Chapter 02

0Shares

அதுநேரம் வரை தன்னுடன் வம்பிழுத்து விட்டு.. இப்போது சலுகையுடன் தன் தோள் சாய்ந்து நிற்கும் தங்கையை.. கொள்ளைப் பிரியத்துடன்.. அணைத்துக் கொண்டான் பிரசன்னா..

“அடேங்கப்பா.. பெரிய பாசமலர் சிவாஜியும்.. சாவித்திரியும்ன்னு உங்க இரண்டு பேருக்கும்.. மனசுக்குள் நினைப்பா..? இதுவரை எலியும்.. பூனையுமாய் வழக்கடித்துக் விட்டு.. இப்போ.. மலர்ந்தும் மலராமல்ன்னு பாட்டு சீன் காட்டுகிறீங்களே.. இப்படி அநியாயம் பண்ணினா.. வந்த புயல் போக மாட்டேன்னு அடம் பிடிக்காம என்ன செய்யும்..? கொட்டுகிற மழைதான் எப்படி நிற்கும்..?”

“ஏம்மா.. ஒரு வாரமாய் விடாம மழை பெய்தா அதுக்கு நாங்களா பொறுப்பு..? என்னவோ மழையின் புண்ணியத்தால்.. எனக்கும் நாலு நாள் லீவு கிடைத்தது.. அது உங்களுக்குப் பொறுக்கலையா..?”

“ஏன்டி சொல்ல மாட்டாய்.. லீவு விட்டு.. உன் காலேஜ் லெக்சரர்கள் இந்த நாலு நாட்களும் தப்பித்துக் கிட்டாங்க.. நானில்ல.. உன்னை வீட்டில் வைத்துக் கொண்டு.. இருபத்து நான்கு மணி நேரமும் எப்படிச் சமாளிப்பதுன்னு தெரியாம விழித்துக் கொண்டிருக் கிறேன்..”

“அம்மா.. இது அநியாயம்.. கொட்டும் மழையில் வீட்டை விட்டு நகர முடியாமல்.. கொட்டு.. கொட்டுன்னு முழித்துக்கிட்டு பொழுது போகாம விழித்துக்கிட்டுருப்பது நான்தான்.. உங்களுக்கு அடுப்படி.. வீடு.. புருசன்.. பிள்ளைகள்ன்னு ஆயிரம் வேலை இருக்கு.. வெளியே மழை கொட்டினால் உங்களுக்கென்ன.. கொட்டாலைன்னா உங்களுக்கென்ன.. நீங்களாச்சு.. உங்க வேலைகளாச்சு.. நான்கு சுவர்கள் ஆச்சு.. எனக்குத்தானே தெரியும் என் அவதி..”

“ஆமாண்டி… அடுப்படியையும்… வீட்டையும் கட்டிக்கிட்டு நான் லோல்படுவது உனக்குக் கிண்டலாய்ப் போச்சு இல்ல…”

“என்னம்மா இது… நீங்க அப்பாவைத்தானே கட்டியிருக்கீங்க..? பின்னே… அடுப்படியைக் கட்டிக் கிட்டிருப்பதாய்ச் சொல்லிப் புலம்புகிறீங்களே..”

“டேய் பிரசன்னா.. உள்ளே போய் ஊசியையும்.. நூலையும் எடுத்துகிட்டு வாடா.. இவள் வாயைத் தைத்து விடுவோம்..”

“ஏம்மா.. மழை பெய்கிறதுன்னு காலேஜிற்குத்தான் லீவு விடுகிறாங்க… கவர்ன்மென்ட் ஆபிஸிற்குமா லீவு விடுகிறாங்க..? நான் வேலை பார்ப்பது பேங்கில்.. கொட்டு கிற மழையால்.. குடை பிடித்துக்கிட்டு மக்கள் காலையில் பேங்க் திறக்கும்போதே வந்து நின்று விடுகிறாங்க.. நானே வேலை பார்த்துக் களைத்துப் 

போய் வீட்டுக்கு மதியச் சாப்பாட்டை வயிற்றுக்குள் போட்டுக் கொள்ளலாம்ன்னு வந்தா.. இவள் மரமேறிப் பரம் பரையின் நினைவில் மரத்தில் உட்கார்ந்துக்கிட்டி ருக்கிறா.. நீங்கள் என்னடான்னா.. இவளை வேலை ஏவுவதை விட்டுட்டு.. என்னை வேலை ஏவு கிறீங்க.. ஏன்.. அந்த ஊசியையும்.. நூலையும் இவளை எடுத்துக்கிட்டு வரச் சொன்னால் ஆகாதா..?”

“ஹ.. என் வாயைத் தைக்க.. என்னையே ஊசி.. நூல் எடுத்துக்கிட்டு வரச் சொல்கிறாயா..?”

“பின்னே.. உன் வேலையை நீதானே பார்க்கனும்..?”

“ஹும்.. நல்லாத்தான் இருக்குண்ணா… உன் நியாயம்..”

அண்ணனும்… தங்கையும் வழக்கடித்துக் கொண்டிருக்க திலகம்.. ஏதோ நினைவுக்கு வந்தவளாய்.. கையை உதறிக் கொண்டு..

“அய்யய்யோ..” என்று பதறினாள்..

“என்னம்மா.. என்ன ஆச்சு..?”

“பிரசன்னா.. நீ மதியச் சாப்பாட்டைப் பத்திச் சொன்னதும்தான் எனக்கு நினைவுக்கு வருகிறதுடா..”

“எதும்மா..?”

“அடுப்பில் குழம்பு தாளிக்க.. எண்ணெயை ஊற்றிக் கடுகைப் போட்டுட்டு.. நீ கூப்பிடவும்.. அப்படியே அதை அடுப்பில் விட்டுட்டு வந்துட்டேன்..”

“அடக்கடவுளே.. ஏம்மா.. வள்ளுவர் கூப்பிடவும்.. வாசுகி அப்படியே இறைத்துக் கொண்டிருந்த.. தண்ணீர் வாளியைக் கிணற்றிலேயே விட்டுட்டு ஓடி வந்தாங்களாம்.. அதைப் போல அண்ணன் கூப்பிடவும்.. அடுப்பிலே எண்ணெய்ப் பாத்திரத்தை வைத்துட்டு.. நீங்க ஓடி வந்துட்டிங்களா..?”

“ஏன்டி.. நானே பதறிக்கிட்டு இருக்கேன்.. நீ கேலி பேசறயா..? அப்படியே வாயில் ஒன்னு போட்டு விடுவேன்.. ஜாக்கிரதை..”

“என் வாயில் அடிக்கிறத விட்டுட்டு.. அடுப்பில் இருந்த எண்ணெய்ச் சட்டி என்ன ஆனதுன்னு போய்ப் பாருங்க.. இந்நேரம் பாத்திரமே உருகி.. காணாமல் போயிருக்கும்.. வாசுகி.. வள்ளுவர் கூப்பிடவும் ஓடி வந்ததால் அவங்க நீர் இறைத்த வாளி கிணற்றிற்குள் விழாமல் தப்பித்தது.. ஒருவேளை நீங்க அப்பா கூப்பிடவும் ஓடோடி வந்திருந்தீங்கன்னா பாத்திரம் தப்பித்து இருக்க சான்ஸ் இருக்கிறது.. ஆனால் நீங்க.. அண்ணன் கூப்பிட்ட குரலுக்குத்தானே.. ஓடோடி வந்தீங்க. .அதனால்.. பாத்திரம் தப்பிக்க நோ சான்ஸ்..”

“உன்னை..! இருடி.. அப்புறம் கவனித்துக்கிறேன்..”

திலகம்.. வீட்டை நோக்கி ஏறக்குறைய ஓடினாள்..

“அம்மா.. நான் பறித்த கொய்யாப் பழம்..” என்றபடி வாசவி அவள் பின்னாலேயே ஓடினாள்..

தங்கையின் குறும்பை.. தலையை ஆட்டி ரசித்த பிரசன்னா அவர்கள் பின்னாலேயே விரைந்தான்..

மூன்று பேரும் வீட்டிற்குள் நுழையும் போதே.. தீய்ந்த வாடை வருகிறதா என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டனர்.. ஆனால்.. நாவை ஊற வைக்கும்.. சமையலின் மணம் அவர்களது நாசியில் நுழைய.. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே.. சமையலறைக்குள் பிரவேசித்தனர்..

அடுப்பில் காய்கறிகளைப் போட்டு வதக்கிக் கொண்டிருந்த காளிதாஸ்.. அவர்களைத் திரும்பிப் பார்த்தார்..

“அட.. அப்பா.. சமைக்கிறார்..” வாசவி ஆச்சரியத் துடன் கூவினாள்..

“நீங்க எப்போ வந்தீங்க..” திலகம் அவர் கையிலிருந்த கரண்டியை வாங்கிக் கொண்டே வினவினாள்..

“நீங்க மூன்ணு பேரும் கொய்யா மரத்தடியில்.. கூட்டு மாநாடு போட்டுக் கொண்டிருக்கும்போதே வந்துட்டேன்.. வீட்டுக்குள் நுழைந்தால்.. எண்ணெய் காயும் வாசனை வந்தது.. சரி.. வேலையை நாம் முடிப்போம்.. நீங்க எல்லோரும் மாநாட்டை முடித்துட்டு வரும் போது.. பசியாக இருப்பீங்க.. சாப்பாடு ரெடியாக இருக்க வேண்டாமான்னு கரண்டியைக் கையில் பிடித்துக் கிட்டு களத்தில் இறங்கிட்டேன்.. சமையல் ரெடி.. வாங்க சாப்பிடலாம்..”

“நீங்க முதலில் அடுப்பை விட்டு விலகுங்க.. இனி நான் பார்த்துக்கிறேன்..”

“என்னத்தைப் பார்க்கப் போகிறீங்கம்மா.. அதுதான் அப்பா சமையலை முடித்துட்டாரே… என்னென்ன மெனுன்னு பார்க்கப் போறீங்களா..?”

“இந்தச் சின்னக் குட்டியின் வாயைத் தைக்கணும்ன்னு நானும் ரொம்ப நாளாகச் சொல்றேன்.. ஒருத்தராவது காதில் போட்டுக் கொள்கிறீங்களா..”

“ஏம்மா.. நானா சின்னக் குட்டி..? டிகிரி தேர்ட் இயர் படிக்கிறேன்.. உங்க பாஷையில் சொல்லப் போனால் எனக்கு ஏழு கழுதை வயதாகிறது.. இன்னும் சின்னக் குட்டிங்கறீங்களே..”

“ஊம்.. பெண் வளர்த்தியோ.. பீர்க்கங்காய் வளர்த்தி யோன்னு சொல்வாங்க.. நீயும்… வளர்ந்து.. வாலிபமா நிற்கிற.. உன்னை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கணுமேன்னு நினைக்கும்போதே மலைப் பாயிருக்கு..”

“என்மேல் அவ்வளவு பிரியமா அம்மா..?”

“அதெல்லாம் ஒரு கழுதையும் இல்லை..”

“பிரியத்துக்கும்.. கழுதைக்கும் என்னம்மா சம்பந்தம்..?”

“அது என்ன கழுதையோ எனக்குத் தெரியாது.. உன்னை ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுத்த பின்னால.. அவனை நீ படுத்துகிற பாட்டில.. அவன் எங்களை என்ன பாடுபடுத்தப் போகிறானோன்னு நினைக்கும்போதே மலைப்பாயிருக்கு..”

“அம்மா..”

வாசவி செல்லமாய்ச் சிணுங்கிக் கொண்டு.. சிறு குழந்தை போல் கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டாள்.. காளிதாஸ், “ஹா.. ஹா..” வென்று சிரித்தபடி மகளின் தோளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டார்..

“அப்பா.. அம்மா சொல்வதைக் கேட்டிங்களா..”

“அவள்.. விளையாட்டுக்குச் சொல்கிறாள்ம்மா..”

“எது எப்படியோ.. எனக்குத் தெரியாது.. ஆனால் அண்ணனின் கல்யாணத்துக்கு முன்னால்… நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..”

“அட.. இது எதற்காம்..?”

பிரசன்னா.. ஆச்சரியத்துடன் தங்கையைப் பார்த்தான்.. சமைத்து வைத்திருந்த உணவு வகைகளை.. பாத்திரத்தில் நிரப்பி.. டைனிங் டேபிளில் பரத்திக் கொண்டிருந்த.. திகலம் கூட மகளைக் கேள்விக் குறியாய் நோக்கினாள்..

“வேற எதுக்கு..? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் விட்டா.. உன் பெண்டாட்டி.. நாத்தனார் தொந்தர வில்லாமல் நிம்மதியாய் இருப்பாளில்லையா..? அதுக்கு நான் விட்டு விடுவேனா..?”

“என்னே.. உன் நல்ல எண்ணம்..!”

“பின்னே.. என்னை என்னன்னு நினைத்த..? உன் பெண்டாட்டியை ஒரு கை பார்க்காம.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போவதாக இல்லை..”

“வீர சபதம் எடுத்து விட்ட.. அதை அப்படியே மெயின்டெயின் பண்ணு.. அம்மா..! நீங்க எனக்குச் சாதத்தைப் போடுங்க.. பேங்கிற்கு நேரமாகுது…”

அவர்கள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திலகம்.. கணவரைப் பார்த்து,

“கடை வீதியில் கூட்டமிருக்கா.. மழையாய் இருக்கே..” என்று வினவினாள்..

“ம்ம்.. மழை பெய்கிறதால வியாபாரம் கொஞ்சம் டல் தான்..”

“மளிகைக் கடையில் எப்படிப்பா.. வியாபாரம் டல் லடிக்கும்..? நீங்க இன்னும் அந்தக் காலத்துப் பாணியில மளிகைக் கடை நடத்துறத விட்டுட்டு.. அழகாய்.. திலகம் டிபார்ட்மென்டல் ஸ்டோருன்னோ.. இல்லை.. திலகா ஷாப்பின்னோ.. நடத்தினா.. வியாபாரம் மழையாய் இருந்தாலும்.. வெயிலாய் இருந்தாலும்.. ஜோராய் இருக்கும்..”

வாசவி.. வாயில் சாதத்தை வைத்துக் கொண்டே பேச… காளிதாஸ் அவள் பக்கமாய்த் தண்ணீர் தம்ளரை நகர்த்தி விட்டுச் சிரித்தார்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link