெயனிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்… அவனது விலக்கத்தைக் கவனிக்காமல் – சாருலதா காதல் சொல்லி விட்ட சஞ்சலத்தில் இருந்த தனஞ்ஜெயன் வெகுநேரம் கழித்துத்தான் நண்பனின் மௌனத்தை உணர்ந்தான்..

“கிருஷ்ணா.. ஏண்டா உம்முன்னு இருக்கிறாய்..?”

“நீ, சாருலதாவிடம் இன்றைக்கு என்னைப் பற்றிப் பேசினாயா..?”

தனஞ்ஜெயன் குற்ற உணர்வுடன் ‘ஆமாம்..’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான்…

“உனக்கெப்படிடா.. இது தெரியும்..”

“சாருலதா.. இன்றைக்கு சாயந்திரம் என்னிடம் பேசவேண்டுமென்று சொன்னாள்.. நானும்.. அவள் சீட்டிற்குப் போனேன்..” 

தனஞ்ஜெயன் உதட்டைக் கடித்துக்கொண்டு.. வேறு திக்கில் பார்த்தான்..

“ஏண்டா.. என்னிடம் இதை நீ சொல்லவில்லை..?” 

“கிருஷ்ணா..” 

“சாருலதா உன்னைத்தான் காதலிக்கிறாளாமே..?” 

“அதை விட்டுத் தொலைடா.. அவள் இப்படிச் சொல்வாள் என்று எனக்குத் தெரிந்திருந்தால், அவள் இருக்கும் திசைப் பக்கமே தலை வைத்துப் படுத்திருக்க மாட்டேன்..” 

“அவள் என்னிடம் மரியாதையாக.. அவளுடைய மறுப்பைச் சொன்னாள்டா.. ‘உங்கள் காதலை நேரடியாய் சொல்ல இரண்டு வருடமாய் நீங்கள் தயக்கம் காட்டினீங்க.. ஆனால் அதை என்னிடம் வந்து சொல்ல ஒரு நொடிகூட தனஞ்ஜெயன் தயக்கம் காட்டவில்லை.. அவருடைய 

அந்த துணிச்சலைத்தான் நான் காதலிக்கிறேன்னு’ சொன்னாள்டா..” 

“அவள் எதையோ சொல்லிவிட்டுப் போகிறாள்.. வீணாய் நீ உன் மனதைப் போட்டு உழப்பிக் கொள்ளாதே..” 

“இல்லை தனா.. நான் இப்போது தெளிவாக இருக்கிறேன்.. என் நண்பனைக் காதலிப்பவளை.. நான் எப்படிக் காதலிக்க முடியும்..?”

“என்னடா சொல்கிறாய்..?”  

“நான் அவள் மேலிருக்கும் காதலை விலக்கிக் கொள்கிறேன்னு சொல்கிறேன்..” 

“உன்னால் அது முடியுமாடா..?” 

“கட்டாயம் முடியும்.. ஏனென்றால் என் எதிரில் நீ இருப்பாயே.. உன்னைப் பார்க்கும் போதெல்லாம்.. நீ சாருலதாவின் காதலன் என்ற நினைவுதான் என் நெஞ்சில் வரும்.. அப்புறமும் அவளை எப்படி நான் நினைப்பேன்..” 

கிருஷ்ணன் விலகிக் கொண்டான்.. தனஞ்ஜெயன் ஆசுவாசமாய் உணர்ந்தான்.. அவன் மனதிலிருந்த குற்றஉணர்வு விலகி ஓடியது.. சாருலதாவைப் பற்றிய சிந்தனை வந்தது..

கொட்டுகிற தேள் என்று மற்றவர்கள் பயமுறுத்த.. அவள் அவனைக் கொம்புத்தேனாய் நினைத்து வந்தாள்.. எவரும் தொடத் துணியாத அவன் மனதை எளிதாகத் தொட்டுச் சென்றாள்.. தனஞ்ஜெயன் காதலில் விழுந்தான்.. எவருக்கும் கட்டுப்படாத முரட்டுக் காளையான அவன்.. அவளது அன்பில் கட்டுண்டு நின்றான்..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link