Chapter 03

0Shares

வானம் நீலநிறமாய் காட்சி அளித்தது. அதில் வெண்ணிற மேகங்கள் பஞ்சுப் பொதியாய் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு மேகத்தின் மீது பட்டுக் கம்பளத்தில் அமர்ந்திருப்பது போல் ரூபிணி அமர்ந்திருந்தாள். வட்ட வடிவமான நிலவு வானில் மிதந்து கொண்டிருந்தது. அதன் அருகே சென்ற மேகத்திலிருந்த ரூபிணி நிலவை எட்டித் தொட்டாள்.

“ஸ்ஸ்.. ஆ..” கன்னத்தில் ஈர ஸ்பரிசம் பட கண் விழித்தாள். ஜமுனா ஈரக்கையுடன் அவளைத் தொட்டு எழுப்பிக் கொண்டிருந்தாள். கண் விழித்த ரூபிணி தூக்கம் கலையாதவளாய் சுற்று முற்றும் பார்த்தாள்.

“நான் எங்கேயிருக்கிறேன்?”

“சரியாப் போச்சு போ.. மயக்கம் தெளிந்து ஹாஸ்பிடலில் கண் விழிக்கும் சினிமா ஹீரோயின் கேள்வி கேட்பது போல் கேட்கிறாயே… இது ஹாஸ்பிடல் ரூம் இல்லேம்மா… ஹாஸ்டல் ரூம்.. தாச்சிக்கிட்டது போதும்… எழுந்துக்கோ பாப்பா…”

“ஆவ்…” என்று அழகாய் கொட்டாவி விட்டபடி எழுந்த ரூபிணி கைகளை தூக்கி சோம்பல் முறித்தாள்.

“இதை பாருடா… இவள் சோம்பல் முறிக்கறதை.. ஹலோ.. நேற்று நான் உன்னிடம் என்ன சொன்னேன்? நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்…?”

“என்ன சொன்னாய்…” தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு குப்புறப் படுத்துக் கொண்ட ரூபிணி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.

“நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். இவள் பாட்டுக்கு தூங்குகிறாளே…” ஜமுனா தலையணையை எடுத்து ரூபிணியின் முதுகில் ஒரு போடு போட்டாள்.

“ஏண்டி… என்னைத் தூங்க விடாமல் இந்தப் பாடு படுத்துகிறாய்…” ரூபிணி எழுந்து கட்டிலில் அமர்ந்து தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

“இன்றைக்கு என்ன கிழமை?”

“ஞாயிறு.. அதனால்தானே ஆபிஸ் போக வேண்டிய டென்சன் இல்லாமல் தூங்குகிறேன்.. வாரத்தில் ஒரு நாள்.. நிம்மதியாய் என்னைத் தூங்க விடுகிறாயா?”

“ஏண்டி… அதைத்தான் ஒவ்வொரு ஞாயிறும் உனக்கையாய் தூங்கி எழுகிறாயே.. இந்த ஞாயிறு மட்டும் உன் பகல் தூக்கத்தை தியாகம் செய்யக் கூடாதா?”

“ஏன்…?” என்று கேட்டவாறு மீண்டும் சுருண்டு படுக்கப் போனவளை ஒரு கிள்ளு கிள்ளினாள் ஜமுனா.

“ஆ… ஏண்டி பேயே கிள்ளுகிறாய்….?”

“உன் தூக்கத்தை வேறு எப்படி விரட்டுவது? உனக்குப் போய் யாருடி ரூபிணின்னு பெயர் வைத்தது? ஆக்சுவலா உனக்கு கும்பகர்ணி என்கிற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்…”

“பெயரை வேண்டுமானால் உன் இஷ்டத்திற்கு மாற்றி வைத்துக் கொள். இப்போது என்னைத் தூங்க விடு..”

“தூங்குவதிலேயே குறியாக இரு.. என்னை விஷ் பண்ண வேண்டுமென்ற எண்ணமே உனக்கு இல்லையா?”

“எதற்காக…? … ஓ. இன்று உன் பர்த்டே.. ஜமுனா… மெனி மோர் ரிடர்ன்ஸ் ஆப் தி டே… அன்ட் ஹேப்பி ப்ர்த்டே டு யு.”

“வாழ்த்து மட்டும்தானா?”

“பரிசும் உண்டே…”

தூக்கம் பறந்தோட ரூபிணி எழுந்து சென்று ஓர் அட்டைப் பெட்டியை அவளது பெட்டியிலிருந்து எடுத்து ஜமுனாவின் கையில் கொடுத்தாள்.

“வாவ்.. புது சுடிதார்… என்னுடைய பேவரைட் ப்ளூ கலர்.. தேங்க் யூ ரூபிணி.. தேங்க் யு வெரிமச்.. பட் எனக்கு இது போதாதே…”

“வேறு என்ன வேண்டும்?”

“இன்று எங்களுடன் பாண்டிச்சேரி வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாய்… மறந்து விடாதே…”

“ஜமுனா… ப்ளீஸ்.. எனக்கு அவுட்டிங் போவதென்றாலே அலர்ஜி…”

“எனக்காக ப்ளீஸ்…”

“அதற்கு பாண்டிச்சேரிக்கு ஏன் போக வேண்டும்? இங்கேயே கோவிலுக்குப் போய் விட்டு வரலாமே…”

“கூப்பிடு தூரத்தில் பாண்டிச்சேரியை வைத்துக் கொண்டு கோவிலுக்கு மட்டும் போய் வருவதென்றால் எப்படி ரூபிணி.”

“நீ மற்ற பிரண்ட்ஸுகளுடன் போய் விட்டு வாயேன்..”

“நீயும் ஹாஸ்டலுக்கு வந்து ஆறு மாதங்களாகி விட்டது. ஒரு நாள் கூட எங்களுடன் வெளியே வந்ததில்லை… இன்று மட்டுமாவது வாடி போகலாம்…”

ஜமுனா ரூபிணியின் அருகே அமர்ந்து அவள் கன்னம் திருப்பிக் கெஞ்சினாள்.

“ஓகே.. வா போகலாம்… பட் இருட்டுவதற்குள் திரும்பி வந்து விட வேண்டும். அப்படியென்றால்தானே வருவேன்.”

“வந்து விடலாம்.”

ரூபிணி எழுந்து குளிக்கக் கிளம்பிய போது அறைக் கதவு தட்டப்பட்டது. ஜமுனா போய் கதவைத் திறந்தாள். கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த வார்டன் மணிமேகலை நேராய் ரூபிணியிடம் போய் பூங்கொத்தை நீட்டி,

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்…” என்றாள். ரூபிணி சிரிப்பை அடக்கிக் கொண்டு, “மேடம் பர்த்டே எனக்கில்லை. ஜமுனாவுக்கு…” என்றாள்.

“அப்படியா… சரிம்மா பூங்கொத்தை கொடு” என்று வாங்கி,

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்…” என்றபடி ஜமுனாவிடம் கொடுத்தாள் மணிமேகலை.

“தேங்க் யூ மேடம்.”

“புது டிரெஸ் போட்டுக்கலையா யமுனா…”

“பர்த்டேன்னா புது டிரெஸ்தான் போட்டுக்கணும், புதுப் பெயரை வைத்துக் கொள்ளக் கூடாது. என் பெயர் ஜமுனா மேடம்.”

“நான் அப்படித்தானே சொன்னேன். உனக்கும் நான் பேசியது சரியாய் கேட்கவில்லை போல.”

ஜமுனா கோபத்துடன் ரூபிணியின் காதுகளில் முணுமுணுத்தாள்.

“இந்தம்மா மறதி மணிமேகலையாய் இருந்துக்கிட்டு எனக்கு செவிடுன்னு பட்டம் கட்டுவதைப் பார்த்தாயா… இந்தக் கொடுமையைத்தான் சலிக்காம பண்ணுது…”

“ஜமுனா என்ன சொல்கிறாள் ரூபிணி…”

“வார்டன் மேடம் எனக்கு பெற்ற தாய் மாதிரி என்கிறாள் மேடம்.”

ஜமுனா அதிசயப்பட்டுப் போய்,

“தேறிட்டடி… நீ…” என்று முணுமுணுத்தாள்.

மணிமேகலையிடம் புன்னகைத்தவாறு ரூபிணியிடம் உதடு அசையாமல்,

“உன் ரூம் மேட்டாய் இருக்கேனில்ல? இதுகூடப் பண்ணாவிட்டால் எப்படி?” என்றாள்.

“எங்கேயோ கிளம்ப ரெடியாகிக்கிட்டு இருக்கீங்க போல…”

ரூபிணியின் கைகிள்ளி ஜமுனா ஜடையாய் எதையோ உணர்த்த வைக்க முயல… அது புரியாதவளாய்,

“பாண்டிச்சேரிக்கு போகிறோம் மேடம்…” என்றாள் ரூபிணி.

ஜமுனா ரகசியமாய் முறைக்க புரியாமல் ‘என்ன?’ என்று சைகையால் கேட்டால் ரூபிணி.

“ஈஸிட்…? நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?”

“இதற்குத்தான் சொன்னேன்…” என்ற குறிப்புடன் ஜமுனா ரூபிணியைப் பார்க்க அவள் தவறு செய்து விட்ட உணர்வுடன் நாக்கைக் கடித்துக் கொண்டு மணிமேகலை அறியாமல் ஜமுனாவிடம் தனது காதைப் பிடித்து மன்னிப்புக் கேட்டாள்.

‘சரி.. விடு… நான் பார்த்துக் கொள்கிறேன்…’ ஜாடை காட்டிய ஜமுனா.. மணிமேகலையிடம்.

“தாராளமாய் வாங்க மேடம். குப்பத்துக்கு போகும் போது உங்களைப் போல பெரியவங்க.. எங்க கூட வந்தால்.. எங்களுக்கும் பாதுகாப்பாய் இருக்கும்” என்றாள்.

“குப்பத்துக்கா.. எந்தக் குப்பத்துக்கு…?”

“நெல்லிக்குப்பம்.. அரியாங்குப்பம்.. பாண்டிச்சேரியில் குப்பத்துக்கா பஞ்சம்? நாங்கள் அங்குதான் போகப் போகிறோம்…”

“அங்கே எதற்குப் போகிறீர்கள்?” மணிமேகலை சந்தேகமே படாமல் விவரம் கேட்டாள்.

“குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து ஒரு தீஸிஸ் செய்யப் போகிறேன் மேடம். என் காலேஜில் நான் பாடம் எடுக்க இது எனக்கு ஹெல்ப்பாக இருக்கும்…” தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் லெக்சரராக பணியாற்றும் ஜமுனா கூறினாள்.

“நீ எம்.ஈ. படித்து விட்டு இன்ஜினியரிங் காலேஜில் தானே வேலை பார்க்கிறாய்? குப்பத்தைப் பற்றிய ஆராய்ச்சி உனக்கு எதற்கு?”

“இப்ப மட்டும் மறதி ஓடி விடும். பார் எப்படி கரெக்டாக கேள்வி கேட்குது?” ஜமுனா வாய்க்குள் பேசினாள்.

ரூபிணி வாயைத் திறக்கவேயில்லை.

‘ஓர் முறை வாயைத் திறந்து வம்பில் மாட்டிக் கொண்டது போதாதா…?’

“இது வேறு மாதிரியான தீஸிஸ் மேடம்.. குப்பையிலிருந்து எப்படி எரிபொருள் தயார் பண்ணுவதுன்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறோம்… நீங்களும் வருகிறீர்கள்தானே…?”

“எனக்குத் தலையை வலிக்கிறதும்மா… வெயிலில் அலைய என்னால் முடியாது…” மணிமேகலை கிளம்பி விட்டாள்.

“உஷ்.. அப்பாடா…” என்று தளர்ந்து உட்கார்ந்த ஜமுனாவிடம்,

“குப்பையிலிருந்து எப்படிடீ எரிபொருள் தயார் பண்ணுவது?” என்று விளக்கம் கேட்டாள் ரூபிணி.

“அடித்தே கொன்று விடுவேன்.. மறதி மணிமேகலை கிட்டப் பேசும்போது ஜாக்கிரதையாய் பேச வேண்டும்… பூனையை மடியில் கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கப் போனது மாதிரி, இதைக்கூட வைத்துக் கொண்டு எப்படிடீ நாம் என்ஜாய் பண்ணுவது…?”

“சரி… போனதை விடு. நான் கேட்டதற்கு பதில் சொல்லு…”

“குப்பையைக் காய வைத்து… தீயைப் பற்ற வைத்தால்.. அது எரிபொருள்…”

“அடடா… என்னே உன் அறிவு… என்னே உன் அறிவு…”

“கன்னத்தில் போட்டு எனக்கு சாம்பிராணி காட்டியது போதும்… போய் குளித்து கிளம்பி வரும் வழியைப் பார்…”

“நீ…?”

“நான் அப்போதே குளித்து விட்டேண்டி. டிரஸ் சேன்ஜ்தான் பண்ணிக் கொள்ள வேண்டும்.”

ரூபிணி குளித்து உடைமாற்றி வந்தபோது அவர்களது அறைக்குள் வாசவியும், கோமளாவும் வந்தார்கள்.

“ரெடியா… போகலாமா?”

“பொறுடி… டிராவல் ஏஜன்ஸிக்கு போன் பண்ணினேன் கார் வரட்டும்…”

“காரிலேயே போய்விட்டு வந்து விடலாமா?”

“அதுதான் பெட்டர் அன்ட் சேஃப்.”

“டிராவல் ஏஜன்ஸி நடத்துகிறவர்கள் தெரிந்தவர்கள் தானே..”

“ஏன் ரூபிணி.. இவ்வளவு பயம் பயப்படுகிறாய்?”

“தெரியாத ஊர் ஜமுனா…”

“ஆபிஸ்… ஆபிஸ் விட்டால் ஹாஸ்டல் ரூமுன்னு இருந்தால் எப்படி ஊரைத் தெரியும்? வெளியில் வந்து பழகுடி…”

“மாதம் ஒரு முறை கோவில்பட்டிக்கு போவதெல்லாம் உனக்குத் தெரியாதாக்கும்?”

“சொந்த ஊருக்குப் போவதுதான் வெளியில் வருவதா?”

“நீ விட்டால் என்னை வாருவதிலேயே குறியாய் இருப்பாய்… டிராவல் ஏஜன்ஸியை நடத்துகிறவர்கள் தெரிந்தவர்களா… தெரியாதவர்களா?”

“எங்க காலேஜ் ஸ்டூடண்டோட அண்ணன்தான் நடத்துகிறார்… போதுமா?”

“போதும்… வா.. போகலாம்…”

அவர்கள் கீழே இறங்கி டைனிங் ஹாலுக்குப் போகப் போனபோது ஹாஸ்டல் வாசலில் கார் வந்து நின்றது. டைனிங் ஹாலுக்குள் மணிமேகலை நின்று கொண்டி ருந்தாள்.

“ரூபிணி… வாசவி… ஸ்டாப்..”

“என்னடி…”

“நமக்கு டிபனே வேணாம்.. வாங்கடி கம்பி நீட்டி விடலாம்?”

“எதுக்குடி கோமளா இவள் இப்படி அலறுகிறாள்…”

“டைனிங் ஹாலுக்குள் பார். மறதி மணிமேகலை நிற்குது…”

“ஏண்டி.. அதுக்கு பயந்து டிபன் சாப்பிடாமல் போவதா? இன்னைக்கோ சன்டே ஸ்பெஷல். வெரைட்டியா செய்து வைத்திருப்பாங்க.. ஹோட்டலில் போய் காசைக் கொட்டினாலும் இந்த டேஸ்ட் கிடைக்காது…”

“வேண்டாம் வாசவி… நாக்கைக் கட்டுப்படுத்து… அது நம்கூடவே வந்து காரில் தொத்திக்கும்… காரில் இடமும் பத்தாது.. அப்புறம் நான் அதை உன் மடியில் உட்கார வைத்து விடுவேன்…”

“நான் அதைத் தூக்கி டிரைவர் மடியில் உட்கார வைத்து விடுவேன் ஏண்டி… அதுக்குப் பெயரே மறதி மணிமேகலை. உன் பர்த்டேயை அது இந்நேரம் மறந்தே போயிருக்கும் வா.. வா..”

வாசவி வழக்கடித்துக் கொண்டிருக்கும்போது டைனிங் ஹாலை விட்டு வெளியே வந்த மணிமேகலை அவர்களை பார்த்து விட்டாள்.

“என்ன ஜமுனா… உனக்கு காய்ச்சல்ன்னு சொன்னாயே… இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு…?”

புத்தம் புது மலர்போல் நீலக்கலர் சுடிதாரில் நின்று கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்து வாசவி கண் சிமிட்டினாள்.

“நான் சொல்லலை…? இது குணம் உனக்குத் தெரியாதா?”

“வாசவி என்ன சொல்கிறாள் ஜமுனா…?”

“இதை மட்டும் மறக்காமல் கேட்டு விடுகிறது பார்…” பல்லைக் கடித்தபடி பதில் சொன்னாள் ஜமுனா…

“ஹாஸ்பிடலுக்குப் போகலாம் வாங்கிறா மேடம். நான்தான் வெறும் வயிறோடு போகக் கூடாது.. எதையாவது வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

“அப்படியா…” என்று கேட்டபடி மணிமேகலை போய் விட்டாள்.

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link