Chapter 07
ஹரிஹரனின் தலை அசைவிற்கு தன் தலை அசைவைப் பதிலாகத் தந்த ரூபிணி அவனைப் பின் தொடர்ந்து ஆபிஸரின் அறையை விட்டு வெளியே வந்தாள். நிமிர்ந்த நடையுடன் அவன் வேகமாய் நடந்து அவள் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டான். சற்று நேரத்தில் ரூபிணி அவனை மறந்தும் விட்டாள்.
“என்னடி விஷயம்…?” ப்ரீதி மீண்டும் வினவ நடந்ததைக் கூறினாள்.
“புத்திசாலித்தனமான காரியம் செஞ்சே… அவரை மாதிரி ஆளுக கிட்ட எல்லாம் நாம் மோதக்கூடாது…”
“அவரைப் பார்த்துப் பயந்து நான் புகாரை வாபஸ் பண்ணவில்லை ப்ரீதி. நடந்த தவறுக்கு நான் தண்டனை வழங்குகிறேன்னு சொன்னார்.. அதனால் தான் நான் புகாரை வாபஸ் பண்ணினேன்..”
“எதுவோ ஒன்னு.. மோதல் இல்லையே… அந்த மட்டிலும் சரி…”
ப்ரீதி சொன்னதையே தான் ஜமுனாவும் கூறினாள். கோமளாவும் வாசவியும் அதை ஆமோதித்தனர்.
“ஜமுனா.. அவரிடம் மோதுவதும் மோதாமலிருப்பதும் பிரச்னை இல்லை.. அவரது ஆள் தவறு செய்தான் என்பதை அவர் புரிந்து கொண்டார். கண்டித்து வைப்பதாகக் கூறினார். நான் புகாரை வாபஸ் வாங்கிட்டேன்..”
“என்னவோ போ.. நீ இவ்வளவு சகஜமாய் பேசுகிறாயேன்னு எனக்கு இருக்கு.. ஊரே அவர் பெயரைக் கேட்டால் குலை நடுங்கிப் பயப்படுது.. நீ அவர் எதிரே சேர் போட்டு உட்கார்ந்து கலந்து உரையாடிவிட்டு வந்திருக் கிறாய்.. கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கு.. இளங்கன்று பயமறியாதுன்னு சும்மாவா சொல்லி வைத்தாங்க..”
“ஆமாம்.. நீ பெரிய கிழவி.. நான்தான் இளங்கன்று.”
“என்னை விட இளையவள்தானே நீ…”
“அதற்காக என்னை இளங்கன்று ஆக்கி விட்டாய்.. சரி.. இளங்கன்று பயமறியாமல் வந்தது கிழவரைப் பார்த்து இல்லையே..”
“அடிரா.. சக்கை.. பாருடி இவளை.. ஹரிஹரனைப் போய் சைட் அடிச்சிருக்காள்…” ஜமுனா கூறவும் மற்ற இருவரும் கலகலவென்று சிரித்தனர்.
ரூபிணியின் முகம் சிவந்து விட்டது.
“ஏய்.. சைட் அது இதுன்னு சொல்லாதே. அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வயதானவர் போல் தெரியவில்லை.. அதைத்தான் சொன்னேன்..”
“நீ எதைச் சொன்னாயோ… எங்கள் காலேஜிற்கு ஓர் முறை அவர் வந்து இருந்தார். விறைப்பாய் அவர் பார்த்துக் கொண்டு வந்தபோது எனக்கு குளிர் ஜுரமே வந்து விட்டது.. நீயானால் ஏதேதோ சொல்லுகிறாய்… சரி விடு.. பிரச்னை ஒரு முடிவுக்கு வந்ததே.. இப்போது தான் எனக்கு நிம்மதியாய் இருக்கிறது…” ஜமுனா உண்மையான மன நிம்மதியுடன் கூறினாள்.
ரூபிணியும் அதை அறிவாள். இரண்டு நாட்களாகவே அவள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்ததை அவள் பார்த்துக் கொண்டுதானே இருந்தாள்.. ஜமுனா பழைய படி கலகலப்பாய் பேசியது ரூபிணிக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஹரிஹரன் தன் முன்னால் வந்து நின்ற லாரன்ஸை சினத்துடன் பார்த்தான். லாரன்ஸ் பயத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். பக்கத்தில் பிரசாத் கையிரண்டையும் பின்னால் கட்டி… கால்களை அகல விரித்து நின்றிருந்தான். தூரத்தில் கப்பலில் சரக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தனர். மீன் பதனிடும் தொழிற்சாலைக்கே உரிய மணம் மூக்கைத் துளைத்தது. அவர்கள் நின்றிருந்த பாண்டிச்சேரி ஹார்பரின் ஓரமாய் கடலலைகள் வந்து கரையை அடித்துத் தொட்டுச் சென்று கொண்டிருந்தன.
கடல் காற்றின் ஈரம் கூட ஹரிஹரனின் உஷ்ணத்தை தணிக்கவில்லை. அவன் கொதித்துக் கொண்டிருந்தான்.
“உன்னிடம் வேலை பார்க்கிறவன் உன் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்று அந்தப் பெண் கேட்டாள்.. உன் மரியாதையை காற்றில் பறக்க விட்டது நானில்லை.. உன்னிடம் வேலை பார்க்கும் உன் ஆள் தான் என்று சொன்னாள். அவள் சொன்னது அத்தனை யும் சத்தியமான வார்த்தைகள். இந்த ஹரிஹரன் துணிச்சல் காரன்.. என் துணிச்சலை ஆண்களிடம் தான் காட்டி யிருக்கிறேன். பெண்ணைச் சீண்டிப் பார்த்ததில்லை.. நீ அதைச் செய்யத் துணிந்திருக்கிறாய்.. இதற்கு உனக்கு என்ன தண்டனை தரப்போகிறேன் தெரியுமா…?”
லாரன்ஸ் ஹரிஹரனின் காலில் விழுந்தான்.
“அந்தப் பெண் யாரோ.. எவரோ.. முன்பின் தெரியாத பெண் சொன்னதை நம்புகிறீர்கள்.. நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறீர்களே…”
ஹரிஹரன் லாரன்ஸின் முடியை கொத்தாகப் பிடித்துத் தூக்கி அவன் கன்னங்களில்.. பளார்.. பளார்.. என்று மாறி மாறி அறைந்தான்.
“எனக்குப் பொய் பிடிக்காது. பொய் சொல்பவனைக் கட்டோடு பிடிக்காது.. உன்னிடம் பொய்யிருக்கிறது. இனி நீ என்னிடம் வேலை பார்க்க முடியாது… ஓடிப்போ..”
“ஐயா.. நீங்கள் வேலையை விட்டு நிறுத்தி விட்டால் என் குடும்பம் பட்டினி கிடந்து செத்துப் போகும்.. என் பெண்டாட்டி பிள்ளைக்கு எப்படி நான் சோறு போடுவேன்…”
“உடம்பில் திமிர் இருக்கப் போய்த்தானே.. ஹோட்டலுக்கு சாப்பிட வந்த குடும்பப் பெண்ணிடம் வாலாட்டியிருக்கிறாய்.. உன் திமிர் அடங்க வேண்டாமா..? போட்டிங் போன இடத்திற்குப் பின்னாலேயே துரத்திப் போயிருக்கிறாயே.. அப்போது உன் பெண்டாட்டி பிள்ளைகள் நினைவுக்கு வரவில்லையா?”
“தெரியாமல் செய்து விட்டேன் ஜயா.. மன்னித்து விடுங்கள்..”
“எனக்கு மன்னிக்கத் தெரியாது என்று உனக்குத் தெரியாதா? கார்மேகம்… இங்கேவா..”
கார்மேகத்தை ஹரிஹரன் அழைக்கவும் லாரன்ஸ் நடுங்கிப் போய் விட்டான். அடுத்து என்ன நடக்கும் என்பதை அனுமானித்தவனாய்,
“ஐயா.. வேண்டாங்க ஐயா..” என்று கதறினான்.
அவனது கதறலை ஹரிஹரன் செவிமடுக்கவில்லை. அருகில் வந்த கார்மேகத்தை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் சிறிதளவும் கருணையில்லை.
“கார்மேகம்.. இவன் என்னை போலீஸ் ஸ்டேஷன் வாசல் படியை மிதிக்க வைத்து விட்டான். இவன் மேல் என் எதிரிகள் புகார் கொடுத்திருந்தால் அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பி இருப்பேன்… கொடுத்தது பாதிக்கப்பட்ட ஒரு பெண். இவனை வெளியே கொண்டு வந்தது என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக.. இவனைக் காப்பாற்றுவதற்காக இல்லை.. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று நீயே தீர்மானித்துக் கொள். இனி இப்படி ஒரு தவறை இந்த ஜென்மம் முழுவதும் இவன் செய்யக்கூடாது.”
கார்மேகம் லாரன்ஸின் பயந்த விழிகளைப் பார்த்தான்.
“ஐயா… இவன் நம்மோடு இருக்கிறவன்.”
“இருந்தவன்.. இருக்கிறவனில்லை…”
“ஐயா முடிவு அப்படியிருந்தால் உங்கள் நிழலை விட்டு அனுப்புவதே இவனுக்குப் பெரிய தண்டனை தானே..? அதற்கு மேலும் வேறு ஒரு தண்டனை கொடுக்க வேண்டுமா ஐயா.. ஏற்கனவே இரண்டு நாட்களாய் பட்டினி போட்டு இவனை அடித்துத் துவைத்திருக்கிறேன்.. இனி அடித்தால் இவன் தாங்க மாட்டான்… விட்டு விடுங்கள்..”
ஹரிஹரன் வெறுப்பை உமிழும் பார்வை பார்த்தான்.
“ஓ.கே.. நீ சொல்வதால் விட்டு விடுகிறேன்.. இனி இவன் என் கண் பார்வையில் படக்கூடாது. நம் தொழில் நடக்கும் இடங்களில் இவன் காலடி வைக்கக்கூடாது. கணக்கை முடித்து விடு…”
“ஐயா…” லாரன்ஸ் அலறினான்.
“பணக்கணக்கை சொன்னேன் கார்மேகம்..”
ஹரிஹரன் அங்கிருந்து விரைவான நடையுடன் அகன்று காரில் ஏறிச் சென்று விட்டான். நடக்க முடியாமல் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்த லாரன்ஸை கோபத்துடன் பார்த்த பிரசாத்,
“அன்னைக்கே படித்துப் படித்துச் சொன்னேன். எம்.டி.க்கு பெண்களிடம் பொறுக்கித்தனம் பண்ணினால் பிடிக்காது.. கடுமையா பனிஷ் பண்ணுவார்ன்னு.. நீ கேட்கவில்லை.. இப்பப்படு.. நம்ம எம்.டி. உன்னை துரத்திட்டார்ன்னு தெரிந்த பின் இந்த சுத்து வட்டாரத்தில் யார் உனக்கு வேலை கொடுக்கப் போகிறாங்க..? பிழைப்புக்கு வழியில்லாமல் உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட.. எம்.டி. சார் எல்லா விசயத்திலேயும் வேகமானவர்ன்னு பெயர் வாங்கினவர்தான். லேடிஸ் விஷயத்தில் அவரைப் பார்த்து ஒரு பயல் ஒரு வார்த்தை விரல் நீட்டிச் சொல்ல முடியாது. நீ ராஸ்கல். அவருடைய பெயரைக் கெடுக்கிறது போல காரியம் பண்ணிட்டு உன் பொழைப்பில் நீயாய் மண்ணை அள்ளிப் போட்டுக் கிட்டு உட்கார்ந்திருக்க.. போ.. போய்.. யாரு சொன்னால் எம்.டி. காது கொடுத்துக் கேட்பாரோ.. அவங்க காலில் போய் விழு..” என்று கூறிவிட்டு ஹார்பரை விட்டு அகன்று விட்டான்.
விழுப்புரத்தில் ஹாஸ்டல் அறையில் கட்டிலில் படுத்து நாவல் படித்துக் கொண்டிருந்த ரூபிணியிடம் ரோஜாரமணி வந்து,
“அம்மா.. உன்னைத் தேடி ஒரு பொம்பளையும்… ஆம்பளையும் ஜதையாய் வந்திருக்குதுக.. உட்காரச் சொல்லிட்டு வந்தேன்.. வா.. வா” என்று அழைத்தாள்.
தலையை வாரிக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்த ரூபிணி,
“ஜதையா.. அப்படின்னா..?” என்று வினவினாள்.
“ஜோடியா வந்திருக்கிறாங்களாம். அதைத்தான் அப்படிச் சொல்கிறாள். ஏன் ரோஸ்.. அவங்க யாரு.. எவருன்னு விசாரிச்சயா?”
“விசாரிச்சேன்ம்மா… வாயைத் தொறந்தாத்தானே… பதினாறு வயதினிலே சினிமாவில் வர்ற சப்பாணி ‘சந்தைக்குப் போகணும்… காசு கொடு’ன்னு புலம்பின மாதிரி.. ரூபிணியம்மாவைப் பார்க்கணும்கிறதை விட்டுட்டு வேற பேச்சு பேச மாட்டேங்குதுங்க.. சரி அங்கன உட்காருங்க ரூபிணியம்மாவை இட்டாரேன்னு சொல்லிட்டு வந்தேன். நீ வாம்மா…”
“இங்கே போய் யாரு என்னைப் பார்க்கணும்னு தேடி வந்திருப்பது..?”
“அட.. நீ வேற தேவையில்லாத ரோசனை பண்ணிக் கிட்டு இருக்கே.. நேர வந்து பார்த்தால் தெரிஞ்சு போகுது.. அதுகளைப் பாத்தா பாவமா கீது.. வாம்மா…”
“ரோஸ்.. உனக்கு இவ்வளவு கருணை மனமா? ச்சு.. ச்சு.. உன் பெயர் இனிமேல் ரோஸ் இல்லை.. அன்னை தெரஸா.”
“போம்மா.. உனக்கு வேற வேலையே இல்லை.. எப்பப் பாரு என் பெயரை மாத்தி வைச்சுக்கிட்டு இருப்ப.. உன்னை ஜமுனான்னு கூப்பிடாமல் யமுனான்னு கூப்பிட்டால் உன் மனசுக்கு எம்மாங் கஷ்டமா இருக்கும்?”
“தம்மாத்துண்டு கூட கஷ்டமா இருக்காது. ஏன்னா.. மறதி மணிமேகலை என்னை தினத்துக்கு ஒரு பெயர் சொல்லித்தான் கூப்பிடுது…”
ரூபிணி புன்னகையுடன் ரோஜாரமணியுடன் படியிறங்கிப் போனாள்.
“எங்கே இருக்கிறாங்க..?”
“அந்தா இருக்காங்க பாரு…”
ஹாஸ்டலின் முன் பக்கமிருந்த தோட்டத்து மரத்தடி யில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சியின் மேல் அமர்ந்திருந்தவர்களை சுட்டிக் காட்டினாள் ரோஜாரமணி.
“இவனா…?” தூக்கி வாரிப் போட்டது ரூபிணிக்கு.
“வணக்கம்மா…” எழுந்து நின்று கை கூப்பினான் லாரன்ஸ்.. அருகினில் பெருவிரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக் கொண்டிருந்த பரட்டைத் தலை குழந்தையை இடுப்பினில் வைத்துக் கொண்டு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.
“நீயா.. நீ ஏன் என்னைப் பார்க்க வந்தாய்…?”
“இதுக்குத்தான்ம்மா…” அவன் பெண்டாட்டியோடு ரூபிணியில் காலில் விழுந்தான்.
ரூபிணி பதறிப் போய் பின்னால் நகர்ந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். மாலை மயங்கி இருள் பரவிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஹாஸ்டலில் அடைபட்டி ருந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பி லாரன்ஸைப் பார்த்து அதட்டினாள்.
“எழுந்திரு.. ஏன் இப்படி முட்டாள்தனமாய் காரியம் பண்ணுகிறாய்..?”
லாரன்ஸின் மனைவி தேம்பி அழுதாள்.. முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே அழுகுரலில் பேசினாள்.
“இது முட்டாத்தனமான காரியமில்லை.. அந்த மகராசன் பண்ணையில வேலை பார்த்த மப்பில் உங்க கிட்ட இந்த மனுசன் வம்பு பண்ணியதுதான் முட்டாள் தனம்.. அந்த ஜயாகிட்ட அண்டிப் பிழைச்சவங்க கெட்டுப் போனதில்லம்மா.. இந்த கெட்டுப் போன மனுசனாலே.. என் பொழைப்பு நட்டாத்தில நிற்குதும்மா.. நானும் இந்த மனுசனும் மூணு நாள் பட்டினியில கிடக்கிறோம். கைப்பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்க கையில காசில்லம்மா. நீங்க மனசு வைச்சா எங்களை பட்டினி யிலிருந்து காப்பாத்த முடியும். எங்களுக்கு வேற போக்கிடம் இல்லம்மா.. அந்த மகராசன் துரத்தி விட்டுட்டா.. ஆதரிக்க எந்த நாதி வரும்? உங்கள கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்க்கிறேன்ம்மா.. இந்த ஆள் செஞ்சதுக்கெல்லாம் தண்டனை அனுபவிச்சிருச்சும்மா.. இரண்டு நாள் பட்டினி போட்டு அடிச்சு நொறுக்கிட்டாரு ஜயா.. பத்தாக்குறைக்கு வேலையையும் பிடுங்கிக்கிட்டு விரட்டி விட்டுட்டாரு…” அந்தப் பெண் பொங்கி அழுதாள்.
ரூபிணிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.. அவள் எதிரே நின்ற பெண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல் விழித்தாள்.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.