Chapter 04
“எனக்கு.. பிரசன்னாவிற்கு முதலில் கல்யாணம் பண்ணுவதில் உடன்பாடில்லை…”
திலகா.. கைவிரல்களைப் பார்த்தவாறு இதைக் கூறவும்.. காளிதாஸ் ஆச்சரியப் பட்டுப் போனார்.. ஏனென்றால் திலகாவிற்குப் பிரசன்னாவின் மேல் பாசம்.. மிகவும் அதிகம்..
எல்லாத் தாய்மார்களும்.. முதன் முதலில் தன்னை.. ‘அம்மா..’ என்று அழைக்கும்.. முதல் குழந்தையைத் தான் ஆழமாக நேசிப்பார்கள்.. திலகாவும் அதற்கு விதிவிலக்கல்ல.. அவள் பிரசன்னாவை அதிகமாக நேசித்தாள்..
அப்படிப்பட்டவளின் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டதும்.. காளிதாஸ் சிந்தனை வசப்பட்டார்..
“ஏன் திலகா..?” என்று.. காரணத்தையும்.. அவளிடமே கேட்டார்..
“முதலில்.. நாம் வாசவிக்குக் கல்யாணம் பண்ணி வைத்து விடலாம்ங்க..”
“எல்லோரும் சொல்வது போல.. வீட்டில் வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு.. அண்ணன்காரனுக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதுன்னு சொல்லப் போகிறாயா..?”
“அது.. இல்லைங்க…”
“பின் வேறு என்ன திலகா..? எதுவாக இருந்தாலும் வாசவி இன்னும் படிப்பை முடிக்கவில்லை.. அவள் பட்டம் வாங்காமல் நான் அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்..”
“அப்படியில்லைங்க.. வாசவி ரொம்ப நல்லவள்..”
“அதுதான் நமக்குத் தெரியுமே..”
“பாசமும் அதிகம் வைப்பாள்..”
“அதுவும் நமக்குத் தெரிந்த விசயம்தானே..”
“ஆனால் கொஞ்சம் வாய்த் துடுக்காய்ப் பேசி விடுவாள்..”
“அது விளையாட்டுத்தனம்டி..”
“அது உங்களுக்கும்.. எனக்கும் தெரியும்.. வரப் போகிற பிரசன்னாவின் பெண்டாட்டிக்குத் தெரியுமா..?”
“அதனால்..? நீ என்ன சொல்ல வருகிறாய் திலகா..?”
“மருமகள் நம் பெண்ணைத் தவறாக நினைத்துச் சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது..? வாசவியின் மனம் கஷ்டப்பட்டால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது…”
“உன்னால் மட்டுமா..? பிரசன்னாவினாலும் தாங்கிக் கொள்ள முடியாது..”
“இப்ப.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க..?”
“உனக்குப் புரியவில்லையா..?”
“புரியாமல் இல்லை.. இருந்தாலும் கேட்கிறேன்..”
“நீயும்.. நானும்.. வாசவியின் மேல் வைத்திருக்கும் பாசத்தை விட.. பிரசன்னா வைத்திருக்கும் பாசம் மிக அதிகம்..”
“அது என்னவோ உண்மைதான்..”
“அப்புறம் ஏன் நீ வீணாகக் கவலைப்படுகிற..? பிரசன்னா அவன் பெண்டாட்டியிடம் சொல்லி வைத்துக் கொள்ள மாட்டானா..?”
“இல்லைங்க.. இதனால் அவங்க இரண்டு பேருக்கும நடுவில் வீண் பிரச்னை வந்து விட்டால் என்ன செய்வது..?”
“திலகா.. நீ அதிகமாய் யோசித்து மண்டையைக் குழப்பிக் கொள்கிறாய்ன்னுதான் நான் சொல்வேன்.. வாசவி சிறு பெண்.. இப்போது அவளுக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகிறது.. ஆனால் பிரசன்னா அவளைவிட ஏழு வயது மூத்தவன்.. அவனுக்கு இருபத்தாறு வயதாகி விட்டது.. இது கல்யாண வயது.. காலத்தே பயிர் செய்ன்னு பெரியவங்க சொல்வாங்க.. அதை நீ கேள்விப் பட்டதில்லையா..? இல்லை.. கேள்விப்பட்டதை மறந்து விட்டாயா..?”
காளிதாஸ் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தவளாய்த் திலகம் மௌனம் சாதித்தாள்..
“அப்போ.. பிரசன்னாவிற்குப் பெண் தேடும் வேலையை ஆரம்பித்து விடலாமா..?”
“ம்ம்.. இப்போது ஆரம்பித்தால்தான்.. இந்த வருசம் முடிவதற்குள் ஏதாச்சும் ஒரு இடத்தில் பெண் அமையும்..”
திலகத்தின் கவலை திசை திரும்பி விட்டதைக் கண்ட காளிதாஸ் திருப்தியுடன் புன்னகைத்தபடி எழுந்து கொண்டார்..
பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வரும்வரை ஒரு பெற்றோருக்கு வேறு கவலை ஏதும் இருப்பதில்லை.. அவர்களுக்குத் திருமணம் என்ற ஒன்றைச் செய்து வைக்க வேண்டி வரும்போதுதான் இல்லாத கவலைகள் எல்லாம் அவர்களுக்குள் உதயமாகிறது..
அதுவரை தாய்ப் பறவையின் சிறகுகளுக்கடியில் பாதுகாப்பாய் இருக்கும் பிள்ளைகளை வேறொரு துணையிடம் ஒப்படைத்து விட்டு விலகி நிற்க நேரிடும் போது.. பெற்றவர்களின் மனதில் உருவாகும் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாது..
பிரசன்னாவின் திருமணத்திற்குப் பின்.. வீட்டிற்குள் ஒரு புதிய பெண் வாழ வருவாள்.. அடுத்து வாசவி திருமணமாகி வேறொரு வீட்டிற்கு வாழப் போவாள்.. புதியவளைப் புரிந்து கொண்டு.. வாழப் பழக வேண்டும்.. பெற்ற மகளையும் பிரிவதற்குத் தயாராக வேண்டும்.. திலகத்தின் கவலை காளிதாஸிற்குப் புரிந்தது..
ஆனாலும்.. உரிய நேரத்தில் விலகி.. வாழ வேண்டிய இளங் குருத்துக்களை வாழ வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறதே..
காளிதாஸ்.. தனது ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு.. கடைக்கு விரைந்தார்..
“வணக்கம் காளிதாஸ்..”
காளிதாஸ்.. தன் மேஜையின் மேலிருந்த கம்பயூட்டரின் திரையை விட்டுப் பார்வையை விலக்கினார்.. மாணிக்கவாசகம் எதிரே நின்றிருந்தார்..
“அட வாங்க.. மாணிக்கவாசகம்.. என்ன.. பொள்ளாச்சிக் காத்து.. அறந்தாங்கிப் பக்கம் வீசுது..”
“இங்கே ஒரு வேலையாய் வந்தேன்.. அப்படியே உங்க நினைவு வந்தது… பார்த்து விட்டுப் போகலாமுன்னு வந்தேன்..”
“ரொம்ப சந்தோசம்.. என்ன சாப்பிடுகிறீங்க..”
“கொட்டுகிற மழையில.. கூல்டிரிங்கா குடிக்க முடியும்.. ஏதேனும் சூடாகத் தொண்டையில் இறங்கினால் சரிதான்..”
கடைப் பையனை அழைத்து, எதிரேயிருந்த பிரேம விலாஸ் ஹோட்டலில் காபி வாங்கிக் கொண்டு வரச் சொன்னார் காளிதாஸ்..
“ம்ம்.. அப்புறம் சொல்லுங்க..!” என்று காளிதாஸ்.. வினவ.. அவர்கள் பொதுப் படையாய்ப் பேசிக் கொண்டிருந்த போது.. சூடான காபி வந்து விட்டது..
“ம்ம்.. காபின்னா.. இது காபி..” மாணிக்கவாசகம்.. காபியின் வாசனையை முகர்ந்தபடி சிலாகித்தார்..
“குடிக்காமலேயே.. வாசம் பிடிக்கிறீங்களே.. என்னவோ புதுப் பெண்டாட்டி கிட்ட மல்லிகைப் பூவின் வாசனையை வாசம் பிடிக்கிறாப்புல இல்ல.. வாசம் பிடிக்கிறீங்க..” காளிதாஸ் சிரித்தார்..
“அது சரி.. உங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற வயசில.. பெண்டாட்டியோட மல்லிகைப்
பூவின் வாசனை உங்களுக்கு நினைவுக்கு வருகிற தாக்கும்..” மாணிக்கவாசகம் காபியை உறிஞ்சியபடி கேலி பேசினார்..
“நல்லவேளை.. நினைவு படுத்தினீங்க.. மாணிக்க வாசகம்.. நம்ம பையனுக்குக் கல்யாண வயது வந்து விட்டது..”
“அப்ப.. கல்யாணத்தைப் பண்ணிப்புட வேண்டியது தானே..”
“அதைத்தான் உங்களிடம் சொல்ல வந்தேன்.. நமக் கேத்த இடமா பெண் அமைஞ்சா சொல்லுங்க..”
“அப்படியா.. ம்ம்..”
மாணிக்க வாசகம்.. தாடையைத் தடவியபடி யோசித்தார்.. முகத்தில் வெளிச்சம் பரவ நிமிர்ந்தார்.
“ஏன் காளிதாஸ்.. நம்ம மயில் வாகனத்தோட பொண்ணு சுகந்தியைப் பேசி முடித்து விடலாமா..?”
“எந்த மயில் வாகனம்..?”
“என்னப்பா.. இப்படிக் கேட்கறீங்க.. நம்ம பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் மயில் வாகனத்தை உங்களுக்குத் தெரியாதா..?”
“அட! அவரா..! அவருக்கு ஒரு பெண் இருப்பது எனக்குத் தெரியவே தெரியாதே..”
“இப்பத் தெரிந்துக்கிட்டிங்க இல்லையா.. என்ன சொல்கிறீங்க..?”
“முதலில் அவங்க குடும்ப விவரம் சொல்லுங்க..”
“மயில் வாகனத்திற்கு இரண்டே பெண்கள்.. மூத்தவள் சுமதிக்குக் கல்யாணம் ஆகி விட்டது.. தாராபுரத்தில் அவளைக் கொடுத்திருக்கிறாங்க.. இவள் இளையவள்.. பி.எஸ்ஸி. படித்திருக்கிறாள்.. அடக்கமான சுபாவம்.. நம்ம பையனுக்குக் கேட்டால் சந்தோசமா மயில் வாகனம் பெண் தருவார்..”
“அவசரப்பட வேண்டாம் மாணிக்கவாசகம்.. முதலில் ஜாதகத்தை வாங்கிக் குடுங்க.. பொருத்தம் பார்த்து விட்டு மேற்கொண்டு பேசலாம்..”
“அவசரப்பட வேண்டாம்கிறது சரிதான்.. அதுக்காக.. ஒரேயடியாய் ஆறப் போடவும் வேண்டாம்.. நீங்க பையனின் ஜாதகத்தைக் கொடுங்க.. அதைக் கொடுத்து விட்டு.. பெண்ணோடு ஜாதகத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறேன்.. அதுதானே முறை..”
“பிரசன்னாவின் ஜாதகம்.. இங்கே கடையிலேயே ஒரு காபி இருக்கு..”
காளிதாஸ் எடுத்துக் கொடுத்த ஜாதகத்தை வாங்கிக் கொண்டார் மாணிக்கவாசகம்..
“அப்போ.. நான் கிளம்புகிறேன் காளிதாஸ்.. என்னவோ.. நான் இந்தப் பக்கம் வர வேண்டும்.. உங்கள் மகன் கல்யாண விசயத்தை ஆரம்பிக்க வேண்டும்ன்னு இருந்திருக்கும் போல..”
“நீங்க சொல்வது நிஜம்தான்.. மாணிக்கவாசகம்.. கால நேரம் கூடி வந்தால்.. எதுவும் நிற்காது.. நடந்தே தீரும்..”
“நல்லது காளிதாஸ்.. நான் போய் போன் பண்ணுகிறேன்..”
மாணிக்கவாசகம் கிளம்பிப் போய் விட்டார்.. காளிதாஸ் கடை வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.. மீண்டும் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது.. இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்..
வீட்டு வாசலிலேயே.. திலகம் காத்திருந்தாள்.. காளிதாஸின் வண்டிச் சத்தம் கேட்டதும்.. பிரசன்னா அவசரமாய்க் குடையைப் பிடித்தபடி வந்து கேட்டைத் திறந்து விட்டான்.. அவர் வந்ததும்.. கேட்டைப் பூட்டி விட்டு.. அவர் பின்னாலேயே வீட்டிற்குள் வந்தான்..
“அப்பா.. என்ன மழை.. என்ன மழை..!” காளிதாஸ் அலுத்துக் கொண்டபடி.. போட்டிருந்த மழைக் கோட்டைக் கழட்டி.. பின் பக்கமாக இருந்த வராண்டாவில் மாட்டினார்..
“அதையேன்பா.. இரண்டு தரம் சொல்கிறீங்க..?” பிரசன்னா சிரித்தான்..
“அப்போதுதான்.. அதிகம் மழை பெய்வது நமக்குத் தெரியும்..”
வாசவி.. தலையைத் திருப்பிக் கூற.. இப்போது காளிதாஸ் சிரித்தார்..
திலகம்.. இரவுச் சாப்பாட்டிற்காக அழைக்க.. அவர்கள் டைனிங் டேபிளில் ஒன்று கூடினார்கள்.. காளிதாஸ் மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டுப் பிரசன்னாவின் முகத்தைப் பார்த்தார்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.