Chapter 24

0Shares

ஹரிஹரனின் காதுகளில் தேன் பாய்ந்தது. எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாள் இவள்..?

ஹரிஹரனுக்கு இந்த அனுபவம் புதிது.. பெண்களைப் பார்த்திருக்கிறான்.. பழகியிருக்கிறான்.. ஆனால் எவர் மீதும் வராத ஈர்ப்பு இவள் மீது அவனுக்கு வந்தது.. அவளின் பார்வை.. பேச்சு.. சிரிப்பு.. எல்லாமே அவனை வசீகரித்தது.. அவளது மயங்கிய பார்வையில் தன் அழகை முதன் முதலாய் உணர்ந்தான்.. அவளது அருகாமையில் அவனது ஆண்மை சிலிர்த்தது.. இதுபோல் முன்பு அவன் இருந்ததில்லை..

ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவதில் இவ்வளவு சுகம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனான் ஹரிஹரன்..

“ஓ.கே… குட்நைட்…” ரூபிணி மனமேயில்லாமல் கூறினாள்..

“அதற்குள்ளாகவா…?” ஹரிஹரன் ஏமாற்றத்துடன் கேட்டான்..

“சரியாப் போச்சு போங்க.. மணி என்ன பார்த்தீர்களா..? ஒன்றாகிவிட்டது.. நாளைக்கு ஆபீஸில் போய் அன்று போல் மயக்கம் போட்டு விழுகவா..? வேண்டாமே…”

“நீ கெஞ்சுவதால் விடுகிறேன்.. பை.. நாளை பேசலாம்…”

ஹரிஹரன் போனை அணைத்துவிட்டான்.. ரூபிணி உடைமாற்றிப்படுத்தாள்.. தூக்கம்தான் வரவில்லை.. ஒருவழியாய் கண் மூடி உறங்கிப் போனாள்..

அலுவலகத்தில் ப்ரீதியின் முகம் சரியில்லாமல் இருந்தது..

“ஏண்டி… என்னவோ போல் இருக்கிறாய்..?” ரூபிணி அக்கறையாய் விசாரித்தாள்..

“டென்சன்தான்.. வேறு என்ன..?”

“வேலை முடியவில்லையா…?”

“வேலையால் டென்சன் இல்லை.. வீட்டால் டென்சன்..”

“வீடு என்ன செய்தது…?”

“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்கிறது..”

“யாரை…?”

“என் மும்பை அத்தையின் மகனை…”

“யார்..? ஓ.. அன்று நாம் ஹோட்டலுக்கு சாப்பிடப் போன போது வந்திருந்தார்களே.. அவர்களது மகனையா..?”

“ஆமாம்…”

“பண்ணிக் கொள்ள வேண்டியதுதானே…”

“எனக்குக் குழப்பமாய் இருக்குடி…”

“எதற்கு குழப்பம்..?”

“ரூபிணி.. நான் ‘யெஸ்’ என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால் உடனே கல்யாணம் நடந்துவிடும்.. அதற்குப் பிறகு…?”

“இது என்னடி இப்படிக் கேட்கிறாய்..? நானும் உன்னைப் போல் கல்யாணம் ஆகாதவள்தானே.. எனக்கு எப்படித் தெரியும்…?”

“போடி.. நீ வேற… நான் எதைக் கேட்கிறேன்.. நீ எதைச் சொல்கிறாய்..” சலித்துக் கொண்டாள் ப்ரீதி…

“உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை ப்ரீதி..”

“ரூபிணி.. என் மனம் கலங்குகிறது.. என்னால் முழு மனதாய் சம்மதம் கொடுக்க முடியவில்லை…”

“ஏன்…?”

“ஏனென்றால்.. ஏனென்றால்.. ஐ திங்.. ஐ லவ் ஜவஹர்…” ப்ரீதியின் முகம் சிவந்தது..

“ஏய்ய்.. இங்கே பாருடா.. கள்ளி… மனதில் மறைத்து வைத்துக் கொண்டு காதலே இல்லையென்று நாடக மாடினாயா?” ரூபிணி கேலி செய்தாள்..

“எனக்கே என்னைத் தெரியவில்லை ரூபிணி.. அத்தை வீட்டில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன் சரி சொல்ல முடியாமல் என் மனம் தவித்தது.. அத்தைக்கு என்னை அவங்க மகனுக்க கட்டி வைக்கணும்னு கொள்ளை ஆசை… அன்று அவர்கள் வந்ததே என்னிடம் சம்மதம் வாங்கத்தான்…”

“ஓ.. அதனால்தான் உன் அம்மாவின் முகம் என்னைக் கண்டதும் மாறியதா..?”

“யெஸ்… நாங்கள் டிஸ்டர்ப்பென்ஸ் இல்லாமல் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நினைத்தார்கள்.. நான் முடிவு சொல்லவில்லை.. தட்டிக் கழித்து விட்டேன்…”

“அன்றே உன்மனம் ஜவஹரிடம் ஓடிவிட்டது… அப்படித்தானே…”

“சரியாய் சொல்லத் தெரியவில்லை.. இந்த ராஸ்கல் தான் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து டார்ச்சர் பண்ணினானே.. எப்படியென்று தெரியவில்லை.. என் மனம்.. அவர் வசம் ரூபிணி…”

அப்போது ஜவஹர்.

“வெள்ளைக் கமலத்திலே…

        அவள் வீற்றிருப்பாள்.. புகழ் ஏற்றிருப்பாள்…” என்று பாடியபடியே அவர்களைக் கடந்து சென்றான்.

“அட நீ வெள்ளை நிறத்தில் சுடிதார் போட்டி ருக்கிறாயா..? நானே கவனிக்கவில்லை.. அவர் கவனித்து விட்டார் பாரேன்…”

“வேறு வேலை என்ன இருக்கு அதுக்கு..?”

“ஏன்டி அப்படிச் சொல்லுகிறாய்.. நிறைய வேலை இருக்கே…” ரூபிணி ப்ரீதியிடம் சொல்லிக் கொண்டி ருக்கையில்,

“யாருக்கு நிறைய வேலை இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே ரூபிணியின் அருகில் வந்து நின்றான் ஜவஹர்.

“வேறு யாருக்கு..? எல்லாம் உங்களுக்குத்தான்…”

“எனக்கா… என்ன வேலை…?”

“பெண் கேட்டுப் போக வேண்டும்.. கல்யாண நாள் குறிக்க வேண்டும்.. இன்விடேசன் அடிக்க வேண்டும்.. மண்டபம் பார்க்க வேண்டும்.. ஊரெல்லாம் அழைக்க வேண்டும்..” ரூபிணி அடுக்கிக் கொண்டே போக..

“போதும்டி..” என்றாள் ப்ரீதி நாணத்துடன்..

ஜவஹருக்கு புரிந்துவிட்டது.. நம்ப முடியாமல் ரூபிணியைப் பார்த்தான்.. அவள் சிரித்தாள்..

“பார்ட்டி சம்மதம் சொல்லியாச்சு..”

“எப்படிங்க…?”

“அது அவளுக்கே தெரியவில்லையாமே.. உங்களுக்காக மும்பை மாப்பிளையை தட்டிக் கழித்து விட்டாள்..”

“உண்மையாகவா…?”

“நிஜம்தான்.. இதோ இவள் இங்குதானே இருக்கிறாள்.. நீங்களே நேரடியாய் கேட்க வேண்டியது தானே..?”

ஜவஹர் ப்ரீதியின் முகம் பார்த்தான்.. அவள் வெட்கத்துடன் கம்யூட்டரின் திரையைப் பார்த்தாள்.. சபாபதி அங்கு வர ரூபிணி எழுந்து கொண்டாள்..

“சபாபதி.. வா.. கேண்டினுக்குப் போகலாம்…”

“என்ன வேணும்ன்னு சொல்லுங்க மேடம்.. நான் வாங்கிக் கொண்டு வருகிறேன்..”

“எனக்கு ஒன்றும் வேண்டாம்.. உனக்கு என்ன வேண்டும்ன்னு சொல்லு.. நான் வாங்கித் தருகிறேன்..”

“ஏதும் விசேசமா மேடம்…”

“ஆமாம்…”

“என்ன விசேசம் மேடம்…?”

“சொல்லுகிறnன் வா…”

சபாபதியைத் தள்ளிக் கொண்டு கேண்டினுக்கு போய் விட்டாள் ரூபிணி.. ஜவஹர் ப்ரீதியைப் பார்த்தான்.

“என்மேல் இப்போதுதான் இரக்கம் வந்ததா..?”

“காதல் வந்தது…”

ரூபிணியும் சபாபதியும் திரும்பி வந்தபோது அவர்கள் இருவரும் மும்முரமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.. சபாபதி அதிசயப்பட்டான்..

“என்ன மேடம் இது.. கிழக்கும் மேற்கும் உறவு கொண்டாடுது…?”

“என்ன விசேசம்ன்னு கேட்டாயே.. இது தான் விசேஷம்..”

சபாபதி அங்கிருந்து மாயமானான்.. அடுத்த சில வினாடிகளில் ஆபிஸிலிருந்த அனைவருக்கும் அந்த விசயம் ஒலிபரப்பப்பட்டு விட்டது.. சபாபதி ஒரு நடமாடும் பிபிஸி..!

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link