Chapter 03

0Shares

‘காளிதாஸ் மளிகைக் கடை..’ என்றால்.. அறந்தாங்கியில் உள்ள அனைவருக்குமே தெரியும்.. நீண்ட வருடங்களாக.. பெரிய கடை வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அவர்..

“சின்னதாகத்தான் இந்த மளிகைக் கடையை ஆரம்பிச்சேன்.. முதல்ல ஒரு பெரிய மளிகைக் கடையில கடைப் பையனாகத்தான் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன்.. என் பதினாறாவது வயதில் நான் சேர்த்து வைத்திருந்த சம்பளப் பணத்தையும்.. என் அம்மாவின் சிறுவாட்டுப் பணத்தையும் போட்டு ஆரம்பிச்ச கடை இது.. இதிலிருந்து வந்த வருமானத்தில தான்.. என் தங்கைக்கு நகை போட்டு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்.. என் அம்மாவுக்கு கடைசி வரை நல்ல வசதியான வாழ்க்கையைக் கொடுத்தேன்.. இந்த வீட்டைக் கட்டினேன்.. உங்க இரண்டு பேரையும்.. வளர்த்து.. படிக்க வைத்தேன்.. இப்போது குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்திக்கிட்டிருக்கிறேன்.. இதற்கெல்லாம் காரணம்.. அலங்காரமான கடை அமைப்பில்லை.. என் உழைப்பு.. உழைப்பு மட்டுமே காரணம்..”

அடிக்கடி பிள்ளைகளிடம் காளிதாஸ் கூறுவது இது.. சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டவர்.. வெளியுலகம் தெரியாத தாயையும்.. சிறுமியாய் இருந்த தங்கையையும் காப்பாற்ற.. பன்னிரண்டு வயதிலேயே மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.. தொழிலில் உள்ள நெளிவு.. சுளிவுகளைப் பொட்டலம் போட்டுக் கொண்டே கற்றுத் தேர்ந்தவர்.. நான்கே வருடங்களில்.. சொந்தமாய்ச் சின்னதொரு மளிகைக் கடையை அதே கடைத் தெருவில் ஆரம்பித்து விட்டார்..

“அப்போல்லாம்.. இவ்வளவு பெரிதாய்க் கடைகள் இல்லை… கடை வீதின்னு பெயர்… துணிஞ்சு கடை வைத்தேன்.. இன்னைக்கு அறந்தாங்கியில என் பெயரைச் சொன்னா யாரும் தெரிந்துக்கிற அளவிற்கு வாழ்க்கை நடத்துகிறேன்.. எனக்கு இது போதும்..”

அடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் காளிதாஸ்.. அப்படி ஒன்றும் எளிய வாழ்க்கை வாழ்பவரல்ல.. அறந்தாங்கியின்.. மையப் பகுதியில் வசதியானவர்கள் வாழும் தெருவில்.. மிகப் பெரிய வீட்டைக் கட்டியிருக் கிறார்.. அருகில் உள்ள அவரது பூர்விகக் கிராமத்தில் வயல்கள் வாங்கிப் போட்டிருக்கிறார்.. குடும்பத்துடன் வெளியே போய் வர.. சொந்தக் கார் உண்டு.. கணிசமான வங்கிக் கையிருப்பும் உண்டு..

ஆனாலும்.. வாசவி அடிக்கடி அலுத்துக் கொள்வாள்.. “என்னப்பா நீங்க.. அழுக்காய் ஒரு போர்டு.. காளிதாஸ் மளிகைக் கடைன்னு.. ஒரு ‘ஷோ’வே இல்லையே.. இதையே அழகாய் டெகரேட் பண்ணி.. கண்ணாடி ஷோரூமில்.. திலகா ஷாப்பின்னோ.. இல்லை.. திகலம் டிபார்ட்மென்டல் ஸ்டோருன்னோ நியான் விளக்கில்.. மின்னுகிற எழுத்தில் போட்டுக் கவர் பண்ணினால் எனக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கும்..!”

“அது ஏன்ம்மா கடைக்கு உன் அம்மாவின் பெயரை வைக்கச் சொல்கிற..? கடையை ஆரம்பித்தது நான்.. வைக்கிறது உன் அம்மாவின் பெயரையா..?”

“போங்கப்பா நீங்க.. உங்களுக்கு உலகமே தெரியலை..”

“உனக்கு நிறையத் தெரிந்து விட்டதுன்னு நினைப் பாம்மா..”

“நிச்சயமாய் அப்பா.. உங்களைவிட அதிகமாகவே எனக்குத் தெரியும்..”

“அப்படியாம்மா.. உனக்குத் தெரிந்ததைச் சொல்லு.. நானும் கேட்டுக்கிறேன்..”

“ஆண்கள் பெயருக்கு அட்ராக்ஷனே கம்மிப்பா..”

“ஓஹோ..”

“அதுவே பெண்கள் பெயர்ன்னால்.. பெயரே இழுக்குமில்ல..”

வாசவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. திலகம்.. கரண்டியால் அவள் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டாள்..

“ஏன்டி.. எருமை மாடே..! கொஞ்சமாவது நான் உன் அம்மாங்கற நினைப்பு உன் மனதில் இருக்கா..? அட்ராக்ஷனுக்கு என் பெயர் வைக்கணுமாமில்ல..”

திலகம் கரண்டியோடு துரத்த.. வாசவி அவளிட மிருந்து தப்ப.. காளிதாசின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொள்வாள்..

“பாருங்கப்பா.. அம்மாவை..”

“திலகா.. குழந்தையை விடு..”

“இவளா குழந்தை..? எட்டு ஊருக்கு வாய் கிழியுது.. குழந்தையாம்.. குழந்தை..”

திலகா பொருமினாலும்.. வாசவியின் துறுதுறுப்பான சுபாவத்தில் அவளுக்குப் பெருமை அதிகம்..

இரவின் தனிமையில் கணவரிடம் அதைச் சொல்லிக் கொள்வாள்..

“என்னதான் சொல்லுங்க.. இந்தச் சின்னக் குட்டிக்கு உடம்பெல்லாம் மூளை… எங்கிருந்துதான் இப்படி யோசிக்காமல் வாய் பேசுகிறாளோ.. நாமெல்லாம்.. ஒரு கேள்வியைக் கேட்டுட்டா பதில் சொல்ல யோசிப் போம்.. இவள் டக்குன்னு உடனே பதிலைச் சொல்லிடுறாளே..”

காளிதாஸ்.. அதைச் சிரித்துக் கொண்டே ஆமோதிப் பார்.. அன்று அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும்.. வாசவி வழக்கமான பல்லவியைப் பாடவும்.. காளிதாஸ்.. வழக்கமான பதிலையே சொன்னார்..

“வாசவி.. என்னதான் காலம் மாறினாலும்.. நவீன மாய் உலகம் இயங்கினாலும்.. நம்மால் மாற்றிக் கொள்ள முடியாத மறக்க விரும்பாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்யுதும்மா.. காதலர் தினத்தைக் கொண்டாடுவதால்.. பொங்கல்.. தீபாவளியை நாம் மறந்துட்டோமா..? புதிது.. புதிதாய் உணவு வகைகள் வந்தாலும்.. நம் இட்லி.. தோசையை விட்டு விட நம்மால் முடியுமா..? அது போலத்தான் நானும், என் மளிகைக் கடையும்..! என் கடையில் சின்ன மாறுதல் வந்தால் கூட என்னால் அதைத் தாங்கிக்க முடியாது.. என்கடை இப்படித்தான் இருக்கும்.. இதை அப்படியே நீ ஏற்றுக்கிட்டாத்தான்.. என் உணர்வுகளை நீ மதிப்பதாக அர்த்தம்..”

“என்னதான் நான் கரைத்துப் பார்த்தாலும்… நீங்கள் கரையவே மாட்டிங்க அப்பா..”

“அப்ப.. என்னைக் கல்லுன்னு சொல்றயா..?”

“ஊஹூம்.. வைரம்ன்னு சொல்கிறேன்..”

வாசவியின் பதிலைக் கேட்டு.. பிரசன்னா வாய் விட்டுச் சிரித்தான்.. வாசவி அவனை முறைத்தாள்..

“பல் சுளுக்கிக்கப் போகிறது.. ஏன் இப்படிச் சிரிக்கிற..?”

“ம்ம்.. வெளியே மழை.. கொட்டோ.. கொட்டுன்னு கொட்டுது.. நீயானால் ஐஸ் கட்டியைத் தூக்கி.. அப்பா தலை மேல வைக்கிறயே..”

“ஊம்.. உனக்குப் பொறாமை..”

“எதுக்கு..?”

“நான் அப்பாவிடம் செல்லம் கொஞ்சுவதற்குத்தான்.. வேறு எதுக்காம்..?”

“நீ அப்பாவிடம் மட்டுமா செல்லம் கொஞ்சுகிற..? இந்த வீட்டில இருக்கும் அத்தனை பேரிடமும்தான் செல்லம் கொஞ்சுகிற..”

“நிச்சயமாய்.. நாளைக்கு வரும் உன் பெண்டாட்டி யிடம் செல்லம் கொஞ்ச மாட்டேன்..”

“நாளைக்கே வருகிறாளா..? எனக்குத் தெரியாதே..”

“கேட்டிங்களாம்மா.. என் மகன் தங்கக் கட்டி.. சிங்கக் குட்டி.. கல்யாணக் கனவெல்லாம் அவனுக்குக் கிடையாதுன்னு நீங்க.. வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீங்களே.. உங்கள் மகனுக்கு.. நாளைக்கே.. அவன் பெண்டாட்டி.. இந்த வீட்டுக்கு வர வேண்டுமாம்..”

“ஏய்ய்.. வாண்டு.. நான் எப்போது.. அப்படிச் சொன்னேன்..?”

காளிதாஸின் முன்னிலையில்.. வாசவி.. போட்டுக் கொடுக்கவும்.. வெட்கத்திலும்.. தர்ம சங்கடத்திலும்.. பிரசன்னாவின் முகம் சிவந்து விட்டது.. அதை பார்த்த வாசவி.. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்..

“அம்மா.. உங்க மகனின் முகத்தைப் பாருங்களேன்.. பெண் பிள்ளை போல சிவந்து விட்டது.. என்ன மாய் வெட்கப்படுகிறான்..”

பிரசன்னா அவசரமாய் எழுந்து கைகழுவச் சென்று விட, திலகா சரிப்பை அடக்கிக் கொண்டு மகளைக் கண்டித்தாள்..

“அவனைப் பாதிச் சாப்பாட்டிலேயே துரத்தி விட்டாயே.. பாவம்.. பசியோடு வந்து உட்கார்ந்தான்..”

“அதெல்லாம் நன்றாகச் சாப்பிட்டு விட்டான்.. இதற்கு மேல் சாப்பிட்டால் தொப்பை விழுந்து விடும்.. அப்புறம் பெண் கொடுக்க.. பெண் வீட்டார் யோசிப் பார்கள்..”

“நீயென்னடி.. எந்தப் பேச்சைப் பேசினாலும்.. கடையில் அவனுடைய கல்யாணத்திலேயே வந்து நிற்கிற..?”

“என்ன செய்வது.. நீங்களும் அப்பாவும்.. அதைப் பேசுகிற வழியைக் காணோமே…”

“வாசவி சொல்வதும் நிஜம்தானே திலகா.. நம் பிரசன்னாவிற்கும் வயதாகிக் கொண்டே போகிறதே.. அவனுடைய கல்யாணத்தைக் காலாகாலத்தில் நாம் நடத்தி விட வேண்டாமா..?”

“நான் என்னவோ.. வேண்டாம்ன்னு உங்க கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல சொல்கிறீங்களே.. பையனுக்குப் பெண் தேட வேண்டான்னு நானா சொன்னேன்..?”

“தேட வேண்டும்ன்னும்.. நீ சொல்லவில்லையே..”

“என்னவோ.. எல்லாத்தையும் என்னைக் கேட்டுத் தான் நீங்கள் செய்வது போல.. இது என்ன பேச்சு..?”

“இல்லை திலகா.. வேறு எதில் உன் கருத்தைக் கேட்கிறேனோ.. இல்லையோ.. நம் பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் நிச்சயமாய் உன் கருத்தைக் கேட்பேன்..”

“இதில் மட்டும்.. ஏன் என்னை முன்னால் வைக்கறீங்களாம்..?”

“ஏன்னா.. இந்தப் பிள்ளைகளைப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் நீ.. இவர்களுடைய விசயங்களில் உன் கருத்துக்குத் தான் முதலிடம்.. எனக்கு என்னவோ.. நீ பிரசன்னாவின் கல்யாண விசயத்தில்.. தயக்கம் காட்டுவது போல தோன்றுகிறது..”

திகலம் பதில் சொல்லாமல்.. டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய்.. சமையலறையில் வைக்க ஆரம்பித்தாள்.. தகப்பனார்.. தாயாருடன்.. தீவிரமான முகபாவனையுடன் பேச ஆரம்பிக்கவும்.. வாசவி.. அந்த இடத்தை விட்டு அகன்று.. முன் பக்கம் சென்று விட்டாள்..

கைகழுவி விட்டு வந்து.. டைனிங் டேபிளின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்த காளிதாஸ்.. கை வேலையை முடித்து விட்டு வந்த திகலத்தைப் பார்த்தது,

“இப்படி உட்கார் திலகா.. உன்னிடம் பேச வேண்டும்..” என்றார்..

ஆழ்ந்த குரலில் அவர் பேசவும்.. அதை மீற முடியாதவளாக.. திகலம்.. அவருக்கு எதிரில் அமர்ந்தாள்..

“சொல் திலகா.. உன் மனதில் என்ன இருக்கிறது..?”

திலகா.. தயக்கத்துடன்.. டைனிங் டேபிளில் சிதறி யிருந்த நீரை விரலால் தொட்டுக் கோலம் போட்டாள்..

“திலகா..”

காளிதாசின் குரல் கடினமாக வெளிப்பட.. திலகா கணவனின் முகத்தை இறைஞ்சுதலாகப் பார்த்தாள்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link