Chapter 08

0Shares

நெஞ்சத்தில் குடியிருப்பவனே..

நீயின்றி நானில்லை..

‘அவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஆற்றாமையாக இருந்தது சாருலதாவிற்கு.. ஒரு வினாடி கூட அவன் தரப்பு நியாயத்தைச் சொல்ல அவள் வாய் திறக்கக்கூடாது என்பது அநியாயம் இல்லையா..? அவள் சிறு குழந்தைபோல் மிரட்டி வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி..? நாளை மனம் வைத்தால் உன்னிடம் வந்து பேசுவேன்.. எனக்கு கோபம் வந்து விட்டால்.. உன்னைத் தண்டிப்பேன்..’ என்று எந்தக் காதலனாவது சொல்லுவானா..?

ஆனால், தனஞ்ஜெயன் அதைத்தான் அவளிடம் சொன்னான்.. அவன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்று யோசித்து யோசித்து சாருலதா ஓய்ந்து விட்டாள்..

இயல்பாக வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூடப் பேச முடியாமல் மனம் புழுங்கினாள்.. எந்த நேரம் அவன் கோப முகம் காட்டுவான்.. எந்த நேரம் அவன் சிரிப்பு முகம் காட்டுவான் என்பதை அறிய முடியாமல் மனம் தடுமாறினாள்..

ஒவ்வொரு நாள் இரவும்.. இனி அவனுடன் பேசவே கூடாது.. அவன் நிழலிருக்கும் திசையின்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது என்று மனதிற்குள் வைராக்கியம் வைத்துக் கொண்டு உறங்குவாள்.. மறுநாள் அவன் முகத்தைக் கண்டதும்.. அந்த வைராக்கியம் காற்றோடு கலந்து மறைந்து விட.. சூரியன் போகும் திசையெல்லாம் திரும்பும் சூரியகாந்தி பூப்போல்.. அவனது நடமாட்டம் இருக்கும் திசைகளில் விழி பதித்து வேலை செய்வாள்..

கிருஷ்ணனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் சுரக்கும்..

“ஏண்டா இப்படி இருக்கிறாய்..?”

“எப்படி இருக்கிறேன்..”

“உன்னைக் காதலிக்கும் பெண்ணின் மனதை இப்படியா நோகடிப்பாய்..?”

தனஞ்ஜெயன் கண்டிப்புடன் கிருஷ்ணனைப் பார்த்து ஒருநாள் தெளிவாகச் சொல்லி விட்டான்..

“கிருஷ்.. இது எனக்கும்.. அவளுக்கும் இடையில் நடக்கும் விவகாரம்.. நீ ஊடே வராதே..”

“டேய்.. நான் உன் ஃபிரண்டுமா..”

“அவன் என் காதலி.. எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்.. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.. இடையில் வர உனக்கு மட்டுமில்லை.. யாருக்குமே உரிமையில்லை..”

“தனா..”

“நட்புக்கென்று ஒரு எல்லைக் கோடு இருக்கிறது.. நீ அதைத் தாண்டி வரப் பார்க்காதே.. காதலுக்கு எல்லைக் கோடே கிடையாது.. அவளைத் துன்புறுத்தவோ.. இல்லை தொலைத்துக்கட்டவோ.. எனக்கு முழு உரிமை உண்டு.. ஒன்றைத் தெரிந்து கொள்.. நான் ‘செத்து விடு’ என்று விசத்தைக் குடுத்தால்.. அவள் சந்தோசமாய் அதை வாங்கிக் குடித்துவிட்டு செத்து விடுவாள்..”

“அந்த அளவிற்கு அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்ற கர்வம்தானேடா.. உன்னை இப்படிப் பேசவைக்கிறது.. வேண்டாம் தனா.. அவளை அளவுக்கு மீறித் தண்டிக்காதே..”

“அதைச் சொல்ல நீ யார்..? நான் ‘சா’ என்றால் அவள் செத்து விடுவாள் என்பது மட்டும்தானே உனக்குத் தெரியும்.. அவள் செத்த மறு நொடியில் அவளுடனே சேர்ந்து நானும் உயிரை விட்டுவிடுவேன்.. இது அவளுக்கும் தெரியும்..”

“டேய்.. ஏண்டா.. இப்படிப் பேசுகிறாய்..?”

“பேடா.. போய் வேலையைப் பார்.. இனி.. எங்கள் இருவருக்குமான பிரச்னைகளில் நீ தலை கொடுக்காதே..”

கிருஷ்ணன் முகம் மாறிப்போனான்.. அதற்குமேல் அவனால் சாருலதாவிற்கு ஆதரவாக தனஞ்ஜெயனிடம் பேச முடியவில்லை..

ஆனால்.. ஒருவாரமாய் சாருலதாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் அவளை அலைக்கழித்த தனஞ்ஜெயன் மறுநாள்.. தானாக அவளைத் தேடிப் போனான்.. அவள் எதிரில் கோபமாய் சேரை இழுத்துப் போட்டு கொண்டு உட்கார்ந்தான்..

யாரோ எதிரில் அமர்வதை உணர்ந்து.. கம்ப்யூட்டரின் திரையிலிருந்த பார்வையை விலக்கிய சாருலதா.. ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானாள்.. அவளுடைய தனஞ்ஜெயன் அவளைத்தேடி வந்துவிட்டானா..? ஒரு வாரமாய் முகம் திருப்பிக் கொண்டு அவளைத் தண்டித்தவன்.. இன்று அவளுக்காக மனம் இரங்கி விட்டானா..?

“தனா.. இந்த அதிகப்படி பனிஷ்மென்ட் அவசியம் தானா..? நான் இதை தாங்கி நிற்பேனா..?” என்று கண்ணீருடன் கேட்டாள்..

தனஞ்ஜெயனின் இறுக்கமான முகத்தில் லேசான இணக்கம் வந்து போனது.. அவன் அவளத கண்ணீர் குரலைக் கவனிக்காதவன் போல கண்டிப்பான தொனியில் வினவினான்..

“கிருஷ்ணனிடம் நீ என்ன சொன்னாய்..?”

“ஒன்றும் சொல்லவில்லையே..!”

“அவனிடம் எனக்குத் தூது சொல்லி அனுப்பினாயா..?”

‘இவன் எனக்காக.. என்னைத் தேடி வரவில்லை.. என்மேல் குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்க வந்திருக்கிறான்..’ சாருலதாவின் உணர்வுகள்.. தண்ணீர் பட்டப் பாலாய்.. பொங்குவதை நிறுத்தி அடங்கின..

அவள் நிமிர்ந்து அவன் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தாள்..

“நீங்கள் மாறவே மாட்டிங்களா தனா..?”

“உனக்காக நான் மாறவேண்டிய அவசியம் எனக்கில்லை..”

“ஓகே.. அந்த அவசியம் எனக்கு மட்டுமே இருந்து விட்டுப்போகட்டும் ஆனால்.. நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டு என்னிடம் கேள்வியைக் கேட்டும் வேலையை இனி விட்டுவிடுங்க..”

“நானாக கேள்வி கேட்கிறேனா..? உன் தொண தொணப்பிலிருந்து தப்பித்து நிம்மதியாக அபார்ட் மென்டிற்குப் போனால்… அங்கேயும் அவன் உன் பேச்சைத்தான் பேசுகிறான்… ஒரு மனிதனுக்கு எப்படியிருக்கும்..?”

“அது உங்களுக்குத்தான் தெரியும்.. எனக்குத் தெரியாது.. எனக்குத் தெரிய வேண்டியது வேறொன்று.. இப்போதைய உங்களின் கோபம் எதற்காக தனா..? கிருஷ்ணனிடம் நான் தூது விட்டுவிட்டேன் என்று நினைத்துக் கோபப்படுகிறீங்களா..? இல்லை.. கிருஷ்ணன்.. என் நினைவை உங்கள் மனதில் உண்டு பண்ணுகிறார் என்று கோபப்படுகிறீங்களா..?”

“உன் புத்தி இப்படி குதர்க்கமாகத்தாண்டி யோசிக்கும்..”

“உங்களுக்கெல்லாம் பெண்கள் யோசித்தால் பிடிக்காதே..”

“என் கேள்விக்கு முதலில் பதில் சொல்..”

“உங்களுக்கும்.. எனக்கும் இடையில் தூது எதற்கு..? என் காதலையே உங்களிடம் நேரடியாய் சொன்னவள் நான்.. என் கோபதாபங்களை சொல்லவா.. ஊடே ஆள் வைக்கப்போகிறேன்..? நான் கிருஷ்ணனிடம் மரியாதை வைத்திருக்கிறேன்.. – அவர் உங்கள் ஃபிரண்ட் என்பதற்காக..! மற்றபடி, அவரிடம் ‘ஹலோ..’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு வார்த்தை பேசியதில்லை..”

தனஞ்ஜெயனின் இதழ்கள் வளைந்து சிரிப்பைச் சிந்தின.. அவன் அவளிடம் லேசாக கண்சிமிட்டினான்..

“தனா..” அவள் பிரமித்து நோக்கினாள்..

“ஈவினிங் வெளியே போகலாமா..?”

“நிஜமாகவா..?”

“நிஜமாகத்தான்..”

“இத்தனை நாளில்.. முதன் முதலாய் என்னை வெளியே அழைத்துப் போகிறேன்னு சொல்லியிருக்கீங்க..! எனக்கு எப்படியிருக்கிறது தெரியுமா..?”

“அது உனக்குத்தானே தெரியும்..”

“அது சரி.. பதிலுக்குப் பதில் சொல்லாவிட்டால்.. தனஞ்ஜெயனின் பெருமை என்னாவது..? ம்ம்.. எங்கே அழைத்துக் கொண்டு போவீங்க..?”

“அதை நீயே சொல்லு..”

“கோவிலுக்குப் போகலாமா..?”

“நினைத்தேன்.. நீ இதைத்தான் சொல்வாய் என்று..”

“முதன் முதலாய் வெளியே போகிறோம்.. கோவிலுக்குப் போவதுதான் முறை..”

அன்று மாலை.. அவனுடைய டி.வி.எஸ். அப்பாச்சியில் ஏறி.. அவன் முதுகைப் பற்றிக் கொண்டு.. அவன் பின்னால் அமர்ந்தபோது.. சிறகேயில்லாமல்.. தான் பறப்பதாக உணர்ந்தாள் சாருலதா.. நீல வானம்.. கண்முன் விரிய.. அவனது வண்டி.. சாலையின் போக்குவரத்தில் கலந்தது..

‘இவன் என்னுடையவன்..’ புயலின் மனதை வசப்படுத்திக் கொண்ட நிறைவில் – பூவின் இதயம் மகிழ்ந்தது..

கோவிலின் வாசலில் வண்டியை நிறுத்திப் பூட்டி விட்டு தனஞ்ஜெயன் வந்தான்.. அவனுடன் இணைந்து நடந்த சாருலதா.. பெருமையாய் உணர்ந்தாள்..

“அபிஷேகக் கூடை வாங்கிக்கலாம் தனா..”

“வாங்கிக்க..”

“பூ..?”

“அதைக்கூட என்னிடம் கேட்கணுமா..? வாங்கிக் கொள்..”

தனஞ்ஜெயன் இயல்பாக பூக்காரப் பெண்மணியிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தான்..

அவனுக்குத் தெரியாது.. அவன் கோடி ரூபாய் கொடுத்து வைர நகையை வாங்கிப் பரிசளித்து இருந்தாலும் இந்த அளவிற்கு சாருலதா மகிழ்ந்து போக மாட்டாள் என்பது..

பூ என்பது.. மனதிற்குப் பிடித்த ஆணின் கையில் பெண் வாங்கத் தவம் செய்யும் ஒரு மங்கலப் பொருள்.. உரிமையுள்ளவன் மட்டுமே ஒரு பெண்ணிற்கு பூ வாங்கிக் கொடுக்க முடியும்.. உடந்தைப்பட்டவனிடம் மட்டுமே.. அந்தப் பெண்.. பூவை வாங்கிக் கொள்வாள்.. அதை சாருலதா செய்தாள்..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link