Chapter 07

0Shares

நெருப்பூற்றாய் நின்றவளே..

நீயின்றி நானில்லை..

தனஞ்ஜெயன் முரட்டுத்தனமாய் எதையும் எதிர் நோக்குபவன்.. அது அவனது ரத்தத்தில் ஊறியது.. அவனால் திடீரென்று தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை..

“சாரு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது.. நீ லஞ்ச் சாப்பிட்டுவிட்டு வாயேன் பேசலாம்..” என்று ஒருநாள் பொறுக்க முடியாமல் அவன் சொல்லி விட்டான்.

அவ்வளவுதான்.. சாருலதாவிற்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது..

“அப்படின்னா.. எனக்கு மட்டும் வேலையில்லையா..?”

“இது முக்கியமான வேலைம்மா..”

“என் வேலை மட்டும் முக்கியமானதில்லையா..?”

“இதை அவசரமாய் நான் முடித்தாக வேண்டும்..”

“எனக்கும் அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன..”

சாருலதா புத்திசாலிதான்.. ஆனால்.. என்று அவள் காதல் என்னும் மாயவலையில் விழுந்து தொலைத்தாளோ.. அன்றே தன் சுயத்தை தொலைத்து விட்டாள்.. அவன் மேல் பைத்தியமாகி விட்டாள்..

தனஞ்ஜெயன்.. தான் காட்டும் பிரியத்தை புரிந்து கொள்ள மறுக்கிறான் என்ற கோபம் மட்டுமே அவளுக்குள் இருக்க.. அவளது செவிகள் தனஞ்ஜெயன் கூறிய விளக்கத்தைக் கேட்க மறுத்தன.. அவள் அவனுடன் பதிலுக்குப் பதில் பேசி மல்லுக்கு நின்றாள்..

ஓர் அளவிற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாமல் தனஞ்ஜெயனின் கோபம் கரை உடைந்தது.. அவன் அலுவலகம் என்பதையும் மறந்து அவளிடம் சீறினான்..

“ஏய்ய்.. இப்ப என்னடி சொல்கிற..?”

“தனா.. நான் என் வேலைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு உங்களைத் தேடி எவ்வளவு ஆவலாய் வந்திருக்கிறேன் தெரியுமா..?”

“உன்னை யார் வரச்சொன்னது..? நானா வரச் சொன்னேன்..? போ.. போய் வேலையைப் பாரு..”

அவன் கோபத்துடன் நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்த வேகத்தில் அவனது கோபத்தின் பரிமாணம் தெரிந்தது.. சாருலதா சட்டென்று தன் இருக்கைக்குப் போய்விட்டாள்.. அவனது புறக்கணிப்பைக் கண்கூடாய் கண்டவளின் மனம் வலித்தது..

‘எப்படிப் பேசிவிட்டான்.. இனி இவன் முகத்தில் விழிக்கவே கூடாது..’

அவள் மனதில் எழுந்த வைராக்கியத்திற்கு ஆயுள்.. சிலமணி நேரம்கூட நீடிக்கவில்லை.. தூக்கத்திலிருந்து விழிகள்.. விழித்து எழும்போதே.. ‘எப்போது அலுவலகம் போவோம்.. எப்போது அவன் முகத்தில் விழிப்போம்..’ என்று மனம் பரபரக்க.. சாருலதா.. தன் மனக்குதிரைக்கு கடிவாளமிடமுடியாமல் தவித்துப் போனாள்.

அவன் பக்கம் திரும்பவே கூடாது என்று பிரயாசைபட்டதெல்லாம் வீணாகிவிட.. அரைநாள் தாண்டுமுன்னால் அரை உயிராய் ஆகிப்போனாள்..

அவன் முகம் பார்க்காமலிருக்கவும் முடியாமல்.. அவனைத் தேடிச் செல்லவும் மனமில்லாமல் சோர்ந்து போய் மேஜை மேல் தலை கவிழ்ந்த போது.. அவளருகே.. அவன் குரல் ஒலித்தது..

“என்ன தூங்கு மூஞ்சி.. ஆஃபீஸ் நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கிறாயே.. இப்படித்தான் நீ வேலை செய்கிறாயா..? உனக்குத் தண்டச் சம்பளம்தான் கொடுக்கிறாங்களா..?”

‘அவனா பேசுவது..? சாருலதா முகம் மலர்ந்து நிமிர்ந்தாள்..’ அவனைக் கண்களால் பருகியவாறு.. கண் சிமிட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை, நிதானமாய் பார்த்தபடி.. எதுவும் நடக்காதது போல் அவள் எதிரே அமர்ந்தான் அவன்..

“என்னடா.. உச்சிவெயில் நேரத்தில் நம் உயிரை எடுக்க வருவாளே.. ஆளைக் காணோமேன்னு நானே வந்தேன்.. ஏண்டி வரவில்லை..?” எதுவுமே நிகழாதது போல் அவன் சாதாரணமாகக் கேட்டான்..

“தனா..” சாருலதா அழ ஆரம்பித்து விட்டாள்..

“ஸ்ஸ்.. இது ஆஃபீஸ்.. உன்னிடம் எத்தனை தடவைதான் சொல்வது.. இப்படி அழுமூஞ்சியாய் இருக்காதே சாரு..”

“நீங்கள் மட்டும் என்னை அழ வைக்கலாமா..?”

“எனக்கென்ன அப்படி ஒரு வேண்டுதலா இருக்கிறது..? சொன்ன பேச்சைக் கேளுன்னு சொன்னால் நீதான் கேட்க மாட்டேன் என்கிறாயே..?”

“நீங்கள் மட்டும், நான் சொன்னதை கேட்க மாட்டிங்க.. நான் மட்டும் நீங்கள் நில்லுன்னா நிற்கணும்.. உட்காருன்னா உட்காரணும்.. இது என்ன அநியாயம்..?”

“இப்ப வாயை மூடுகிறாயா..? இல்லை.. நான் எழுந்து போய் விடவா..?”

தனஞ்ஜெயன் எரிச்சலுடன் அதட்டியதும்.. சாருலதா மௌனமாகிவிட்டாள்.. ஆனால், அவளது மனம் சிணுங்கிக் கொண்டிருப்பதை, அவளது முகம் காட்டியது.. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனஞ்ஜெயனின் மனம் கனிந்தது..

“ஏண்டி.. உன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு என்னையும் கஷ்டப்படுத்துகிறாய்..? சொன்னால் ஒரு சொல்லில் புரிந்து கொள்ள மாட்டாயா..?”

“நீங்கள் மட்டும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டிங்க.. என்னை மட்டும் புரிந்து கொள்ள வில்லைன்னு குற்றம் சொல்வீங்க..”

சாருலதா யோசிக்காமல் தன் மனக்குமுறலை மீண்டும் கொட்டிவிட… வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.. தனஞ்ஜெயன் மூர்க்கமானான்..

“உன்னைத் தேடி வந்தேனே.. என்னைச் சொல்ல வேண்டும்.. நீ திருந்தவே மாட்டாய்டி..”

“திருந்துமளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்..?”

“சும்மா எதிர்த்து.. எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த.. அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்.. ராஸ்கல்.. என்னை என்னவென்று நினைத்தாய்..? நீ காதலித்து விட்டால்.. நான் வேலை வெட்டி இல்லாமல் உன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமா.. அதற்கு வேறு ஆளைப்பாரு.. காதலிக்கிறாளாம்.. காதல்.. விளக்கெண்ணை..”

தனஞ்ஜெயன் போக முற்பட.. சாருலதாவின் மனம் பதைத்தது.. ‘போகாதே..’ என்று அவனது கை பிடித்துத் தடுக்க அவள் மனம் துடித்தது.. அவளது பார்வையில் அந்த இறைஞ்சல் தெரிய.. தனஞ்ஜெயன் போக முடியாமல் நின்றான்..

“இப்ப என்னடி சொல்கிற..? நான் போகவா.. இல்லை உட்காரவா..?”

சாருலதா எழுந்து அவனுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு.. தன் இடத்தில் வந்து அமர்ந்தாள்.. அவளை முறைத்துக் கொண்டே தனஞ்ஜெயன் அவள் எதிரில் அமர்ந்தான்.. அவள் மௌனமாக.. மேஜை மேலிருந்த கம்ப்யூட்டரின் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“சாரு..”

“……”

“உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்..”

“……”

“ஏன்.. என்னிடம் பேசமாட்டாயா..?”

“உங்களுக்குத்தான் நான் பேசினால் பிடிக்காதே..”

“அப்படி நீயாய் கற்பனை பண்ணிக்கொண்டால், நான் அதற்குப் பொறுப்பாக முடியாது..”

“நீங்கள் பொறுப்பில்லாமல் இருக்கத்தானே விரும்புகிறீங்க.. தடைகளில்லாமல்.. சுதந்திரமாய் வாழணும்னு பிரியப்படறீங்க.. உங்களுக்கு நான் தடை போடவில்லை..”

“அப்படி என்ன பொறுப்பை நான் தட்டிக் கழித்து விட்டேன்..?”

“காதல் என்ற பொறுப்பில் நீங்கள் கமிட் ஆகிக்கொள்ள விரும்பவில்லை தனா..”

“முட்டாய் போலப் பேசாதே.. உன்னிடம் ஆயிரம் தடவை நான் சொல்லி விட்டேன்.. உனக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவத்தை இதுவரை வேறு யாருக்கும் நான் கொடுத்ததில்லை.. உன்னிடம் பேசியது போல் பொறுமையாக வேறு யாரிடமும் நான் பேசியதில்லை.. நீ இருக்குமிடம் தேடி நான் வந்தது போல்.. வேறு யாரையும் நான் தேடிப் போனதில்லை..”

“நேற்று மட்டும் ஏன் அப்படிச் சொன்னீங்க..?”

“ச்சு.. அதையே பிடித்துக் கொண்டு தொங்காதே..”

“நேற்று நீங்கள் பேசியபோது என்மனம் எப்படி வலித்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா..?”

“அதை விட்டு விடுன்னு சொல்கிறேனில்ல..”

“ஏன் தனா.. அதற்கு நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டாமா..? இல்லை விளக்கம் கேட்கும் உரிமைதான் எனக்கு இல்லையா..?”

“பெரிய கத்திரிக்காய் உரிமையைக் கண்டு விட்டாள்.. உனக்கு விளக்கம் சொல்லணும்கிற அவசியம் எனக்கு இல்லை.. நான் இப்படித்தான் இருப்பேன்.. புரிந்ததா.. பெரிதாய் விளக்கம் கேட்க வந்துவிட்டாள் விணக்கெண்ணை..”

தனஞ்ஜெயன் கோபத்துடன் எழுந்து சென்றுவிட.. விக்கித்துப் போய் நெடுநேரம் நெடுமரமாய் அசையாமல் அமர்ந்திருந்தாள் சாருலதா..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link