Chapter 08

0Shares

“இனிமேல் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் இந்த மனுசன் காலைத் தொட்டு கும்பிடும்மா.. ஜெயிலில் தூக்கிப் போட்டிருந்தாலும் இந்த மனுசன் திருந்தி இருக்காதும்மா.. ஜயா போட்ட போடில் திருந்திருச்சும்மா.. உங்களுக்கு கோடிப் புண்ணியம் உண்டு. நீங்க ஒரே ஒரு வார்த்தை ஜயாகிட்டச் சொன்னீங்கன்னா நாங்க உயிர் பிழைச்சுக்கு வோம். எங்க உயிரைக் காப்பாத்துங்கம்மா” அந்த பெண் கெஞ்சினாள்.

“நானா..? உனக்கு ஏதாவது மண்டையில் மசாலா இருக்கா? என்னிடம் வந்து உங்க முதலாளியிடம் பேசச் சொல்கிறாயே.. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? நான் யார்? அவர் யார்? நான் சொன்னால் அவர் எப்படிக் கேட்பார்? இங்கே வந்து என்னிடம் அழுது புலம்புவதை அவரிடம் போய் செய்ய வேண்டியதுதானே…” ரூபிணி திரும்பி ஹாஸ்டலுக்குள் போகப் போனாள்.

அந்தப் பெண் சட்டென்று தன் கையிலிருந்த குழந்தையை ரூபிணியின் முன்னால் போட்டு விட்டாள்.

“இந்தப் பச்சை மண்ணு முகத்தைப் பாருங்கம்மா. இதைத் தாண்டி நீங்க போங்க.. நாங்க எங்க முடிவைத் தேடிக்கிறோம்.. ஜயாகிட்ட எப்படிம்மா நாங்க போக முடியும்..? ஐயா ஒன்றை முடிவு செஞ்சா செஞ்சதுதான். யார் போய் அவர் காலில் விழுந்தாலும் தீர்மானிச்சதை மாத்திக்கவே மாட்டார்.”

ரூபிணி கலங்கிப் போய் குழந்தையைத் தூக்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள். செய்வதறியாமல் தவித்தபடி கேட்டாள்.

“ஏம்மா.. நீ அவரிடம் வேலை பார்த்த ஆளின் மனைவி. நீ சொல்வதையே கேட்டுக் கொள்ளாதவர். நான் சொல்வதை எப்படிக் கேட்பார்?”

“நீங்க பாதிக்கப்பட்டவங்கம்மா.. நீங்க சொன்னால் நிச்சயம் எடுபடும். எங்க உசிரைக் காப்பாத்த முடியும். கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா…”

ரூபிணி தன் கையிலிருந்த செல்போனை யோசனை யுடன் பார்த்தாள். “என்னிடம் ஒருவன் வம்பு பண்ணினான். அவனைத் தண்டிக்க நினைத்து புகார் கொடுக்கவில்லை.. இனி இது போன்ற தவறுகளைச் செய்ய அவன் பயப்பட வேண்டும். அதனால் தான் புகார் கொடுத்தேன்” என்று அன்று அவனிடம் சொன்னாள்.

“தண்டனையை நான் கொடுக்கிறேன்.. நீங்கள் கேட்டதை நான் செய்கிறேன். என்னை நம்புங்கள்..” என்றான் அவன். இன்று சொன்னதை அவன் செய்து விட்டதற்கு சாட்சியாக தண்டிக்கப்பட்டவனின் மனைவி வந்து கதறி அழுகிறாள்.

லாரன்ஸ் அயோக்கியன்தான்.. அவன் ஆட்டம் அடங்கி விட்டது. ஹரிஹரன் அடக்கி விட்டான். இனியும் அவன் தண்டனையை அனுபவிப்பது அதிகப்படி. அவன் அனுபவிக்கும் வேதனையை நிறுத்துவதுதான் சரியான செய்கை. அவன் செய்த தவறுக்கு அவனது குடும்பம் பாதிக்கப்படுவது முறை ஆகாது.

ரூபிணி அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல்.. தன் கட்டை விரலை விடாமல் சுவைத்துக் கொண்டிருந்தது.

ரூபிணி தீர்மானித்து விட்டாள்.

“லாரன்ஸ்.. உங்களிடம் உங்கள் முதலாளியின் போன் நம்பர் இருக்கிறதா..?”

அவள் தன்னிடம் பேசியதும் லாரன்ஸ் நம்ப முடியாமல் திகைத்தான். கையெடுத்துக் கும்பிட்டான்.

“அம்மா.. என்னிடம் நீங்கள் பேசுகிறீங்களா?” நாத்தழுதழுத்தான்.

“செய்தது தவறுன்னு உணர்ந்து கொண்டால் போதும். வேறு என்ன எனக்கு வேண்டும்? இந்த பூமியில் பிறந்தவர்கள் எல்லோருமே மகாத்மாக்கள் கிடையாது லாரன்ஸ்.. அந்த மகாத்மா காந்திக்கே ஏன் மகாத்மான்னு பெயர் கிடைத்தது தெரியுமா? அவர் செய்த சின்னச் சின்ன தவறுகளைக் கூட ஒளிவு மறைவில்லாமல் தன் ‘சத்திய சோதனை’ என்ற சுய சரிதைப் புத்தகத்தில் எழுதினார். அந்தத் தவறுகளைத் திருத்திக் கொண்டார். மீண்டும் அந்தத் தவறுகளை அவர் செய்யவே இல்லை. அதனால்தான் அவருக்கு ‘மகாத்மா’ என்ற பெயர் கிடைத்தது. நீங்கள் திருந்தி விட்டீர்கள். இனி அந்த மாதிரியான செயல்களை செய்ய மாட்டீர்கள். எனக்கு அதுபோதும். உங்கள் முதலாளியின் செல் போன் நம்பரைச் சொல்லுங்கள்..”

லாரன்ஸ் சொன்னான். முன் பின் தெரியாத யாரோ பார்க்க வந்து இருக்கிறார்கள் என்றதும் எதற்கும் இருக்கட்டுமென்று முன்னெச்சரிக்கையாய் கையில் செல்போனோடு கீழே வந்திருந்த ரூபிணி அந்த நம்பருக்கு போன் பண்ணினாள்… மறுமுனையில் கம்பீரமான.. கனத்த.. ஆண் குரல் கேட்டது.

“ஹலோ…”

ரூபிணி உதடு கடித்தாள்… பேச ஆரம்பித்து விட்டு இனிப் பின் வாங்க முடியாது… பின் வாங்கவும் கூடாது..

“சார்.. நான் ரூபிணி பேசுகிறேன்..”

“ரூபிணி…? ஓ… நீங்களா.. சொல்லுங்கள்.. நான் அந்த லாரன்ஸை பனிஷ் பண்ணி விட்டேன்.. அதைக் கேட்பதற்காகத்தானே போன் பண்ணினீர்கள்?”

“இல்லை சார்… லாரன்ஸிற்கு வேலை கொடுங்கள்.. அவரை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தான் போன் பண்ணினேன்..”

“வாட்…?”

“யெஸ் சார்… இங்கே என் ஹாஸ்டலுக்கு லாரன்ஸ் அவருடைய வொய்ப் குழந்தையோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறார். அவருடைய வொய்ப் அழுகிறார்கள்.. கைக்குழந்தை வேறு… பாவம் சார்.. அவரை மன்னித்து விடுங்கள்…”

மறுமுனையில் ஓர் நொடி நிசப்தம் நிலவியது.

“ரூபிணி.. நீங்கள் போலீஸில் அவன் மேல் புகார் கொடுத்தீர்கள்…”

“நீங்கள் வந்து சொன்னதும் புகாரை வாபஸ் பண்ணி விடவில்லையா?”

“எதன் பேரில் வாபஸ் பண்ணினீர்கள்? அவனை தண்டிக்கிறேன் என்று நான் சொன்ன பின்னால்தான் வாபஸ் வாங்கினீர்கள். ஹரிஹரன் வாக்குத் தவற மாட்டான்.”

“அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் சார்.. நீங்கள் கேட்டுக் கொண்டதை நான் செய்து விட்டேன்.. நான் கேட்டதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்.. இத்துடன் போதுமே… லாரன்ஸை வாழ்நாள் முழுவதும் தண்டிக்க வேண்டுமா? அவர் தனி மனிதர் இல்லையே.. வொய்ப் குழந்தையென்று அவரை நம்பி இன்னும் சில ஜீவன்கள் வாழ்கின்றார்களே.. நீங்களே கை விட்டு விட்டால் அவர்கள் எங்கு போவார்கள்?”

“எனக்கு மன்னிக்கத் தெரியாது ரூபிணி…”

“எனக்காக மன்னிக்கக் கூடாதா?”

“என்ன சொன்னீர்கள்…? இன்னொரு முறை சொல்லுங்கள்..”

“எனக்காக அவரை மன்னித்து விடுங்கள் சார்…”

மறுமுனையில் மீண்டும் ஓர் வினாடி மௌனம் குடி கொண்டது.

“சரி… உங்களுக்காக.. நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் ரூபிணி… உங்களுக்காக… மட்டுமே அவனை நான் மன்னிக்கிறேன்.. உங்கள் வார்த்தைக்காக மன்னிக்கத் தெரியாத இந்த ஹரிஹரன் அவனது வழக்கத்தை மாற்றிக் கொண்டு அவன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக மன்னிக்கப் போகிறான்.. லாரன்ஸை நாளையிலிருந்து வேலைக்கு வரச் சொல்லுங்கள்…”

“தேங்க் யு சார்… தேங்க்யூ வெரிமச்..”

“நன்றியெல்லாம் எதற்காக? என்னை அந்நியப் படுத்தவா? வேண்டாம்.. பட் ஒன் வொர்டு ரூபிணி.”

“என்ன சார்?”

“நீங்கள் இவ்வளவு இளகின இதயத்தோடு இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. யு ஆர் ஸோ சாப்ட்..”

மறுமுனை துண்டிக்கப்பட்டு விட்டது. சுற்றிலும் கவிந்திருந்த இருள் ரூபிணியின் முகச் சிவப்பை மூடி மறைத்தது. மெல்லிய உதடுகளை தன் அரிசிப் பற்களால் கடித்துக் கொண்டவள். லாரன்ஸைப் பார்த்துக் கூறினாள்.

“நீங்கள் நாளையிலிருந்து வேலைக்குப் போகலாம் லாரன்ஸ். உங்கள் முதலாளி உங்களை மன்னித்து விட்டார். வேலைக்கும் வரச் சொல்லி விட்டார்.”

“நிஜமாகவா…?”

நம்ப முடியாத திகைப்பு லாரன்ஸின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. யார் சொன்னாலும் கேட்காத ஹரிஹரன்.. இந்தப் பெண் சொன்ன வார்த்தையை கேட்டு விட்டானா? கட்டுக்கடங்காத கடலை தன் உள்ளங்கைக்குள் கட்டுப்படுத்தும் இந்தப் பெண்ணிடமா அவன் வம்பு பண்ணினான்? உடல் நடுங்க ரூபிணியின் கால்களில் விழுந்தான் அவன்.

“அம்மா.. தாயே.. என்னை மன்னிச்சிடுங்கம்மா.. உங்க சக்தி தெரியாமல் மோதி விட்டேன்..”

“அடடா.. நான் சாதாரணமானவள் லாரன்ஸ்.. சக்தி அது இதுன்னு பினாத்தாமல் ஒழுங்காய் போய் வேலையில் சேருங்கள். ஆனால் ஒன்று.. இனிமேல் இது போன்ற தவறுகளை…”

“நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன்..”

“அது போதும் போய் வாங்க…”

ரூபிணி லாரன்ஸின் குழந்தையை வாங்கி அதன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். பேசிக் கொண்டே ஹாஸ்டல் வாசலுக்கு வந்தார்கள்.

உள்ளேயிருந்து ஜமுனா ரூபிணியைத் தேடிக் கொண்டு வந்தாள்.

“இங்கே என்னடி பண்ணுகிறாய்? யார் இவங்க..? இவன்… இவன்… இவன்தானே உன்னிடம் வம்பு பண்ணியவன்? இதுகளா உன்னைப் பார்க்க வந்திருப்பது?”

“ஜமுனா.. எல்லாவற்றையும் விவரமாய் நம் ரூமுக்கு வந்து சொல்லுகிறேன்.. இப்ப ஒரு 1000 ரூபாய் வேண்டுமே. உன்னிடம் இருக்கிறதா? பர்ஸ் மாடியில் ரூமில் இருக்கு…”

“இந்தா..”

ஜமுனா கொடுத்த பணத்தை வாங்கி லாரன்ஸின் மனைவியிடம் கொடுத்தாள் ரூபிணி.

“அம்மா.. இது எதுக்கும்மா..? வாழ்க்கை பூராவும் நாங்க பசியில்லாமல் வாழ வழி செஞ்சிட்டிங்க.. அது போதும்மா..”

“உடனே பசி தீர வேண்டாமா? நீங்கள் இரண்டு பேரும் பசி தாங்குவீர்கள்.. குழந்தை தாங்குமா? வைத்துக் கொள்..”

அவள் கண்களில் கண்ணீர் வழிய லாரன்ஸைப் பார்த்தாள். “பார்த்தாயா… இந்தப் புண்ணியவதி குணத்தைப் பாரு.. இந்தம்மா மனசு நோகப் பேசி.. இது கையைப் பிடிச்சு இழுத்து கதி கலங்க வைச்சே… உன்னை மன்னிச்சு வேலை வாங்கிக் கொடுத்ததுமில்லாமல் நம்ம பசி தீர்க்க பணமும் கொடுக்குதே.. இது தெய்வம்ய்யா.. நீ பண்ணின பாவத்துக்கு உன்னை என்னா செய்தாதேவலாம்.”

“எதுவும் செய்ய வேணாம்.. பணத்தைப் பிடி.. தவறை உணர்ந்து திருந்தி விட்டவர்களை திரும்பத் திரும்பச் சொல்லால் காயப்படுத்துவது தான் பெரிய தவறு. போய் விட்டு வாங்க.”

அவர்கள் போய் விட்டார்கள்.

“என்னடி நடக்கிறது இங்கே? அவர்கள் பேசிக் கொள்வது பாதி புரிகிறது. பாதி புரியவில்லை..”

“ரூமுக்குப் போய் பேசிக் கொள்ளலாமே…”

“அதுவும் சரிதான்.. பசிக்குது.. சாப்பிடப் போகலாம் வா..”

ஜமுனா டைனிங் ஹாலில் கலகலப்பாக பேசிக் கொண்டே சாப்பிட ரூபிணி மௌனமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனம் திரும்பத் திரும்ப ஹரிஹரன் பேசிய வார்த்தைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.

‘உங்கள் வார்த்தைக்காக மன்னிக்கத் தெரியாத ஹரிஹரன் அவனது வழக்கத்தை மாற்றிக் கொண்டு அவன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக மன்னிக்கப் போகிறான்.’

“எதுக்குடி இப்படி முகம் சிவக்கிறாய்? சப்பாத்தி நல்லாயிருக்குன்னுதானே சொன்னேன்.. அதற்குப் போய் இப்படி ஓர் நாணமா? என்ன ஆச்சு..?”

“உம்.. குழந்தை அழுகுது…”

“அதுக்குத்தான் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டிருக்கிறாயே.. அவங்க உட்வார்ட்ஸ் கிரைப் வாட்டர் வாங்கிக் கொடுத்துக்குவாங்க.. நீ உன் கதைக்கு வா. எதுக்கு இந்த ஜொலிஜொலிப்பு?”

“ஏதோ.. நகையைப் பத்திப் பேசுவது போல் பேசுகிறாய்?”

“நகைதான்.. இதுவும் நகைதான்.. உன் புன்னகை.”

ரூபிணி முகம் சிவக்க மீண்டும் புன்னகைத்தாள்.

“தோடா.. ஏண்டி… இந்தச் சிரிப்பு சிரித்தால் ஏதோ விஷயமிருக்குன்னு அர்த்தம்… ஆனால் நீதான் சாமியாரிணி ஆச்சே.. எப்படி இதுன்னு தான் எனக்குப் புரியலை..”

“போடி…”

ரூபிணி எழுந்து கை கழுவச் சென்று விட்டாள்.

‘உங்களுக்காக மட்டுமே அவனை நான் மன்னிக்கிறேன்..’

கார் டிரைவரிலிருந்து.. மிகப் பெரிய பொறியியல் கல்லூரியின் சொந்தக்காரர் வரை அஞ்சி நடுங்கும் வல்லமை படைத்தவனின் வாய் உதிர்த்த வார்த்தைகள் இவை.

அவளுக்காகவா…? அவளின் வார்த்தைக்கு அவன் கட்டுப்பட்டானா? எதற்காக…? அவள் மிகச் சாதாரணப் பெண். அவனிருக்கும் உயரத்தை அண்ணாந்து பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவள். அவளின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே.. அவசியம் இருந்தாலும் வளைந்து கொடுக்காதவன் ஆயிற்றே.. பின் ஏன் அவள் சொல்லுக்கு தன் வழக்கத்தை கைவிட்டு வளைந்து கொடுத்தான்?

அது உணர்த்திய செய்தி புரிய அவள் மனம் சிறகடித்தது. அதுவரை இல்லாத இனம் விளங்கா உணர்வு எழுந்து ‘குப்’பென்று அவள் உடல் முழுவதும் பரவியது.

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link