Chapter 32

0Shares

ரூபிணியின் கையிலிருந்த முள் கரண்டியும் ஸ்பூனும் நழுவின.. அதிர்ச்சியுடன் விழியகல ஹரிஹரனைப் பார்த்தாள் அவள்.. இவனால் எப்படி ஒருவனை ரத்தக் காயம் வர அடிக்கச் சொல்லிவிட்டு அமைதியாய் சாப்பிட முடிகின்றது.. அவளுக்கு முதுகுத் தண்டு பயத்தில் ஜில்லிட்டது..

அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவளது உணர்வுகளை இனம் கண்டு கொண்டான்..

‘பயந்து விட்டாள்…’ மனம் கூற இதமாய் அவளைப் பார்த்துச் சிரித்தான்..

“என்னடி… என்னை புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறாய்…”

“புதிதுதான்.. இந்த ஹரிஹரன் எனக்குப் புதிதுதான்..”

“ரூபிணி… அவனைக் கொல்லவில்லை… கைகால்.. உடல் உறுப்புகளுக்கு சேதம் விளைக்கவில்லை.. நாலு தட்டி தட்டி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கிறேன்…”

“அதைக் கூட ஏன் செய்ய வேண்டும்…?”

“செய்யாமல் விட்டால் அவன் கொட்டம் அடங்காது.. இவனும் ஒரு வகையில் ரௌடிதான்.. இவனை அடக்கித் தான் ஆக வேண்டும்.. எனக்கு பெண்களை டார்ச்சர் பண்ணும் வீரர்களை என்றைக்குமே பிடிக்காது.. இவன் என்னடாவென்றால் என் பெண்டாட்டியையே டார்ச்சர் பண்ணுகிறான்.. சும்மா விட்டு விடுவேனா..?”

“உங்கள் பெண்டாட்டியா..? என்னையா சொல்கிறீர்கள்..?”

“இல்லைடி… ரோட்டில் போகிறவளைச் சொல்கிறேன்.. அறை வாங்கப் போகிறாய்.. பேசாமல் சாப்பிடு..”

“நமக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை..”

“ஏய்ய்.. கல்யாணம் என்பது ஊருக்காகத்தான்.. என்று நீயாய் என் தோள் சாய்ந்தாயோ.. அன்றிலிருந்து நீதான் என் பெண்டாட்டி..”

ரூபிணியின் கலக்கம் விலகி காதல் வந்தது.. ஹரிஹனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும்போது உணவு கூட என்றையும் விட இன்று அதிகமாய் ருசிப்பது போல் ரூபிணிக்குத் தோன்றியது.. ஊடே ஓர் முறை அவளைப் பார்த்த ஹரிஹரன் அவளது பார்வையைக் கண்டு புருவங்களை உயர்த்தி கண் சிமிட்டினான்.. அவளது முகம் சிவந்து விட்டது..

‘இவன் இருக்கிறானே.. காதல் ரௌடி..’

ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தார்கள்.. காரைக் கிளப்பினான் ஹரிஹரன்.. ஏ.ஸி.யின் இதமான குளிர் காருக்குள் பரவியது.. அருகே அமர்ந்திருந்த ரூபிணியை ஓர் முறை திரும்பிப் பார்த்துக் கொண்ட ஹரிஹரனின் மனதில் உல்லாசமும்.. மகிழ்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பீறிட்டன.. ஒரு மணி நேரம் உடன் அமர்ந்து பேச மாட்டாளா.. என்று ஏங்கியவன் அவன்.. இன்று அவள் அவன் தோள் சாய்ந்து பல மணி நேரமாக அவனருகே பயணிக்கிறாள்..

ஹரிஹரன் சீழ்க்கையடித்தபடி காரை ஓட்டினான்.. ரூபிணி அவனது உற்சாகத்தை ரசித்தாள்.. ரசிக்கும் போதே கோவில்பட்டியில் ரெங்கநாதனும் வீரலட்சுமியும் அவர்களை எப்படி எதிர்கொள்வார்களோ என்ற பயம் அவள் மனதில் எழுந்தது.. முகம் வாட அவனிடமிருந்து விலகி அமர்ந்து ஜன்னல் வழி சாலையைப் பார்த்தாள்..

அவளது ஒதுக்கத்தைக் கண்ட ஹரிஹரன்..

“என்னடி..?” என்று வினவினான்..

“அப்பா.. அம்மாவை நினைத்துக் கொண்டேன்..”

“அதற்கெல்லாம் மூட் அவுட் ஆகாதே.. பார்த்துக் கொள்ளலாம்..”

ரூபிணி கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்..

‘பார்த்துக் கொள்ளலாம் என்று என்ன அர்த்தத்தில் இவன் சொல்லுகிறான்..? எப்படிப் பார்த்துக் கொள்வான்..? மூர்த்தியை பார்த்துக் கொண்டது போலா..’

ஓரக் கண்ணால் அவளது முகத்தைப் பார்த்தவன் சிரித்து விட்டான்..

“பயப்படாதே.. மூர்த்தியைப் பார்த்துக் கொண்டது வேறு.. என் மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வது என்பது வேறு..”

அவள் முகத்தில் அசடு வழிந்தது..

‘என் பயத்தைக் கண்டு கொண்டான்.. ஜித்தன்..’

கோவில்பட்டி ஊர் எல்லைக்குள் கார் நுழைந்தது..

“உன் அப்பாவின் ஊரின் பெயரில்தான் கோவில் பட்டி என்று பட்டி இருக்கிறது.. ஆனால் ஊர் பக்காடவுன்..”

“என் அப்பாவின் ஊரா.. என் ஊரும் இதுதான்..”

“உன் ஊர் விழுப்புரம்தான்..”

ஹரிஹரனி குரலில் கண்டிப்பு இருந்தது.. ரூபிணி மௌனமானாள்..

‘வீடு வந்து விட்டது.. இனிமேல் இவனிடம் வாய் கொடுக்கக் கூடாது.. வீட்டில் நிலைமை எப்படி இருக்கப் போகிறதோ..?’

வீட்டுக் காம்பவுண்டின் முன் கார் நின்றது.. ரூபிணி இறங்கி கேட்டைத் திறந்து விட்டாள்.. கார் வீட்டினுள் நுழைந்தது.. ரூபிணி நடுக்கத்துடன் ஹரிஹரன் வருவதற்காக காத்து நிற்கையில் வீட்டுக் கதவு திறந்தது..

கார் சத்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு ரெங்கநாதனும்.. வீரலட்சுமியும் வந்தார்கள்.. ஹரிஹரன் கார்க் கதவைத் திறந்து கீழே இறங்கி ரூபிணியின் அருகே நின்று கொண்டான்..

“பார்த்தாயா.. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் உன் சின்ன மகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினாயே.. இப்போது அவள் ஜோடி போட்டுக் கொண்டு வந்து நிற்பதை உன் கண் குளிரப் பார்..”

வீரலட்சுமி பதட்டத்துடன் அக்கம் பக்கம் பார்த்தவாறு கணவனை அடக்கினாள்..

“சத்தம் போடாதீர்கள்.. அக்கம் பக்கம் கேட்டு விடப் போகுது.. உள்ளே வந்து பேசுங்கள்..”

“ஏண்டி ஊரே சிரிக்கப் பண்ணி விட்டாள் உன் செல்லப் பெண்.. நீ மூடி மறைக்கப் பார்க்கிறாய்.. எத்தனை நாள் மூடி மறைப்பாய்..”

“ஐயோ.. கொஞ்சம் மெதுவாய்த்தான் பேசுங்களேன்..”

வீரலட்சுமி அடக்கியும் கேட்காமல் வாயைத் திறந்த ரெங்கநாதன் கூரிய பார்வையுடன் நடுங்கிக் கொண்டிருந்த ரூபிணியின் கையைப் பிடித்துக் கொண்டு படியேறி வந்த ஹரிஹரனைக் கண்டதும் வாய் அடைத்துப் போனவராய் வீட்டுக்குள் பின் வாங்கினாள்..

வீட்டிற்குள் பிரவேசித்த ஹரிஹரன் ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு ரூபிணியையும் அருகே அமர வைத்தான்.. பின்பு ரெங்கநாதனைப் பார்த்து எதிரேயிருந்த சோபாவைக் காட்டி,

“உட்காருங்களேன்.. ஏன் நிற்கிறீர்கள்..?” என்று உபசரித்தான்..

ரூபிணி பயத்துடன் கண்களிரண்டையும் மூடிக் கொண்டாள்..

“இது என் வீடு..” ரெங்கநாதன் உறுமினார்..

“ஸோ வாட்..?” அமர்த்தலாய் வினவினான் ஹரிஹரன்..

“என் வீட்டிற்குள் வந்து என்னையே உட்காரச் சொல்லுகிறீர்களா..?”

“உட்கார்ந்து பேச வேண்டிய விசயத்தை உட்கார்ந்து தானே பேச வேண்டும்..? உட்காருங்கள் மாமா..”

“மாமாவா..?”

“ஆமாம்..”

ரூபிணிக்கு அவர்களின் உரையாடலைக் கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை.. விழி உயர்த்திப் பார்க்கக் கூட பயந்தவளாய் தரை மேல் விழிகளைப் பதித்திருந்தாள்..

ரெங்கநாதன் ஹரிஹரனைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.. மகளைப் பார்த்து, “ரூபிணி என்ன இதெல்லாம்” என்று கர்ஜித்தார்..

“அப்பா.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லையென்று சொன்னீர்களே..” ரூபிணி அச்சத்துடன் கேட்டாள்..

“நீ சரியில்லை.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்..”

“அப்பா.. நான் இவரைக் காதலிக்கிறேன்.. கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..”

“அவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டாயா..? கேட்டியாடி.. உன் ஒன்றும் தெரியாத சின்னப் பெண் பேசுவதை..”

ரெங்கநாதனுக்கு ரூபிணியை இழுத்து நாலு அறை கொடுக்க வேண்டும் போல் ரத்தம் கொதித்தது.. ஆனால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் ஹரிஹரன் அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டு அவளுக்கு அரணாய் நின்றான்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link