Chapter 05

0Shares

ரூபிணி கொடுத்த கம்ப்ளெயின்ட்டை வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர்

“ஓகே மேடம்… நீங்க போகலாம். பட் ஒன்திங்… நீங்கள் கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கும் இந்த ஆள் பெரிய இடத்தில் வேலை பார்க்கிறவன். அவனுடைய முதலாளியின் பெயர் சொன்னால் அழுத குழந்தை கூட வாய் மூடும்.. அவரிடம் மோதுவது உங்களுக்கு நல்லதல்ல” என்றார்…

“அதற்காக… இந்த மாதிரி அயோக்கியனை சும்மா விடுவதா..?”

“மேடம்… அவன் இருக்கும் இடம் அப்படி.. போலீஸ்.. கோர்டெல்லாம் மற்றவர்களுக்குத்தான்.. ஹரிஹரன் சாரே ஓர் நடமாடும் போலீஸ் ஸ்டேஷன்… கோர்ட்.. ஊரில் இருக்கிற எல்லோரும் அவர்கிட்ட பஞ்சாயத்துக்குப் போவாங்க… அவருடைய ஆளையே தூக்கி உள்ளே போட வைத்திருக்கீங்க.. இது எங்கே போய் முடியப் போகுதோ..”

“சார் எது வந்தாலும் நான் பேஸ் பண்ணிக்கிறேன்.. நான் இந்தக் கம்ப்ளெயின்ட் கொடுத்தது கொடுத்தது தான்..”

“அப்புறம் உங்கள் இஷ்டம். விழுப்புரம்… கடலூர்.. பாண்டிச்சேரி.. மூன்று ஊர்களிலும் அவரை எதிர்த்து நிற்க எப்பேர்பட்ட தைரியசாலியாய் இருந்தாலும் பயப்படுவார்கள்.. ம்ம்.. நீங்கள் வெளியூரிலிருந்து வேலை செய்ய வந்திருக்கிறீர்கள்.. உங்களுக்கு எதுக்கு வம்பு…?”

“நானாய் வம்பைத் தேடிப் போகவில்லை சார்… அவன்தான்.. நான் போகுமிடமெல்லாம் பின்னால் வந்து வம்பு பண்ணினான்..”

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் மேடம்.. தூசு போல் இருக்கிறவன் பண்ணிய வம்பிற்காக மலையோடு மோதப் போகிறீர்களா..?”

“சார்… நான் எதையும் பேச விரும்பவில்லை.. நான் போகலாமா..?”

“மேடம்.. நான் வெளிப்படையாகவே சொல்லுகிறேன். ஹரிஹரன் சாருக்கு விழுப்புரத்தில் ஒரு இன்ஜினியரிங் காலேஜ்.. ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்.. கடலூரிலும்… பாண்டிச்சேரியிலும் மீன் பதப்படுத்தி அனுப்பி வைக்கிற பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனிகள்.. பாண்டிச்சேரியில் பைவ் ஸ்டார் ஹோட்டல்.. இன்னும் நிறைய தொழில்கள் எல்லாம் இருக்கின்றன.. ஆனால் இது எல்லாவற்றையும் விட அவருக்கு முக்கியமான அடையாளம் ஒன்று இருக்கின்றது…”

“என்ன..?”

“அவர் மிகப் பெரிய தாதா மேடம்.. விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மூன்று ஊர்களில் உள்ள ரௌடிகள் எல்லோரும் இவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்கள்…”

ஜமுனா பயந்து போனாள்.. ரூபிணியின் கை பிடித்து நிறுத்தினாள்.

“ரூபி.. கொஞ்சம் யோசி.. நான் ஹரிஹரன் சாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.. எங்க காலேஜ் ஓனர் கூட அவர் முன்னால் கை கட்டித்தான் நிற்பாராம். அவரை எதிர்த்து யாரும் தொழில் பண்ண முடியாதாம்.. தொழிலதிபர்கள் கதியே அப்படியிருக்கும்போது… நாமெல்லாம் அவர் முன் எம்மாத்திரம்..? வேண்டாம் ரூபி… இதை இப்படியே விட்டுவிடு…”

“முடியாது ஜமுனா…”

“ரூபி.. உன் பிடிவாதம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. வெளியே வர யோசிப்பவள் நீ… இப்போது கூட எதற்கு வம்பு… நாம் திரும்பிப் போய்விடலாம் என்றுதான் நீ சொன்னாய்.. இப்போது மட்டும் ஒதுங்கிப் போக ஏன் யோசிக்கிறாய்..?”

“ஜமுனா.. எனக்கு அதிகம் வெளியே சுற்றப் பிடிக்காது.. அதனால் வர மாட்டேன்.. அவன் வம்பு பண்ணுகிறான் ஒதுங்கிப் போகலாம் என்று நான் சொன்னேன்.. நீங்கள் யாரும் கேட்கவில்லை.. அவன் வம்பு பண்ணியதோடு இல்லாமல் என்னைக் கையைப் பிடித்தும் இழுத்து விட்டான். இதை நான் சும்மா விடப் போவதில்லை.. வருமுன் காக்க வேண்டும் என்பது என் கொள்கை.. வந்து விட்டால் எதிர்த்து நிற்பது என் குணம்..”

ரூபிணி விடுவிடென்று வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டாள். பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் அவளைத் தொடர்ந்து வந்த கோமளா, வாசவி, ஜமுனா மூவரும் அலுத்துக் கொண்டே காரில் ஏறினர். கார் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து சாலையில் சென்றது.

வரும்போது அவர்களிடையே குடிகொண்டிருந்த குதூகலம் இப்போது காணாமல் போயிருந்தது.

“பேசாமல் நாம் அப்போதே ஹாஸ்டல் திரும்பியிருக்கலாம்” வாசவி முணுமுணுத்தாள்.

“கிளம்பும்போது, அந்த மறதி மணிமேகலை எதிரே வந்துச்சு.. எதுவும் விளங்கலை…” ஜமுனா எரிச்சலுடன் கூறினாள்.

“அவனும் அவன் முகரையும்… சே.. ரூபிணி சொல்லும்போதே கேட்டிருக்கணும்…” கோமளா தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஆமாம்.. இவள் சொன்னதை நாம் கேட்கணும்.. நாம் சொல்றதை மட்டும் இவள் கேட்க மாட்டாள்… வேண்டாம்.. வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல உரலில் தலையைக் கொடுக்கிறாள்.. நான்தான் இவளை வற்புறுத்தி அவுட்டிங் போகலாம்ன்னு கூட்டி வந்தேன்.. இப்ப இவளுக்கு இவ்வளவு பெரிய பிரச்னையை உண்டு பண்ணி விட்டோமே என்று எனக்கு குற்ற உணர்வா இருக்கு கோமளா…” ஜமுனா கண் கலங்கினாள்.

“ஜமுனா.. இன்றைக்கு உன் பர்த்டே.. நீ சந்தோசமாய் இருக்க வேண்டும். இது என் பிரச்னை.. இதற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. புரிந்ததா…? இனிமேல் யாரும் இதைப்பற்றிப் பேசக் கூடாது…” ரூபிணி கண்டிப்புடன் கூறினாள்.

தோழிகள் மௌனமாகி விட காரோட்டிக் கொண்டிருந்த டிரைவர் ரூபிணியைத் திரும்பிப் பார்த்துப் பேசினான்.

“உங்க பிரண்ட்ஸையே தலையிட வேண்டாம்ன்னு சொல்லிட்டிங்க.. நான் மூன்றாம் மனிதன்… நான் தலையிடக் கூடாதுதான்.. ஆனால் மனசுக்குக் கேட்கலை. நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்.. ஹரிஹரனை ஒருவர் எதிர்த்துவிட்டால் அந்த ஆளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவாராம் ஹரிஹரன்… இதை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்.. தவறு செய்பவர்களை எல்லாம் தண்டிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராதுங்கம்மா.. நேரே மோதுகிறவர் களிடம் மோதலாம். நிழலோடு மோத முடியுமா..? ஹரிஹரன் நிழல் உலகின் தாதா… அவர் கண்ணசைத்தால் இந்த மூன்று ஊரும் கொந்தளிக்கும்.. அவர் கைகாட்டும் ஆட்கள்தான் பெரிய போஸ்டிங்கில் உட்காருவார்கள்… அவர் தண்ணியில்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தூக்கி அடிக்கப்பட்டு விடுவார்கள்.. அவர் கிங் மேக்கர்… இவ்வளவு ஏன்.. இந்த மூன்று ஊர்களுக்குமே.. அவர்தான் முடிசூடாத ராஜா… அதனால் ரிஸ்க் எடுக்காதீர்கள் மேடம்.”

“தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ்.. நான் இந்த கம்ப்ளெயின்ட் கொடுத்தது அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக மட்டுமில்லை. இனிமேல் இது போன்ற செயல்களில் அவன் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும் தான். ஸோ… இதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுவதை நாம் விட்டு விடலாமே.. இதை மறந்து விட்டு வேறு பேச்சை பேசலாமே…”

ரூபிணி பட்டுக் கத்தரித்து விடவும் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டனர்.. ஹாஸ்டல் வாசலில் இறங்கியவுடன் ஜமுனா பணம் கொடுக்க தாமதிக்க.. ரூபிணி வாசவியையும் கோமளாவையும் பின் தொடர்ந்தாள். ஜமுனா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட டிரைவர்,

“எதற்கும் உங்க பிரண்டை பத்திரமாய் பார்த்துக்கங்க மேடம்…” என்றான்.

பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றாள் ஜமுனா.. அவள் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.. எதிரே வந்த வார்டன் மணிமேகலை.

“ஜமுனா… நாளைக்கு உன் பர்த்டேயில்லை…? பார்த்தாயா எப்படி நினைவு வைத்திருக்கிறேன் பார்…” என்றாள்.

மற்ற நேரமாக இருந்தால் நின்று வம்படித்திருப்பாள். இன்றைய மனநிலையில் எதுவும் பேசத் தெம்பில்லா தவளாய் தலையை மட்டும் ஆட்டிவிட்டு மாடியறைக்குச் சென்றாள்.

ரூபிணி அமைதியாய் துவைத்த துணிகளை மடித்துக் கொண்டு இருந்தாள்.. ஜமுனா அவள் எதிரே அமர்ந்து கலக்கமாய் அவள் முகம் பார்த்தாள்.

“காலையில் இருந்து நிறைய சுற்றியிருக்கே… அலுப்பாக இருக்கும்.. படுத்துத் தூங்கு…” என்றாள் ரூபிணி.

“ரூபிணி.. நான் சொல்வதைக் கேளு…”

“தூங்குன்னு சொல்கிறேனில்ல…”

மறுநாள் ஆபிஸிற்குள் நுழையும் போதே வாசலில் எதிர்பட்ட ஜவஹர் “ஹாய்.. ரூபிணி.. எங்கே உங்க பிரண்ட்?” என்றான்.

“இப்போதுதானே ஆபிஸிற்குள் நுழைகிறேன்? எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்குத்தானே அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியும்?”

“எல்லாம் சீட்டில் வந்து உட்கார்ந்தாகிவிட்டது… உங்களிடம் பேச்சை ஆரம்பிக்கத்தான் அப்படிக் கேட்டேன்..”

“ஐ… ஸீ… என்னிடம் என்ன பேச வேண்டி யிருக்கிறது..?”

“நீங்கள் உங்கள் பிரண்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?”

“எதைப் பற்றி..?”

“என்னைப் பற்றிங்க.. ஜவஹர் நல்லவன்… வல்லவன்.. நாலும் தெரிந்தவன்னு சும்மா… என் பெருமை களை எடுத்து விடக் கூடாதா…?”

ரூபிணிக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“ஏங்க சிரிக்கறீங்க..? என் நிலைமையைப் பார்த்தால் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதா..? ஹெல்ப் பண்ணத் தோன்றவில்லையா..?”

“ஜவஹர் சார்… காதல் தானாய் வரவேண்டும்.. அதற்கு சிபாரிசு இருக்கக் கூடாது. உங்களுக்கு உங்கள் காதல் மேல் நம்பிக்கை இல்லையா…?”

“எனக்கு என் காதல் மேல் நம்பிக்கை இருக்கிறது.. அவள் மேல் தான் நம்பிக்கை இல்லை…”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்..?”

“ஆபிஸில் எல்லோரோடும் சிரித்துப் பேசுகிறாள்.. என்னைக் கண்டால் மட்டும் உர்ரென்று ஆகி விடுகிறாள்..”

“நீங்கள் மட்டும்தானே அவளிடம் காதல் சொல்லி யிருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் பேசச் சங்கடப் பட்டிருப்பாள்…”

“வேறு யாரும் அவளிடம் காதல் சொல்லி விடுவார் களோன்னு எனக்குப் பயமாக இருக்கிறது…”

“சேச்சே… ஆண் பிள்ளை பயப்படலாமா… தைரியமாய் இருங்கள்” மீண்டும் ரூபிணிக்குச் சிரிப்பு வந்து விட்டது.

வாசல் பக்கம் வந்த சபாபதி ரூபிணி ஜவஹரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே ஒரு பைலை எடுத்துக் கொண்டு சென்றான்.

ப்ரீதி கம்ப்யூட்டர் திரையை உயிர்ப்பித்து கீ போர்டை தட்டிக் கொண்டிருக்க… அவளருகே சென்ற சபாபதி,

“இந்தாங்க மேடம் நீங்க கேட்ட ஃபைல்” என்று பைலை அவளிடம் கொடுத்தான்.

“பரவாயில்லையே… இவ்வளவு சீக்கிரத்தில் எடுத்து வந்து விட்டாயே…” பாராட்டியவாறு வாங்கிக் கொண்டாள் ப்ரீதி.

“ஏன் மேடம்… ஜவஹர் சார்கிட்டப் பேசினால் உங்களுக்கு தலைவலி வருது. ரூபிணி மேடத்திற்கு மட்டும் சிரிப்பு வருதே.. எப்படி?” சபாபதி சந்தேகம் கேட்டான்.

“நீ எப்போது அவள் ஜவஹரிடம் சிரிப்பதைப் பார்த்தாய்…?”

“இதோ… இப்போதுதான்.. வாசலில் நின்று பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…”

ப்ரீதி நகம் கடிக்க ஆரம்பித்தாள். ரூபிணி அவளருகே வந்து,

“என்ன யோசனை…?” என்று கேட்டது கூட அவள் காதில் விழுகவில்லை.

“என்னவாம் சபாபதி.. இவள் இவ்வளவு சீரியஸாக எதை யோசிக்கிறாள்…?”

“மேடம் இன்னைக்கு கிரீம் கலரில் சுடிதார் போட்டிருக்கிறாங்க.. அதற்கு ஜவஹர் சார் என்ன சிச்சுவேஷன் சாங் பாடப் போகிறார்ன்னு யோசிக்கிறாங்களோ… என்னவோ…?”

சபாபதி கூறியதைக் கேட்டதும் ரூபிணிக்கு வழக்கம் போல் சிரிப்பு வந்து விட்டது. வாயை மூடிக் கொண்டு சிரித்தாள். அவளது சிரிப்பு சத்தத்தில் தந்நிலைக்குத் திரும்பின ப்ரீதி அவளை முறைத்தாள்.

“என்னடி சிரிப்பு வேண்டிக் கிடக்கு?”

“ஜவஹர் சாரைப் பற்றி சபாபதி பேசியதும் சிரிப்பு வந்து விட்டது.”

“அந்த ஆள் பெயரைக் கேட்டாலே உனக்கு சிரிப்பு வருகிறதா..?”

“இல்லையா பின்னே.. அவரைப் பற்றி நினைத்தாலே சிரிப்பு வந்து விடும். கவலை மறந்து விடும்.”

இயல்பாய் பேசியபடி ரூபிணி தன் டேபிளில் இருந்த கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள். ப்ரீதி உம்மென்று வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவர்களின் அருகே,

    “நான் பார்த்ததிலே… அவள் ஒருத்தியைத்தான்..

     நல்ல அழகியென்பேன்…” என்ற பாடல் கேட்டது.

நிமிர்ந்து பார்க்காமலே அது ஜவஹர்தான் என்று அவர்கள் இருவருக்கும் தெரிந்து விட்டது. ப்ரீதி என்றும் போல் இன்றும் முகம் திருப்பிக் கொள்ள ரூபிணி மட்டும் புன்னகைத்தாள்.

“ஏன் சார் பாட்டுப் பாடி என் பிரண்டை பயமுறுத்தறீங்க?”

“பயமுறுத்த நான் என்ன ஹரிஹரனா? நான் சாதாரண ஆள் மேடம்.”

ரூபிணியின் சிரிப்பு மறைந்து முகம் மாறியது.

ஏன் அந்த ஹரிஹரனைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்?

அவள் மனதில் எழுந்த கேள்வியை வாய் விட்டுக் கேட்டாள்.

“நல்லாக் கேட்டிங்களே ஒரு கேள்வி.. அவரைப் பார்த்து பயப்படாமல் யாரைப் பார்த்துப் பயப்படுவது?”

எல்லோரும் பயப்படும் அந்த ஹரிஹரன் ரூபிணியைத் தேடி வந்தான். ஊரே பார்த்துப் பயப்படும் அந்த மனிதனை பயமில்லாமல் எதிர்கொண்டாள் ரூபிணி.

புள்ளிமான் தன்னைத் தேடி வந்த புலியை பயமின்றி எதிர் கொண்டது.. புலி… தன் இரையை விடுமா..? இல்லை தொடுமா…?

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link