Chapter 05

0Shares

“என்னங்கப்பா..” என்று வினவினான் பிரசன்னா..

“ஒன்றுமில்லைப்பா.. எல்லாம் உன் கல்யாண விசயம் தான்..” என்றார் காளிதாஸ்..

“அதுக்கென்னப்பா.. இப்போது அவசரம்..” பிரசன்னா சங்கடத்துடன் வாசவியைப் பார்க்க.. அவள்,

“ஹை.. ஹை..” என்று கண் சிமிட்டினாள்..

“யாரிடம் அண்ணா கதை விடுகிறாய்..? எனக்குக் காது குத்தி இவ்வளவு பெரிய கம்மலைப் போட்டிருக் கிறேன்.. என்னிடமே கதை அளக்கிறாயா..?”

“ஏய்.. சும்மாயிரு..”

“அதெப்படிச் சும்மாயிருப்பது.. நீங்கள் சொல்லுங்கள் அப்பா.. பெண்ணின் ஊர் என்ன..? பெயர் என்ன..?”

பிரசன்னா.. தந்தை என்ன கூறப் போகிறார் என்று அறியும் ஆவலில் மௌனமாகச் சாப்பிடுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.. கடைக் கண்ணால்.. அவனது தவிப்பை வேடிக்கை பார்த்த வாசவி..

“ஏன்ப்பா.. இன்னும் எத்தனை நேரம்தான் அண்ணனின் பொறுமையைச் சோதிப்பீங்க.. பதிலைச் சொல்லுங்கப்பா..” என்று கிண்டலாகக் கூறினாள்..

“ஏய்ய்.. வாலு.. இப்ப அவன் பொறுமையில்லாமல் இருக்கிறதாய் உன்னிடம் வந்து சொன்னானா..? நீ 

உன் வேலையைப் பார்.. சும்மா.. அவனிடமே வம்பு வைத்துக்கிட்டு இருக்கிறாயே.. முதலில் தட்டைப் பார்த்துச் சாப்பிடு..” என்று திலகம் மகளை அதட்டினாள்..

“தட்டைப் பார்க்காமல் சாப்பிடக் கூடாதா..? ஏன் அப்படிச் சாப்பிட்டால்தான் ஆகாதா..?”

“வாயாடி.. முதலில் அன்னத்தைத் தொட்டுக் கும்பிடுடி..”

வாசவி தட்டைத் தொட்டு வணங்க.. திலகம் கடுகடுவென்ற முகத்துடன்.. மகளின் தட்டில் சப்பாத்தியை வைத்து.. குருமாவை ஊற்றினாள்..

“அதுதான் நீங்கள் சொன்னதைச் செய்து விட்டேனே.. இனியும் என்மேல் என்ன கோபம்.. பழம் விடுங்கம்மா..” என்று வாசவி கொஞ்சினாள்..

“என்னடி இது விளையாட்டு..? நீதான் சின்னப் புள்ளை போலக் கூத்தடிக்கிறாய்ன்னா.. என்னையும் உன்னோடு கூட்டுச் சேர்க்கிறாயா..? வேலையைப் பாரு..!..” கடுமையாய்ப் பேசுவது போல் பாவனை செய்த திலகாவின் கண்களில் சிரிப்பு இருந்தது..

“ஊம்.. நீங்க சொல்லுங்கப்பா..” தந்தையை ஊக்கினாள் வாசவி..

“என்னத்தைம்மா சொல்ல..?” காளிதாஸ் அறியாதவர் போல் வினவினார்..

“அப்பா..! நீங்களுமா..? தேமேன்னு.. நானும் என் அண்ணனும்.. நல்ல பிள்ளைகள் போல் சாப்பிட வந்தோம்.. நீங்களாக எங்கள் ஆவலைத் தூண்டி விட்டுட்டு.. இப்போது அறியாப் பிள்ளைபோல் பேசுகிறீங்களே.. இது நியாயமில்லை அப்பா..” வாசவி சிணுங்கினாள்..

கணவனின் முகத்தைப் பார்த்த திலகத்தின் விழிகளிலும் எதிர்பார்ப்பு தென்பட்டது..

“ஒன்றும் இல்லை திலகம்.. நம்ம பொள்ளாச்சி மாணிக்கவாசகம் மதியம் கடைக்கு வந்திருந்தார்..”

“அப்படியா..?”

“அவரிடம் நம்ம பிரசன்னாவிற்குப் பெண் பார்க்கும் விசயத்தைச் சொன்னேன்..”

“ம்ம்..”

“அதற்கு அவர்.. பொள்ளாச்சியில ஜவுளிக் கடை வைத்திருக்கும் மயில் வாகனத்தின் இரண்டாவது பெண் சுகந்தியை நம்ம பிரசன்னாவிற்குக் கேட்கலாம்ன்னு சொல்கிறார்..”

“பொண்ணு கூடப் பிறந்தவங்க எத்தனை பேராம்..?”

“அக்கா.. தங்கைன்னு இரண்டே பேர்தானாம்.. அக்கா சுமதியைத் தாராபுரத்தில் கட்டிக் கொடுத்திருக்காங்க.. இது தங்கை..”

“நல்ல இடமாகத்தான் தோணுது.. பேசி முடிச்சிருங்க..”

“ம்ம்.. பார்க்கலாம்.. நம்ம பிரசன்னாவின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டிருக்கிறேன்.. அவங்க வீட்டில் ஜாதகம் வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லியிருக் கிறேன்.. ஜாதகம் பொருத்தத்தைப் பார்த்து விட்டு.. மேலே பேசலாம்..”

பிரசன்னா.. சாப்பாத்தியை விண்டு.. குருமாவில்.. மூழ்கடித்துக் கொண்டே.. தந்தையின் பேச்சைச் செவி மடுத்துக் கொண்டிருந்தான்..

“அண்ணா.. சப்பாத்தியை ஊற வைத்தது போதும்.. இனியாவது சாப்பிடு.. அப்பா.. பேசி முடித்து விட்டார்..”

“ஏய்ய்.. சும்மாயிரு..”

“நான் சும்மாதான் இருக்கிறேன்.. நீதான் சாப்பாத்தியைப் போட்டு.. பாடாய்ப் படுத்திக் கொண்டிருக் கிறாய்..”

பிரசன்னா தங்கையின் காதை இடது கையால் பிடித்து விளையாட்டாய்த் திருகினான்..

“ஆ.. அம்மா வலிக்குது..” என்று அவள் அலறினாள்..

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டுச் சென்ற பின்.. காளிதாஸ் கை கழுவ எழுந்தார்..

“திலகம்.. நீயும் உட்கார்ந்து சாப்பிடு..”

“ம்ம்..”

“மயில் வாகனத்தின் பெண் நல்லவள், திகலம்.. நீ பயப்படுவது போல் எதுவும் நடக்காது..”

“நீங்கள் சொல்வது போல் நடந்தால் சரிதான்..”

திலகம் அலைபாயும் மனத்தோடு பதிலளித்து விட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள்..

அதே நேரத்தில் பொள்ளாச்சியில்.. மயில் வாகனத்தின் வீட்டிலும்.. அதே திருமணப் பேச்சுத்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது..

“சாயங்காலமாய் நம்ம ஜவுளிக் கடைக்கு மாணிக்க வாசகம் வந்திருந்தார், பரிமளா..”

“என்ன விசயமாம்..?”

“மதியம் அறந்தாங்கிக்குப் போயிருந்தாராம்..”

“அது ஒரு விசயமா..?”

“அறந்தாங்கியில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளிதாஸைப் பார்த்தாராம்..”

“அவருக்கு.. ஆண் ஒன்னு.. பெண் ஒன்னுன்னு இரண்டே பிள்ளைகளாச்சே.. அவருடைய மகனுக்கு இப்போது கல்யாண வயதுதானே..?”

பரிமளம் ஆவலாய் வினவினாள்..

இதுதான் பெண்ணைப் பெற்ற தாயின் குணம்.. திருமண வயதிலிருக்கும் பெண்களைப் பெற்றவர்கள்.. சொந்த பந்தங்களில் திருமண வயதும்.. திருமணம் 

செய்து கொள்ளும் முறையும் உள்ள பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் சேகரித்து வைத்திருப்பார்கள்..

பரிமளமும்.. அப்படித்தான்.. அறந்தாங்கியில் உள்ள காளிதாஸின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்திருந்தாள்..

“ஆமாம் பரிமளம்.. பையன்தான் மூத்தவன்.. பேங்கில் மேனேஜராக இருக்கிறான்..”

“பரவாயில்லையே..”

“அந்தப் பையனுக்குத்தான் பெண் தேடுகிறாங் களாம்.. நம்ம மாணிக்கவாசகம் சுகந்தியைப் பற்றிச் சொன்னாராம்.. அவங்களுக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.. பையனோட ஜாதகத்தைக் கொடுத்து விட்டிருக்காங்க.. நம்ம சுகந்தியோட ஜாதகத்தை அனுப்பச் சொல்லியிருக்கிறாங்க.. நீ என்ன சொல்கிற..?”

“இதில் நான் சொல்ல என்னங்க இருக்கிறது..? இது அருமையான இடம்.. நழுவ விட்டுவிடக் கூடாது.. சுமதிக்குக் கூடக் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் உண்டு.. ஆனால் இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை..”

“காளிதாஸிற்குச் சொந்தமாய்.. கடைத்தெருவில் பெரிய மளிகைக் கடை உண்டு.. அறந்தாங்கி டவுனில் பெரிதாய் மாளிகை போல் சொந்த வீடு.. கிராமத்தில்… வயல் வரப்பு.. சொத்து சுகத்திற்குக் குறைச்சல் இல்லை, பரிமளம்..”

“பையன் குணம் எப்படி..?”

“தங்கமான பையன்..”

“வேலையும் பெரிதுதான்..”

“ஆமாம்.. இப்படிப்பட்ட இடம் நாம் தேடினாலும் கிடைக்காது..”

“பையனின் பெயர் என்னவாம்..?”

“பிரசன்னாவாம்..”

‘பிரசன்னா..’ மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டால் சுகந்தி..

‘யார் அவன்.. இது நாள்வரை அவள் அறியாதவன்.. இன்று அவள் வாழ்வாக ஆகப் போகிறவன்..’

யோசனையுடன் தன் அறைக்குள் சென்று கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு.. காலை ஆட்டியவாறே யோசித்தாள் சுகந்தி..

இப்படித்தான்.. அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்து.. வாலிபனாகிவிட்ட பிரசன்னாவிற்கு.. பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்து.. யுவதியாகி நின்ற சுகந்தியைத் திருமணம் செய்ய விரும்பி.. இரு வீட்டாரும் யோசித்தார்கள்..

மயில் வாகனம் விரைவுத் தபாலில் மகளின் ஜாதகத்தைக் காளிதாஸிற்கு அனுப்பி வைத்தார்.. காளிதாஸ் அதைவிட விரைவாய்ப் பொருத்தம் பார்த்து முடித்தார்..

“திலகம்.. பத்துக்கு எட்டு பொருந்திருயிருக்குடி..” என்று மிகவும் மகிழ்வாய் மனைவியிடம் காளிதாஸ் 

சொல்ல..

“அது எப்படிம்மா.. பத்துக்கு எட்டு போய் பொருந்தும்..? பத்துக்குப் பத்தும்.. எட்டுக்கு எட்டும் தானே பொருந்தும்..?” என்று வெகு அக்கறையாய் ஊடே புகுந்து சந்தேகம் கேட்டாள் வாசவி..

பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு மகளை முறைத்த திகலம்..

“பத்துப் பொருத்தத்திற்கு.. எட்டுப் பொருத்தம் பொருந்தியிருக்குடி.. அப்பா அதைச் சொல்கிறார்..” என்று மகளுக்கு விளக்கம் கொடுத்தாள்..

“ஓ.. நூற்றுக்கு எண்பது மார்க்கா..? வெரிகுட்.. வெரிகுட்..”

“நம்ம வீட்டுச் சின்னக்குட்டி வாயிலிருந்தே நல்ல வார்த்தை வந்த விட்டது.. இனியென்ன.. பெண் பார்க்க வருகிறோம்ன்னு தகவல் சொல்லி விட வேண்டியது தானே..”

திலகம்.. தன் சம்மதத்தை மறைமுகமாகக் கணவனிடம் தெரியப்படுத்தினாள்..

காளிதாஸ்.. அந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக மாணிக்கவாசகம் மூலம்.. மயில் வாகனத்திற்குச் செய்தி அனுப்பினார்..

அந்த வார இறுதியும் வந்தது.. அறந்தாங்கியிலிருந்து காளிதாசின் குடும்பம்.. காரில் ஏறி.. பொள்ளாச்சிக்குச் சுகந்தியைப் பெண் பார்ப்பதற்காக விரைந்தது..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link