Chapter 23
“நிற்காமல் ஓடினேன் ரூபிணி.. என் தாய்மாமனின் மடியில் போய் விழுந்தேன்.. அவர் திண்டிவனத்தில் இருந்தார்.. சாதாரண மில் தொழிலாளி.. என் அம்மாவின் அண்ணன்.. தொழிற்சங்கவாதி… கம்யூனிசக் கூட்டங்களில் பேசுகிறவர்.. சிவப்புச் சிந்தனைகள் கொண்டவர்.. கொதித்து எழுந்தார்.. அவரது சங்கத் தோழர்கள் அவருடன் நிற்க.. என் தாய் தந்தையின் சடலங்களை போலீஸ் ஸ்டேசன் முன்னால் போட்டு உண்ணாவிரதம் இருந்தார்… அந்த ரௌடி கைது செய்யப்பட்டான்.. என் பெற்றோர்களின் உடலுக்கு நான் இறுதிக் காரியங்களை முறைப்படி செய்து கொள்ளி வைத்தேன்…”
ரூபிணி இப்போது வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.. ஹரிஹரன் அழவில்லை.. வெறி கொண்ட குரலில் வெள்ளாடாக இருந்தவன் வேங்கையாய் மாறிய கதையைச் சொல்லிக் கொண்டு வந்தான்..
“அந்த ரௌடி மறுநாளே வெளியில் வந்து விட்டான்.. அவனது அரசியல் செல்வாக்கின் முன்னாலும் பணபலம் படைபலத்தின் முன்னாலும்.. என் மாதச் சம்பளம் வாங்கும் தாய்மாமனால் எதிர்த்து நிற்க முடிய வில்லை… மனைவி.. பெற்ற குழந்தைகளின் எதிர்காலம்… என் மாமா பொறுமையானார்.. ஆனால் நான் பொறுமையாகவில்லை.. பொறுமையாய் இருப்பது போல் நடித்தேன்.. என் மாமாவின் உதவியுடன் சென்னையில் ஹாஸ்டலில் இருந்து படித்தேன்.. அடுத்த ஆறே வருடங்களில் என் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது போராடச் சக்தியுடன் வெளி வந்தேன்.. ரூபிணி.. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.. எடுக்க வேண்டும்.. சென்னையில் ஒரு அன்டர்கிரவுண்டு தாதாவை அவருடைய எதிரிகள் சுட்டுவிட்டார்கள்.. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை நான் காப்பாற்றினேன்.. என்ன வேண்டுமென்று கேட்டார்.. அந்த ரௌடியின் உயிரும்.. என் அப்பாவின் தொழிற்சாலையும் வேண்டுமென்று கேட்டேன்.. இரண்டுமே எனக்குக் கிடைத்தன.. எந்த இடத்தில் என் தாய் தந்தையர் என் கண் முன்னாலேயே ரத்தம் சிந்தி இறந்தார்களோ.. அதே இடத்தில் அதே மண்ணில் என் கண் முன்னால் அந்த ரௌடி ரத்தம் சிந்தி செத்தான்.. என் அப்பாவின் தொழில் என் கைக்குள் வந்தது.. அன்று நான் முடிவெடுத்தேன்.. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது… வல்லவனாகவும் இருக்க வேண்டும்.. பணபலம் இருந்தால் மட்டும் போதாது.. படைபலமும் வேண்டும்.. அந்த ரௌடியின் கும்பல் என்னைத் தாக்க வந்தது.. அவர்களை அவர்கள் தொழில் செய்த கடலிலேயே ஒரே ஒரு வெடிகுண்டை அவர்கள் வந்த படகின் மேல் வீசி நடுக்கடலில் வெடித்துச் சிதறச் செய்து கூண்டோடு அழித்தேன்.. ரூபிணி.. அவர்கள் அனைவரும் கொலை.. கொள்ளை… கடத்தல்களைச் செய்தவர்கள்.. போலீஸின் என் கவுண்டர் லிஸ்டில் இருந்தவர்கள்.. அவர்களைத் தீர்த்தது நான்தான் என்பது போலீஸிற்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் சாட்சி இல்லையென்று கேஸை மூடினார்கள்.. அதன் பின்னால் நான் விரும்பாமலேயே எனக்கு ‘தாதா’ பட்டம் வந்துவிட்டது…”
“உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் நீங்கள் செய்ததைத்தான் செய்திருப்பார்கள்…”
ரூபிணியின் வார்த்தைகள் தென்றலாய் ஹரிஹரனின் நெஞ்சம் வருடின..
“இரவு பகலாய் உழைத்தேன்.. அப்போது வேறு சில ரவுடி கூட்டங்களின் தொந்தரவு ஆரம்பித்தது.. என்னிடமிருந்த ஆள் பலத்தால் அழித்தேன்.. மெல்ல வளர்ந்தேன்.. என்னை அணுக ரவுடிகள் பயந்தனர்.. என் செல்வாக்கும் வளர ஆரம்பித்தது.. என் தயவு தேவைப்படும் அரசியல்வாதிகளுக்கு கட்சி பேதம் பார்க்காமல் உதவி செய்ய ஆரம்பித்தேன்.. பதிலுக்கு அவர்கள் பொறுப்பிற்கு வந்ததும் நான் எது கேட்டாலும் செய்து கொடுக்க ஆரம்பித்தனர்.. வேறு புதுத் தொழில்களை ஆரம்பித்தேன்.. இன்று இந்த உயரத்தை வந்தடைந்திருக்கிறேன்.. ரூபிணி.. நான் கத்தியைத் தூக்கியது தீய சக்திகளை அழிப்பதற்காக.. அப்பாவிகளை அழிப்பதற்காக இல்லை.. நான் விரும்பாமலே எனக்கு தாதா பட்டம் கிடைத்துவிட்டது.. அதிலிருந்து வெளியே வர நான் முயலவில்லை.. என்னைப் பொறுத்தவரை என் எல்லைக்குள் எந்த ரௌடியும் முளைத்துவிடக்கூடாது… கண் முன்னே பெற்றோர்களை கொல்வதைப் பார்த்த துயரம் என்னோடு போக வேண்டும்.. இன்னொரு ஜீவனுக்கு அந்தக் கொடுமை நிகழ்ந்து விடக்கூடாது.. அதற்காக நான் மாட்டிக் கொண்டதுதான் இந்தப் பூச்சாண்டி முகமூடி.. நான் எதிர் பார்த்தபடியே.. இது ஹரிஹரனின் ஏரியாவாகி விட்டது.. இங்கே மற்ற நிழல் உலக தாதாக்கள் நுழையாமல் விலகினார்கள்…”
“உங்களைக் கண்டு அவ்வளவு பயமா…?”
“பயம் என்று சொல்வதை விட இது நிழல் உலக தாதாக்களின் கொள்கை.. அவர்கள் வகுத்துக் கொண்ட விதிமுறை என்று சொல்லலாம்… ஒருவரின் ஏரியாவிற்குள் இன்னொருவர் நுழைய மாட்டார்கள்..”
“செய்வது அநியாயம்.. இதில் இப்படி ஒரு நியாயமா..?”
“யார்தான் அநியாயம் செய்யவில்லை..? இந்த உலகில் முழு நியாயவாதி என்று ஒருவரை விரல் நீட்டி சொல்லி விடு.. பார்க்கலாம்.. யாரும் கிடையாது.. ஏன்.. நீ கூடத்தான் என்னிடம் இருந்து விலக முயன்றாய்.. அது எனக்குச் செய்த அநியாயம் இல்லையா…?” ஹரிஹரன் சிரித்தான்…
“உங்களை.. எதற்கு எதை இணை சேர்க்கிறீர்கள்..” ரூபிணி பொய் கோபத்துடன் சினந்து கொண்டாள்..
“விளையாட்டுக்குச் சொன்னேன்.. ஏன் உன்னிடம் நான் விளையாடக் கூடாதா…?”
“கொஞ்சினது போதும்.. விசயத்துக்கு வாங்க…”
“ரூபிணி… யாரையுமே மலிவாய் எடை போட்டு விடக்கூடாது.. மடிப்புக் கலையாத சலவை உடுப்புடன் சமூகத்தில் உயர் அந்தஸ்துடன் உலவும் மனிதனின் மறுபக்கம் எவ்வளவு மோசமானது என்று உனக்குத் தெரியாது.. அந்த வகையில் தாதாக்கள் நேர்மையானவர்கள்.. நட்புக்காக உயிரைக் கொடுக்கும் தாதாவும் இருக்கிறான்.. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கும் தாதாவும் இருக்கிறான்.. கோஷ்டி மோதலில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெட்டிக் கொள்வார்கள்.. ஆனால் ஒருவரின் குடும்பத்திற்குள் மற்றவர்கள் நுழைய மாட்டார்கள்.. அவர்கள் ஒரு மாதிரியான தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ரூபிணி…”
“உங்கள் பெற்றோரை கொன்றது ஒரு ‘தாதா’ அதை மறந்து விட வேண்டாம்…”
“அவன் ரௌடி… தாதா இல்லை.. புரிந்து கொள்.. அதனால்தான் அவனை நான் கூண்டோடு அழித்தபோது என் பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு ஒருவர் கூட அவனுக்கு ஆதரவாக வரவில்லை.. அவர்கள் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல்கள்தான்.. அதை செய்வதிலும் அவர்களுக்கென்று சில நியாயங்களுடன் செய்வார்கள்.. முக்கியமாக அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்வதில்லை ரூபிணி… நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தவன் என்று ஒருவனைக் கூட கூற முடியாது.. மாறாக அவர்கள் நம்பியவர்கள் செய்யும் துரோகத்தினால் பாதிக்கப்படுகிறவர்கள்தான் நிறைய இருக்கிறார்கள்..”
“விட்டால் இந்த இரவு முழுக்க தாதாவின் புகழ் பாடுவீர்கள் போல…”
“அவனும் மனிதன்தான்.. அவனுக்கும் சில நியாயங்கள் உண்டு என்று கூறினேன் அவ்வளவுதான்.. இப்போது சொல் ரூபிணி.. என்னைக் கண்டு நீ அஞ்சுகிறாயா..?”
ரூபிணி யோசித்தாள்.. அவன் மேல் அச்சம் வரவில்லை.. மாறாகக் காதல் வந்தது.. கண்மூடிப் பாடினாள்..
“நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்…
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்…
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்…”
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.